வயதும் இளமையும் (சென்ற கடிதங்களின் தொடர்ச்சி)

’கமலுக்குக் கிசுகிசு, எனக்கு அறிவுரையா?’ என்ற உங்கள் கடிதத்தைப் படித்த பிறகு என்னால் இந்தக் குறிப்பை எழுதாமல் இருக்க முடியவில்லை. எனக்கு உங்களைக் கடந்த பதினோரு ஆண்டுகளாகத் தெரியும்.   பதினோரு ஆண்டுகளாகவே எனக்கு அந்த ஆச்சரியம் உண்டு, அதை உங்களிடமே கூட நான் பலமுறை பலமுறை கேட்டிருக்கிறேன், எப்படி நீங்கள் வயதே ஆகாமல் இருக்கிறீர்கள் என்று.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தலைமுடிக்கு வண்ணம் அடிப்பதை விட்ட பிறகுதான் நீங்கள் முன்னை விட இன்னும் இளமையாகவும் அதிக கவர்ச்சியாகவும் மாறி விட்டீர்கள்.  சுருக்கங்களோ புள்ளிகளோ இல்லாத உங்களது பளபளக்கும் சருமம் எப்போதுமே பொறாமையைத்தான் தூண்டி விட்டிருக்கிறது.  இது எல்லாமே நீங்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த பசையினாலும் ஆரோக்கியத்தை உத்தேசித்து நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியினாலும் என்றா நினைக்கிறீர்கள்?  இல்லவே இல்லை.  எல்லா மாயமும் உங்கள் மூளையிலிருந்து நடக்கிறது.  உங்கள் சிந்தனையிலும் இதயத்திலும் நீங்கள் இன்னும் இளைஞனாகவே இருக்கிறீர்கள்.  நவீன மோஸ்தராகட்டும், இசையாகட்டும், கலையாகட்டும், இலக்கியமாகட்டும், இன்னும் என்னென்னவெல்லாம் இருக்கிறதோ அது எல்லாவற்றிலுமே நீங்கள் ஒரு இளைஞனைப் போலவே சிந்திக்கிறீர்கள், இன்றைய ட்ரெண்ட் என்னவோ அதேபோல் நடந்து கொள்கிறீர்கள்.  இன்னும் சொல்லப் போனால் Gen Zயோடு கூட உங்களால் சரி சமமாக உட்கார்ந்து பேச முடியும் என்று நினைக்கிறேன்.  வாழ்க்கை நாற்பது வயதில் முடிந்து போகிறது என்று நினைப்பவர்கள் மத்தியில் முதுமை என்பதை எப்போது நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அப்போது அடையலாம் என்ற உண்மையின் வாழும் உதாரணமாகத் திகழ்ந்து வருகிறீர்கள்.  உங்கள் எழுத்துக்களாலும், உங்கள் சிந்தனையினாலும் உங்களுக்கு முதுமையே வராது என்றுதான் நினைக்கிறேன்.  நீங்கள் என்றும் மார்க்கண்டேயன்தான்.

உங்கள் தீவிர வாசகி,

அனுஷா.

அனுஷா ஆங்கிலத்தில் எழுதி அனுப்பிய வாட்ஸப் மெஸேஜைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.  நான் எழுத நினைத்ததை எழுத வராமல் என்னென்னவோ எழுதிக் கொண்டிருந்த நிலையில் நான் எழுத நினைத்ததை அப்படியே சொல்லி விட்டார் அனுஷா.  கொரோனாவுக்கு முன்பு துபயில் தேவ சுப்பையா வீட்டுக்குச் சென்றிருந்த போது அவரோடு பேசியதை விட அவர் மகளோடு பேசியதே அதிகம்.  அனுஷா குறிப்பிடும் ஜென் ஸீ (Gen Z) பெண்.  படிப்பது ஒன்பதாம் வகுப்பு.  (பெயர் மறந்து போனேன் தேவா).  காரணம், நான் என்னென்ன பாடல்களை விரும்பிக் கேட்கிறேனோ அதே பாடல்களை அவளும் கேட்கிறாள்.  உதாரணமாக, அமெல் பெந்த்தின் மா ஃபிலாஸஃபி. 

https://chatterbug.com/media/french/watch/chanson-amel-bent-ma-philosophie-c3f69c

ஜென் ஸீயோடு ஒரு எழுத்தாளன் எழுத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ள முடியாது.  இசைதான் அங்கே தொடர்பு சாதனம்.  ஒருமுறை என் சிநேகிதியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் நான் கேட்ட பாடலைக் கேட்டு “இதெல்லாம் கேட்பீர்களா?” என்று வியந்தான்.  அந்தப் பாடகனே அப்போது ஜென் ஸீயைச் சேர்ந்தவன்.  அது மட்டும் அல்ல.  அவன் பாட ஆரம்பித்ததும் அப்போதுதான்.  இசை மட்டும் அல்ல.  இது ஒரு மனோபாவம்.  மிகச் சுருக்கமாகச் சொன்னால், எக்ஸைல் நாவலை எழுதியபோது என் வயது அறுபது.  அறுபது வயதில் அப்படி ஒரு நாவலை எழுதிய ஒரு ஆள் இந்த உலகத்தில் உண்டா?  சொல்லுங்கள், கேட்டுக் கொள்கிறேன்.    வாழ்வின் பல்வேறு பக்கங்களை எழுதிப் பார்த்த அந்த நாவல் காமத் துய்ப்பின் உச்சங்களையும் எழுத்தில் கொண்டு வர முயற்சித்தது. 

மேலும், சமஸும் நானும் இது விஷயமாக நிறையவே பேசி எழுதி உரையாடினோம்.  ஜெயமோகனும் ஆரோக்கியத்தில் ஈடுபாடு காண்பிப்பவர்தான்.  சந்தேகமே இல்லை.  ஆனால் அதெல்லாம் நாயர் உடம்பு.  நாயர்களுக்கும் தேவர்களுக்கும் கல் உடம்பு.  பாரதிராஜா “வாருங்கள், naked writer sir” என்று கூறி என்னை வரவேற்கும் போது கை குலுக்குவார் பாருங்கள், கையே வலிக்கும்.  அப்படி ஒரு வலு.  அவ்வப்போடு உற்சாக மிகுதியில் தோளில் தட்டுவார், தோள் வலி கண்டு விடும்.  ஜெயமோகனும் அப்படியே.  அவர்களுக்கெல்லாம் பிதுரார்ஜிதமான, மரபணு சார்ந்த பலம் இருக்கிறது.  தொண்ணூறு வயதிலும் அப்படித்தான் இருப்பார்கள்.  நானும் தலைவரும் போகத்தில் திளைத்த தேகம் கொண்டவர்கள்.  அது தடை ஓட்டம் போன்றது.  தஞ்சை மண்ணில் பிறந்தவர்கள் அதிலிருந்து தப்புவது கடினம்.  ஜெயமோகன் ஓடுவது தடைகள் அற்ற ஓட்டம்.  மிகச் சீரான வாழ்க்கை முறை கொண்டவர்.  குடி இல்லை.  அதி போகம் இல்லை.  என்னுடையது கடினமான பாதை. 

சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகணேஷ் என் நீண்ட கால நண்பர்.  எக்ஸைல் நாவலில் வரும் ரொப்போங்கி (டோக்யோ) எபிஸோட் ஸ்ரீகணேஷின் சாகசம்தான்.  அதுதான் கொக்கரக்கோவாக மாறியது.  பார்த்துப் பல ஆண்டுகள் இருக்கும்.  அவர் மகன் பார்கவும் என் வாசகராக இருப்பது இப்போது நாம் பேசுகின்ற விஷயத்துக்கு வலு சேர்க்கிறது.  அவரிடமிருந்து வந்த கடிதம் இது:

 வணக்கம் திரு சாரு,

என் பெயர் பார்கவ். சிங்கையில் வசிக்கும் உங்கள் வாசகன்; திரு ஸ்ரீகணேஷின் மகன். சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் நூலகத்திலிருந்து என் தந்தை இரவல் வாங்கியிருந்த “அறம், பொருள், இன்பம்” கேள்வி பதில் தொகுப்பைப் படித்தேன். பின்னர், பின்நவீனத்துவ இலக்கியம், transgressive இலக்கியம் படிக்க வேண்டும் என்ற வேட்கையில் “Zero Degree” மற்றும் “தேகம்” நூல்களையும் படித்தேன். மிகவும் ரசித்தேன். நான் படித்த முதல் lipogrammatic நாவல் Zero Degree. இப்படியும் எழுதலாமா என்ற கேள்வியைத் தூண்டிய நாவல். குப்பை போடாதே என்று அறிவுரைக்கும் இலக்கியத்திற்கும், குப்பை ஏன் போட்டான் என்று ஆராயும் இலக்கியத்திற்குமிடையே, நம் மனக்”குப்பைகளுக்கு” வெளிச்சமிட்டு, நம் கலை ரசனைகளை உலுக்கிய எழுத்து எனக்கு பிடித்திருந்தது (to shock the literary sensibilities).

இன்று “கமலுக்குக் கிசு கிசு எனக்கு அறிவுரையா” கட்டுரை படித்தேன். தந்தையிடம் அனுப்பி, “கட்டுரைனா இப்ப்டி இருக்கணும். Beautiful, clear, engaging” என்று சொன்னேன். Ageism-க்கு எதிரான தெளிவான எதிர்வினை. நல்லெண்ணத்துடன் கூறப்படும் அமுதமான அக்கறையும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகிவிடும் என்ற எச்சரிக்கைக்கு நன்றி!

இப்படிக்கு,

பார்கவ்

Bynge செயலியை பதிவிறக்கம் செய்து ஒளரங்கசீப் படிக்க ஆவலுடன் உள்ளேன். நன்றி.