மூன்று கட்டளைகள்

என் வாழ்வில் சீனி அளவுக்கு சுவாரசியமான ஒரு மனிதன் இல்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.  அப்பா ஆசிரியர்.  சின்ன ஊர் என்பதால் அப்பாவுக்கு செம மரியாதை.  அம்மாவும் ஆசிரியை.  இருவருமே அரசு ஆசிரியர்கள் என்பதால் மற்ற பல ஆசிரியர்களைப் போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை.  நடுத்தர வர்க்கம்.  என் நைனா பிச்சை எடுத்த வாத்தியார்.  தனியார் பள்ளி என்பது ஒரு காரணம்.  ஆறு குழந்தைகள் இன்னொரு காரணம்.  ஆனால் சீனி எனக்கு அடுத்த தலைமுறை.  என் நைனாவும் சீனியின் அப்பாவைப் போல் பிந்திப் பிறந்திருந்தால் அவருக்கு ஆணுறைகள் அறிமுகமாகியிருக்கும்.  நைனாவுக்கு ஆணுறை அறிமுகம் ஆன போது எனக்கு இருபது வயது ஆகி விட்டது.  மேஜையின் பூட்டிய ட்ராயருக்குள் அப்போதுதான் ஆணுறைகளைக் கண்டேன்.  சீனி கதைக்கு வருவோம்.  அப்பா அம்மா தவிர குடும்பத்தில் மூன்று குழந்தைகள்.  மூன்றே குழந்தைகள்.  சீனியின் தங்கைகள் இருவரும் அரசு மருத்துவர்கள்.  மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்தவர்கள்.  ஆனால் தலச்சனான சீனி படித்தது ஆதி திராவிடர் பள்ளியில்.  ஒரு அய்யங்கார் வீட்டுப் பிள்ளை ஆதி திராவிடர் பள்ளியில் படித்ததில் எத்தனை சுவாரசியமான கதைகள் கிடைக்கும்!  சீனியிடம் மற்றொரு சுவாரசியம், தன் வாழ்க்கை அனுபவங்கள் எதையுமே எழுதப் போவதில்லை என்று என்னிடம் அறிவித்து விட்டார்.  தேவைப்பட்டால் நீங்கள் எழுதிக் கொள்ளலாம் என்று லைசென்ஸும் கொடுத்து விட்டார்.  நான் எங்கே எழுதப் போகிறேன்?  இப்படித்தான் துண்டு துண்டாகக் கிறுக்குவேன்.  மற்றவரின் அனுபவங்களை எழுதுவதில் நான் எப்போதுமே பலவீனமானவன்தான். 

சீனி அளவுக்கு சுவாரசியமான – இல்லை, அதை விட அதிக – சுவாரசியமான வாழ்க்கையை அனுபவம் கொண்ட ஒரு மனிதர் ப்ரஸன்னா.  ஒரு வருட காலம் பெயரே சொல்லாமல் அய்யன் என்று மட்டுமே போட்டு எனக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்.  கடுமையாகத் திட்டியெல்லாம் எழுதுவார்.  ஆனாலும் இவர் வித்தியாசமான ஆள் என்று நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமலேயே இருந்தேன்.  எல்லோரும் எப்போதும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனநோய் இல்லையா?  பிறகு பெயர் சொன்னார்.  வாசகர் என்ற நிலையிலிருந்து நண்பர் என்று மாறினார்.  அவருக்குக் கடிதம் எழுதுவதை விட வாய்ஸ் மெஸேஜ் அனுப்புவது சுலபம் ஆயிற்றே, நேரம் மிச்சம் ஆகுமே என்று அவரது வாட்ஸப் நம்பர் கேட்டேன்.  கொடுக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.  எத்தனை வித்தியாசமான மனிதர் பாருங்கள்.  உடனே மற்றவர்களாக இருந்தால் ஈகோ அடிபட்டு, அவரை ஜென்ம விரோதிப் பட்டியலில் வைத்து விடுவார்கள்.  நான் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன்.  அது அவரது உரிமை என்று எடுத்துக் கொண்டு கடிதமாகவே எழுதத் தலைப்பட்டேன். 

பிறகு என்ன தோன்றியதோ அவரே நேற்று போன் செய்தார்.  அமெரிக்கா என்று தெரிந்ததுமே ப்ரஸன்னாதான் என்று புரிந்து விட்டது.  அமெரிக்காவிலிருந்து வளன் தவிர எனக்கு வேறு யாரும் நேரடியாக போன் செய்வதில்லை.  மெஸேஜ்தான் அனுப்புவார்கள்.  அதுவும் ரொம்பக் கம்மிதான்.  அமெரிக்க ஊர்களிலேயே ப்ரஸன்னா வசிக்கும் ஊரின் பெயர்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  அது ஒரு கவிதை மாதிரி இருக்கும்.  அதைச் சொல்வதே ஒரு அழகு.  நியூயார்க் போன்ற அவலட்சணமான பெயர் அல்ல.  பாருங்கள், பெயரில் ஒரு ய வருவதையே சகிக்க முடியாது.  இரண்டு ய.  பன்றியின் குரலைக் கேட்பது போல் இருக்கிறது.  ப்ரஸன்னாவின் ஊரின் பெயர் ஒரு கவிதை.  அவர் போன் வந்த போது நான் சமையலறையில் இருந்தேன்.  பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அழைத்தார்.  ஒன்பதரை இருக்கும்.  பத்தே முக்கால் வரை பேசினார்.  ஒன்றே கால் மணி நேரமும் அவரேதான் பேசினார்.  நான் வெறுமனே ம் மட்டுமே கொட்டினேன். 

ஒன்றே கால் நிமிடம் பேசினாலே அவந்திகா இரண்டு முறை கூப்பிட்டு விடுவாள்.  கவனியுங்கள்.  நான் போனில் இருப்பதே அவளுக்குத் தெரியாது.  ஆனால் நேற்றுப் பேரதிசயமாக ஒன்றே கால் மணி நேரமும் அவளுக்கு நான் மிக மிக தேவைப்படும் நேரம் அது என்றாலும் என்னை அழைக்கவே இல்லை.  அந்த நேரத்தில்தான் அவள் கீழே பூனைகளுக்கு உணவு கொடுக்கப் போவதற்கான ஏற்பாடுகளை நான் செய்ய வேண்டும். நான் அந்த ஏற்பாடுகளைச் செய்யும் நேரத்தில் அவள் வீடு பெருக்கித் துடைப்பாள். நான்தான் டப்பாவில் பூனை உணவை ரொப்ப வேண்டும்.  சிக்கனைப் பதமான சூட்டில் வேக வைத்து இறக்க வேண்டும்.  மழைக் காலம் என்பதால் பூனைகளுக்கு மிதமான சூடு இதமாக இருக்கும்.  நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றலாம்.  ஒரே ஒரு கணம், இதைப் படிக்கும் நீங்கள் ஒரு தெருப் பூனையாக மழைக் காலத்தில் வாழ்ந்து பாருங்கள்.  ஒதுங்க இடம் தேட வேண்டும்.  குளிர் நடுக்கி எடுக்கும்.  கொலைப் பசி.  இந்த மாத (நவம்பர் 2021) ஆரம்பத்தில் பெய்த பேய் மழையில் நான்கு குட்டிகள் செத்து விட்டன.  இந்த மழைக் காலத்தில் பூனைகளுக்கு அவந்திகாதான் தெய்வம்.  நேற்று அந்த எடுபிடி வேலை எதற்குமே அவள் என்னை அழைக்கவில்லை.  நான் போனில் ம் கொட்டுவதைக் கேட்டுக் கொண்டே வீட்டைப் பெருக்கித் துடைத்துக் கொண்டிருந்தாள். 

ஏன் என்னை அப்படி அனுமதித்தாள் என்று இப்போதும் எனக்குப் புதிராகவே இருக்கிறது.  பல காரணங்களை யோசிக்கிறேன்.   ரஹ்மானிடமே பேசிக் கொண்டிருந்தாலும் ஒன்றே கால் நிமிடத்தில் அழைப்பு வந்து விடும்.  பிறகு அழைக்கிறேன் ரஹ்மான் என்றுதான் சொல்லியாக வேண்டும்.  ரஹ்மான் மா என்றால் யார் ரஹ்மான் என்பாள்.  ஏ.ஆர். ரஹ்மான்மா என்றால், யாராக இருந்தால் எனக்கென்னப்பா, அவர் என்ன கடவுளா என்பாள்.  இப்படியெல்லாம் ஆரம்பத்தில் நடந்ததாலேதான் நானே போனில் இருக்கும் நண்பரிடம் மன்னிப்புக் கோரியபடி போனை கட் பண்ணி விடுவேன். 

அப்படிப்பட்ட சூழலில் நேற்று ஒன்றே கால் மணி நேரம் குறுக்கே வரவில்லை என்றால் எப்படி இருக்கும்!  ஆனாலும் எனக்கு உள்ளுக்குள் குலை நடுக்கம்தான்.  என்னோடு ஒன்றே கால் நிமிடம் பேசுவதற்கு மூக்கால் அழுகிறாய், மற்ற எழுத்தாளனெல்லாம் உன்னை விட முப்பது மடங்கு எழுதி விட்டான் என்று அரற்றுகிறாய், இது யார் இது, ஒன்றே கால் மணி நேரம் ம் கொட்டுகிறாய் என்று பேச்சு கேட்க வேண்டுமே என்றுதான் குலை நடுக்கம்.  அவளோடும் பேசலாம்தான்.  என் உயிருக்குயிரானவள் ஆயிற்றே?  பேச ஆரம்பித்தால் நீ புத்தன், நான் சித்தன் என்று ஆரம்பித்து விடுவாள்.  எனக்குத் தாங்குமா? 

இலக்கிய விவாதம் என்று வந்தால் நண்பர்களோடு எட்டு மணி நேரம் கூட இடைவெளி இல்லாமல் பேசியிருக்கிறேன்.  ஆனால் போனில் இப்படி நடப்பது வெகு அரிது.  ஆனால் ப்ரஸன்னாவிடம் ஏராளமான கதைகள் உண்டு.  விட்டால் நாள் கணக்கில் பேசுவார் என்பதற்கான மூட்டம் தெரிந்தது.  தாராவி தெரியும்.  தாராபுரம் அக்ரஹாரம் தெரியும்.  கன்னடம் தெரியும்.  தெலுங்கு தெரியும் (தாய் மொழி).  உர்தூ தெரியும்.  சுருக்கமாகச் சொன்னால், எனக்கு புத்திசாலிகளைப் பிடிக்கும். 

பேசக் கூடிய நண்பர்கள் எனக்கு சிலர் உண்டு.  ஒரு நண்பர் பேசிக் கொண்டே இருப்பார்.  எல்லோரிடமும் பேசுவார்.  என்னோடு இரண்டு மணி நேரம் கூடப் பேசுவார்.  அந்த இரண்டு மணி நேரப் பேச்சையும் பதிவு செய்தால் அது ஒரு குறுநாவல்.  அத்தனை சுவாரசியமான பேச்சு.  பேச்சு என்ன காற்றிலிருந்தா வரும்?  அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி.  அத்தனையும் கதைகள்.  இப்படிப் பேசுகிறாரே என்று ஒருநாள் மாலை என் இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு போனேன்.  அவர்களைப் பார்த்ததும் அவருக்கு என்ன ஆயிற்றோ, மோடியின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியும், இந்தியா அதனால் சூப்பர் பவராக மாறிக் கொண்டிருப்பது பற்றியும் இரண்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் பேசினார்.  எனக்கே அவர் அப்படியும் பேசுவார் என்று அன்றைக்குத்தான் தெரியும்.  என் இரண்டு நண்பர்களும் என்னை ஆசான் என நினைப்பதால் என்னை அன்று மன்னித்தார்கள்.  இப்படித்தான் பேச்சு கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா என்று முறைத்தார்கள்.  இல்லை என்று எத்தனையோ வாதிட்டேன்.  அவர்கள் நம்பவே இல்லை.  இனி எங்களை அழைக்காதீர்கள் என்று மட்டும் நிறுத்திக் கொண்டார்கள்.  இதை விட பயங்கரம், அந்த இரண்டு மணி நேரப் பேச்சின் வெம்மையைத் தீர்க்க அன்று இரவு இரண்டு மணி வரை டீ குடித்துக் கொண்டே வேறோர் இடத்தில் பேசித் தீர்த்ததாகச் சொன்னார்கள்.  இருவருமே டீடோட்டலர்கள் என்பதால் டீ தான் ஒரே வழி.  என்ன செய்ய? 

இதற்குப் பிறகும் அந்த நண்பரை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  பழையபடியே படு சுவாரசியமாகப் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்.  போன வாரம் சந்தித்த போது, தான் நட்புடன் இருந்த ஒரு அகோரி பற்றிச் சொன்னார்.  சென்னையில் வசிக்கும் அகோரி.  இப்போதும். 

வாப்பா, இன்னிக்கு ஒனக்கு எதாவது குடுக்கணும்னு தோணுது.  என்னா வேணும் கேளு?

ஒண்ணும் வேணாம் ஹஜ்ரத்.  ஒங்களைப் பார்க்கறதே பெரிய பாக்கியம். 

அப்படிப் போடு.  சரி, போய் ஒரு அரை பாட்டில் பிராந்தி வாங்கி வா.  ரெண்டு பேரும் குடிப்போம்.

இப்படித் தொடங்கியது உரையாடல்.  அன்று அந்த நண்பர் ரெண்டு மணி நேரம் சொன்னதை இங்கே எழுத மாட்டேன்.  அது ஒரு சிறுகதை.  இந்த நண்பர்தான் என் நண்பர்களிடம் மோடி பற்றி ரெண்டு மணி நேரம் கத்தி போட்டவர். 

சிலரைப் பற்றி சிறப்பான கதைசொல்லி என்பார்கள்.  நான் ஒரு சிறப்பான கதை கேட்பவன்.  எட்டு மணி நேரம் பேசவும் செய்வேன்.  கேட்கவும் செய்வேன். 

ஆனால் என் விதி என்னவென்றால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெரும் பெரும் கத்திகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.  செல்வா வீட்டு யக்ஞோபவீத வைபவத்துக்குச் சென்றதை என்னால் மறக்கவே இயலாது.  அறுபது வயதான ஆள் ஒருத்தர் போட்டார் பாருங்கள் கத்தி, ஜென்மத்துக்கும் மறக்காத கத்தி.  இருபது நிமிடம் ஆகியிருக்கும்.  கருப்பசாமிதான் வந்து என்னைக் காப்பாற்றி அழைத்துப் போனார்.  அம்மாதிரி ஆசாமிகளிடமிருந்து தப்பிக்கும் உபாயம்தான் எனக்குத் தெரிவதே இல்லை. 

அப்படி மாட்டும் இடங்களில் ஒன்று, சென்னை புத்தக விழா.  வித விதமாகக் கத்தி போடுவார்கள்.  கூர்மையான கத்தி.  மழுங்கின கத்தி.  துருப்பிடித்த கத்தி.  ரம்பம் மாதிரி குடலை வெளியே இழுத்துப் போடும் கத்தி.  இந்த ஆண்டு புத்தக விழாவில் நான் ஜெயகாந்தன் மாதிரி மூர்க்கமாக நடந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.  மூஞ்சியில் அடித்த மாதிரி ”ரொம்ப அறுக்காதீங்க, அந்தாண்டை போங்க” என்று சொல்லி விட்டால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படித்தான் செய்யப் போகிறேன்.  இதில் நஷ்டம் எனக்குத்தான்.  நான் மூர்க்கன் என்று எண்ணி பல நல்ல வாசகர்கள் நெருங்கவே மாட்டார்கள்.  வாசகிகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். 

இவ்வளவையும் ஏன் எழுதினேன் என்றால், ப்ரஸன்னா என்னோடு பேசியது பற்றி அவர் மனைவி மூன்று கட்டளைகள் இட்டாராம்.  அது பற்றிய அவர் கடிதம் இதோ:

சாரு,

நான் உங்களுடன் பேசிக் கொண்டிருந்ததை over hear (eavesdropஆகக் கூட இருக்கலாம்) செய்த என் மனைவி அருளிய மூன்று கட்டளைகள் மற்றும் ஒரு எச்சரிக்கை பின் வருமாறு😃

1. உன் லைப் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் உனக்கு மட்டுமே intriguing ஆக இருக்கும். அதை நீ உன்னிடமே வைத்துக் கொள். எந்நேரமும் எங்கு வாய்ப்புக் கிடைக்கும், கக்கலாம் என்று அலையாதே.

2. A good speaker is a good listener too. Learn to be one.

3. குடித்துவிட்டு போனை உபயோகிக்கவே கூடாது. யாருக்கும் போன் செய்யவோ, போன் வந்தால் எடுத்துப் பேசவோ கூடாது.

முத்தாய்ப்பாய் விதி மூன்றை மீறினால் occational drinkerல் இருந்து Teetotaler ஆகப் பதவி இறக்கம் செய்யப்படுவாய்.

– ப்ரஸன்னா.

ப்ரஸன்னாவின் மனைவி சொன்ன மூன்று கட்டளைகளை நானுமே வழி மொழிகிறேன்.  ஆனால் எப்படி மனித இனத்தில் ஆண், பெண், ட்ரான்ஸ்ஜெண்டர் என்று மூன்று பிரிவுகள் உண்டோ அதேபோல் நான்காவது பிரிவான எழுத்தாளர் என்று ஒரு இனமும் உண்டு.  பார்க்கத்தான் அவர்கள் மனித உருவில் இருப்பார்களே ஒழிய அவர்கள் மனிதர்கள் அல்ல.  அவர்களிடம் இந்த முதல் கட்டளை செல்லாது.  கத்திதான் போடக் கூடாதே தவிர நீங்கள் பத்து வருட காலம் தாராவியில் வசித்திருந்தால், அந்தப் பத்து வருட அனுபவத்தை ஒரு எழுத்தாளனிடம் பத்து நாட்களாவது உட்கார்ந்து சொல்லத்தான் வேண்டும்.  அவனும் தாராளமாகக் கேட்பான்.  முகநூலில் இளமாறன் என்று ஒரு நண்பர் தன்னுடைய ஸாம்பியா அனுபவங்களை எழுதியிருக்கிறார்.  500 பக்கத்தில் எழுத வேண்டியவை 5 பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  அப்படிப்பட்ட அனுபவங்கள்தான் ப்ரஸன்னாவினுடையதும்.  ஆனால் இதையே அவர் சராசரிகளிடம் சொன்னால் தீர்ந்தது கதை.  தொலைத்துக் கட்டி விடுவார்கள். 

உலக மகா கத்திகளையெல்லாம் நான் புத்தக விழாவில் சந்தித்திருக்கிறேன்.  அவர்கள் பற்றி எழுதியும் இருக்கிறேன்.  ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.  ஒரு ஆள் – நாற்பது வயது இருக்கும் – தன் முப்பத்திரண்டு வயது தங்கைக்குத் திருமணம் ஆகவில்லை என்று அரை மணி நேரம் விளக்கினார்.  துருப்பிடித்த கத்தியால் கழுத்தை அறுப்பது போன்ற பேச்சு.  கடைசியில் ”மாப்பிள்ளை விட்டாரிடம் நீங்கள் பேசினால் உங்கள் தங்கைக்கு எப்போதுமே திருமணம் நடக்காது, நீங்கள் பேசாமல் வேறு யாரையாவது பேசச் செய்தால் இன்றே திருமணம் நடக்கும்” என்று அருள் வாக்கு சொல்ல நினைத்து, அதற்கும் அவர் சந்தர்ப்பமே கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்ததால் விட்டு விட்டேன். 

ஆனால் ப்ரஸன்னாவை நேரில் சந்தித்தால் நான் மட்டுமே சந்திப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.  என் நண்பர்கள் மற்றவர்களின் கதையைக் கேட்கும் பொறுமை இல்லாதவர்கள்.  எனக்கு ஒரு ஐஏஎஸ் நண்பர் உண்டு.  அவரோடு ஒருமுறை கோவா சென்றிருந்தேன்.  அவரையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது என் ஆசை.  ஆனால் சீனிக்கு அதில் விருப்பம் இல்லை.  காரணம், அந்த ஐஏஎஸ் நண்பர் – அவருக்கு கோபால் என்று பெயர் வைப்போம் – போனில் ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கு ஐந்து நிமிடம் எடுத்துக் கொள்கிறார், இவரை அழைத்துக் கொண்டு எப்படி கோவா போவது என்பது சீனியின் கேள்வி.  ஆனால் கோபால் என்னிடம் அப்படிப் பேசுவதில்லை.  சீனியிடம் பேசுகிறார்.

”நாலாம் தேதி கிளம்புகிறோம்.  உங்களுக்கு டிக்கட் போடவா கோபால்?”

இதற்கு கோபால் என்ன பதில் சொல்லலாம்.  போடுங்கள்.  அல்லது, வேண்டாம், நானே போட்டுக் கொள்கிறேன்.  ஆனால் கோபால் என்ன சொல்கிறாராம் என்றால்,

”சீனி, என் மனைவி சிகாகோ பல்கலைக்கழகத்தில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கச் செயல்பாடுகள் பற்றிய முதுநிலை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாள் அல்லவா, இப்போது மூன்றாம் ஆண்டில் இருக்கிறாள், இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது, அவள் சிகாகோவிலிருந்து எப்போது வருகிறாள் என்று தெரியவில்லை.  மூன்றாம் தேதி வந்தால் நாலாம் தேதி நாம் கிளம்பி விடலாம். பிரச்சினையே இல்லை.  கவலைப்படாதீர்கள்.  இதற்கிடையில் சுந்தர் – ஓ, சுந்தர்னா உங்களுக்கு யார்னு தெரியாது இல்ல, என் மகன் – அவன் கனடாவில் நேநோடெக்னாலஜி படிச்சிட்டு இருக்கான்ல – அவன் மூணாம் தேதிதான் இங்கேர்ந்து கனடா கிளம்புறான் சீனி.  அவள் – அவள்தான் என் மனைவி – சிகாகோவிலேர்ந்து கிளம்புகிறதுக்குள்ள ரெண்டு மூணு பேப்பர் வேற சப்மிட் பண்ணிட்டு வரச் சொல்லிட்டாங்களாம்…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….. சுந்தர்ட்ட நான் ரெண்டாந்தேதியே கிளம்புடான்னு சொல்லியிருக்கேன்.  அவ கிட்டேயும் – அவள்னா என் வைஃப் – தேதியைக் கொஞ்சம் மாத்தி வச்சுக்கோன்னு சொல்லியிருக்கேன்.  எப்டியும் நான் வரதுன்னா சொல்லிடறேன். வரலேன்னாலும் சொல்லிடறேன்.  ஆனாலும் நான் எப்படியும் வந்துதான் தீருவேன்.  சாரு சாரை இதுவரை நான் மீட் பண்ணினதே இல்லை இல்லியா சீனி.  இந்தத் தடவை அவரை மிஸ் பண்ணிடக் கூடாது.  அதுவும் அவரே போன் பண்ணி என்னைக் கூப்பிட்டிருக்கிறதாலே.  இல்லியா சீனி.  அப்றம் பேசறேன் சீனி.  பை பை.”

கோபால் சீனியிடம் சுனாமி போல் அடித்து ஓய்ந்ததும் சீனி என்னைக் கூப்பிட்டார்.  அந்த ஏழரை நிமிடத்தையும் அப்படியே அட்சரம் பிசகாமல் கோபால் குரலில் பேசிக் காண்பித்து விட்டு கடைசியாகச் சொன்னார்.  ”ஏழரை நிமிடம்.  பேய் மழை பெய்து ஓய்ந்தது போன்ற பேச்சு.  இப்போது எனக்கு கோபாலின் குடும்ப விஷயம் அத்தனையும் அத்துப்படி.  சாரு.  என்னைத் தவிர உங்களோடு வேறு யாருமே நண்பனாக இருக்க முடியாது.  உங்களுக்காகத்தான் இவ்வளவையும் சகிச்சிக்கிட்டேன்.  நான் என்ன இவருடைய அலுவலகத்தில் வேலை வாங்கிக் கொடுங்கள் என்றா கேட்டேன்?  என்னய்யா இது அநியாயம்?  டிக்கட் போடவான்னு கேட்டதுக்கு என் உடம்பில் இருக்கும் நவ துவாரத்தையும் கிழித்து விட்டாரே சாரு?”

இருந்தாலும் சீனியை ஆற்றுப்படுத்தி ஒருவாறாக கோபாலை கோவாவுக்கு அழைத்துச் சென்று விட்டேன்.  ஆனால் கோபாலிடம் பிரச்சினையை சொல்லி விட்டேன்.  மேலே உள்ளது அவ்வளவையும் பச்சையாகச் சொல்லி விட்டேன்.  அதனால் அவரும் அடுத்தடுத்த நாட்களில் கம்மென்று இருந்தார்.  பேசச் சொன்னால்தான் பேசுவார்.  கோபால் வெளியுறவு அமைச்சகத்தில் இருப்பதால் பல நாடுகளிலும் சுற்றியிருக்கிறார்.  மணிக்கணக்கில் அவரது அனுபவங்களைக் கேட்கலாம்.  ஆனால் எப்போது பார்க்கலாம் என்றால் மேலே கண்டபடி கத்தியும் போடுவார். 

எனக்குப் பெயர் கூடத் தெரியாத அந்தப் பெண் – ப்ரஸன்னாவின் மனைவி – சொன்னது வேத வாக்காகத்தான் தெரிகிறது.  உன் கதையை எல்லோரும் ஆர்வமாகக் கேட்பார்கள் என்று நினைக்காதே, அது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும்.  இதே வார்த்தைகளை எக்ஸைலில் எழுதியிருக்கிறேனே? துலூஸில் ஒரு நண்பர் தன் இள வயதுப் புகைப்படங்களைக் காண்பித்து என்னிடம் மூன்று நாள் கத்தி போட்டதை.  அதுதான் ஒரிஜினல் கத்தி. 

இரண்டாவது கட்டளையும் வேதம்.  எல்லோரும் கடைப் பிடித்தால் உலகமே சொர்க்கமாக இருக்கும்.  தமிழர்கள் என்று இல்லை.  வெளிநாட்டுக்காரர்கள், அதிலும் ஐரோப்பியர், அமெரிக்கர் போன்றோர்தான் பெரும் கத்திகளை வைத்திருக்கிறார்கள்.  சென்ற வாரம் போலந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அந்நாட்டைப் பற்றி ஒரு கேள்வி கேட்டு விட்டேன்.  அரை மணி நேரம் கத்தி போட்டு என்னைப் பீஸ் பீஸாக்கி விட்டார்.  அந்த அரை மணி நேரத்தில் போலந்து பற்றி ஒரு சுவாரசியமான விஷயம் கூட வரவில்லை.  22 வயதுப் பெண்.  ஏதோ மனநோய் விடுதியிலிருந்து தப்பி வந்தவளைப் போல் உளறினாள்.  இத்தனைக்கும் அமெரிக்க ஆங்கிலம்.  இவ்வளவு ஆங்கிலம் எப்படித் தெரியும் என்று கேட்டேன்.  மூன்று ஆண்டுகள் நியூயார்க்கில் படித்தாளாம்.  அதனால் இடைவெளி இல்லாமல் மணிக்கணக்கில் பேசுவது என்பது ஒரு இனத்துக்கோ, நாட்டுக்கோ மட்டும் உரியது அல்ல.  பொதுவாக, வயதானவர்களும் பெண்களும்தான் இதில் முன்னணியில் நிற்கிறார்கள். 

மூன்றாவது கட்டளை.  அற்புதம்.  நான் குடித்து விட்டு யாருக்கும் போன் செய்ய மாட்டேன்.  அதை விட முக்கியம், குடித்து விட்டுப் பேசுபவர்களோடு ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன்.  அதனால்தான் என் போனை ஒன்பது மணிக்கே அணைத்து விடுகிறேன்.  ப்ரஸன்னா பேசும்போது அவர் முப்பது மில்லி கூடப் போட்டிருந்தது போல் தெரியவில்லை.  ஆனால் ஒன்று.  அவர் பேசும்போது நள்ளிரவாக இருக்கும் என்பதால் இந்த நள்ளிரவில் என்னதான் கிசுகிசுப்பாகப் பேசினாலும் வீட்டுத் தேவதைக்குக் கேட்டு விடுமே என்று சந்தேகப்பட்டேன்.  அது சரியாகி விட்டது.  கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறார். 

இத்தனை எழுதினாலும் ப்ரஸன்னாவிடம் இன்னும் பல மணி நேரங்கள், பல நாட்கள் கேட்பதற்குக் கதை இருக்கிறது.  அதையெல்லாம் நான் கேட்டே ஆக வேண்டும்.   

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai