கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள்! (தகவல் தொடர்பு கட்டுரையின் தொடர்ச்சி)

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் வாட்ஸப் மெஸேஜ் கிடைக்கப் பெற்றேன்.  மன்னித்து விடும்படி எழுதியிருந்தீர்கள்.  மன்னிக்கும் அளவு பெரிய தவறு அல்ல உங்களுடையது.  நான் ஃபோன் செய்தேன்.  உங்களால் எடுக்க முடியாத நிலை.  பிறகு பதிலுக்கு ஃபோன் செய்ய மறந்து போனீர்கள்.  இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?  உண்மையில் மன்னிப்பு என்பதன் அர்த்தம் “இனிமேல் இப்படி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வேன்” என்பதுதானே?  ஆனால் அதற்கான தேவையே இனிமேல் எழாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்.  நான் உங்களுக்கு ஃபோன் செய்தால்தானே உங்களுக்கு அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்?  நான் இனிமேல் உங்களை ஃபோனில் தொடர்பு கொள்ளாமலே போனால்?  நாம் என்ன தத்துவ விவாதமா செய்யப் போகிறோம்?  இன்றைய தினம் நான் தத்துவம் குறித்து விவாதிக்க – எனக்குத் தெரிந்த நண்பர்கள் மட்டத்தில் அபிலாஷ் ஒருவர்தான் இருக்கிறார்.  ஆனால் அவரை நான் ஃபோனில் ஒன்றிரண்டு முறைதான் அழைத்திருக்கிறேன்.  அதுவும் ஒரு நிமிடத்துக்கு மேல் பேசியதில்லை.  எல்லாம் லௌகீக காரியம்தான்.  இலக்கியமோ தத்துவமோ பேசியதே இல்லை.  அவரிடம் பேசியதை விட உங்களோடு பேசியது அதிகம்.  எதுவும் இலக்கியம் அல்ல.  லௌகீக சமாச்சாரம். 

நீங்கள் மிகவும் சிநேகபூர்வமானவர் என்பதை உங்கள் முகத்திலிருந்தே அறிவேன்.  நண்பர்களும் அப்படியே சொன்னார்கள்.  ஆனால் தகவல் தொடர்பில் நமக்குள் இப்படி அடிக்கடி நேர்ந்து விடுகிறது.  பரவாயில்லை.  இனிமேல் என்னிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வராது.  அதற்கு அவசியமும் இல்லை. 

நீங்கள்தான் நான் பார்த்த்திலேயே மிகவும் unfriendlyயான ஆள் என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.  டார்ச்சர் கோவிந்தனே பலமுறை சொல்லியிருக்கிறார்.  இப்போது டார்ச்சர் கோவிந்தனும் என்னோடு பேசுவதில்லை.  பேசுகிறார். என்ன சாரு, சௌக்கியமா என்பதோடு சரி.  எல்லோருக்கும் அவரவர் நியாயங்கள் இருக்கத்தான் செய்யும்.  அந்த நியாயங்களை மதிக்கிறேன்.

நான் சினேகபூர்வமான ஆள் இல்லை என்பது சரியாகத்தான் இருக்க வேண்டும்.  காரணம், நான் என்பது லௌகீகமான நான் மட்டும் இல்லையே?  நான் என்பது என் எழுத்து.  அதுதான் முக்கியம்.  என் எழுத்தைக் கொண்டாடுபவர் மட்டுமே என்னோடு நட்பு பாராட்ட முடியும்.  ஆரம்பத்தில் வினித்தை நான் எந்த அளவு திட்டி எழுதியிருக்கிறேன்?  கலங்கவில்லையே அவர்.  இதுவே ஒரு பெண்ணை அப்படித் திட்டி எழுதியிருந்தால் நடந்திருப்பதே வேறு.  தற்கொலை செய்து கொண்டு சாருதான் தற்கொலைக்குக் காரணம் என்று லெட்டர் எழுதி வைத்திருப்பார்.  ஏனென்றால், நான் தனிப்பட்ட முறையில் திட்டவில்லை.  பொதுவெளியில் திட்டி எழுதியிருந்தேன். 

ஏன் வினித் அதைப் பொறுத்துக் கொண்டார் என்றால், அவர் என் எழுத்தைக் கொண்டாடுகிறார்.  இந்த உலகிலேயே சாருவை விட சிறந்த எழுத்தாளன் வேறு எவரும் இல்லை என நம்புகிறார்.  இது ஒரு அபத்தமான கருத்து.  ஆனால் ஒரு விதத்தில் அது உண்மை.  4000 ஆண்டு மானுட சிந்தனை வரலாற்றில் எப்படி கார்ல் மார்க்ஸ் என்ற ஒரே ஆள் தத்துவத்தின் போக்கையே மாற்றினாரோ – அதேபோல் என் எழுத்து அது வெளிப்படும் மொழியின் சாத்தியப்பாடுகளையும், புனைவின் மையச் சரட்டையும் முற்றாக மாற்றியிருக்கிறது.  தத்துவத்தில் நடந்ததை புனைவிலக்கியத்தில் சாத்தியமாக்கியது என் எழுத்து.  கால வெளியில் என் எழுத்துக்கு முன் அப்படி நடந்தது இல்லை.  இது பற்றி அபிலாஷ், காயத்ரி, அராத்து, கார்ல் மார்க்ஸ் போன்ற நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள்.  இதே அர்த்தத்தில் எழுதினார்களா என்று இப்போது எனக்கு ஞாபகம் இல்லை.  ஆனால் அபிலாஷ், அராத்து இருவரும் எழுதியது ஞாபகம் இருக்கிறது. 

இந்த இணைப்பில் உள்ளது காயத்ரி எழுதியது:

என்ன செய்தது என் புனைவெழுத்து என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் மேலே சொன்ன நால்வரும் என்னைப் பற்றி எழுதியிருப்பதை வாசிக்க வேண்டும்.  அவை என்னுடைய தளத்தில் உள்ளன.

இதெல்லாம் போக, நான் தகவல் தொடர்பு என்ற விஷயத்துக்கே மறுபடியும் வருகிறேன்.  சென்ற முறையும் உங்களோடு இப்படித்தான் ஆயிற்று.  அது பற்றி என் தளத்திலேயே எழுதினேன்.  என்னை ஃபோனில் அழைத்து ஒரு உதவி கேட்டீர்கள்.  அது நான் செய்யக் கூடிய உதவி அல்ல.  வேறொரு முக்கியஸ்தரை அணுக வேண்டும்.  அணுகினேன்.  ஏனென்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா என்று பாருங்கள். 

ஒரு பெண் என்னை சந்தித்தார்.  25 வயது இருக்கும்.  ஏதோ நேர்காணல்.  பிறகு ஒன்றிரண்டு உரையாடல்கள்.  அந்த நேர்காணல் சம்பந்தமாக.  ஒருநாள் அவரிடமிருந்து இரவு பன்னிரண்டு மணிக்கு எனக்கு ஃபோன்.  நான் அப்போது லெபனானில் இருந்தேன்.  எனக்கு என் பாய் ஃப்ரெண்டோடு ப்ரேக் அப் ஆகி ஒரு பெண்ணோடு தங்கியிருந்தேன்.  (அந்தப் பெண் ஒரு பிரபலம்).  மூன்று நாளாகத் தங்கியிருக்கிறேன்.  மூன்று நாளாகவே அவள் எனக்கு இரவில் பாலியல் தொல்லை கொடுக்கிறாள்.  இன்று கொஞ்சம் அத்துமீறி விட்டது.  உங்கள் உதவி தேவை.  ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் நாளை காலையே ஒரு வீடு பிடித்துத் தனியாகப் போய் விடுவேன்.  என் உயிரைக் கொடுத்தாவது உங்களுக்கு ஒரு லட்சத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவேன்.

இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஐந்து நிமிடத்தில் அந்தப் பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாயை அனுப்பினேன்.

அந்தப் பெண் மிரண்டு போய் விட்டார்.  இந்த உலகில் ஒருத்தர் கூட இப்படிச் செய்ய மாட்டார்கள் என்றார்.  ஏனென்றால், அந்தப் பெண் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  திருப்பிக் கொடுப்பாரா என்றும் தெரியாது.

ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் சத்தியம் என்று என் உள்ளுணர்வு சொன்னது. அதை விட முக்கியம், அந்தப் பெண் என் மீது கொண்ட நம்பிக்கை. 

ஆறு மாதத்திலோ ஒரு ஆண்டிலோ – ஞாபகம் இல்லை – அந்தப் பெண் அந்த ஒரு லட்சத்தையும் ஒரு பைசா பாக்கியில்லாமல் பத்தாயிரம் பத்தாயிரமாகத் திருப்பிக் கொடுத்தார்.  இப்போது அவருடன் எனக்குத் தொடர்பு இல்லை.  நான்தான் சிநேகபூர்வமான ஆள் இல்லையே?  ஒருநாள் என் எழுத்தைப் படித்திருக்கிறாயே பெண்ணே என்று கேட்டேன்.  இல்லை என்றார்.  ஆறு மாதம் கெடு கொடுத்தேன்.  படிக்கவில்லை.  இன்னொரு ஆறு மாதம் கெடு.  படிக்கவில்லை.  நட்பைத் துண்டித்து விட்டேன். 

என்னை வாசிக்காத யாரோடும் நான் பழக மாட்டேன்.

யாரென்றே தெரியாத ஒரு பெண்ணுக்கு எப்படி நான் ஒரு லட்சத்தைத் தூக்கிக் கொடுத்தேன்?

பரிவும் கருணையுணர்வும் மட்டுமே காரணம்.  ஒரு பெண்ணின் மீது கருணை கொண்டு திருமணம் செய்து கொண்டேன்.  அவள்தான் அவந்திகா. 

கருணையினால்தான் பத்து பூனைகளையும் ஊரெல்லாம் பிச்சையெடுத்து வளர்க்கிறேன்.  மாதம் 60000 ரூ. ஆகிறது.  கருணை மட்டுமே காரணம். 

அதே கருணையினால்தான் உங்களுக்காகவும் வேலை தேடினேன்.  அதற்காக அந்த முக்கியஸ்தரிடம் பேசினேன்.  அவர் உங்களுடைய பயோடேட்டா கேட்டார்.  கொடுத்தீர்கள்.  அதற்குப் பிறகு உங்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.  ஒரு மாதமாக.  பிறகுதான் நான் உங்களைத் தொலைபேசியில் அழைத்தேன்.  நீங்கள் எடுக்கவில்லை.  எடுக்காதது தவறே இல்லை.  நாம் எத்தனையோ வேலைகளில் இருந்திருக்கலாம். பிறகாவது அழைப்போம்தானே?

அந்தச் சம்பவம் பற்றி நான் எழுதிய குறிப்பு இது:

அப்போதும் கூட நான் ஏன் உங்களை அழைத்தேன் என்றால், அந்த வேலை விஷயம் என்ன ஆயிற்று என்று கேட்பதற்காகத்தான். 

உங்களுக்குக் கமலிடமிருந்து அழைப்பு வருகிறது.  உங்களால் எடுக்க முடியவில்லை.  சிக்னல் இல்லை.  ஒரு நாள் கழித்தாவது பதிலுக்கு அவரை அழைத்து விடுவீர்கள்தானே?  சரி, நீங்கள் ஒரு வனத்தில் இருந்தீர்கள்.  அதனால்தான் என் அழைப்பை எடுத்துப் பேச முடியவில்லை.  ஒரு வாரம் வனத்தில் இருந்தீர்கள்.  வெளியே வந்த்தும் மறந்து போனீர்கள்.  கமலின் ஃபோன் என்றால் மறக்குமா என்பதுதான் கேள்வி.  ஒரு வாரம் என்ன, ஒரு மாதம் வனத்தில் இருந்தாலும் வெளியே வந்த பிறகு அடித்துப் பிடித்துக் கொண்டு கமலை அழைத்து விடுவீர்கள்தானே?

நான் கமலை விட பெரிய ஆள் நண்பரே… அதைச் சொல்வதற்காகத்தான் இத்தனை நீளமாக எழுதுகிறேன்.

கேளிக்கை உலகில் இன்று சூப்பர் ஸ்டாராக மின்னுபவர்கள் எல்லாம் நாளை அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவார்கள்.  இன்று எம்.கே.டி.யை எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்கள்?  பத்து ரஜினி சேர்ந்தாலும் எட்ட முடியாத உயரத்தில் வாழ்ந்தவர் எம்.கே.டி.  என்ன ஆயிற்று?  ஆனால் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கபிலனை மறக்குமா தமிழ்ச் சமூகம்? 

தமிழ்ச் சூழலில் – என் ஆயுள் காலத்தில் – நான் பெரிதும் போற்றும்படியான இரண்டு சம்பவங்கள்.  ஒன்று, அகிலனுக்கு ஞான பீடம் கிடைத்த போது அகிலன் ஒரு மலக்கிடங்கு என்று சுந்தர ராமசாமி எழுதியது.  இலக்கிய ரீதியாக சு.ரா. என்னை ஈர்க்கவில்லை என்றாலும், என் இலக்கிய வாழ்வில் என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க – நான் ஓர் அக்கினிப் பிழம்பாக வாழ அந்த வாக்கியமே என்னை வழி நடத்துகிறது.

இன்னொரு இலக்கியவாதி.  அவருமே சுந்தர ராமசாமி போலவே என்னை ஈர்க்காதவர்.  சொல்லப் போனால் அவர் எழுத்து மீது எனக்கு ஒரு ஒவ்வாமையே இருக்கிறது.  பிடிக்கவே பிடிக்காது.  அவரைச் சந்திக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்னால் கமல் ஒரு மூத்த கவிஞரிடம் சொல்லியிருக்கிறார்.  கவிஞர் எழுத்தாளரிடம் தகவல் சொல்கிறார்.  அதற்கு எழுத்தாளர் கண்ணிமைக்கும் நேரத்தில் சொன்ன பதில்: கமலை கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள். 

ஆள் இன்னார் என்று தெரிந்திருக்கும் உங்களுக்கு.  ஆம்.  கோணங்கி. 

இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும்.  இப்படி ஒன்று நடந்தால், அதாவது, ஃபோனில் அழைத்து அதற்கு ஒரு போதும் பதில் வராமல் இருந்தால் – மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?  ஒன்று, எதுவுமே நடக்காதது போல் உங்களோடு தொடர்ந்து பழகுவார்கள்.  (ஜெயமோகனின் தளபதி தயவும் நல்லதுதானே?)  இன்னொரு சாரார், கோபித்துக் கொண்டு தொடர்பைத் துண்டித்து விடுவார்கள்.  ஆனால் தமிழ்நாட்டிலேயே இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் ஒரே ஆள் நான்தான். அதனால்தான் காமன்மேன் என்னை ஸைக்கோ என்று திட்டுகிறான். 

மூன்றாவதாக ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள்.  ஃபோன் செய்து எடுக்கவில்லையானால் கடும் கோபத்துடன் மெஸேஜ் அனுப்புவார்கள்.  நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.  நீங்கள் மூன்று நாள் கழித்துக் கூட என்னோடு பேசலாம்.  ஆனால் முழுமையாக மறந்து விட்டால்தான் பிரச்சினை.  அதிலும் கூட ஒரு விதிவிலக்கு இருக்கிறது.  நானும் சீனியும் தினமும் பேசுவோம்.  ஒரு பேச்சுக்கு, நேற்று நான் அழைத்து, அவர் எடுக்கவில்லை.  இன்று மீண்டும் அழைத்தேன்.  பேசினார்.  நேற்று அழைத்தேனே என்கிறேன்.  ஆமா சாரு, பிறகு கூப்பிடணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்.

இது வேறு.  தினமும் பேசிக் கொள்பவர்களிடையேதான் இந்த மறந்து விட்டேன் நடக்கும்.  செல்லுபடியும் ஆகும்.  ரஜினியோ கமலோ அழைத்து, எடுக்க முடியாமல் போனால், மறக்குமா என்பதே கேள்வி.   

மற்றபடி, இருவேறு தத்துவப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பது சாத்தியமே இல்லை என்பதை நம்முடைய இந்த இரண்டாண்டு நட்பு மீண்டும் நிரூபிக்கிறது.  

உங்கள் வாழ்வு வளமாக இருக்க என் ஆசீர்வாதமும் அன்பும் எப்போதும் உண்டு.

சாரு    

பின்குறிப்பு: ஏ.ஆர். ரஹ்மான் எத்தனை பிஸியானவர் என்பது ஊருக்கே தெரியும்.  உங்களுக்கும் தெரியும்.  அவரை நான் தொடர்பு கொண்டால் ஒரு மணி நேரத்துக்குள் பதில் அனுப்பி விடுகிறார்.  அவருடைய மகளின் திருமண தினத்தின் போது கூட இந்த ஒருமணி நேரம் தப்பவில்லை என்பதைப் பார்த்து நான் இன்னமும் அதிசயித்துக் கொண்டிருக்கிறேன்.