முதல் நூறு 17: நிழல் உலக அனுபவங்கள்

17.  அன்பான சாரு,

நான் அரசு வேலையில் இருக்கிறேன். பத்து நாட்களுக்கு முன்பு எந்தத் தவறும் செய்யாத என்னிடம் ஒரு மேல் அதிகாரி ஏதோ ஒரு கோபத்தினால் நான் கொண்டு போன கோப்பினை என் முகத்தில் விட்டெறிந்தார். கோபமும், அழுகையுமாக வந்தது. என்னதான் சுமரியாதை இருந்தாலும் பணிக்கு ஆபத்தோ, பணியிடை மாறுதலோ வந்துவிடக் கூடாதென்று பல்லைக் கடித்துக்கொண்டு அறையை விட்டு வந்துவிட்டேன். இதையெல்லாம் தாண்டி எப்படி பக்குவமாக, நிதானமாக, மகிழ்ச்சியாக வாழ்வது?

ப்ரியா

பதில்: இந்தக் காலத்திலும் இப்படி நடக்கிறதா என ஆச்சரியமாக இருக்கிறது.  நீங்கள் என்னுடைய ராஸ லீலா நாவலைப் படித்ததில்லை என்று நினைக்கிறேன்.  அதிலே உங்கள் கேள்விக்குப் பதில் இருக்கிறது.  அவந்திகாவை அவளுடைய மேல் அதிகாரி இப்படித்தான் டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்.  இவளோ மூட்டை மூட்டையாக கோப்புகளை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்து நள்ளிரவு வரை அமர்ந்து அவற்றைப் பார்க்கக் கூடியவள்.  அப்படியும் திட்டு.  ஒரே காரணம்தான்.  இளிக்கவில்லை.  அவளும் என்னைப் போலவே அஞ்சல் துறைதான்.  ஒருநாள் அவர் அவளை தண்டச் சம்பளம் என்று திட்டியிருக்கிறார்.  என்.எஃப்.பி.டி. எங்கள் இலாகாவில் மிகவும் வலிமை வாய்ந்த யூனியன்.  யூனியனுக்கெல்லாம் நான் செல்ல விரும்பவில்லை.  நான் வேலையை விட்டு விருப்ப ஓய்வு பெற்றிருந்தேன்.  நேராக அந்த அதிகாரியிடம் சென்றேன்.  நான் அப்போது எங்கள் அலுவலகத்தில் ஒரு ரௌடியைப் போல் பேர் வாங்கியிருந்தேன்.  வெய்ட் லிஃப்டர்.  நீண்ட தலைமுடி.  காதில் வளையம்.  காலர் இல்லாத டீ ஷர்ட்.  காலில் ஒரு பெரிய நைக்கி ஷூ.  அதிகாரியின் அறைக்குள் சென்றேன்.  இன்னொரு குட்டி அதிகாரியும் உடன் இருந்தார்.  ”என் மனைவிக்குப் பெரும் மன உளைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இன்னொரு முறை அவளிடம் ஏதாவது பேசினால் உங்கள் ஒரு காலையும் கையையும் வெட்டி விட்டு ஜெயிலுக்குப் போவேன்” என்று மிரட்டினேன்.  அவர் அதிர்ந்து போய் என்னைப் பார்த்தார்.  வெளியே வந்து விட்டேன். 

மறுநாளிலிருந்து அவர் அவள் பக்கமே செல்வதில்லை.  அசோக் குமார் எனக்கு செய்ததை நான் அந்த அதிகாரிக்குச் செய்தேன்.

நான் வேலூரில் பணி புரிந்த போது எனக்கு யாரையும் தெரியாது.  அதனால் அசோக் குமாரைப் பிடித்தேன்.  ஆனால் நான் வேலூரில் இருந்தபோதுதான் வேலூர் கலெக்டராக சிவகாமி இருந்தார்.  சிவகாமி எனக்கு மிகவும் நெருக்கமான சிநேகிதர்.  அவரைப் பார்த்து சொல்லியிருந்தால் ஒரு நிமிடத்தில் எல்லாம் சரியாகியிருக்கும்.  ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களை நான் என் பொருட்டு அணுகுவதில்லை.  கூச்சம்.  

சென்னை வந்த பிறகு நிலைமை மாறியது.  பெயரைப் போட்டே ராஸ லீலாவில் எழுதினேன்.  தற்சமயம் நான் பிரபலம் என்பதால் பெயர் சொல்ல முடியாது. 

பார்ப்பதற்கு அவர் மலையாள நடிகர் பிரித்வி ராஜ் மாதிரி இருப்பார்.  நிழல் உலக தாதா.  தாதாக்களில் பல வகை உண்டு.  இவர் பெரியவர்களுக்கு வேண்டிய காரியங்களை மட்டும் காதும் காதும் வைத்தது போல் செய்து கொடுப்பார்.  அவ்வளவுதான்.  எம்ஜியாரின் வலது கரங்களில் ஒருவராக இருந்தார்.  ஆனால் ஜேப்பியார் மாதிரி தன்னை வெளியே காட்டிக் கொண்டதில்லை.  ஜேப்பியாருக்குக் கல்லூரி, பல்கலைக்கழகம் எல்லாம் கிடைத்தபோது இவரையும் எம்ஜியார் கேட்டிருக்கிறார்.  இவர் மறுத்து விட்டார்.  எம்ஜியாருக்குப் பிறகு ஜெ. மற்றும் அத்வானிக்கு வலது கரம்.  ஆனால் யாருக்கும் தெரியாது.  அகில இந்திய அளவில் பிரபலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிமினல் கேஸில் இவருடைய அடியாள் மாட்டினான்.  இவரும் மாட்டினார்.  தினசரிகளில் முதல் பக்கத்தில் புகைப்படத்தோடு செய்தி.  ஆனால் தன் செல்வாக்கின் மூலம் வெளியே வந்து விட்டார்.  இவருடைய அடியாள் சிறையிலேயே எய்ட்ஸ் வந்து இறந்தான்.  வழக்கும் முடிந்தது.  இவரும் தொழிலை மாற்றிக் கொண்டு இப்போது ஊரில் கனவானாக வாழ்கிறார்.  ஒருமுறை அவருடைய மகளின் பிறந்த நாளுக்கு அழைத்திருந்தார். சென்றேன்.  சென்னையில் அத்தனை போலீஸ் பிரமுகர்களும் அங்கே வந்திருந்தனர்.  மிகப் பெரிய தலைகள் உட்பட.  இதில் பல விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன.  புரிந்து கொள்ளுங்கள்.  ராஸ லீலாவில் விலாவாரியாக எழுதியிருக்கிறேன்.

தாதா நண்பரின் உதவியாட்கள் சினிமா அடியாட்களைப் போல் இருப்பார்கள். கழுத்தில் அடை அடையாக தங்க செயின்கள்.  முகத்தில் அல்லது கழுத்தில் லேசான கீறல் தழும்பு.  பெரிதாக இருக்காது.  என் அலுவலகத்துக்கு வந்து ஏதாவது கொடுத்து விட்டுப் போவார்கள்.  அல்லது, செய்தி சொல்லி விட்டுப் போவார்கள்.  (அண்ணே இன்னிக்கு உங்களை பீச்சுக்கு வரச் சொன்னார்.)  அப்போது என்னிடம் செல்ஃபோன் இல்லை. 

என் அலுவலகத்தில் 85 சதவிகிதத்துக்கு மேல் பிராமணர்கள்.  யாராவது என் பக்கம் திரும்புவார்கள்? 

18 ஆண்டுகளுக்கு முன்பு இவரால் எனக்கு ஒரு பெரிய உபகாரம் நடந்தது.  என் மகன் கார்த்திக் ஏரோநாட்டிகல் எஞ்ஜினியரிங் படிக்க விரும்பினான்.  முதல் தவணை ரெண்டு லட்சம் என்றார்கள்.  பிறகு ஆறு மாதம் சென்று கட்டினால் போதும்.  கட்டினோம்.  ஐந்தே நிமிடத்தில் இன்னும் ரெண்டு லட்சம் எங்கே என்றார்கள்.  நான், அவந்திகா, கார்த்திக் மூவரும் இருந்தோம்.  ரெண்டு லட்சம் என்றுதானே சொன்னீர்கள்?  இல்லை, நாலு லட்சம். 

சரி, அட்மிஷன் வேண்டாம், காசைக் கொடுங்கள்.

கட்டினால் திரும்பக் கிடைக்காது. 

என் நிலை, குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்.  கையில் ஒரு பைசா கிடையாது.

நிழல் உலகத்திடம் போனில் சொன்னேன்.

அங்கேயே உட்கார்ந்திருங்கள்.  இன்னும் ஐந்து நிமிடத்தில் பணம் உங்கள் கைக்கு வரும் என்றார்.

அதேபோல் ஐந்தே நிமிடத்தில் பணம் கைக்கு வந்தது.

பிறகு நான் நிழல் உலகத்திடம் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்றேன்.  ஏனென்றால், இத்தனை பெரிய நிர்வாகம் தாதாவுக்கெல்லாம் பயப்படுவார்களா என்ன?  நிழல் உலகம் என்னிடம் சொன்னது: அவரும் நானும் ஒண்ணாத்தான் தலைவரிடம் இருந்தோம், எல்லாம் நம்ம பழைய தோஸ்துதான்.  (ஜேப்பியார் இல்லை, இவர் வேறு.)

சரி, அந்த தாதா நண்பருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?  அவர் என் எழுத்துக்குத் தீவிர விசிறி. 

ஆனால் ப்ரியா, உங்கள் விஷயத்தை யோசித்தேன்.  உங்களுக்கு யூனியன் கிடையாதா? 

நான் போஸ்டல் ஸ்டோர்ஸ் டெப்போ என்ற அலுவலகத்தில் நான்கு வருடம் பணியாற்றினேன்.  ஒரு மேனேஜர் என்னை ரொம்பவும் டார்ச்சர் கொடுத்துக் கொண்டே இருந்தான்.  நிழல் உலகத்திடம் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  அப்போது அந்த மேனேஜர் ரஹ்மத் நிஸா என்ற அக்கவுண்டண்ட் லேடியிடமும் பிரச்சினை பண்ணினான்.  மேனேஜர் பெயர் சுப்ரமணியன்.  ஒருநாள் மாலை ஆறு மணிக்கு எல்லோரும் கிளம்பிய பிறகு – நானும் மேனேஜரும் மட்டுமே இருந்தோம் – அந்த அக்கவ்ண்டண்ட் லேடி மேனேஜரிடம் வந்தார்.  நன்றாக அடித் தொண்டையில் காறி அவன் முகத்தில் உமிழ்ந்து விட்டுப் போனார்.  ராஸ லீலாவில் இருக்கிறதா என்று ஞாபகம் இல்லை.  அத்தோடு மேனேஜர் ஒரு வாரம் ஆஃபீஸ் பக்கமே தலை காட்டவில்லை. 

ஒரு வாரம் கழித்து வந்த போது ஆளே வேறு மாதிரி இருந்தார்.  என்னிடம் தனியாக வந்து, தற்கொலை செய்து கொள்ள முயன்றேன், தைரியம் இல்லை, ஆஃபீஸ் போவதாகச் சொல்லி விட்டு கோவிலிலேயே அமர்ந்திருந்தேன் என்று சொல்லி அழுதார்.

மற்றபடி உங்களுக்கு நேர்ந்த கொடுமையை இரண்டு விதமாக எதிர்கொள்ளலாம்.  ஒன்று, யூனியனிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கலாம்.  இரண்டு, செருப்பில் பட்டு விட்ட அசிங்கத்தைப் போல் எண்ணி உதறி விட்டுப் போகலாம்.  மூன்றாவது வழி, உயர் பதவிக்கான தேர்வுகளை எழுதி மேலே போகலாம்.  மேலே போனால் இப்படிப்பட்ட கீழ்மைகள் இருக்காது என்று நினைக்கிறேன்.  பெண்களிடம் கூட இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.