250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு ஃபார்ஸி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மல்ஃபூஸாத் எ நக்ஷ்பந்தியா என்பது அந்நூலின் பெயர். ஆசிரியர் ஷா மஹ்மூத். அவர் ஒரு சூஃபி. மொழிபெயர்ப்பாளர் மிகச் சிறந்த ஃபார்ஸி அறிஞர் என்பதால் மொழிபெயர்ப்பில் பிரச்சினை இருக்க வாய்ப்பு இல்லை. ஔரங்காபாதில் அடங்கியிருக்கும் பாபா முஸாஃபிர், அவரது குருவான பாபா பலங்க்போஷ் ஆகியோரின் வரலாறு. இதில் ஒரு இடத்தில் ஒரு சந்தேகம். நபிகள் நாயகம் தன் தோழரிடம் ”உலகில் நீ ஒரு அந்நியனைப் போல் இரு அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இரு” என்று சொன்னார்கள். ஆனால் ஷா மஹ்மூத் இன்னொன்றும் எழுதியிருக்கிறார். அதுதான் என் சந்தேகம். And count yourself one of those in their graves என்றும் சொல்லியிருக்கிறார்கள் நாயகம்.
நான் படித்த அருள்மொழிகளிலேயே ஆக உச்சம் இதுதான். கல்லறைகளிலே உறங்கும் மனிதனைப் போல் உன்னை நினைத்துக் கொள். இதை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன். ஆனால் ஏற்கனவே நான், நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது, இன்றைய நாள் எனக்கு போனஸாகக் கிடைத்துள்ளது என்றே நினைத்துக் கொள்வேன். அதை விட அற்புத வாசகம், கல்லறைகளிலே உறங்கும் மனிதனைப் போல் உன்னை நினைத்துக் கொள் என்பது. இது பற்றி ஷா உமரியிடம் பேசினேன். அந்நியனைப் போல் இரு, வழிப்போக்கனைப் போல் இரு என்பதோடு இணைத்து நாயகம் இந்த வாசகத்தைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு யாரேனும் விளக்கம் தர முடியுமா? யாரேனும் இதைக் கேள்விப்பட்டதுண்டா? ஔரங்கசீப் நாவலுக்கு இது தேவைப்படுகிறது.