சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்பது ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு வட்டம் அல்ல. இன்னும் கேட்டால் , சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என்ற ஒன்றே இல்லை
யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் , சாரு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு வேலையை எடுத்துச் செய்யலாம் , எப்போது வேண்டுமானாலும் அதை அப்படியே கைவிட்டு விட்டு சென்று விடலாம். நான் ஓரிரு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். வேறு பல வேலைகளாலும் அலுப்பாகவும் இருந்ததால் இப்போது எந்த ஒரு வேலையும் செய்வதில்லை.
ஶ்ரீராம் சாரு பிளாக் , தரவுகள் சம்மந்தப்பட்ட வேலைகளை செய்து வருகிறார். இப்போதைக்கு தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்துவருவது என்றால் அது ஶ்ரீராம் மட்டுமே.
அன்னபூரணி என ஒருவரை சாரு எழுதி படித்திருப்பீர்கள். அவர் அடிக்கடி கட்டு சோறு அனுப்புவார். வினித் டெலிபோனில் மொக்கை போடவும் , எங்காவது பிராக்காக சாருவுடன் வெளியே செல்லவும் உழைத்து வருகிறான்.
சிற்றரசு , சாருவுக்கு பதநீர் வாங்கி வந்து கொடுப்பார், ராஜா வெங்கடேஷ் வெப்சைட்டில் ஏதேனும் பிரச்சனை வந்தால் பார்ப்பார், செல்வகுமார் , மௌஸ் வாங்கி வந்து கொடுப்பார். அவ்வளவுதான் மொத்த சாரு வாசகர் வட்டமும்.
ஒரு நகைச்சுவைக்காக எழுதியிருக்கிறேன். பிரபு ,குரு , சயிண்டிஸ்ட் , நிர்மல் , வளன், சிங்கப்பூர் சிவா போன்ற சீரியஸான நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கோபித்துக்கொள்ளக்கூடாது என இதை நகைச்சுவை என எழுத வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
சரி , மேட்டருக்கு வருவோம்.
சாரு நிவேதிதா வாசகர் வட்ட கூட்டம் போட்டால் 50-100 பேர் வருகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சாருவை வாசித்திருக்கிறார்கள். தீவிரமாக விவாதிக்கிறார்கள். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. அந்த பார்ட்டி முடிந்ததும் எஸ்கேப். அதற்கடுத்து அடுத்த பார்ட்டிக்குத்தான் அட்டெண்டென்ஸ்.
எனக்கே ஒரு கில்ட் ஃபீலிங் வந்து விட்டது. சாருவை ஒரு எலீட் க்ளப் போல பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்களோ என்று. அதாவது மது அருந்திக்கொண்டே ஒரு இண்டெலக்சுவல் சொறிதல் தேவைப்படுகிறதோ என்ற எண்ணம் வந்து விட்டது. இந்த இடத்தில் ஆதவனின் “புதுமைப்பித்தனின் துரோகம்” சிறுகதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஜெயமோகன் வட்டத்தினர் செயல்பாடுகளைப் பார்க்கிறேன். ஒரு பல்கலைக்கழகம் ,டாட்டா பிர்லா நடத்தும் பண்பாட்டு கலாச்சார மையங்கள் செய்ய வேண்டிய பிரம்மாண்டமான வேலைகளை செய்துவருகிறார்கள். தமிழ் விக்கி , விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா எல்லாம் உதாரணங்கள்.
இதை பல அல்லக்கைகள் கிண்டல் அடிக்கலாம். இதை எல்லாம் செய்துபார்த்தால்தான் தெரியும் , எவ்வளவு மெனக்கெடலும் அர்ப்பணிப்பும் தேவை என்று.
இவை அல்லாமல் , வெண் முரசு கூட்டம் , கட்டண உரை என பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். இங்கே நான் தான் ஔரங்கசீப் என்னும் பிரம்மாண்டமான முயற்சியின் 100 வது அத்தியாயக் கூட்டத்திற்கு சாருதான் செலவு செய்து ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. சிங்கப்பூர் சிவா போன்ற ஓரிருவர் தோள் கொடுக்கிறார்கள். வேலை ?
நான் ஆலோசகர் என்ற வகையில் ஆலோசனை வழங்கி விட்டு நைஸாக ஒதுங்கிக்கொள்ள , வினித் ஒரு ஆள் எல்லா வேலைகளையும் தோளில் ஏற்றி செய்ய வேண்டியிருக்கிறது. சரி ஆளாக வந்து பூவாக வேலைதான் செய்யவில்லை , பொதுவெளியில் சாருவின் படைப்பைப்பற்றி ஏதேனும் எழுதுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. பார்ட்டி நடந்தால் வருகிறார்கள். அதன் பின் பிளாக்செயினில் போட்ட கிரிப்டோகரன்ஸி போல கிடக்கிறார்கள். வாசகர் வட்ட சீனியர் ஆட்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடம். லௌகீக வாழ்க்கை அவர்களை சின்னாபின்னப் படுத்துகிறது.
1)அப்பாவுக்கு ஆப்பரேஷன்
2)அம்மா ஐ சி யூ வில்
3)மனைவிக்கு தைராய்டு
4)குழந்தைக்கு மூக்குசளி
5)அலுவலக ஏணியில் ஏறவேண்டியிருப்பது
இவை எல்லாவற்றையும்தாண்டி , சீனியர் வாசகர் வட்ட ஆட்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால் , தாங்களே சீக்கு வந்து படுத்துக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் மது அருந்துபவர் , அருந்தாதவர் என்கிற பேதமே இல்லை.
இவை எதையும் தவிர்க்க இயலாது. வயது ஏற ஏற இந்தப் பிரச்சனைகள் எல்லாம் வந்து கும்மியடிக்கும்தான். வருடங்கள் ஓடினாலும் , வயது ஏறாமல் பார்த்துக்கொள்வது ஒரு கலை. அது சற்று சிரமம் தான். உடனே 50 வயதில் இமயமலை டிரிப் போவது ,பப்பில் குத்தாட்டம் போடுவது , சின்னப்பொண்ணுக்கு அத்துமீறி இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்புவது எல்லாம் வயது ஏறாமல் பார்த்துக்கொள்வது அல்ல . அதெல்லாம் ஃபேக் !போலித்தனம்.
இயல்பிலேயே இதெல்லாம் செய்வது வேறு, படம் காட்ட செய்வது வேறு. சாருவிடம் இந்த வயது ஏறாமல் பார்த்துக்கொள்ளும் தன்மை இயல்பிலேயே இருக்கிறது.
இந்த நிலைமையில்தான் (!) சாரு நிவேதிதா புதிய இளம் வாசகர்களை சந்திக்க விரும்புகிறார். இளம் என்றால் நான் முன்பே சொன்ன “மனதில் இளம் “. பல புதிய வாசக நண்பர்களுக்குத் தயக்கமாக இருக்கும் . பல சீனியர் ஆசாமிகள் இருப்பார்கள். சாரு வேறு கோபக்காரர் என்ற பிம்பம். அதனால் இந்த முறை மூத்த முதிய வாசகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
நானும் வினீத்தும் கலந்துகொண்டாலும் , ஆர்கனைஸ் செய்யும் வேலைகளில் மட்டுமே ஈடுபடுவோம். முற்றிலும் புதிய வாசகர்கள் மட்டும் சாருவுடன் கலந்துரையாடலாம்.
செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை. இடம் பாண்டிச்சேரி ஆரோவில். எப்படி கலந்து கொள்வது ?அப்படியே வந்து கலந்து கொள்ள வேண்டியதுதான். எந்த இடம் ? மேப் லொகேஷன் ?Vinith Vijay Prakash ஐத் தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு இடம் பற்றிய தகவல்கள் அளிப்பார்.
இரவு தங்க விரும்பினால் ?
சாரு தங்கியிருக்கும் இடத்தின் அருகிலேயே 600 ரூ முதல் தங்குமிடங்கள் இருக்கின்றன. வினித்திடம் தகவல் பெற்று முன்பதிவு செய்துகொள்ளுங்கள். பாண்டிக்கு எப்படி வருவது ?பேருந்து , ரயில் , விமான வசதிகள் பாண்டியில் உள்ளன. பைக் , கார் மற்றும் பொடி நடையாகக் கூட வரலாம்.
வாருங்கள் நேரில் சந்தித்து மேலதிக சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். சியர்ஸ் !