அந்தத் தேன் அத்தனை நிஜம்

கருவிலேயே கலைத்துவிட்டிருக்கலாம்

எனக் கெக்கலித்தது குரல்

ஏறிட்டுப் பார்த்தேன்

குடி பெருங்குற்றம் குடிப்பவர்களை நான் வெறுக்கிறேன்

என்றது மீண்டும் அந்தக் குரல்.

பெண்களோடு பேசாதே

பெண்களோடு பழகாதே

பெண்களோடு உறவாடாதே

என்றது இன்னொரு குரல்

நீர்ச்சலனம் பேரலையாகி

இரைச்சல் மிகுந்தது

பீதியில் நான் ஓலமிட்டேன்

ஊளையிடும் நாய்களை அடித்துக் கொல்லுங்கள்

என்றது மற்றுமொரு குரல்

என் தோளிலொரு தேன் சிட்டு அமர்ந்தாற் போலிருந்தது

அன்றைய தேடலின் தேனோரு துளியைப்

போனால் போகிறதென்று

என் உதட்டு நுனியில் தீற்றிவிட்டுச் சென்றது

தேன் சிட்டே தேன் சிட்டே

துளியினும் துளியெப்படிப் போதும்

என்று கேட்கவெண்ணி

நாளை வருவாயோ

தினமும் வாராயோ

என்று கேட்கின்றேன்

என் குரலதற்குக் கேட்டாற் போல் தோன்றியது

தேன் சிட்டு வரவுமில்லை

நான் பேசுவதைக் கேட்கவுமில்லை

என்றென்னிடம்

சொல்வதற்கு

வரிசையில் வந்து நிற்காதீர்

அதெல்லாம் எனக்கும் தெரியும்

நான் வியப்பதெல்லாம் வேறு

அந்தத்

தேன்

அத்

தனை

நிஜம்

அதெப்

படி