நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன். ஜாதி மனித சமூகத்தின் அவலங்களில் ஒன்று. ஆனால் ஜாதிப் பிரிவினை ஹிந்து மதத்தில் மட்டுமே இருந்தது இல்லை. எல்லா தேசங்களிலும் இனங்களிலும் ஜாதி என்பது வெவ்வேறு பெயர்களில் இருந்துள்ளது. குறிப்பாக, ஆஃப்ரிக்க கண்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஜாதி இருந்தது. அதை அவர்கள் இனம் என்று அழைத்தார்கள். ஒவ்வொரு இனத்துக்கும் தனி மொழி இருந்தது. அதாவது, ஐயாயிரம் பேரை மட்டுமே கொண்ட ஒரு இனத்துக்கென்று ஒரு தனி மொழி. அவர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டார்கள்.
ஆயிரம் ஆண்டு நடந்த புனிதப் போர் பற்றி நமக்குத் தெரியும். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நடந்தது. எனவே ஜாதி என்பது ஹிந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல.
எல்லா மதத்திலுமே பிரிவுகள் உண்டு என்பதையும் நாம் அறிவோம்.
நான் மதத்துக்கும் அப்பாற்பட்டவன். ஆனால் மதங்களிலேயே ஓரளவு சகிப்புத்தன்மை கொண்ட மதம் ஹிந்து மதம் என்பது என் கருத்து. இங்கே கடவுளே இல்லை என்று மறுப்பவருக்கும் மதத்திலும் சமூகத்திலும் இடம் உண்டு. கடவுளின் சிலையை செருப்பால் அடித்தவரை தந்தை என்று சொன்னவர்கள் ஹிந்துக்கள். அப்படிச் சொன்னவர்கள் அத்தனை பேருமே நாத்திகவாதிகள் இல்லை. ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோரும் கடவுளை வணங்கியவர்கள்தான். தத்துவத்திலும் கடவுளை மறுத்த சார்வாகரை ரிஷி எனவே ஏற்றவர்கள் ஹிந்துக்கள்.
இறை சக்திக்கு மதம் கிடையாது. அந்த இறை சக்தியோடு நேரடி உறவில் இருப்பவன் நான்.
இதை நம்புபவர்களுக்காக மட்டுமே கீழ்க்கண்ட பதிவை நான் பகிர்ந்து கொள்கிறேன். இதில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தையும் பல்வேறு சமயங்களில் பல்வேறு விதமாக நானும் எழுதியிருக்கிறேன். எக்ஸைல் நாவல் முழுக்கவுமே இவ்விதமான கருத்துக்கள் விரவிக் கிடக்கும்.
ஆனாலும் இறை வழிபாட்டில் நான் நேரத்தைச் செலவிடுவது இல்லை. நான் கர்ம யோகி. எனக்குக் கிடைக்கும் நேரத்தை எழுத்துக்காக மட்டுமே செலவிட விருப்பம் உள்ளவன் நான். இல்லாவிட்டால் பயணம். பயணம் செய்வதை நான் ஒரு ஆன்மீக அனுபவமாகப் பார்க்கிறேன். ஏனென்றால், இந்த பூமியில் உள்ள ஒவ்வொன்றும் இறை சக்தியின் வெளிப்பாடு என்று கருதுகிறேன். விதவிதமான கடல்கள், நதிகள், விதவிதமான மலைகள், குன்றுகள், விதவிதமான மனிதர்கள் எல்லாவற்றையும் காண்பது எனக்கு இறை வழிபாடு போல் தோன்றுகிறது. மற்றபடி என் நேரம் முழுவதும் என் எழுத்துக்கு மட்டும்தான். என்னை கவனித்துக் கொள்ள வேண்டியது இறை சக்தியின் வேலை. அது பற்றி ஒருசிறிதும் கவலைப்பட அவசியம் எனக்கு இல்லை. பார்ப்புகளை அதன் தாய்ப் பறவை பாதுகாக்கும்…
இந்து வெறுப்பை எதிர்கொள்வது | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)