காஃபிக்கு எப்படி ஆர்டர் கொடுப்பது?

என்ன நடந்திருக்கிறது என்றால், ஸீரோ டிகிரி பதிப்பக விழா முடிந்ததும் எங்கள் ஜமா அப்படியே கிளம்பி ஏற்காடு போய் விட்டது.  நானோ தொடர்ந்து வினித்தைத் திட்டித் திட்டி ஒவ்வொரு நாளாக கட்டுரை போட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொன்றையும் படித்து விட்டு ஏற்காட்டில் ஒவ்வொருத்தரும் வினித்தைப் பிடித்து இன்னும் சாத்தியிருக்கிறார்கள்.  சுரேஷ் சாத்தியதுதான் வேடிக்கை.  ஏண்டா, நான்தான் ரொம்பத் தெளிவாச் சொன்னேனேடா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசாதேன்னு?  அப்படியும் ஏண்டா கேட்கலை?

சரி விடுங்கள்.  அதற்கே மறுபடியும் போக வேண்டாம்.   ஏற்காட்டிலிருந்து கீழே இறங்கியதும் வாசலில் ஒரு காஃபி ஷாப் இருக்கிறது.  கடை அல்ல.  ஷாப்.  அங்கே காஃபி மற்றும் அது போன்ற பானங்கள் பிரமாதமாக இருக்கும்.  அங்கே காஃபி குடிக்கப் போயிருக்கிறது ஜமா. 

எங்கள் வட்டத்தில் யாருமே குறுநில மன்னர் இல்லை.  எல்லோரும் சமம்.  வேலை செய்வதில்.  எனக்கு மட்டும் கொஞ்சம் சலுகை உண்டு.  வயது காரணமாக.  ஆனாலும் நாங்கள் அதெல்லாம் எதுவும் தெரியாதது போல் சீனியை மட்டுமே வேலை வாங்குவோம்.  அவர் மதியம்தான் உறக்கத்திலிருந்து எழுவார் என்பதால் எங்கள் வட்டத்திலேயே உள்ள அமைதிப் பூங்காவான கார்த்திக்கை வாங்குவோம்.  பலரும் இருந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள்.  கார்த்திக்கும் வாய் திறவாமல் எல்லா வேலையும் செய்வார்.  எங்களுக்கும் அப்படிப்பட்ட ஆள்தானே வேண்டும்?  அப்படித்தானே எங்கள் அம்மா எங்களை வளர்த்திருக்கிறார்கள்?

காஃபி ஷாப்பில் எல்லோருக்கும் – நாலு பேர் – வினித் தான் காஃபி சொல்லியிருக்கிறான்.  துரதிர்ஷ்டம், சீனியும் அதில் ஒருவர்.  வந்தது நாலு பால்.  என்னப்பா இது, காஃபி கேட்டால் பால் தருகிறீர்கள் என்று சிப்பந்தியைக் கேட்டிருக்கிறார் சீனி.  “இல்லிங்க, சார்தான் காஃபி மீடியமாக் கேட்டார்.  இதுதான் மீடியம் காஃபி.” இது சிப்பந்தி. சார் என்பது நம் வினித். 

“டேய், சாரு இவ்வளவு எழுதியும் ஏண்டா இப்படிப் பண்றே?  ஏண்டா மீடியம் காஃபி கேட்டிருக்கே?”

“அது இல்லை அராத்து, சாருதான் எப்போது காஃபி கேட்டாலும் மீடியமாக் கேட்பாரு.  அதே மாதிரி நானும் கேட்டேன்.” 

அப்பாவியாய்ச் சொல்லியிருக்கிறான் வினித்.  (எங்கள் திருவாரூரே இப்படித்தான் என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறீர்களே?)

“டேய் பாவி, அவர்தாண்டா மீடியமாக் குடிப்பாரு.  சரி, நீயும் வேணுமானா மீடியமாக் குடி.  எங்களுக்கும் ஏண்டா மீடியமா சொன்னே?”

“சரி, மாத்திக்கிறேன். இதையும் சாரு கிட்ட போட்டுக் குடுத்துராதீங்க அராத்து.  அதுக்கும் பத்து கட்டுரை எழுதிரப் போறாரு.” 

நேராக ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதிய மண்ணில் தெரியும் வானம் நாவலுக்கு வாருங்கள்.  நான் அந்த நாவல் பற்றிப் பேசும் போதும் எழுதும் போதும் ஒன்று சொல்வதுண்டு.  ஒன்று, அந்த நாவலின் சில பகுதிகளை உங்கள் பிள்ளைகளுக்குப் படித்துக் காண்பியுங்கள்.  முடியாவிட்டால், அந்நாவல் பற்றிய என் பேச்சையாவது கேட்கச் செய்யுங்கள்.  சமூகம் இன்னும் கொஞ்சம் உருப்படும். 

மகாத்மா அறையின் உள்ளே பெருந்தலைவர்களோடு ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கிறார்.  யாரும் உள்ளே போய் தொந்தரவு செய்து விடாமல் வெளியே காவல் நிற்கிறான் கதை நாயகன் இளைஞன்.  சில வட இந்தியப் பெருந்தனக்காரர்களின் குடும்பப் பெண்கள் வந்து மகாத்மாவைப் பார்க்க உள்ளே போக வேண்டும் என்கிறார்கள்.  காந்திக்கு மிக வேண்டியவர்கள்.  இளைஞன் உள்ளே விட மறுக்கிறான்.  தள்ளுமுள்ளு ஆகிறது.  ஒரே சத்தம்.  மாலையில் மகாத்மா இளைஞனிடம் சிரித்தபடி, ”என்ன, காலையில் ஒரே பிரச்சினை போலிருக்கிறதே?” என்று கேட்கிறார். விஷயத்தை விளக்குகிறான் இளைஞன். 

காந்தி திருப்தி ஆகவில்லை.  “நீங்கள் என் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்கிறான் இளைஞன்.

உடனடியாகத் தரையில் படுத்து என்னைத் தாண்டிச் செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன் என்கிறார் மகாத்மா.  எந்த இந்தியப் பெண் தாண்டிச் செல்வாள்?

அப்போது மகாத்மா வேறு ஒன்றும் சொன்னார்.  அதுதான் வினித்தும் இன்றைய இளைஞர்களும் கற்றுக் கொள்ள வேண்டியது.  ”எந்த ஒரு கோட்பாடும் தத்துவமும் ரத்தத்துக்குள் செல்ல வேண்டும்.  அதுவே உயிர் மூச்சாக மாற வேண்டும்.  அஹிம்சை என்பது உங்கள் சிந்தனைக்குள் ஊடுருவியிருந்தால் அப்படிச் செய்திருப்பீர்கள்.  அப்படிச் செல்லாததால்தான் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.”

அடுத்தவருக்குப் பிரச்சினை கொடுக்கக் கூடாது என்பது நம் கோட்பாடு.  அதை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் எப்படிச் செய்ய வேண்டும் என்றோ, சாரு செய்வது போல் செய்ய வேண்டும் என்றோ யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது.  காஃபி பாலாக ஆகி விடும்.

நான் மீடியம் காஃபிதான் குடிப்பேன்.  ஆனால் காஃபி ஹவுஸ்களில் போய் மீடியம் காஃபி கேட்க மாட்டேன்.  கேட்டால் இப்படித்தான் கெடுத்து விடுவார்கள்.  காஃபி கடைகளில் நாம் வாயே திறக்கக் கூடாது.  திறக்காமல் இருந்தால் அற்புதமான காஃபி கிடைக்கும்.  ஆனால் சில கடைகளில் ஸ்ட்ராங்கா மீடியமா என்று கேட்பார்கள்.  அங்கே வாயை மூடிக் கொண்டிருக்கக் கூடாது.  மீடியம் என்று சொல்லி விட வேண்டும்.   

பல சமயங்களில் நண்பர்களிடம் பார்த்திருக்கிறேன்.  எனக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று ”மீடியமாக் குடுங்க” என்பார்கள்.  கடைக்காரர் பாலைக் கொடுப்பார்.  பலமுறை நடந்திருக்கிறது.  இல்லாவிட்டால் என்ன செய்வார்கள் என்றால், நாலு காஃபி குடுங்க என்று ஆர்டர் சொல்லி, காசையும் கொடுத்து விட்டு வந்து என்னோடு அமர்ந்து கொள்வார்கள்.  இதில் இன்னொரு பொதுத்தன்மையையும் பார்த்திருக்கிறேன்.  நாங்கள் நாலு பேர் இருப்போம்.  இவர்தான் முந்திரிக்கொட்டை மாதிரி எழுந்து போய் காஃபி சொல்லி விட்டு வருவார்.  அந்த “அவர்” – நூற்றுக்கு நூறு கேஸ்களில் பார்த்த அனுபவம் இது – அவர்தான் அந்த நாலு பேரில் குடிக்காதவராக இருப்பார்.  குடியை நிறுத்தியவர் அல்ல.  குடியை நிறுத்தியவர் வேறு.  குடிக்காதவர் வேறு.  குடியை நிறுத்தியவர் காயடிக்கப்பட்ட ஆட்டைப் போன்றவர்.  குடிக்காதவர் சைவ உணவுக்காரர் மாதிரி.  இருவரும் ஒன்று அல்ல.  மேலே கூறியவண்ணம் எனக்குக் காஃபி ஆர்டர் கொடுப்பவர்கள் அத்தனை பேரும் குடிக்காதவர்கள்.

காஃபி வரும்.  அது காஃபியாக இருக்காது.  பானகம்.  சர்க்கரையை அள்ளிக் கொட்டியிருப்பார்கள்.  காஃபிக்கு ஆர்டர் கொடுத்த நல்லவர், குடியைக் கையால் கூடத் தொட்டிருக்காதவர் இது பற்றி யோசித்திருக்கவே மாட்டார்.  காரணம், அம்மாதிரி ஆட்கள் தம்மைத் தவிர “the other” பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.  பெரும்பாலும் அவர்கள் குடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது என் அனுபவம்.  (என் நண்பர் கண்ணன் மட்டுமே விதிவிலக்கு.  அவர் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்வதில் கிட்டத்தட்ட சீனி மாதிரி!)

நான் அந்தப் பானக காஃபியைத் திருப்பிக் கொடுத்து விட்டு சீனி கம் என்று சொல்லி மீண்டும் வாங்கிக் குடிப்பேன்.  அப்போதும் அந்த நண்பர் எதுவுமே நடக்காதது போல்தான் இருப்பார்.  அடுத்த முறையும் முன்பு செய்தது போலவேதான் செய்வார்.  தான் செய்தது தப்பு என்று தெரிந்தால்தானே கற்றுக் கொள்ள முடியும்? 

இந்த இடத்தில், தம்பி புதுவை இளவேனில் அலியான்ஸ் ஃப்ரேன்ஸேஸில் மேடையிலேயே வைத்துச் சொன்ன ஒரு கதை நினைவு வருகிறது. புதுவை இளவேனில் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர்.  அவரை ஒரு பிரபல எழுத்தாளர் தன் இல்லத்துக்கு அழைத்திருக்கிறார்.  புதுவையிலிருந்து 600 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் அது.  இரவு முழுவதும் காரிலோ பஸ்ஸிலோ பயணம் செய்து காலையில் போய்ச் சேர்ந்திருக்கிறார் இளவேனில்.  அழைப்பு மணியை அழுத்தியதும் ஒரு பணிப்பெண் வந்து எட்டிப் பார்த்து, “திண்ணையில் காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.  இவர் காத்திருக்கிறார்.  காலைக் கடன்கள் முடிக்க வேண்டும்.  குளிக்க வேண்டும்.  கடும் பசி வேறு.  அரை மணி கழித்து வீட்டு அம்மணி வந்து “இருங்கள், சார் வருவார்” என்று சொல்லி விட்டுப் போகிறார்.  அதற்குப் பிறகு அரை மணி கழித்து, அதற்கும் மேல் பொறுக்க முடியாமல் இளவேனிலே திண்ணையில் இருந்த ஜன்னலைத் திறந்து வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்திருக்கிறார்.  பார்த்தால் ட்ரெட் மில்லில் எழுத்தாளர் பெரிய சினிமா ஹீரோ மாதிரி வேக நடை நடந்து கொண்டிருக்கிறார்.  இவர் எட்டிப் பார்த்ததைப் பார்த்ததும் முகத்தில் வழிந்த வியர்வையைத் தோளில் கிடந்த துண்டினால் துடைத்தபடி சந்நிதானங்கள் ஆசி வழங்குவது போல் “பொறுங்கள், வருகிறேன்” என்பது போல் கையைத் தூக்கி சைகை செய்தாராம்.  அப்புறம் ஒரு பதினைந்து நிமிடம் கழித்து வந்த எழுத்தாளர் இளவேனிலை மாடிக்குப் போகச் சொல்லியிருக்கிறார். 

எழுத்தாளர் ரொம்பப் பிரபலம்.  பெரிய புள்ளி.  வீடே பங்களாதான்.  மாடியிலேயே விருந்தினர் அறைகள் உள்ளன.  எட்டு எட்டரை போல் காலை உணவு.  பெரிய மேஜை.  எழுத்தாளர்.  அவரது மகன்.  இளவேனில்.

நாலு விதமான சட்டினிகள் பரிமாறப்பட்டிருக்கின்றன.  உள்ளங்கை சைஸில் இரண்டு இட்டிலிகள்.  அதன் மேல் சுடச் சுட சாம்பார்.  கூட, மிளகாய்ப் பொடி.  இளவேனிலுக்கு ஒன்றுமே புரியவில்லை.  இத்தனை விதவிதமான சட்னியையும் மிளகாய்ப் பொடியையும் சாப்பிட வேண்டுமானால் இந்த சைஸில் இருபது இட்லியாவது தேவைப்படுமே ஐயா?  இரண்டே வாயில் இரண்டு இட்லியையும் முழுங்கி விட்டு வெறும் சட்டினியோடு எழுத்தாளரும் அவர் புதல்வரும் எப்படி அந்த இட்லிகளை அவ்வளவு சட்னியோடு சாப்பிடுகிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்கிறார்.  ஸ்பூனால் சாப்பிட்டார்களாம்.  வீட்டுக்கார அம்மாள் மேலும் இட்லி வைப்பார் வைப்பார் என்று காத்திருந்து விட்டு வாய் விட்டே கேட்டு விட்டாராம்.  முனகலாக இட்லி என்று.  மேலும் ஒரு இட்லி வைத்திருக்கிறார் அம்மாள். அதோடு சரி.  அதற்கு மேல் கேட்க முடியுமா ஒரு அந்நிய மனிதனால்?  ஆனால் உள்ளங்கை சைஸில் மூணு இட்லி எந்த மூலைக்கு?

இந்த இடத்தில் நான் உணவருந்திய முஸ்லிம் நண்பர்களின் வீடுகளை எண்ணிப் பார்க்கிறேன்.  ஒரு வீட்டில் கூட அவர்கள் பரிமாறியது இல்லை.  எல்லாவற்றையும் மேஜையில் வைத்து விட்டு அகன்று விடுவார்கள்.  நாமேதான் பரிமாறிக் கொள்ள வேண்டும்.  அடித்து விளையாடலாம். 

சரி, கடைசியில் பசி தணிக்க என்னதான் பண்ணினீர்கள் என்று இளவேனிலைக் கேட்டேன்.  எழுத்தாளரும் புதல்வரும் சாப்பிட்டு முடித்ததும், வெளியில் ஒரு வேலை இருக்கிறது என்று பொய் சொல்லி விட்டுப் போய் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வந்தேன் என்றார். 

நான் கேட்ட எத்தனையோ கதைகளில் என்னால் மறக்க இயலாக ஒரு கதை இது.  காரணம், மாற்றுக் கலாச்சாரம் பற்றி எதுவுமே தெரியாமல்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடுவோர் பற்றி நமக்குத் தெரியவே இல்லை.  இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் இரண்டு காரணங்கள்.  ஒன்று, எழுத்தாளர் பிராமணர்.  இளவேனில், அ-பிராமணர்.  இரண்டு, எழுத்தாளர் மேட்டுக்குடி.  இந்த எழுத்தாளர் ஒரு கல்லூரியின் முதலாளியாக இருந்தால் என்ன நடக்கும்?

அதற்கும் ஒரு கதை உண்டு இவ்விடம்.  இரண்டு இட்லி சாப்பிடும் கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒரு முதலாளி நடத்தும் கல்லூரியின் ஹாஸ்டலில் இப்படித்தான் இரண்டு இரண்டு இட்லி போட்டிருக்கிறார்கள்.  வயதுப் பையன்களில் நிலைமை என்ன ஆகும்?  சொல்லிச் சொல்லிப் பார்த்து யாரும் கேட்காமல் போக, பட்டினி தாங்க முடியாமல், ஒருநாள் பையன்கள் ஹாஸ்டலைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டார்கள். 

வினித் மாதிரி ஒரு இளைஞன் அரசாங்கத்தின் செயலாளராக இருந்தால் நாடு என்ன ஆகும்?  எல்லோரும் பாலை காஃபி என்று குடிப்பார்கள்.  ஏனென்றால், வினித்தின் குரு சாரு அப்படித்தான் குடிப்பார்.  என்ன வினித் இது அநியாயம்? 

அதனால் காந்தி சொன்னதைக் கேள்.  அதன்படி நட. 

இந்த வார்த்தைகளைத் தட்டிக் கொண்டிருந்த போது ஸ்ரீராம் போன் செய்தார்.  இப்போது அவர் காந்தி பற்றி மனுபென் காந்தி எழுதிய நூலைப் படித்துக் கொண்டிருக்கிறாராம்.  காந்தியின் பல அன்றாட நடைமுறைச் சம்பவங்கள் நான் என் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்வது போலவே இருக்கிறது என்றார்.  சில உதாரணங்களும் சொன்னார்.

கையெழுத்துக்கு ஐந்து ரூபாய் வசூலிப்பாராம் காந்தி.  ஒரு தமிழர் போய் தமிழில் கையெழுத்துக் கேட்டிருக்கிறார்.  தமிழில் என்றால் பத்து என்றாராம் காந்தி.  சரி என்றார் தொண்டர்.  கையெழுத்து போட்டாயிற்று.  எப்படி இருக்கிறது?  காந்தி கேட்டார்.  ஓ, கையெழுத்து நான் எதிர்பார்த்ததை விட மிக நன்றாக உள்ளது.  இது தொண்டர்.  அப்படியானால் பத்து இல்லை, இருபது ரூபாய் வேண்டும் என்றாராம் மகாத்மா. 

துறவி போல் வாழ்கிறேன் என்று சொல்லும் நீ எதற்குப் பணம் சேர்க்கிறாய் என்றாள் அவந்திகா.  நேற்று நடந்த உரையாடல். 

பயணங்கள் செய்ய.

ஓ. அப்படியானால் எப்படி உன்னைத் துறவி என்கிறாய்?

நான் எனக்காகப் பயணம் செய்யவில்லை.  பயணம் செய்வதை எழுத்தாக மாற்றுகிறேன்.  ஔரங்கசீப் நாவலுக்காக நான் சில பயணங்களை மேற்கொண்டிருந்தால் நாவல் இன்னுமே சிறப்பாக வந்திருக்கும். 

வினித்திடம் சீனி சொன்னாராம்.  நான் நீயாக இருந்தால், சாரு வர வேண்டாம் என்று சொன்னாலும் போவேன்.  ஆனால் அவரோடு தங்காமல் அவர் தங்கியிருக்கும் அறைக்கு அடுத்த தெருவில் தங்கிக் கொண்டு அவர் நண்பர்களைப் பார்க்கும் போது அவரைப் போய்ப் பார்ப்பேன். 

அப்படியானால் 19, 20, 21 தேதிகளில் அவரை அந்த முறையில் நான் சந்திக்கவா?  இது வினித்.

ஐயா சாமி.  நீ அங்கேயும் போய் எதாவது பிரச்சினை பண்ணுவாய்.  கொஞ்சம் விட்டுப் பிடி.  அப்புறம் போய்க் கொள்ளலாம். 

வினித், நீ சோதனையில் வென்று விட்டாய்.  இத்தனை எழுதியும், விமர்சனம் பண்ணியும் மனம் தளராமல் இருக்கிறாய் பார்.  மற்றவர்களாக இருந்தால் என்னை ஜென்ம எதிரியாக வைத்திருப்பார்கள்.  நீ வா.  வந்து ஏதாவது பிரச்சினை கொடுத்தால் அதற்காக அஞ்சாதே.  மேலும் சில கட்டுரைகள் எழுதுவேன்.  படித்துத் திருந்திக் கொள்.  ஒன்றும் நஷ்டம் இல்லை.  பல கடா மாடுகள் நான் திருந்தவே மாட்டேன் என்று அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடி திரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீ இந்த அளவு யோசிப்பதே பெரிய விஷயம்.    

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai