சென்னை (மீண்டும்…)

தெறிக்க விட்டிருக்கிறார்கள் சென்னையின் காதலர்கள்.  குடித்து விட்டு வந்து தினந்தோறும் உதைக்கும் கணவனையும் பெண்டாட்டி “எம் புருஷன் தங்கம்ல” என்று சொல்லும் கதைதான்.  ஹைதராபாதில் சென்னை அளவுக்கு யாரும் ஏமாற்றுவது இல்லை.  ஒரு சிங்கிள் டீ அங்கே ஏழு ரூபாய்.  குடிப்பதற்கு தேவாம்ருதமாக இருக்கிறது.  இங்கே சென்னையில் கழுதை மூத்திரம் மாதிரி இருக்கும்.  பத்து ரூபாய்.  காஃபி பன்றி மூத்திரம் மாதிரி இருக்கும்.  முப்பது ரூபாய்.  வீடு வாடகைக்குப் பார்த்தால் பத்து மாத முன்பணம்.  வாடகை ஐம்பது ஆயிரம் என்றால் ஐந்து லட்சம் முன்பணம். 

அய்யர் சலூனில் முடி வெட்ட – அதுவும் இரண்டரை நிமிடம்தான் – முந்நூறு ரூபாய் என்று சொல்லி அட்ரஸும் கொடுத்திருக்கிறேன்.  அதைப் படித்து விட்டு “புளுகுவதற்கும் அளவு வேண்டாமா?” என்று கேட்டிருக்கிறார் ஒரு மகானுபாவர்.  இந்த மாதிரி தகர டப்பாக்கள்தான் சென்னைவாசிகள்.  ஏய்யா, நான்தான் அட்ரஸும் கொடுத்திருக்கிறேன் இல்லையா, போய்ப் பார்த்துத் தொலைய வேண்டியதுதானே?  இத்தனைக்கும் அந்த அய்யர் என் வீட்டுக்கு அடியாட்களை அனுப்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த ஊர் கோயம்பத்தூர்தான்.  அதன் பிறகு கொங்கு மண்டலம்.  பிடிக்காத ஊர் நாகர்கோவில்.  ஆளுக்கு ஆள் கேஸ் போடுவார்கள்.  குயுக்தியான, தந்திரமான ஆட்கள்.   

எல்லா ஊரிலும் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான் தான்.  ஆனால் சென்னையில்தான் மோசடிப் பேர்வழி என்று தனியாக ஒரு பிரிவு இல்லாமல் சகல மனிதர்களும் மோசடியைத் தங்கள் குணமாகக் கொண்டிருக்கிறார்கள்.  எந்த ஊரிலாவது மாதம் அம்பதாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கும் வசதியான அபார்ட்மெண்ட்வாசிகள் குறவர்களைக் கூப்பிட்டுத் தங்கள் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் பூனைகளைப் பிடித்துத் தின்னக் கொடுப்பார்களா?  மாபாவிகள் இந்த சென்னைவாசிகள். 

சரி, சென்னையைப் பற்றி ஒரு நல்ல விஷயம் இருக்கிறது, சொல்லவா?  அது இந்த ஊரில் உள்ள போலீஸ்காரர்கள். வண்டியைத் தாறுமாறாக ஓட்டிக் கொண்டு போகிறான் ஒருத்தன்.  பிடித்தால் அவன் செக்ரடேரியட்டில் செக்ரடரியின் டிரைவராக இருப்பான்.  இன்னொருத்தன், இரவில் குடித்து விட்டு ஸ்கூட்டரில் போகிறான்.  பிடித்தால் சேல்ஸ் டாக்ஸ் கமிஷனரின் டிரைவராக இருப்பான்.  இப்படி எவனைப் பிடித்துக் கேட்டாலும் அவன் விஐபியாகவோ விஐபியின் வலது கரமாகவோ இருப்பான்.  அதனால் சென்னை போலீஸ்கார்ர்கள் பல் இல்லாத பாம்பைப் போன்றவர்கள்.  சீருடைதான் இருக்குமே ஒழிய அவர்களால் எதுவுமே செய்ய முடியாது.  காலை நேரத்தில் ஓட்டலில் வந்து ஓசியில் சாப்பிட்டு விட்டு ஓட்டல் மேனேஜரிடம் இளித்துக் கொண்டிருக்கும் ட்ராஃபிக் போலீஸ்காரர்களைப் பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கும்.