ஒரு அவதூறும் அதற்கான பதிலும்…

நேற்றே எழுதியிருக்க வேண்டும்.  ஔரங்ஸேப் அத்தியாயத்தை அனுப்பி விட்டு எழுதலாம் என்று இருந்தேன். இப்போது எழுதுவதற்கும் குதிரை வால் படத்தின் தரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  குதிரை வால் என் மதிப்பீட்டில் உலகின் ஐம்பது சிறந்த படங்களில் ஒன்று.  ஃபெலினியின் 8 ½ படத்துக்கு நிகரானது. 

ஆனால் நான் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  அது சினிமாக்காரர்கள் எழுத்தாளர்களைத் தங்களின் பி.ஆர்.ஓ.க்களாக நடத்தி வருகிறார்கள் என்பது.  குறிப்பாக இயக்குனர்கள்.

ராம் ஒரு உதாரணம்.  அவருடைய படங்களுக்கு நான் பிரச்சாரகனாகவே இருந்திருக்கிறேன்.  ராம் சமகால இலக்கியவாதிகளின் நண்பர்.  மிஷ்கின் மாதிரி.  ராம் என் மிக நெருங்கிய நண்பர்.  இந்தச் சம்பவம் நடக்கும் வரை.  நான் முகமூடிகளின் பள்ளத்தாக்கு மொழிபெயர்ப்பை முடித்து விட்டு (தென்றல் சிவகுமாருடனும், காயத்ரியுடனும் சேர்ந்து) அது நூலாக வரும் நேரத்தில் அது பற்றி ஒரு நிமிடம் ஒரு காணொளியில் பேசி அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.  அவர் என் போனை எடுக்காததால் என் குரல் செய்தி அனுப்பினேன்.  அதற்கும் பதில் இல்லை.  உடனே அது பற்றி குமுதத்தில் எழுதினேன்.  குமுதம் வந்ததும் அடுத்த நிமிடம் அவரிடமிருந்து போன் வந்தது.  ஏதோ சாக்குபோக்குகள்.  சித்தியின் பாட்டிக்குத் தலைவலி என்பது போல.  சரி என்று விஷயத்தைச் சொன்னேன். 

தயங்கின குரலில் புத்தகம் படிக்கவில்லையே என்றார்.  நாலு பக்கம் அனுப்புகிறேன், பேசுங்கள் என்றேன்.  அது சரியாக இருக்காதே என்றார்.  சரி, இன்னும் படிக்கவில்லை, புத்தகம் வருவதற்கு வாழ்த்துகள் என்று சொல்லுங்கள் என்றேன்.  ராம் மாதிரி ஒரு சினிமா இயக்குனர் சொன்னால் நாலு காப்பி அதிகம் விற்கும் இல்லையா என்று கேட்டேன்.  அது சரியாக இருக்காது, வேண்டுமானால் ரங்கன் பேட்டியில் ஒரு வார்த்தை சேர்த்து விடுகிறேன் என்றார். 

எப்படி இருக்கிறது?  ஏதோ ஒரு குற்றச் செயலில் ஈடுபடுவது போல் இருந்தது அவர் குரலும் தயக்கமும்.  சரியாக இருக்காதாம். 

ஆனால் அவருடைய எல்லா படங்களுக்கும் என் வீட்டுக்கு வந்து நான் படம் பற்றிப் புகழ்ந்து பேசுவதை ஒளிப்பதிவு செய்து கொண்டு போவார்.  விளம்பரத்துக்கு ஆகும்.  நான் கேட்டால் அது சரியாக இருக்காதே?  நான் என்ன, வாருங்கள் ராம், நாம் ரெண்டு பேரும் தேவ்டியா வீட்டுக்குப் போவோம் என்றா கேட்டேன்.

இப்போது கன்னட சினிமாவுக்கு வாருங்கள்.  நான் கருட கமன ரிஷப வாஹன படத்துக்கு விமர்சனம் எழுதினேன்.  அது பற்றி ட்விட்டரில் என் வாசகர் ஒருவர் குறிப்பிட அந்தக் குறிப்பை அப்படத்தின் இயக்குனர் ராஜ் ஷெட்டி பார்த்து விட்டு, என் ப்ளாகிலிருந்த தமிழ் விமர்சனத்தை எடுத்து அன்று இரவே கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழிபெயர்த்துப் படித்து விட்டு மறுநாள் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார்.  என்னை சென்னைக்கு வந்து நேரில் பார்க்கலாமா என்று கேட்டு எழுதினார்.  என்னை மங்களூருக்குத் தன் செலவில் வந்து தங்குவதற்கு அழைத்தார்.  விமான டிக்கட் அனுப்பவா என்று கேட்டார்.  இன்று அவர் என் நெருங்கிய நண்பர்.

இப்போது குதிரை வால் நண்பர்கள் இலக்கியவாதிகளை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள்.  என்னிடம் படம் பற்றி இந்நாள் வரை பேசிக் கொண்டிருப்பவர் அரவிந்தன்.  அவர்தான் படம் குறித்துப் பேசியதால் அவர்தான் இயக்குனர் என்று நான் நினைத்துக் கொண்டேன்.  படத்திலோ வேறு இருவர் பெயர் போட்டிருந்தது.  இடைவேளையில் அரவிந்தனிடம் வேறு பெயர் வருகிறதே என்று கேட்டேன்.  அப்போதுதான் அவர் அசோசியேட் டைரக்டர் என்றும் படத்தின் இயக்குனர்கள் வேறு இருவர் என்றும் தெரிந்தது. 

படம் பார்த்தேன்.  இது ஒரு உலக சாதனை என்றேன்.  அதைத்தான் பேசினேன்.  விவாத நேரத்தில் படத்தின் கதை – வசனம் எழுதிய ஜி. ராஜேஷ் பேசினார்.  எடுத்த எடுப்பிலேயே என்னைப் பாராட்டும் விதத்தில் “சாரு வந்திருக்கிறார்.  அவரெல்லாம்தான் இந்தப் படத்துக்குத் தூண்டுதல்… அவருடைய கர்னாடக முரசு போன்ற சிறுகதைகள்… அப்போதைய சாருவை சொல்கிறேன்.  இப்போதைய சாருவை எனக்குத் தெரியாது…” என்றார்.

ஏன், இப்போதைய சாரு என்ன பிராத்தல் நடத்திக் கொண்டிருக்கிறாரா?  என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் மிஸ்டர் ராஜேஷ்?  இப்போதைய சாரு யார் தெரியுமா?  லண்டனிலிருந்து வரும் Art Review Asia என்ற ஓவியம் சிற்பம் சார்ந்த பத்திரிகையில் நான்கு ஆண்டுகளாக பத்தி எழுதி வருபவன்.  உலகின் மிக முக்கியமான ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளன்.  உங்களுக்கு இப்போதைய சாருவைத் தெரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்சினை.  அதை ஏன் சபையில் சொல்கிறீர்கள்?  அப்போ சாரு நல்லா இருந்தார், இப்போ கெட்டுட்டார் என்பதுதான் அவர் பேச்சின் சாரம். 

சரி, வாதத்துக்காக அதை ஒத்துக் கொண்டால், அப்போதைய சாருவை எல்லா இலக்கியவாதிகளும் தாக்கிக் கொண்டிருந்த போது நீங்கள் எனக்கு என்ன ஆதரவைத் தந்தீர்கள்?  எங்கே போயிருந்தீர்கள் அப்போது?  தாக்குதல் என்றால் உடல் ரீதியான தாக்குதல்.  பல் போய் விட்டது.  யூமா வாசுகி என் கன்னத்தில் அறைந்தார்.  விக்ரமாதித்யன் ஒவ்வொரு பத்திரிகைக்கும் போன் போட்டு என் கட்டுரைகளைப் போடாதே என்று நள்ளிரவில் மிரட்டினார்.  சுஜாதாவிலிருந்து கடைசி சிறுபத்திரிகைக்காரன் வரை என்னைத் தாக்கினார்கள். 

ஒரு பதிப்பகமும் என் எழுத்தைப் பதிப்பிக்கவில்லை.  நானேதான் என் நாவல்களையும் புத்தகங்களையும் பதிப்பித்து நானே விற்றேன்.  நீர் எனக்காக அப்போது ஒரு வார்த்தை பேசியிருப்பீரா?  கிரெடிட் கார்டில் கூட பிரம்மராஜன், பிரேம் ரமேஷ் என்று இருந்ததே தவிர என் பெயர் இல்லை.  என் பெயர் அங்கே இருக்கவும் தேவையில்லை.  ஆனால் நேரில் பார்த்தால் என்ன முகஸ்துதி வேண்டிக் கிடக்கிறது?  அதிலும் அப்போதைய சாரு, இப்போதைய சாரு என்று அவமரியாதை வேறு!

இத்தனைக்கும் எனக்கு குதிரை வால் இயக்குனர்களின் போன் நம்பர் தெரியாது.  எல்லா தொடர்பும் அசோசியேட் டைரக்டர் மூலம்தான்.  எப்படி இருக்கிறது கதை?  பருத்தி வீரன் மதிப்புரை எழுதிய போது அடுத்த நாளே அமீர் என் வீட்டுக்கு வந்து விட்டார்.  இங்கே இரண்டு இளம் இயக்குனர்கள் – புத்தம் புதிய இயக்குனர்கள் – என்னோடு பேசவே இல்லை.  அசோசியேட் டைரக்டர் மட்டும் பேசி வருகிறார். 

அராத்துவிடம் இப்படம் குறித்துக் கேட்டேன்.  யாரோ அசோசியேட் டைரக்டர் பேசினார்ங்க, நான் போகலை.  என்னோடு பேசக் கூட முடியாத இயக்குனரின் படத்தை நான் தியேட்டரில் பார்த்துக் கொள்வேன் என்றார்.   

இவர்களுக்கெல்லாம் யார் லாயக்கு தெரியுமா?

முதல் ப்ரீவியூ ஷோவுக்கு வந்த எழுத்தாளர்கள் யாவரும் படமே புரியாமல் இயக்குனர்களோடு சண்டைக்குப் போயிருக்கிறார்கள்.  ஃபிலிஸ்டைன் சமூகத்தின் ஃபிலிஸ்டைன் பிரதிநிதி எழுத்தாளர்கள் அவர்கள். 

முளைக்கும்போதே தலையில் கொம்போடு முளைக்கிறார்கள் பாருங்கள்.  நானும் அராத்துவைப் போலவே முடிவெடுத்திருக்க வேண்டும்.  பணிவாக நடந்தால் ஏறி மிதிக்கிறார்கள். 

இப்போதும் சொல்கிறேன்.  குதிரை வால் ஒரு உலக சாதனைதான்.  அதற்கும் இப்போது எழுதியிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

ஆனால் பொதுவாகவே பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குனர்கள் இலக்கியவாதிகளை போஸ்டர் ஒட்டும் கூலிகளைப் போலவே நடத்துகிறார்கள்.

இன்று அசோசியேட் டைரக்டர் அரவிந்தனிடமிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி.

சார், நாளை ————— இடத்தில் குதிரை வால் படத்தின் ப்ரீவியூ நடக்க உள்ளது.  நீங்கள் உங்கள் நண்பர்களிடம் தனிப்பட்ட முறையில் அழைத்து படத்தைப் பார்க்கச் செய்யுங்கள் சார். 

பகிரங்கமாகவே போஸ்டர் பாய் வேலை செய்யச் சொல்கிறார்கள்.  மேற்கண்ட குறுஞ்செய்திக்கு என் பதில்:

Fuck you…