பின்வரும் குறிப்பு அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது. இது என் கருத்தும் கூட. பாரதிராஜா தன்னுடைய படத்தின் ப்ரீவ்யூவுக்கு அவரேதான் எனக்கு ஃபோன் செய்து அழைத்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன். இப்போது அராத்து எழுதியதைப் படியுங்கள்:
எனக்கு ஒரு போன்கால். தன்னை அசோஸியேட் இயக்குநர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , ஒரு படத்தின் ப்ரிவியூ ஷோவுக்கு அழைக்கிறார். சரிங்க என்று சொல்லி விட்டு நான் போகவில்லை. இதற்கு முன்பும் இதைப்போல “யார் யாரோ” சில படங்களுக்கு அழைத்தும் நான் சென்றதில்லை. ஆனால் அந்தப் படங்களை தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறேன். அதே போல இந்தப்படமும் தியேட்டருக்கு வந்தபின் பார்க்கும் மூடில் தான் இருக்கிறேன். ஒரு படத்தை பார்க்க அழைக்க ஒரு முறை இருக்கிறது அல்லவா ? இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் அழைக்கலாம். ஹீரோ , ஹீரோயின் , இசையமைப்பாளர் அழைக்கலாம். என்னை அழைத்தவர் அசோசியேட் இயக்குநர். இதற்கே என்னை அழைத்தவர் மிகவும் மரியாதையுடன் அழைத்தார். அவர் , அவருக்கு இட்ட பணியை செவ்வனே செய்து வருகிறார். இதைப்போல அவர் சில நூறு எழுத்தாளர்களை ஃபாலோ செய்து வருகிறார் போல. இது எனக்கு நாகரீகமாகத் தோன்றாததால் செல்லவில்லை.
சினிமாக்காரர்களை தெய்வம் என நினைத்திருப்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். ஸ்கிப் செய்து விடுங்கள். இதற்கு மேலும் மேலே எழுதியிருப்பதைத்தான் கொஞ்சம் விரித்து எழுதப்போகிறேன். ஆனால் சினிமாக்காரர்களை தெய்வமென நினைத்து அவர்கள் காலைத் தொழுதுகொண்டிருக்கும் ஆசாமிகளுக்கு மனம் புண்பட வாய்ப்புள்ளது.
அந்த அஸோசியேட் இயக்குநர் மீண்டும் அழைத்து இன்றும் ப்ரிவியூ இருக்கிறது , வாருங்கள் என்று அழைத்தார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆனாலும் கோபம் தலைக்கேறியது. அவரிடம் காட்டிக்கொள்ளவில்லை. இதைப்படிக்கும் உங்களுக்கே , என்ன அராத்து ஓவரா போறான் என்பது போலத் தோன்றும். பொறுங்கள்….மேலே படியுங்கள். நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன். அதன் வெளியீட்டு விழாவுக்கு அல்லது புத்தக வாசிப்பு விழாவுக்கு சில இயக்குநர்களை அழைக்க விரும்புகிறேன். என்னுடைய நாவலை எடிட் செய்தவரை விட்டு 100 இயக்குநர்களுக்கு போன் போட்டு அழைக்கச் சொல்கிறேன். அவரும் அழைக்கிறார். எத்தனை இயக்குநர்கள் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள் ? ஒருவர் கூட வரமாட்டார்.
என்னுடைய புத்தக விழாவிற்கு ஒருமுறை நான் சினிமாவில் மதிக்கும் ஒருசில இயக்குநர்களை அழைக்க முயற்சித்தேன். அஸிஸ்டெண்டை விட்டு எல்லாம் கூப்பிடவில்லை. நானும் தடாலடியாக போன் அடிக்கவில்லை. என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு , என் புத்தகத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி , வாட்ஸப்பில் அனுப்பினேன். அவர்களை பங்கேற்பாளராகவும் அழைக்க வில்லை. சிறப்பு விருந்தினராக அழைத்தேன். நான் அழைத்த எல்லாருமே என் மெசேஜை பார்த்தார்கள். ஒரு பதில் இல்லை. அதில் எனக்கு எந்த புகாஉம் இல்லை. அது அவர்கள் விருப்பம். அதனால்தான் அதைப்பற்றி ஒருவரி கூட எழுதியதில்லை. இதில் முக்கியமான விஷயம் , அதுதான் போன் நம்பர் இருக்கிறதே என நான் ஒருவருக்கும் ஒரு போன்கால் கூட செய்ததில்லை. என்னுடைய முதல் புத்தக வெளியீட்டுக்கு திரைத்துறையில் இருந்து கௌதம் வாசுதேவ் மேனன் , சாய் வஸந்த் வந்திருந்தார்கள். ஹாய் மதன் மற்றும் நீயா நானா ஆண்டனி வந்திருந்தார்கள். இதில் கௌதம் வாசுதேவ் மேனனையும் , சாய் வஸந்தையும் சாரு நிவேதிதா அழைத்தார். அதாவது அப்போது நான் அறிமுக எழுத்தாளன், பொடியன். என் மெண்டார் அழைக்கிறார். எழுதிய நான் அழைத்தாலே கௌரவ குறைவு என நினைத்து சாரு நிவேதிதா அழைக்கிறார். நான் எழுத வேண்டியதைத்தான் அராத்து எழுதி இருக்காரு. என் புத்தக வெளியீடு மாதிரி நினைச்சிட்டு வரணும் என்று சொல்லி அழைக்கிறார். ஹாய் மதனை நேரில் அழைக்க என்னை உடன் அழைத்துச் சென்றிருந்தார். ஆண்டனி எனக்கே பழக்கம் என்பதால் நான் ஃபிரண்ட்லியாக அழைத்ததும் வந்து விட்டார்.
இப்போது ப்ரிவியூவுக்கு என்னை அழைத்தார்கள் அல்லவா ? அந்த இயக்குநருக்கு இது முதல் படம். படம் உலகத்தரமாகக் கூட இருக்கட்டும், இயக்குநருக்கு முதல் படம். நான் பதினைந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ , நான் தற்போது தமிழகத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளன். பத்து வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநர் , பத்து வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளனை தன் அஸிஸ்டெண்டை விட்டு அசால்டாக போன் போட்டு அழைப்பார். இவர்களுக்கு எல்லாம் எங்கிருந்து இவ்வளவு திமிர் வருகிறது ? இங்குதான் நாம் ஜெயகாந்தனை மிஸ் செய்கிறோம். அவர் இருந்திருந்தால் , நேரில் வரவழைத்து வார்த்தை செருப்படிகள் வழங்கி அனுப்பியிருப்பார். இவர்களுக்கு சினிமா கொடுக்கும் அதிகாரம்தான் இது. இதைப்போல இவர்கள் அழைத்தால் பெரும்பாலான எழுத்தாளர்களும் இளித்துக்கொண்டு ஓடிவிடுவதால் வரும் வினை இது. எழுத்தாளர்கள் இப்படி இளித்துக்கொண்டு ஓடுவதால்தான் இதுவரை படமே எடுக்காத இயக்குநர் கூட கோடம்பாக்கத்தில் 1350 ரூவாய்க்கு லாட்ஜில் ரூம் போட்டு அமர்ந்து கொண்டு , ஒரு புது படம் பண்ணப்போறேன் என்று சொல்லிக்கொண்டு , எந்த எழுத்தாளரையும் , எந்தத் தயக்கமும் இன்றி தெனாவட்டாக அழைக்க முடிகிறது.
இப்படி எழுத்தாளர்களை அழைத்து படம் போட்டுக் காட்டுவது என்பது ஒரு பீ ஆர் ஆக்டிவிட்டிதான். அதில் தவறில்லை. அதற்கென்று ஒரு அடிப்படை நாகரீகம் வேண்டாமா ? ஹீரோ , இயக்குநர் எல்லாம் படம் எடுத்து முடித்து விட்டு பெரிய புழுத்தி மாதிரி சுற்றிக்கொண்டிருக்க , உதவி இயக்குநர்கள் அல்லது சியர் பாய்ஸை வைத்து எழுத்தாளர்களை அழைப்பீர்களா ? அவர்களும் வந்து பார்த்து விட்டு , படத்தைப் பற்றி ஆஹா ஓஹோவென எழுத வேண்டும். ஹீரோ , இயக்குநர் எல்லா ரஜினி , பாரதிராஜா போன்ற திரைத்துறை பிரபலங்களை நேரில் சென்று படம் பார்க்க அழைத்து , அவர்கள் படம் பார்க்க வருகையில் பவ்யமாக கையைக் கட்டிக்கொண்டு பக்கத்தில் நின்றுகொண்டிருப்பீர்கள். எழுத்தாளர்கள் உங்கள் படங்களைப் பார்த்து மாய்ந்து மாய்ந்து எழுத வேண்டும். சமயங்களில் நீங்கள் எடுத்த குப்பைப் படங்களுக்கு எழுத்தாளர்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுதுவதன் மூலம் கிடைக்கும் இண்டெலக்சுவல் இமேஜ் வேண்டும். ஆனால் அவனை மதிக்க மாட்டீர்கள். எத்தனை எழுத்தாளர்கள் இதுவரை தகுதியான படங்களை உலகத் தரம் என்று பொதுவெளியில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் சினிமாக்காரர்கள் எத்தனை புத்தகங்களைப் பற்றி, எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள் அல்லது பேசியிருக்கிறார்கள் ? இந்த சினிமாக்காரர்களும் தானே சமூக வலைத்தள பக்கங்கள் வைத்திருக்கிறார்கள் ? அதில் ஏதேனும் சமகாலத்தில் வெளி வந்த தமிழ் புத்தகங்களைப் பற்றியோ , எழுத்தாளர்கள் பற்றியோ எழுதியிருக்கிறார்களா ? அவர்களைப்பற்றி , அவர்கள் படங்களைப் பற்றி ஏதேனும் அல்லக்கை எழுத்தாளர் புத்தகம் எழுதினால் அதை ட்விட்டரில் வெளியிடுவார்கள் இந்த சிறுமதிக்காரர்கள். இல்லையென்றால் , நூறாண்டு காலமாக தெவசம் நடந்துகொண்டிருக்கும் வெளிநாட்டு எழுத்தாளரைப் பற்றி ஓரிரு வரிகள் சொல்வார்கள். எதுவாக இருந்தாலும் அவர்கள் இமேஜுக்கு பூஸ்டாக இருக்க வேண்டும். அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் தான் இவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். இப்போதும் நிறைய இயக்குநர்கள் எழுத்தாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த எழுத்தாளரின் படைப்பைப் பற்றி மறந்து பொதுவெளியில் பேசமாட்டார்கள் , எழுத மாட்டார்கள். இவர்களுக்கு எழுத்தாளர்களுடன் வைத்திருக்கும் உறவு என்பது தேவடியாவுடன் வைத்திருக்கும் உறவு போன்றதுதான். அப்யூஸ்தான் செய்வார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எழுத்தாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தாங்கள் எழுத்தாளர்களா அல்லது சினிமாக்காரர்களுக்கு தேவடியாவா என்று !