தமிழ் சினிமாவில் ஒரு உலக சாதனை

நான் எத்தனை நேர நெருக்கடியில் இருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் காரணமாக என் உயிரினும் இனிய நண்பர்களின் திரைப்படங்களையே கூட பார்க்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். பல தினங்கள் நாலு மணி நேரம்தான் உறங்க முடிகிறது. அதனால் சென்ற வாரம் என்னை அழைத்திருந்த ப்ரீவியூவுக்கு வருகிறேன் என வாக்குக் கொடுத்து விட்டு பிறகு செல்ல முடியாமல் போனது. அந்த ப்ரீவியூ எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஆனது என்பது ஸ்பெஷல்.

பிறகு நேற்று ஒரு போன். என் பழைய நண்பர். அவர் ஒரு முக்கியமான விஷயம் சொன்னார். சென்ற வாரம் நடந்த ப்ரீவியூவில் பல எழுத்தாளர்களும் அந்தப் படத்தைப் போட்டுத் தாக்கி விட்டார்களாம். என்ன இது ஒரே அபத்தம், என்ன இது ஒரே நான் – லீனியர், ஒரு மண்ணும் புரியவில்லை, ஆ, ஊ, ஆ, ஊ. இயக்குனர்கள் இருவரும், படக்குழுவும் நொந்து விட்டார்கள். சாரு, இது உங்கள் படம். உங்களுக்கான படம். நீங்கள் கொண்டாடுவீர்கள்.

நான் நிலைமையைச் சொன்னேன். நேரில் வந்து என்னைக் கடத்திக் கொண்டு போய் விட்டார். ப்ரீவியூ நடந்த இடம் டாட் ஸ்கூல் ஆஃப் டிஸைன். அம்பத்தூர். முடிந்தது கதை. மூணு மணிக்குப் போய் விட்டு இதோ இப்போதுதான் வந்தேன். இன்று இரவு சிவராத்திரிதான். நாளை காலைக்குள் ஔரங்ஸேப் அனுப்பப்பட வேண்டும்.

படம் பற்றி எனக்கு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஏதோ ஒரு கிராமத்துப் பெண்ணின் துயரக் கதையாக இருக்கும். அதை ஏதோ நான் லீனியராக எடுத்து விட்டார்கள் போல.

பார்த்தேன்.

போர்ஹேஸின் கதைகளைத் திரைப்படமாக எடுத்தது போல் இருந்தது.

உலக சினிமாவிலேயே எனக்குப் பிடித்த படங்களில் நம்பர் ஒன்னாக இருப்பது ட்யூரின் ஹார்ஸ். Bela Tarr இயக்கியது. அந்த ட்யூரின் ஹார்ஸை நினைவு படுத்துவது போல் இருந்தது.

நானே எழுதி இயக்கியது போல் இருந்தது.

படத்தின் வசனங்களில் போர்ஹேஸின் கதை வாக்கியங்கள் வந்தன. மொழிபெயர்ப்பு பிரம்மராஜன் என்று இருந்தது.

என்னுடைய பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் என்ற சிறுகதை போலவும், கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் சிறுகதை போலவும் இருந்தது.

படம் முழுவதுமே நகுலனின் நவீனன் டயரியின் நாவலைப் படிப்பது போல் இருந்தது. பெர்க்மனின் 8 1/2 (எட்டரை) படம் மாதிரியும் இருந்தது.

என்னடா இது, கனவு கினவு காண்கிறோமா என்று என்னை நானே பல முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். எல்லாவற்றையும் விட ஆச்சரிய அதிர்ச்சி சென்ற வாரம் ஔரங்ஸேப் நாவலில் மிர்ரர் இமேஜ் பற்றி தெரிதாவும், லக்கானும் உருவாக்கின தியரி பற்றி எழுதியிருந்தேன். அது அப்படியே படத்தில் இருந்தது. ஆனால் படம் எடுக்கப்பட்டது சென்ற ஆண்டு. என்ன இது லக்கான் பற்றி ஒரு தமிழ்ப் படத்தில் பேசப் படுகிறது! இது என்ன ஃப்ரெஞ்ச் படமா? படமும் அலுப்புத் தட்டாமல் சுவாரசியமாகவே போனது. கலையரசன் நடிப்பு.

இந்தப் படம் தமிழில் ஒரு புதிய சினிமா மொழியை உருவாக்கி இருக்கிறது.

எனக்குப் பிடித்த 50 உலக சினிமாவில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

இந்தப் படம் உலகத் திரைப்பட அரங்கில் மிக நிச்சயமாகக் கொண்டாடப்படும். இந்தப் படம் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு திரைப்பட மாணவர்களுக்கு ஒளி, வசனம், இசை, இயக்கம் போன்ற துறைகளில் பாடமாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு பெருமை.

மலையாளத்தில் ஒரு சினிமா கூட இந்தப் படத்துக்கு அருகில் வர முடியாது.

இந்தியாவில் மணி கௌல் மட்டுமே இப்படிப்பட்ட திரைப்படத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார்.

இதன் இசை ட்யூரின் ஹார்ஸ் இசைக்கு நிகரானது. உலகத் தரம். இசை பிரதீப் குமார்.

கலையில் எதிர் அழகியல் என்றால் என்ன என்பதை இந்தப் படத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். எதிர் இசை என்றால் என்ன என்பதையும்.

இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாக்சன், ஷ்யாம் சுந்தர் இருவரும் உலக அளவில் பேசப்படுவார்கள். கதை வசனம் எழுதிய ஜி. ராஜேஷ் ஒரு மகத்தான சாதனையைச் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ராஜேஷின் இந்த சாதனை பல காலத்துக்குப் பேசப்படும். மொத்த குழுவுக்கும் என் வாழ்த்துகள்.

படத்தின் பெயர்: குதிரை வால்