நண்பர்களுக்கு ஒரு விளக்கம்…

வாசிக்கும் போது நகைச்சுவையாக இருந்தாலும், உங்களின் உடல்நலனை யோசிக்கையில் வலிக்கிறது…

நேற்று இரவு நான் எழுதியிருந்த பதிவைப் படித்து விட்டு என் நண்பர் வெங்கட சுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார்.  பல நண்பர்களும் அக்கறையுடன் கடிதம் எழுதியிருந்தனர்.  சிலர் சில மருத்துவ முறைகளையும் பரிந்துரை செய்தனர்.

எனக்கு பத்து ஆண்டுகளாகவே இதயத்தில் அம்பது விழுக்காடுதான் வேலை செய்கிறது.  ஆனாலும் தினப்படி வேலையில் எந்த சுணக்கமும் இல்லை. இப்பவும் ஒரு திருமணம் செய்து கொண்டு என் ஜாடையில் ரெண்டு மூணு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். எங்கள் ஊரில் அது சகஜமும் கூட.   அவந்திகா விஷம் வைத்து விடுவாள் என்பதற்காக மட்டும் அல்ல, எழுத்தே தவம் என்று வாழ்கிறேன், வேறெதற்கும் நேரமில்லை.   இப்பவும் ஒரு போத்தல் வைன் அருந்தி விட்டு, நான் குடித்திருக்கிறேனா என்று கூட அடுத்தவருக்குத் தெரியாமல் நிதானமாக இருக்க முடியும்.  இப்பவும் ஒரு நாளில் 18 மணி நேரம் கடுமையான உழைப்பில் ஈடுபடுகிறேன்.  அன்றைய தினம் புத்தக விழாவில் தூங்கி விழுந்தது முந்தின தினம் 20 மணி நேரம் உழைத்ததால். 

நான் சொல்ல வந்தது, உணர்ச்சிவசப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது என்பதைத்தான்.  மலையே ஏற முடிந்தது என்று எழுதியிருக்கிறேனே?  ஹோமியோ மருந்தில் நல்ல குணம் தெரிந்தது.  டாக்டர் காயத்ரி என்ற மருத்துவர்தான் அதற்குக் காரணம்.  கொல்கொத்தாவில் இருக்கிறார்.  ஸூம் மூலம் என்னுடன் பேசினார் (மூன்று மணி நேரம்!)

எனவே குறையொன்றுமில்லை.  வேலை கிடக்கிறது நிறைய.