யூதாஸ் : வளன் : ஒரு மதிப்பீடு

வளன் எழுதிய யூதாஸ் நாவல் பற்றி செல்வகுமார் முகநூலில் எழுதியிருக்கும் மதிப்புரை இது. மதிப்புரையில் ஏழெட்டு இடங்களில் மன்னிக்கவே முடியாத எழுத்துப் பிழைகள் உள்ளன. மன்னித்து படித்துக் கொள்ளவும். கொள்ளவும் என்பதை கொல்லவும் என்று எழுதுவது போன்ற கொலைப் பிழைகள் அவை. திருத்த எனக்கு நேரம் இல்லை. அதேபோல் அந்த மதிப்புரையை இங்கே பகிராமலும் இருக்க முடியவில்லை. இந்த நாவல் எப்படி ஸீரோ டிகிரி நாவல் போட்டியின் குறும்பட்டியலில் இடம் பெறாமல் போனது என்பது இன்னமும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் வந்த மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று இது. இனி செல்வகுமார்:

சிறுவயதில் தமிழ் வழியாக இயேசுவின் கதையை, பைபிளை படித்திருக்கிறேன்.

கடவுள் அல்லது தேவகுமாரன் மனிதனாக வாழ்வது எளிதல்ல. அது மனித ரூப கடவுளால் என்ன முடியும் என்ன முடியாது என்பது புரியாத சகமனிதர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும். கண்முன் நடக்கும் பல அநீதிகளை, அறமற்ற சமரசங்களை அந்த கடவுள் எப்படி எதிர்வினை செய்யாமல் கடந்து போகிறார் என்ற புதிர் மனிதனை நிம்மதி இழக்க செய்யும். இந்த நிலையில் யூதாஸ் செய்த தவறுதான் நாவலின் மையம்.

காந்தி, பெரியார், யேசு, புத்தன் போன்ற பிரசங்கிகள், நான் சொல்வதை மட்டுமே நம்பியிறாதே. உன் அறிவையும் உன் இதயத்தையும் உபயோகி என்றே சொல்கிறார்கள். அது ஒரு சராசரி மனிதனை மிகுந்த தர்மசங்கடப் படுத்துகிறது. அவன் தன்னை ஒரு கோணிப் பையாகவும், இறைவனிடம் கொட்டிக் கொண்டிருக்கும் அருளை அப்படியே தன்னிடத்தில் கட்டிவைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான்.பாஸ்டன் நகரின் குளிர் நிரம்பிய இரவுகளின் கதையையும், யூதாஸின் கதையையும், யூதாஸின் வம்சாவழி ஜூட்டின் மூலம் பின்னி பிணைத்து விரிகிறது ‘யூதாஸ்’ நாவல். ஒரு குழப்பமான மனநிலையில் செய்யபட்ட எளிய துரோகத்தை மன்னிக்காமல் வரலாறு இன்னும் யூதாஸை சிலுவையிலேயே வைத்திருப்பதை கேள்வி கேட்கிறது.

பாஸ்டன் நகரில் பாதிரியார்கள் நிகழ்த்திய பாலியல் அத்துமீறல்களையும் அதன் காரணமாக சிதைக்கப்பட்ட எளியவர்களின் வாழ்வையும் சொல்லும் போது இயல்பாக நமக்கு மதங்கள் கடவுள்கள் மீது அவநம்பிக்கை எழுகிறது. ஆன்மிகம் தரும் அளப்பறிய அதிகாரம் ஒரு போதை. அது பிறரையும் நுகர்பவரையும் அழிக்கிறதுபாதிரிகள் செய்த பாலியல் வன்கொடுமைகளால் ஆலயங்கள் விற்கபட்டு இழப்பீடாக பாதிக்கபட்டவ்ர்களுக்கு பல லட்சங்கள் வழங்கப்படுகிறது.

அப்படியும் பலருக்கு மதத்தின் மீது நம்பிக்கையையும் தேவையும் இருப்பதை நாவல் சுட்டிகாட்டுகிறது

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை என்பது சாரு நிவேதிதாவின் மதம். அதன் போதகர்களில் வளனும் ஒருவர் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாவல் அப்படி முடிவதில் மிகுந்த நிம்மதியை தருகிறது

அறிவுரை, பிரச்சாரம், புத்திமதி, ஆலோசனை என்று எதையும் விரும்பாத இளைய தலைமுறை இந்த நாவலை மதிப்பார்களா என்ற எண்னமும் எழுகிறது.

செல்வகுமார்