வள்ளலாரோடு ஒரு சம்பவம்

வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகும் போது கத்தியை எடுத்து விடுகிறார் என்று பலமுறை எழுதியிருக்கிறேன் அல்லவா?  அது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.  அவர் ஒரு இனிமையான மனிதர்.  இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை.  யாருக்கும் எந்தத் தீங்கும் நினையாதவர்.  மனதில் கூட.  அவர் எனக்கு நண்பரானார்.  அவர் சில மாதங்களுக்கு முன்புஎன்னிடம் ஒரு உதவி கேட்டார். 

அதை விவரிப்பதற்கு முன்பாக இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  அவர் அப்போது இந்தியாவின் ஐந்து பெரிய பணக்காரர்களில் ஒருவர்.  எக்ஸ் என்று வைத்துக் கொள்வோம்.  (இப்போது பத்து பணக்காரர்களில் ஒருவராகக் கீழிறங்கி இருக்கிறார்.) எக்ஸ் மீது ஒரு பெண் பழி வந்தது.  அது பற்றிய ஒரு கவர் ஸ்டோரி ஒரு அகில இந்திய வார இதழில் வர இருந்த விஷயம் எக்ஸின் செவிகளை எட்டியது.  எக்ஸின் நண்பர் ஒய்.  ஒய்யின் அண்ணன் எனக்கு வாடா போடா நண்பர்.  அண்ணன் என் உதவியை நாடினார்.  நீ மனது வைத்தால் அந்த ஸ்டோரியை ‘கில்’ பண்ணி விடலாம்.  எல்லாமே ஒருசில மணி நேரத்தில் நடக்க வேண்டும்.  அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் எனக்கு வேண்டியவர்.  அந்தப் பெண் விவகாரம் ஒரு வீண் பழி என்று உறுதியாயிற்று.  ஒரு பெண் வீணாக அவர் மீது பழி சுமத்துகிறார்.  பத்திரிகை ஆசிரியரிடம் பேசினேன்.  கட்டுரை குப்பைக்குப் போயிற்று. 

அந்த நேரத்தில் என் வீட்டில் அரிசி கூட இல்லாமல் கடும் வறுமையில் இருந்த நேரம்.  அந்தக் கோடீஸ்வரர் என் இணைய தளத்துக்கு ஒரு விளம்பரம் கொடுத்தால் மாதாமாதம் அரிசி வாங்கிக் கொள்ளலாம் என்று அண்ணனிடம் சொன்னேன்.  அவர் தம்பியிடம் பேசினார்.  தம்பி கை விரித்து விட்டார்.  இதற்கெல்லாம் போய் அவரை நாட முடியாது என்று சொன்னார்.  என் வறுமை தொடர்ந்தது.  எந்த விஷயமுமே அது ‘லைவ்’ ஆக இருக்கும்போதுதான் மதிப்பு.  முடிந்து போன விஷயம் செல்லாக் காசு.  கவர் ஸ்டோரியை ‘கில்’ பண்ணுகிறேன், அம்பது லட்சம் வேணும் என்று கேட்டிருந்தால் கிடைத்திருக்கும்.  விஷயம் முடிந்த பிறகு பத்தாயிரம் ரூபாய் விளம்பரம் கிடைக்கவில்லை. 

கதை இனிமேல்தான் ஆரம்பிக்கிறது.  பத்திரிகை ஆசிரியர் அதற்குப் பின் பத்தாண்டுகள் என்னை அவருடைய அடிமையாக ஆக்கி விட்டார்.  இரவு பதினோரு மணிக்கு போன் வரும்.  வரப் போகும் தீபாவளி மலரில் எண்பதுகளின் தமிழ் சினிமா பற்றி ஒரு கட்டுரை வேண்டும்.  நாளை மாலைக்குள்.  அது மட்டும் இல்லை.  லௌகீகமான உதவியும் செய்ய வேண்டும்.  என் அக்காள் மகனுக்கு உங்கள் நண்பரிடம் சொல்லி ஒரு வேலை வாங்கித் தாருங்கள்.  பத்தாண்டுகள் அவருக்கு இப்படியான  கொத்தடிமையாக இருந்தேன்.  பிறகு அவரே என் நண்பரிடம் வேலையில் சேர்ந்த பிறகு தொல்லை தீர்ந்தது. 

இப்போது முதல் பத்தியில் சொன்ன வள்ளலார் நண்பருக்கு வாருங்கள்.  வள்ளலார் கேட்ட உதவி, ஒரு வேலை.  இதற்காக என் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.  அவரோடு நான் பேசி மூன்று ஆண்டுகள் ஆகிறது.  அவர் தன் நிறுவனத்தில் வேலை தருவதாகச் சொன்னார்.  அதற்காக வள்ளலாரின் பயோடேட்டாவை நேரில் கொண்டு வந்து தரச் சொன்னார்.  வள்ளலாரிடம் சொன்னேன்.

அதற்குப் பிறகு வள்ளலார் என்ன செய்தார், என் நண்பரைப் போய்ப் பார்த்து பயோடேட்டாவைக் கொடுத்தாரா, வேலை கிடைத்ததா, இல்லையா – எந்த விவரமும் எனக்குத் தெரியாது.  ஒரு மாதம் ஆயிற்று.  இந்த உலகிலேயே அதி பயங்கர கேணையன் ஒருவர் உண்டு என்றால் அது நான்தான்.  விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காக நானே வள்ளலாருக்கு போன் போட்டேன்.  சார், நான் ஒரு சங்கீதக் கச்சேரியில் இருக்கிறேன், இரவு பேசுகிறேன் என்றார் வள்ளலார்.  பதினைந்து இரவுகள் கடந்து விட்டன.  இன்னமும் கச்சேரி முடியாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.  வள்ளலாரிடமிருந்து போன் வரவில்லை.  அவர் என் நண்பரின் நிறுவனத்துக்குப் போனாரா, வேலை கிடைத்ததா, ஒரு தகவலும் தெரியவில்லை.  இதை அவர் படிப்பாரா என்றும் தெரியவில்லை.

இப்போது நான் வேலை உதவி கேட்ட என் நண்பர் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்பியிருக்கிறார்.  விக்ரம் படம் வந்தவுடன் பழைய விக்ரத்தையும் புதிய விக்ரத்தையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வேண்டும், அவருடைய பத்திரிகைக்கு.  படம் வந்த அன்று மாலைக்குள் கட்டுரையக் கொடுத்து விடுங்கள். 

இன்னும் பத்து ஆண்டுகளுக்கு இந்த சேவையை அந்த நண்பருக்கு நான் செய்ய வேண்டும்.