வாழ்க நீ எம்மான்…: அ. மார்க்ஸ் (முகநூலில் எழுதியது)

May be an image of 1 person and standing

இரவு மணி பத்து 12.35. மகாகவி பாரதியின் கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளில் 1908 ஆம் ஆண்டு ஜனவரி நாட்களின் அவரது பதிவுகளைப் பார்த்துக் கொண்டுள்ளேன்.ஏற்கனவே பலமுறை நான் எழுதியுள்ள ஒன்று இங்கே நிரூபணம் ஆவதைக் காண்கிறேன். 1907 இல் இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒரு எழுச்சி ஏற்பட்டது. பல இளைஞர்கள் அரவிந்தர் முதலான அன்றைய தலைவர்களின் கருத்துக்களால் எழுச்சி பெற்றிருந்தனர். அந்நிய வெள்ளை ஆட்சியை அழித்தொழிக்க அவர்கள் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் குவிந்தனர். அவர்களின் அன்றைய திட்டம் ஆயுதங்கள் கொண்டு, வெடிகுண்டுகளை வீசி வெள்ளை ஏகாதிபத்தியத்தை வேரறுப்பது. இங்கே மீண்டும் ஒரு இந்து சாம்ராஜ்யத்தை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் என்பது. 1907 ’பால பாரதம்’ இதழ் ஒன்றில் மகாகவி பாரதி எழுதுகிறார்:

“ It was in 1907, the spell of Maya, the illusion that a people can be peace full and prosperous and at the same time, weak and dependent, was broken finally, once and for ever.”

தேசத்தின் அதுவரையிலான நம்பிக்கை அந்தக் கணத்தில் சிதைந்தது என்கிறார். அப்படியான ஒரு “மாயை” தகர்ந்தது? அதென்ன? மக்கள் பலவீனர்களாகவும், சார்ந்திருப்பவர்களாகவும், சுய நலம் பேசுபவர்களாகவும், இருந்து கொண்டே மனநிறைவோடு வாழ்ந்துவிட முடியும் என்கிற மாயைதான் தகர்ந்தது. ஒரு புதிய உயிர்ப்பு நிகழ்ந்தது என்கிறர் பாரதி. தேசம். தியாகம். தேசபக்தி. வந்தே மாதரம், இத்தாலியின் வீர மாஜினி (யின் சபதம்).. என்பதாக அன்றைய அரசியல் மேலெழுந்ததையும், அதில் இந்தியச் சமூகத்தின் ஆக மேல் தட்டினர் தலைமை ஏற்றதையும் நாம் உணர்ந்து கொள்கிறோம். பாரதம், தேசம், தேசபக்தி, உயிர்த்தியாகம், National Conscious, New Spirit, உயிர்ப்பலி… எனச் செல்லிறது பாரதியின் கட்டுரை.

இந்தக் கட்டுரைக்கு அவர் கொடுத்த தலைப்பு: “The Spiritual basis of the new movement” – ஆம். ”ஆன்மீகத்தின் அடிப்படையிலான புதிய தேசபக்தி”….கி.பி 1907 என்பது எப்படி இப்படி ஒரு திருப்பமாக மேலெழுந்தது என்பது குறித்து நான் நிறைய எழுதியுள்ளேன். தேசபக்தி, தேசத்திற்கு ஆற்றும் உயிர்ப்பலி என்பன உன்னதமாக்கப்பட்டு குதிராம் போஸ்கள் கைகளில் பகவத் கீதையுடன் தூக்கில் ஏறினர். பின்னாளில் ஆன்மீகம் பேசிய அரவிந்தரின் தோட்டத்தில் வெடிகுண்டுத் தொழிற்சாலை உருவானது. அவர்கள் சிறைப்பட்டபோது சிறைக்குள்ளேயே அவர்களில் அப்ரூவராக மாறியவர் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். விபின் சந்திரபாலர், திலகர் என ஒரு முதல் தலைமுறை உருவானது. போர்க்கள நியாயங்கள் பேசிய கீதையை எல்லோரும் துணைக் கொண்டனர். கோகலே போன்ற வன்முறைகளைத் துணைக் கொள்ளாதவர்கள் ”மிதவாதிகள்” என இழிவு செய்யப்பட்டனர்.

அப்போது வந்தார் அவர். இவர்கள் யாரையும் அவர் அணுகவில்லை. கோகலேயிடம் பாடம் கேட்டார். இரண்டாண்டுகள் இந்தியாவைச் சுற்றிப்பார் முதலில் நீ என்றார் அவர். காந்தி அதை ஏற்று மேற்கொண்டார். மக்களோடு நின்றார். மக்கள் போராட்டங்களில் பங்கேற்றார். தனது கோட், சூட் எல்லாவற்றையும் கழற்றி எறிந்துவிட்டு இடுப்பில் கட்டிய துணி, நெஞ்சில் ஏந்திய துண்டுடன் அவர் களம் இறங்கினார். அவர் கையில் கீதையோ துப்பாக்கியோ இல்லை. பதிலாக ராட்டையை ஏந்தினார். “உண்மையே வெற்றி பெறும்” (சத்ய மேவ ஜெயதே) என்றார். கொலைகளால் பயனில்லை. சிறைகளை நிறப்புவோம் என்றார். நான்கு முன்னணியாளர்கள் துப்பாக்கி ஏந்திப் பயனில்லை. நாலாயிரம் அடித்தளமக்கள் அமைதி வழியில் களம் இறங்குவோம் என்றார். காந்தி தலைமை ஏற்று எடுத்த முதல் போராட்டங்கள் முஸ்லிம்களையும் (கிலாஃபத்), விவசாயிகளையும் (சம்ப்ரான்) என்பதாக இருந்தது. மகாகவி பாரதி இந்தப் புதிய காட்சி மாற்றத்தை வியப்புடன் அணுகினான்.

உலகப் பத்திரிக்கைகளை எல்லாம் வாசித்து ஆழமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றுகொண்டிருந்த அவன், மகாத்மா காந்தியைப் பார்த்து…

“வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்” என்று சொல்ல நேர்ந்த பின்னணியை நினைத்தவாறு இந்த இரவு கழிகிறது…

அ.மார்க்ஸ்