சினிமாவும் சுவாரசியமும்

ஜனரஞ்சகக் கதைகளோ அல்லது ஜனரஞ்சக சினிமாவோ எப்படித் தொடங்க வேண்டும் என்பதற்குக் கதையிலிருந்தும் சினிமாவிலிருந்தும் ஒவ்வொரு உதாரணம் தருகிறேன்.  தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலில் வரும் கதைசொல்லி, ”இன்று இரவுக்குள் என்னைக் கொன்று விடுவார்கள், அதற்குள் நான் என்னுடைய நெடிய கதையை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்” என்று ஆரம்பிக்கிறான்.  எடுத்த எடுப்பிலேயே நம்மைத் தொற்றிக் கொள்கிறது சுவாரசியம்.  கதைகளில் கூட இந்த அம்சம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் சினிமாவிலோ நாடகத்திலோ இது இருந்தே ஆக வேண்டும்.  எடுத்த எடுப்பில் ஒரு முரண் முடிச்சைப் போட்டால்தான் கதை அடுத்த கட்டத்துக்கு நகரும். 

சினிமாவில் இது எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போம்.  இப்போதைய நவீன வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பென் ஹர் 1959இல் வெளிவந்தது.     

காலம் கி.பி. முதல் நூற்றாண்டு.  கதையின் தொடக்கத்தில் பெத்லஹேமில் உள்ள ஒரு குகையில் இடையர் குல மனிதர்கள் மத்தியில் ஒரு குழந்தை பிறக்கிறது.

அடுத்த காட்சி, கி.பி. 26. ஜெருசலேமுக்குப் புதிய ஆளுநராக வருகிறான் மெஸ்ஸாலா என்ற ரோமன்.  ஜெருசலேம் ரோமானியரின் ஆதிக்கத்தில் இருக்கிறது.  பழைய ஆளுநர் செக்ஸ்டஸும் மெஸ்ஸாலாவும் பேசிக் கொள்வது இரண்டாவது காட்சி. 

“இந்த மக்கள் வரியே கொடுப்பதில்லை, அதை விடக் கொடுமை இவர்களின் மத வெறி!  நம் கடவுளரின் சிலைகளை உடைத்தெறிகிறார்கள். ஏன், பேரரசரின் சிலையைக் கூட விடுவதில்லை” என்கிறான் செக்ஸ்டஸ்.

“அவர்களை தண்டிக்க வேண்டியதுதானே?”

”அவர்களைக் கண்டு பிடிக்கும்போது தண்டிக்கிறோம்.”

”அவர்களின் தலைவர்களைத் தண்டியுங்கள்.”

“அப்படியெல்லாம் இங்கே யாரையும் சுட்டிக் காண்பித்து விட முடியாது.  அதுவும் தவிர, இந்த தீர்க்கதரிசி பிரச்சினை…”

“அது எனக்குத் தெரியும்.  இங்கே நான் சிறுவனாக இருந்தபோதே அது சொல்லப்பட்டு விட்ட்துதானே?  ’யூதர்களின் அரசன் தோன்றப் போகிறான், அவன் ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து யூதர்களை விடுவிக்கப் போகிறான்…’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.”

“ஆமாம்… ஒரு தச்சனின் மகன் வேறு ஏதேதோ மாஜிக் பண்ணிக் கொண்டு திரிகிறான்.  கேட்டால் எல்லோரும் ‘அதிசயங்கள் நிகழ்த்துகிறார்’ என்கிறார்கள்.” 

“எப்போதுமே இப்படிப் பிரச்சினைக்குரியவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.”

“இல்லை, இவன் அப்படி அல்ல… இவன் ‘கடவுள் நம் பக்கத்தில் இருக்கிறார், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார்’ என்கிறான்.”

“செக்ஸ்டஸ்… நீ ரோமிலிருந்து வந்து ரொம்ப காலம் ஆகி விட்டதால் ரோமை மறந்து விட்டு இந்த ஊர்க்காரன் மாதிரி பேசுகிறாய்.  இந்த ‘ஒவ்வொருவரிடமும் கடவுள் இருக்கிறார்’ பேர்வழிகளையெல்லாம் மறந்து விட்டு எங்கேயாவது சுற்றுலா போய் வா.   என்னைப் பொருத்தவரை ஒரே ஒருவரிடம்தான் தெய்வீகத்தன்மை குடி கொண்டிருக்கிறது.  அவர் ஜுடேயா (ஜெருசலேம்) ரோமுக்குக் கீழ்ப்படிந்த பிராந்தியமாக இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்.  ஆகவே, இங்கே நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே வந்திருக்கிறேன்.”

“ஆனால் எப்படி அதைச் செய்யப் போகிறாய்? அவனை நீ கைது செய்து பாதாளச் சிறையில் அடைக்கலாம். அவன் மண்டையையும் உடைக்கலாம்.  ஆனால் மண்டைக்குள் உதிக்கும் சிந்தனையை எப்படி அழித்து ஒழிக்க முடியும்?  அதுவும் புதிய வகை சிந்தனையாக இருந்தால்?”

அப்போது மெஸ்ஸாலாவிடம் வரும் அவன் மெய்க்காப்பாளன் “தங்களைக் காண ஒரு யூதர் வந்திருக்கிறார்” என்கிறான்.  “ஏன், யூதனுக்குப் பெயர் இல்லையா?” என்று காட்டமாக வினவுகிறான் மெஸ்ஸாலா.

”இளவரசர் என்று சொல்கிறார்.  பெயர் ஜூடா பென் ஹர்…”

“அப்படியானால் அவரை இளவரசர் போலவே நடத்து… நானே வருகிறேன் என்று போய்ச் சொல்…”

மெய்க்காப்பாளன் வெளியே செல்லும் போது அவனைக் கடுமையான குரலில் அழைத்து “இந்த நாடு நம்முடைய நாடாக ஆவதற்கு முன்பாக அவருடைய நாடாக இருந்தது, அதை மறந்து விடாதே” என்கிறான்.  பிறகு செக்ஸ்டஸை நோக்கி, “சிந்தனையை அழித்தொழிக்க என்ன செய்ய முடியும் என்று கேட்டாய்.  சிந்தனையை அழித்தொழிக்க இன்னொரு சிந்தனையால்தான் முடியும்…”

அப்போது செக்ஸ்டன் பென் ஹர் பற்றி மெஸ்ஸாலாவிடம் சொல்கிறான்.  ஜெருசலேம் நகரில் வசிக்கும் ஒரு யூத இளவரசன் ஜூடா பென் ஹர்.  செல்வச் சீமான்.  வணிகன். 

அப்போது குறுக்கிடும் மெஸ்ஸாலா தானும் பென் ஹரும் சிறு வயதுத் தோழர்கள் என்றும், கிட்டத்தட்ட சகோதரர்கள் போல என்றும் சொல்கிறான்.  

அடுத்த காட்சியில் மெஸ்ஸாலாவும் பென் ஹரும் சந்திக்கிறார்கள்.  இந்தக் காட்சிக்காகவே பென் ஹரை நான் திரும்பத் திரும்ப்ப் பார்த்தது எனக்கு ஞாபகம் வருகிறது.  நீண்ட காலம் கழித்து நண்பர்கள் இருவரும் சந்திக்கிறார்கள்.  ஜெருசலேம் ரோமின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.  ஜெஸ்ஸாலா ரோமன்.  பென் ஹர் யூதன். 

இருவரும் சிறுவர்களாக இருக்கும் போது விளையாடியது போலவே குறி பார்த்து ஈட்டி எறிகிறார்கள்.  இவ்வளவு காலம் கடந்தும் சிறு வயதில் எறிந்ததைப் போலவே இருவரும் மிகச் சரியாகக் குறி பார்த்து எறிந்திருக்கிறார்கள். 

“நான் ஜுடேயாவை சீர்திருத்தம் செய்வதற்காக வந்திருக்கிறேன்.  அதற்கு உன் ஆலோசனை தேவை” என்கிறான் ஜெஸ்ஸாலா.

”என் ஆலாசனை தேவை என்றால், உன் படைகளை இங்கிருந்து அகற்றி விடு.  எங்களை சுதந்திரமாக வாழ விடு.  அதுதான் நான் உனக்குக் கொடுக்கும் சிறந்த ஆலோசனையாக இருக்கும்.”

”ஆனால் அரசர் வேறு மாதிரி நினைக்கிறார்.  அவருக்கு ஜுடேயா ரோமின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

கிட்டத்தட்ட பென் ஹர் என்ற மூன்றே முக்கால் மணி நேரத்துக் கதையையுமே இந்த உரையாடல்களின் மூலம் நாம் தெரிந்து கொண்டு விடுகிறோம்.  இரண்டு எதிரெதிர் கருத்துகள்.  அதன் மோதல்.  இது எப்படி எந்த இடத்தில் போய் முடியப் போகிறது?  வெல்பவர் யார் ரோமானியரா?  யூதரா?  இதில் யேசு கிறிஸ்துவின் பங்கு என்ன?  

இப்படியாக மேற்கூறிய இரண்டு ஆரம்பக் காட்சிகளிலேயே முழுப் படத்துக்கான டென்ஷனும் டிராமாவும் கதைச் சூழலும் உருவாகி பென் ஹர் என்ற கதைக்குள் நம்மை இழுத்துக் கொண்டு செல்கின்றன.  இதுதான் ஒரு சுவாரசியமான கதை சொல்லல் பாணி.  இப்படித்தான் ஒரு திரைப்படம் தான் சொல்ல வந்த கதையைப் பார்வையாளரிடம் கடத்த வேண்டும்.  இப்படியெல்லாம் இல்லாமல் ட்யூரின் ஹார்ஸ் போன்ற படங்களும் இருக்கின்றன.  அவை வேறு வகையைச் சேர்ந்தவை.  அவற்றுக்கான இலக்கணங்கள் வேறு.  இந்தக் கட்டுரையில் நாம் பார்த்தது வெகுஜன சினிமாவின் கதை கூறல் முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியது.