வேறென்ன சொல்லட்டும், சொல்லுங்கள்? – சாரு நிவேதிதா & ஆத்மார்த்தி

எல்லாமே நாளுக்கு நாள் கூடுகின்றன
என்றேன்.
என்னையறியாமல் அப்படிச் சொல்லிவிட்டேன்.
சொன்னேன் என்பதைவிட அந்தச் சொற்களை சப்தமாக நினைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதெப்படியோ அவளுக்குக் கேட்டுவிட்டிருக்கிறது
என்ன சொன்னாய் திரும்பச் சொல் என்கிறாள்

இப்படி ஆரம்பித்த எத்தனையோ முத்தத்தில் போய் முடிந்திருக்கிறது
இப்படி ஆரம்பித்த எத்தனையோ மூர்க்கத்தில் போய் முடிந்திருக்கிறது
இப்படி ஆரம்பித்த எத்தனையோ முற்றிருளில் போய் முடிந்திருக்கிறது
இப்படி முடிந்த எத்தனையோ முத்தத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது

தயை தயாளம் கருணை அருள் சகிப்புத்தன்மை எல்லாமும்தான்
நாளுக்கு நாள் கூடுகின்றன என்றேன்
பிறகு என்றாள்
தேடல் தொடர்தல் அணைத்தல் அடைதல் பற்றுதல் படர்தல் முகிழ்தல் முடிதல்
எல்லாமும்தான் நாளுக்கு நாள் கூடுகின்றன என்றேன்
“அப்புறம்…?” என்றாள்
சொல்ல வந்தது அவ்வளவுதான் என்றேன்
லேசாய் நகைத்தவாறே “அப்புறம்?” என்றாள்.
எதுவும் பேசாதிருந்தேன்
பொறாமை, ஆங்காரம், குரோதம், வெறுமை, மனக்கசப்பு
எல்லாமும்தானே நாளுக்கு நாள் கூடுகின்றன என்றாள்
எதுவும் பேசாதிருந்தேன்
எதுவும் பேசாதிருந்தாள்
என் நிழலாய்ப் பின் தொடர்பவள்
நான் அவளுடைய நிழலுமானவன்
எதுவும் பேசாதிருந்தோம்
மெல்ல நகரத் தொடங்கிய என் சட்டைக்காலரைப் பற்றியிழுத்தவள்
இதற்கெல்லாம் காரணம் நான்தான் என்றாள்
எதுவும் பேசாமலிருந்தேன்
சொல்ல மறந்து விட்டேன்
முத்தங்களுக்கு நடுவில்தான் அப்படிச் சொன்னாள்
முத்தம்
இதற்கெல்லாம்
முத்தம்
காரணம்
முத்தம்
நான்
முத்தம்
தான்
என்றாள்
எதுவும் பேசாமலிருந்தேன்.