சாருவின் புத்தம் புதிய கவிதை
கனாவிலொரு பூனை
ஆத்மார்த்தியின் குரலில்…


கனாவிலொரு பூனை

ஸ்னேகிதீ…
உன்னைப் போலத்தான் நானும்
மனிதர்களைக் காட்டிலும்
பூனைகளையே அதிகம் நேசிக்கிறேன்
ஆனால் பூனைகள்
வேற்றுக்கிரக ஜீவிகளைப் போல்
சிந்திக்கின்றன
நடந்து கொள்கின்றன
திடீர்
திடீரென காணாமல் போய்
திடீர்
திடீரெனத் தோன்றும்
புதிர்த்தன்மை கொண்டவையாக
இருக்கின்றன
பூனைகளின் மனதில் என்ன
இருக்கிறதென்று
பூனைகளின்
கடவுளுக்கே தெரியாது
பூனைகளுக்கே தெரியுமா
என்பதும் ஐயம்தான்
சமயங்களில் மனம்
மிக நொந்து
பூனைகளே வேண்டாமென்று
வாழ்ந்திருக்கிறேன்
சிருஷ்டியின்
வினோதம் பூனையின்றி
வாழ்க்கையில்லை
என்கிறது
போ
போ
மீண்டும் போ
பூனையைத் தேடி…

வசப்பட்டது
ஓர் அழகிய
பூனை
இந்த்ரலோகப் பூனையாக
இருக்க வேண்டும்
பூமியிலே
இப்படியோர் பூனை
கண்டதில்லை யாரும்
கேளும் பிள்ளாய்
அந்தப் பூனை
அன்பினாலும் ஆனது
கொஞ்ச நாளில் பார்த்தால்
அதுவும் வேற்றுக்கிரகவாசியே
என்றறிவித்தது
பூனைகளே வேண்டாமென்று
ஒதுங்கினேன் மீண்டும்
அப்படியே ஒன்றன்
பின் ஒன்றாக
பூனைகள்
பூனைகள்
பூனைகளெனப்
பூனைகளே வாழ்க்கையாகிப் போயிற்று
இறுதியிலொரு பூனையிடம்
கிளர்ந்து திளைத்து
நீயே எனது கடைசிப் பூனை
என்றேன்
பொய் கூற
லாகாது மானிடா
என்றது பூனை
இது
உண்மை
உண்மை
உண்மை
எனை நம்பேன்
எனை நம்பேன்
என
அலறியழுது
சுவரில் தலையால்
மோதிக் கொண்டேன்
அப்போதும்
குரலில் கொஞ்சமும் ஈரமின்றி
பொய் கூற
லாகாது மானிடா
என்றது பூனை

பிறகு இருவருமே
விதியின் வசமானோம்
பூனை ஓரிடம் நானோர்
இடமெனப் பிரிந்தோம்
பிரியும்போது
பூனை என்னிடம் சொன்னது
அது ஒரு கனாக்
கண்டதாம்
அதில்
நானொரு பூனையை முத்தமிட்டேனாம்
முத்தமிடும்போதே இறந்தும் விட்டேனாம்
ஜாக்கிரதை
ஜாக்கிரதை
ஜாக்கிரதை
எனச் சொல்லி
விட்டுப்
பிரிந்தது பூனை
அழகின் குறியீடாக
இருந்த பூனைகள்
இப்போது
மேதமையின் பித்தேறி
மரண வாடையுடன்
தெரியத் தொடங்குகின்றன
ஆனாலும் பாரேன்
பூனைகளின் முத்தத்துக்கு
ஈடான பரவசம்
ஈரேழு பதினாலு லோகங்களிலும்
உண்டோடா,
மானிடா…