குழந்தையும் ரேஸிஸமும்: அராத்து

ஆழியை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தேன். நான் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை செல்வதால் வெளியே வந்த ஆழி தாயைத் தேடி தவித்தபடி இருந்தான். நானும் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். அவனுக்கும் எனக்கும் 2 அடி தூரம் தான். என் கண்களும் அவன் கண்களும் நான்கைந்து முறை சந்தித்தித்துக்கொண்டன. ஆனாலும் ஐயாவுக்கு என்னைத் தெரியவில்லை. ஒருவரை ஒரு இடத்தில் எதிர்பார்க்காமல் இருந்தால் கண்டுபிடிப்பது சிரமம் தான் போல.

நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஆழி ஒரு மேட்டர் சொன்னான்.”ஒரு மிஸ் இருக்காங்கப்பா , அவங்களுக்கு என்னப் பிடிக்காது…என்ன மட்டுமில்ல யாரையும் புடிக்காது. எல்லார் கிட்டயும் சிடுசிடுன்னு இருப்பாங்க “இதுதான் ஃபேஸ்புக்குக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள தூரம். இங்கே ஃபேஸ்புக்கில் , மிஸ்ஸாக , ஆசிரியராக இருக்கும் சிலர் , குழந்தைகள் தேவதைகள் , அது இது என்று சிலாகித்து எழுதுவதைப் பார்த்திருப்போம். குழந்தைகளுக்கு கற்பிக்கும் பணியில் இருக்கும்போது சொர்க்கத்தில் இருப்பதைப்போல இருக்கிறது என்றெல்லாம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருப்பது டார்ச்சர்தான். குழந்தைகள் முன்பு போல இல்லை. ஒவ்வொன்றும் ஒரு வித குரங்கு. சில குழந்தைகள் இப்போது வளர்ந்த சைக்கோக்கள் போல எல்லாம் நடந்து கொள்கின்றன. ஆனால் காக்கைக்கும் தன் கொடூரக் குஞ்சி பொன் குஞ்சிதானே ? சில ஆசிரிய ஆசிரியைகள் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சகித்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் குழந்தைகளை சிலாகித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல உள்ளங்கள் வாழ்க. மற்ற வேலைகளில் இருப்பவர்கள் , தற்போது ஸ்டிரெஸ் , வொர்க் பிரஷர் என சொல்வதை கவனித்து இருப்போம். அதுதான் ஆசிரியர்களுக்கும் இருக்கும். ஆனால் டபுள் மடங்காக இருக்கும் என யூகிக்கிறேன். அதிலும் இப்போது நிறைய “விழிப்புணர்வு” வேறு வந்து விட்டது அல்லவா ? குழந்தைகளை திட்டக்கூடாது , லேசாக தட்டக்கூடக் கூடாது , மிரட்டக்கூடாது என ஆயிரத்தெட்டு “டாது” கள். இதெல்லாம் சரிதான்.

குழந்தையை குழந்தையாக வளர்த்து பள்ளிக்கு அனுப்பினால் ஓக்கே ! புருஷனும் பொண்டாட்டியும் தினமும் குரல்வளையைக் கடித்துக்கொண்டு , அதை குழந்தைகள் பார்த்து குட்டிச் சாத்தான்களாக மாறிப் பின் அவர்களை பள்ளிகளுக்கு ஏவி விட்டால் ?

ஆழி தொடர்ந்தான்…”எங்க ஸ்கூல்ல ஒருத்தர் ஸ்நாக்ஸை இன்னொருத்தர் சாப்டக்கூடாதுப்பா…அப்டி சாப்டா திட்டுவாங்க. ஒரு பையன் என் ஸ்நாக்ஸை என்கிட்ட கேக்காமயே எடுத்து சாப்டுட்டான். நான் போயி அந்த மிஸ் கிட்ட சொன்னா ….”நான் என்ன அவன் வாய்ல கைய உட்டு புடுங்கி எடுத்து தரணுமான்னு கேக்கறாங்கப்பா …”

“என்னடா இவ்ளோ இண்டீஸண்டா இருக்கு ?”

“யாரு …நானாப்பா “

“இல்லடா மிஸ்ஸ சொன்னேன்”

“அப்புறம் ஒருநாள் வயிரு வலிக்கிதுன்னு அந்த மிஸ் கிட்ட சொன்னேன். நான் என்ன டாக்டரா ? ஒனக்கு வயிறு வலிச்சா , நான் என்ன பண்ண முடியும். போய் ஒக்காருன்னு சொல்றாங்கப்பா”

ஸ்டிரெஸ் , வொர்க் பிரஷர் இதெல்லாம் தான் அந்த மிஸ்ஸின் இப்படிப்பட்ட பிஹேவியருக்குக் காரணம் என நினைத்துக்கொண்டு இருந்தபோது , இன்னொரு குண்டைப் போட்டான்.

“அந்த மிஸ் க்றிஸ்டியன்ப்பா …க்ளாஸ்ல ஒரு க்றிஸ்டியன் பையன் இருக்காம்பா …அவன் கிட்ட மட்டும் பாசமா நடந்துக்கறாங்கப்பா”

நான் என்ன சொல்வது என யோசித்துக்கொண்டு இருக்கையில் ,”இது ரேஸிஸம் தானப்பா ?” என்றான்.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“டேய் ரேஸிஸம்லாம் வேறடா என சொல்லி ரேஸிஸம் என்றால் என்ன என சிம்பிளாக விளக்கி விட்டு , மத அபிமானம் , மத அடிப்படைவாதம் என்றெல்லாம் போட்டு குழப்பாமல் , தூரத்து சொந்தக்கார பையனா இருப்பான் என்று சொல்லி மேட்டரை முடித்து , நீல்லாம் அப்டி கூட இருக்கக் கூடாது என சொல்லி முடித்து வைத்தேன் என வையுங்கள்.

அந்த மிஸ் அப்படி அந்த ஒரு பையனிடம் பாசமாக இருந்தாரா இல்லையா என்பதல்ல மேட்டர். அப்படி இருப்பதாக மற்ற பிள்ளைகள் நினைக்கிறார்கள் என்பதுதான் ஆபத்தானதாகப் பட்டது. மேலும் ரேஸிஸம் , மத அடிப்படைவாதம் , சாதி பாகுபாடு எல்லாம் இப்போது குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே அரைகுறையாகத் தெரியவந்து விடுகிறது.

நான் படிக்கும் காலத்திலேயே இது எல்லாம் இருந்திருக்கிறது. சமூகத்தில் நிலவிய இந்தக் கீழ்மைகள் பள்ளிகளைத் தீண்டாமல் இருந்திருக்கிறது . அல்லது அப்போது எங்களுக்கு இவையெல்லாம் தெரியவரவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் 5ம் வகுப்பு படிக்கும் வரை இதெல்லாம் சிறு துளி அளவுக்குக் கூட என்னையோ என் நண்பர்களையோ தீண்டியதில்லை. 12 ம் வகுப்பு படிக்கும் வரையிலும் மதம் சாதி எல்லாம் தெரிய வந்த பின்னரும் பள்ளிக்குள் எதுவும் வந்ததில்லை. இப்போது அனைத்து ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். தற்கால குழந்தைகளுக்கு டிவி , இண்டர்நெட் இருக்கிறது. அனைத்துக்கும் எக்ஸ்போஸ் ஆகிறார்கள். மேலோட்டமாகவும் தப்பும் தவறுமாகவும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. தேவைக்கதிகமாக குழந்தைகளுக்குத் தகவல்கள் கொட்டும்போதுதான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன்பை விட கவனமாக இருக்க வேண்டியதாகிறது.

நம் சமூகத்தைப் பற்றிய புரிதல் , ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய அறிவு பெற்றோர்களுக்கும் தற்போதைய ஆசிரியர்களுக்குமே ஒழுங்காக இல்லாத சூழலில் , நிலவரம் கொஞ்சம் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.

பள்ளியில் குழந்தைகளைக் கூப்பிட வந்து காத்திருந்த இளம் அம்மாக்களைப் பற்றி கவனமுடன் ஒன்றும் சொல்லாமல் இந்த கட்டுரையை முடிக்கும்

உங்கள் …

அராத்து.