நேற்று ஹைதராபாத்துக்கு ரயிலில் வந்தேன். நம்பிள்கு சைட் லோயர். பொழுது போகாமல் அங்கிருந்து தான் விக்ரம் அடித்தேன். பொன்னுமணி சவுந்தர்யா போல ஒரு நங்கை. பார்த்தவுடன் ஆந்திரா என தெரியும் படி வனப்பு. அன்னார் தன்னுடைய மாமியார் உடன் வந்திருந்தார். சௌந்தர்யா அவ்வப்போது என்னுடன் பேச முற்படுவதாக எனக்கு ஒரு பிரமை. அந்தக்கால ஐஸ்வர்யா ராயே என்னுடன் பேச முற்பட்டாலும் ரயிலில் லோயர் பர்த்தில் நான் இருந்தால் கண்டு கொள்ள மாட்டேன். அப்பர் பர்த்துக்கு மாறச் சொல்லுவார்கள். 2 டயர் ஏசியில் அது ஒரு சிக்கல் இல்லையெனினும் சைட் அப்பருக்கு மாறச்சொன்னால் தேவலோக மங்கை எனினும் நோ தான்.சத்தம் போட்டு கூப்பிட்டதால் , வேறு வழியின்றி சௌந்தர்யாவைப் பார்த்தேன். சௌந்தர்யா விவரம். எடுத்த உடனே அப்பர் பர்த் ரெக்வெஸ்ட் போட வில்லை. நான் யார் ? எது நேட்டிவ் என்றெல்லாம் விவரம் கேட்டு , அவருக்கு சமீபத்தில் திருமணமாகி ஹைதராபாத்தில் இருந்து , சென்னைக்கு வாக்கப்பட்டு என்றெல்லாம் கதை சொல்லி , ஹி ஹி என்றார்.ஹி ஹி க்கு அப்புறம் அப்பர் பர்த் சிக்கல் தான் என தயார் ஆனேன். தட்காலில் புக் செய்திருக்கிறார். அவருக்கு மூவ் ஆகி விட்டது. மாமியாருக்கு வெயிட்டிங்க் லிஸ்ட். தட்காலில் ஆர் ஏ சி கிடையாது. வெயிட் லிஸ்ட் பேஸஞ்சர் ரயிலில் ஏறவே கூடாது என்பது விதி. மீறி ஏறினால் ஃபைன் கட்ட வேண்டும். வெயிட் லிஸ்ட் என்பது நோ டிக்கட் . ஆனால் சென்னை டீ டீ ஆரிடம் சௌந்தர்யா இதைப்பற்றி சொன்னபோது , சென்னை டீ டீ ஆர் ஒன்றுமே சொல்லவில்லை. ரேனி குண்டாவில் வேறு டீ டீ ஆர் வருவார், அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என சொல்லி சென்று விட்டார். ஃபைன் போட வில்லை. சௌந்தர்யா மகிமை.அடுத்து ரேனி குண்டா வந்தது. இப்போது தெலுகு டீடி ஆர். அவர் சௌந்தர்யா வின் தாய் மாமன் போல பேச ஆரம்பித்து விட்டார். டிக்கட் இல்லாமல் 2 ஏசி யில் ஏரியதைப் பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. கூட்டியில் பர்த் காலியாகிறது , கொடுக்கிறேன் ஹி ஹி என சொல்லி சென்று விட்டார். நோ ஃபைன். கூட்டியில் பர்த் கொடுப்பதற்கும் பணம் கேட்கவில்லை. இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் நான் விக்ரம் அடித்து முடித்து விட்டேன். ரயில் ரேனிகுண்டாவைத் தாண்டி கூட்டி நோக்கி ஓடிக்கொண்டு இருந்தது. ரேணி குண்டாவில் ஏறிய இரண்டு ஆசாமிகள் அதே கேபினில் இருந்தார்கள். மொட மொடப்பான காட்டன் சட்டை மலைக்கு போர்த்தியது போன்ற தொப்பை உடைய டிப்பிக்கல் தெலுங்கு ஆசாமிகள். அவர்கள் சௌந்தர்யாவுடன் பேச ஆரம்பித்து அன்பானார்கள். மாமியாரும் கம்பனி கொடுக்க ஆரம்பித்தார். சௌந்தர்யா தங்களுக்கு சாப்பாடு வாங்கி வரவில்லை. காட்டன் தொப்பை மொட மொட ஆசாமிகள் சௌந்தர்யாவுக்கும் மாமியாருக்கும் சாப்பாடு அன்பளித்தார்கள். சௌந்தர்யா தயங்கினார். மாமியார் பழங்கால இளிப்போடு பெற்றுக்கொள்ளச் சொன்னார். சௌந்தர்யா பெற்றுக்கொண்டார். தோசை , சப்பாத்தி , சிக்கன் கிரேவி , சிக்கன் பிரியாணி. மொட மொட ஆசாமிகள் பலே கேட்டரிங்க் கில்லாடிகள் போல. நானும் என்னுடைய சைவ உணவை உண்ண ஆரம்பித்தேன். மருத்துக்கும் மொட மொட ஆசாமிகள் என்னிடம் எதுவும் ஆஃபர் செய்ய வில்லை.சௌந்தர்யாவை வெறுப்பேற்றும் விதமாக , ரசம் இருக்கு வேணும்னா எடுத்துக்கோங்க என்றேன். பதறி அடித்து வேண்டாம் என்றார். சிக்கன் லெக் பீஸை இழுத்து விட்டு மெல்லும் மொட மொட ஆசாமிகளுக்கும் ரசத்தை ஆஃபர் செய்தேன். மிரண்டு பின் வாங்கினார்கள். சாப்பாடு முடிந்ததும் …மொட மொட ஆசாமிகளுக்கு ஒரு லோயர், ஒரு அப்பர் பர்த். இன்னொரு லோயர் , அப்பர் பர்தில் ஒரு குடும்பம்.நான் சைட் லோயர். சௌந்தர்யா சைட் அப்பர். மாமியார் வித் அவுட். ஒரு பர்த்தில் சௌந்தர்யாவும் , மாமியாரும் செட்டில் ஆக வேண்டும். குடும்பத்திடம் கேட்க முடியாது. மொட மொட ஆசாமியில் ஒருவரால் அப்பர் பர்த்தில் ஏறவே முடியாது. அவர் டிரெயினில் ஏறியதே அதிசயம். இன்னொரு மொட மொட ஆசாமி முயற்சி செய்தால் அப்பர் பர்த்தில் ஏறும் நிலையில் இருந்தார்.என்னால் சைட் அப்பரில் அமர்ந்து வேலை செய்ய முடியாது சௌந்தர்யா என தீர்க்கமாக சொல்லி விட்டேன். அதுதான் சௌந்தர்யாவின் பர்த். எனக்கு ஓப்பன் பண்ணா ஆங்கில டிரான்ஸ்லேஷன் + அலுவலக வேலைகள் இருந்தன. அதனால் மொட மொட ஆசாமியின் நார்மல் அப்பர் பர்த்துக்கு நான் மாறி , என்னுடைய சைட் லோயருக்கு சௌந்தர்யாவும் வித் அவுட் மாமியாரும் சென்றனர். லோயர் பர்த்தில் படா மொட மொட ஆசாமி படுத்து விட்டார். இவ்வளவு கதையும் வெட்டியாக ஏன் சொல்கிறேன் என்றால் , இனிமேல் வரும் ஒரே ஒரு விஷயத்தை சொல்லத்தான்.தன் நார்மல் அப்பரை எனக்கு விட்டுக்கொடுத்து (சௌந்தர்யாவுக்காக ) சைட் அப்பரில் ஏற முயற்சித்த இன்னொரு மொட மொட ஆசாமி இரண்டு மணி நேரமாக ஏற முயற்சித்துக்கொண்டே இருந்தார்.அவ்வப்போது என்னைப் பார்த்து சிரிப்பார். ரெஸ்ட் ரூம் போய் வருவார். திரும்ப ஏற முயற்சிப்பார். அப்படியே சோர்ந்து போய் நிற்பார்.இந்த நேரத்தில் வித்தவுட் மாமியார் படுத்து தூங்கி விட்டார். அதே பர்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த சௌந்தர்யாவும் படிப்படியாக சரிந்து படுத்து தூங்கி விட்டார். மாமியார் கால் எங்கே , மருமகள் கால் எங்கே என்றே தெரியவில்லை. நம் மொட மொட ஆசாமி தவித்துக்கொண்டு நிற்கையில் கூட்டி வந்து விட்டது.அவரிடம் , டீ டீ ஆர் ஒரு பர்த் இங்கே கிடைக்கும் என்றாரே அதைக் கேளுங்கள் என்றேன். பாலை நிலத்தில் தண்ணீர் கிடைத்தவன் போல டீ டீ ஆரைத் தேடி ஓடினார்.இல்லை என சொல்லி விட்டார் எனத் திரும்பி வந்தார்.அவருடைய என் பர்த்தை அவருக்கேக் கொடுத்து விட்டு சௌந்தர்யாவின் சைட் அப்பருக்கு மேலே போய் விடலாமா என யோசித்தேன். வேலைதான் முக்கியம் என மௌனம் காத்தேன். மொட மொட ஆசாமிக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அவருக்கு செரித்து இருக்கும் போலிருக்கிறது. ஒரு வெறியுடன் ஏறி கர்பப்பைக்குள் தன்னை திரும்ப செலுத்திக்கொள்ளும் சிசுவென சைட் அப்பர் பர்த்தில் விழுந்தார். சௌந்தர்யாவும் மாமியாரும் நல்ல உறக்கம் ஒரே பர்த்தில் . கணவன் மனைவி கூட அப்படித் தூங்க மாட்டார்கள். ஹைதராபாத் நெருங்கியது . கண் விழித்துப்பார்த்தேன். சௌந்தர்யா வடிவுக்கரசி போல வித்தியாசமான போஸில் அமர்ந்திருந்தார். மாமியார் அப்போதும் அவருக்குரிய நளினத்துடன் அமர்ந்திருந்தார். மொட மொட ஆசாமிகளைக் காண வில்லை. எங்கு இறங்கினார்கள் எனத் தெரியவில்லை.இப்போது என்னிடம் சிநேகமான புன்னகை புரிந்தார் சௌந்தர்யா. அவரிடத்தில் பெரிய லக்கேஜ் இருந்ததை அல்ரெடி நான் பார்த்திருந்தேன். அதனால் சிநேகமான புன்னகையைத் தவிர்த்து ரயில் பயணத்துக்குரிய ஒரு புன்னகையை அளித்து விட்டு வாய் கொப்பளித்து விட்டு வந்து அமர்ந்தேன்.இன்னும் ஒரு மாதம் இங்கேதான் என்றார் சௌந்தர்யா. நானும் அப்படியே என்று சொன்னேன். ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோம். என்னிடம் ஒரு டிரோப்பிகானா இருந்தது. அதைக்கொடுத்தால் சிரித்துக்கொண்டு குடிக்கும் மூடில் இருந்தார் பைசா செலவில்லாமல் ஏசியில் வந்த மாமியார். ஸ்டேஷன் நெருங்கி விட்டது. நானோ சௌந்தர்யாவோ மொபைல் நம்பர் மாற்றிக்கொள்ளும் சிச்சிவேஷன். கேளேன் என்பதுதான் சௌந்தர்யாவின் முகபாவம். எனக்கும் சௌந்தர்யாவைப் பிடிக்கும். ஏனோ காலை நேர சின்ன எரிச்சல். அந்த சந்தர்ப்பத்தை தவிர்த்து விட்டேன்.ரயிலை விட்டு இறங்கி போர்ட்டரை நாடாமல் கஷ்டப்பட்டு சௌந்தர்யாவே லக்கேஜை சுமந்து கொண்டு நடந்தார். மாமியாரும். பை பை என கை ஆட்டி சிரித்தார் சௌந்தர்யா . நானும் பை பை என கை ஆட்டி சிரித்தேன். பின் பிரிந்து விட்டோம். ஆட்டோ பிடிக்க நிற்கையில் , ஃபேஸ்புக் ஐடியை பரிமாறிக்கொண்டோம்.
***
பின்னுரை:
அராத்துவின் மேற்படி கிளாஸிக் சிறுகதையைப் படித்த போது தோன்றிய சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை நாம் 1953இல் பிறக்காமல் 1983இல் பிறந்திருந்தால் மேற்படி கதையில் வந்தது போல் பல கில்மான்ஸ்களை அனுபவித்திருக்கலாம், சின்ன வயதிலிருந்தே ஏசியில் வாழ்ந்திருக்கலாம், கணினி கைபேசி போன்ற மகத்தான சௌகரியங்களையும் ஆரம்பத்திலிருந்தே அனுபவித்திருக்கலாம் என்றெல்லாம் நினைத்து வருந்துவதுண்டு. எங்கள் காலமெல்லாம் பெண்கள் ஆண்களிடமிருந்து ஒளிந்து வாழ்ந்த காலம். அதனால் என்னைப் போன்ற ஜீவன்களுக்கு ஸ்ரீராமனைப் போல் ஏக பத்தினி விரதனாக வாழ்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் விக்ரம் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் கும்பல் சொல்லும் ஆவேசப் பேச்சுகளைப் பார்க்கும் போது அசோகமித்திரனுக்கும் மூத்தவனாக சி.சு. செல்லப்பா காலத்தில் பிறந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பே விடை பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
மற்றபடி வெட்டிக் கதையெல்லாம் அராத்துவுக்கு மட்டுமே நடக்கும். எனக்கு எப்போதுமே மிடில் பெர்த் தான். அது அப்பரை விடக் கொடூரம். செகண்ட் ஏசி என்றால் எப்போதுமே அப்பர்தான். அதனால்தான் ரயில் துறையுடன் கோபித்துக் கொண்டு விமானத்திலேயே பயணம் செய்கிறேன். விமான நிலையம் இல்லாத ஊர்களுக்குக் கூடிய மட்டும் செல்வதைத் தவிர்க்கிறேன்.