படப்பிடிப்பு வேலையெல்லாம் முடிந்து எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லாமல் ஜாலியாக பாங்காக் நகரில் இரவுக் கொண்டாட்டங்களுக்குப் பேர் போன காவோ ஸான் சாலையில் நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில் ஒரு பப்பில் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் நான் சீலே, அயெந்தே, விக்தர் ஹாரா என்று ஆரம்பித்த போது, ”இந்தக் கொண்டாட்டமான இரவில் அம்மாதிரி சீரியஸ் விஷயங்களெல்லாம் எதற்கு, நம் நாட்டிலும் அப்படியெல்லாம் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் சாரு” என்று சீனி சொன்னதை நான் மறக்கவே மாட்டேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால், சீலேயில் நடந்தது போல் இங்கே இந்தியாவில் நடக்க வாய்ப்பே இல்லை. அதன் காரணமாகவே சீலேயில் உருவான தலைவர்களையும், கலைஞர்களையும் போல் இங்கே உருவாக மாட்டார்கள். உதாரணமாக, பாப்லோ நெரூதா சீலேயின் புகழ் பெற்ற கவிஞர். ஆனால் அவர் உலகின் பல நாடுகளில் தூதராக இருந்திருக்கிறார். அவருடைய மூன்று வீடுகளும் ஏதோ சுல்தானின் அரண்மனை போலவும், அருங்காட்சியகங்களைப் போலவும் காட்சியளிக்கின்றன. உலகில் உள்ள ஏராளமான கலைப் பொருட்களை சேகரித்து வைத்துள்ளார் நெரூதா. அதுதான் அவருடைய பொழுதுபோக்கு. பாப்லோ பிக்காஸோ தன் ஓவியம் ஒன்றை நெரூதாவுக்குப் பரிசளித்திருக்கிறார். அதுவும் அந்த வீட்டில் இருக்கிறது. ஒரு அறையில் ஒரு புராதனமான ரயில் எஞ்ஜின் நின்று கொண்டிருக்கிறது!
இப்படியெல்லாம் இலக்கியவாதிகளைப் பெரிதளவில் கொண்டாடும் வங்காளம், கர்னாடகம், கேரளம் போன்ற இடங்களில் கூட நடப்பதற்கு சாத்தியம் இல்லை.
இங்கே தமிழ்நாட்டில் ஒரு மூவாயிரம் பேர் இலக்கிய வாசகர்கள் என்று சொல்லலாம். எட்டரை கோடியில் மூவாயிரம். சீலேயின் மக்கள் தொகை இரண்டு கோடிக்கும் கீழே. ஆனால் அங்கே இலக்கியம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலே இருக்கும். ஏனென்றால், யாரைக் கேட்டாலும் நவீன இலக்கியவாதிகளைப் படித்திருக்கிறேன் என்கிறார்கள். இப்படிப்பட்ட இலக்கிய வாசிப்பு அங்கே ஒரு அசாதாரணமான விஷயமாகவும் கருதப்படவில்லை. இங்கே எப்படி ஜனரஞ்சக எழுத்தைப் படிக்கிறார்களோ அப்படி அங்கே இலக்கிய நூல்களைப் படிக்கிறார்கள். இங்கே கல்கி பிரபலம் என்றால் அங்கே அதே அளவுக்கு ரொபர்த்தோ பொலான்யோ பிரபலமாக இருக்கிறார்.
அதனால்தான் நான் திரும்பத் திரும்ப சீலேவுக்கும் எனக்குமான உறவு பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
இன்று ஒரு தமிழ் எழுத்தாளர் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். மிக உயர்தரமான முறையில் படமாக்கப்பட்டிருந்தது. அருமையான ஒளிப்பதிவு. எனக்குப் பிடித்த எழுத்தாளரும் கூட. படத்தில் ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அந்தப் படம் எனக்கு ஒரு அசூயை உணர்வையே ஏற்படுத்தியது. அதற்கு அந்தப் படத்தை இயக்கியவரோ, அந்தப் படத்தின் குழுவோ யாருமே காரணம் இல்லை. நான் அந்தப் படம் உருவான கலாச்சாரத்துக்கு வெளியே இருக்கிறேன். அவ்வளவுதான். அதாவது, என்னுடைய அழகியல் வேறு. அந்தப் படத்தை உருவாக்கியவர்களின் அழகியல் வேறு. அதே சமயம் வான் கோ பற்றிய ஒரு ஆவணப்படம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த்து. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அந்தப் படத்தை ரசித்துப் பார்க்க முடிந்தது.
அடுத்து இன்னொரு படம். The Invented Biography (2018). இன்று லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஒரு mythological இடத்தைப் பெற்று விட்ட ரொபர்த்தோ பொலான்யோ (பொலாஞோ என்றும் சொல்லலாம்) பற்றிய ஆவணப்படம். இரண்டொரு நிமிடங்களிலேயே அந்தப் படம் என்னை உள்ளிழுத்துக் கொண்டதை நான் உணர்ந்தேன்.
இன்னொரு ஆவணப்படம் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி டேப்ஸ் (1987). நான்கு மணி நேரம் ஓடக் கூடிய ஒரு நீண்ட ஆவணப்படம். இந்தப் படத்தை என் எழுத்தின் மீது ஆர்வமுள்ள அத்தனை பேரும் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆவணப்படங்கள் பற்றிய ஒரு இலக்கணம் என்னவென்றால், ஆவணப்படத்துக்கு இலக்கணமே இல்லை என்பதுதான். ஆகவே, ஒரு ஆவணப்படம் என்பது முக்கால் மணி நேரமும் இருக்கலாம், ஒன்பது மணி நேரமும் இருக்கலாம். ஏனென்றால், Ulrike Ottinger இயக்கிய Taiga (1992) எட்டரை மணி நேரம் ஓடக் கூடியது. இன்னொரு படம், Hitler: A Film from Germany. Hans-Jürgen Syberberg இயக்கியது. எட்டு மணி நேரம் ஓடக் கூடிய இந்தப் படத்தை நான் 1978இல் – அந்த ஆண்டுதான் அந்தப் படம் வெளிவந்திருந்தது; அந்த ஆண்டு அக்டோபரில்தான் நான் முதல் முதலாக தில்லி சென்று சிவில் சப்ளைஸ் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் – தில்லி மாக்ஸ் ம்யுல்லர் பவனில் பார்த்தேன். காலை, மாலை என்று ஒரு டிசம்பர் வார இறுதியின் இரண்டு தினங்களிலும் அதைப் பார்த்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்தக் காலகட்டம் மிகவும் அற்புதமாக என் மனதில் பதிந்திருக்கிறது. எத்தனை போத்தல் வேண்டுமானாலும் பியரும் எத்தனை கிளாஸ் வேண்டுமானாலும் விஸ்கியும் கொடுத்து உபசரித்து அந்தப் படத்தைக் காண்பித்தது மாக்ஸ் ம்யுல்லர் பவன். (இப்போதெல்லாம் ஒரு சமோஸாதான் கொடுக்கிறார்கள்!)
ஹிட்லர் என்ற இந்தப் படத்தைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன். தைகாவின் விலை காரணமாக (25000 ரூ.) அதை நான் பார்க்க முடியவில்லை. இப்போது தைகாவை நண்பர் மகேந்திரன் அனுப்பி வைத்திருப்பதால் பார்த்து விடுவேன். அவருக்கு எப்படிக் கிடைத்தது என்று தெரியவில்லை.
ஆக, நான் சொல்ல வந்த்து இரண்டு விஷயங்கள். ஒன்று, என்னால் நம்முடைய சூழலில் எடுக்கப்படும் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப் படங்களோடு ஒன்ற முடியவில்லை. அது மட்டுமல்லாமல் அவை எனக்கு அசூயை உணர்வையும் ஏற்படுத்துகின்றன.
இரண்டு, ஆவணப் படங்களுக்கு இத்தனை மணி நேரம் என்ற கணக்கு எதுவும் இல்லை. ஆனாலும் அஞ்ச வேண்டாம். டிசம்பர் 18 அன்று கோவையில் வெளியிடப்படும் த அவ்ட்ஸைடர் படம் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். அது அந்தப் படத்தின் சுருக்கப்பட்ட வடிவம். முழு வடிவம், நான்கு மணி நேரம் ஓடக் கூடியதாக இருக்கும்.