அ-காலம்



அன்பு சாரு,

நேற்று முன்பதிவு திட்டத்தில் அ- காலம் வந்து சேர்ந்தது. என்னதான் பிஞ்சில் படித்திருந்தாலும் புத்தகத்தை கையில் எடுத்துப் படிப்பது தரும் உணர்வினை கருவிகள் தராது. அது ஒரு தனி சுகம், அனுபவம். நூல் வடிவமைப்பு சிறப்பாக வந்துள்ளது. மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளேன். எண்ணற்ற  நூல்கள், திரைப்படங்கள், வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய செறிவான நூல். குறிப்பாக லெபனானின் மத ஒற்றுமை, சாத்வீக வழிப் போராட்டம் குறித்த பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. தற்காலத் தலைமுறைக்கு இவை எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இன்னும் நிறையக் கூறலாம். இருப்பினும் எந்த ஒரு சிறந்த நாவல் அல்லது  கதையை விட அதிமுக்கியமான படைப்பு அ_ காலம் என்பது நிச்சயம், நன்றி சாரு. இதே போல் ஒளரங்கசீப்பும் நூலாக வரும் தருணத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

அன்புடன்,

ஸ்ரீதர் மணியன்

தருமபுரி

நன்றி ஸ்ரீதர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஸீரோ டிகிரி பதிப்பகம் ராம்ஜி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி அ-காலம் நூல் வெளிவந்து விட்டதாகவும் அது பற்றிய தகவலை என் தளத்தில் வெளியிடுமாறும் சொல்லியிருந்தார். நான் அது பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. காரணம், அந்த நூலுக்கான முன்பதிவு 40 வந்திருந்தது. முன்பதிவு விலை 210 ரூ. 40 பேர்தான் முன்பதிவு செய்து வாங்கத் தயாராக உள்ளனர். எட்டரை கோடி ஜனத்தொகையில் எனக்கான வாசகர்கள். ஆனால் ஜெய்பீம் என்ற படம் வந்தால் அதைப் பார்க்காத, விவாதிக்காத தமிழர் யாரும் இல்லை.

இது 210 ரூ சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. தமிழர்கள் சினிமா என்றால்தான் தயாராக இருக்கிறார்கள். படிப்பு அவர்கள் உலகில் இல்லை. அதனால் ஒரு கைப்பு நிலையில்தான் எப்போதும் இருக்கிறேன். ஆனாலும் அவ்வப்போது இம்மாதிரி கடிதங்கள் உற்சாகம் அளிக்கின்றன. என் பிறந்த நாள் அன்று வந்த கடிதம் இன்னொரு உதாரணம். என் வாழ்நாளில் பாதியைத் தருவேன். ஆக, உங்களைப் போன்ற நண்பர்களுக்காகத்தான் எழுதுகிறேன். நான் ப்ரமோட் பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் உங்களைப் போன்றவர்கள், வாணாளில் பாதியைத் தரத் தயாராகி விட்ட அந்த வாசகியைப் போன்றவர்கள் படித்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.

அ-காலம் என் நேரத்தையும் உழைப்பையும் கடுமையான முறையில் கோரிய ஒரு நூல். ஔரங்கசீப் சொல்லவே வேண்டியதில்லை. என் ஆயுளில் இந்த அளவுக்கு நான் எதற்காகவும் உழைத்ததில்லை.

மீண்டும் உங்களுக்கு என் நன்றி.

புத்தகம் வாங்க:

https://tinyurl.com/akalamcharu