என் மீது அக்கறையும் அன்பும் கொண்ட நண்பர் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உங்களைப் பற்றிய ஆவணப்படத்துக்கு நீங்களே காசு கேட்பது சரியில்லை, கண்டவர்களும் உங்களைக் கேலி பேசுவார்கள், நாங்கள் கேட்கிறோம், நானோ சீனியோ கேட்கிறோம் என்று பத்துப் பதினைந்து வாட்ஸப் மெஸேஜ்கள் அனுப்பினார்.
சமூகத்தில் காசு கேட்பதே அசிங்கமாகத்தான் கருதப்படுகிறது. என் படத்துக்கு நானே காசு கேட்பது அசிங்கம்தான். ஆனால் இதில் உள்ள அசிங்கத்தைப் பார்த்தால் காரியம் நடக்காது. எனக்குக் காரியம்தான் முக்கியம். சமூகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலை என்றுமே எனக்கு இருந்தது இல்லை. நான் செய்வது ஒரு புனித காரியமாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஒரு கோவிலைக் கட்டுவதைப் போல. நான் என்பது அங்கே முக்கியம் அல்ல. நாகூரும் தில்லியும் சீலேயும் பதிவாகிறது என்பதே முக்கியம். இமேஜ் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எனக்கு எதுவுமே நடக்காது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆவணப்படத்துக்குத் திட்டமிட்டோமே? சில படப்பிடிப்புகளையும் நடத்தினோமே? மேற்கொண்டு தொடர முடியாமல் போனதற்குக் காசு இல்லை என்பதுதானே காரணம்? நாம் திருடவில்லை. நல்ல காரியத்துக்காகக் கேட்கிறோம். இன்னொரு விஷயம். இதே படத்தை நமக்கு ஒரு பைசா கூட செலவில்லாமல் மற்றவர்களைக் கொண்டே செய்து விடச் சொல்லலாம். ஆனால் அப்படி செய்யப்பட்ட படங்கள் எனக்குத் திருப்தியாக இல்லை. அங்கேயும் காரணம் என்னவென்றால், பணம்தான். முப்பதாயிரம் நாற்பதாயிரம் ரூபாயில் எப்படி நல்ல படம் வரும்?
சீனியோ மற்றவர்களோ கேட்டால் ஒரு பைசா வராது. எனவேதான் இந்தக் காரியத்தில் இறங்கினேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.