இன்னும் ஐந்து ஆண்டுகளில் எனக்கு புக்கர் விருது கிடைக்கலாம். அதுவரை விடை பெறாமல் இருந்தால். கிடைக்காமலும் போகலாம். முன்னேயே சொன்னாயே என்று என்னைப் பிடிக்கக் கூடாது. இங்கே நான் சொல்லப் போகும் விஷயத்துக்கு புக்கர் முக்கியமல்ல. அது ஒரு உதாரணம். ஒரு தோது. புக்கரோ கிக்கரோ கிடைத்தால் எனக்குப் பாராட்டு விழா நடத்துவார்கள்தானே? அப்போது சிலர் மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்கள். கௌரவிக்கட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் முதல் வரிசையில் வினித் அமர்ந்திருப்பான். அவனிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தால்தான் பொன்னாடைக்கு அனுமதி. இல்லாவிட்டால் பொன்னாடையைக் கிழித்து அதைக் கொண்டு வந்தவரிடமே கொடுத்து விடுவேன்.
இந்த என் முடிவுக்குக் காரணம், என்னைப் பற்றிய ஆவணப் படம் உருவாகிக் கொண்டிருப்பதும் அதற்கு என் நெருங்கிய நண்பர்கள் சிலர் காண்பித்த எதிர்வினையும்தான். ஒரு சிறிய சலனத்தைக் கூட காணோம். அவர்கள்தான் புக்கர் பாராட்டு விழாவில் வந்து பொன்னாடை போர்த்துவார்கள். அதற்குத்தான் கட்டணம் ஐந்து லட்சம்.
இப்போது ஒரு கல்லூரி மாணவி தன் பெற்றோர் கொடுத்த பணத்தை சேமித்து வைத்து என்னைப் பற்றிய ஆவணப் படத்துக்காக பத்தாயிரம் ரூபாய் அனுப்புகிறாள். (நானும் திருப்பி அனுப்பி விட்டேன்). இன்னொரு நண்பர் மனைவி நகையை அடமானம் வைத்து ஐந்து லட்சம் அனுப்பினார். ஆனால் செல்வம் படைத்தோரிடமிருந்து ஒரு பைசா பெயரவில்லை. அது குறித்தும் எனக்குப் புகார் இல்லை. எல்லாமே அவரவர் விருப்பம். ஆனால் புக்கர் விருது கிடைத்தால் பொன்னாடையைக் கொண்டு வந்து நீட்டக் கூடாது. அதைக் கூட அவர்கள் விருப்பத்துக்கு விட்டு விட்டேன். போர்த்துங்கள். கட்டணம் ஐந்து லட்சம்.
ஆவணப் படம் இது வரை நான்கு நாட்களாக உருவாகிக் கொண்டு வருகிறது. அதற்கு எனக்கு ஒரு உதவி தேவை. முடிந்தால் பாருங்கள். கேமராவை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்துவதை விட வாங்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டோம். மூன்று மாதம் கழித்து விற்று விடலாம். நாலு லட்சத்துக்கு வாங்கினோம் எனில் மூணு லட்சத்துக்கு விற்று விடலாம்.
அல்லது, இந்த கேமரா அல்லது இதற்கு சமமான கேமரா தங்களிடம் இருந்தால் மூன்று மாதம் எனக்குக் கொடுத்து உதவலாம். அல்லது, மற்றொரு எளிய வழி, ஒரு நாலு லட்சத்தை எனக்கு அனுப்பி உதவலாம்.
Sony A7s3
அல்லது
Sony A7 Mark 4
Lens : 70 to 200, 50, 16 to 35
இதை யாரேனும் நண்பர்கள் வாங்கிக் கொடுக்க முடியுமா? மூணு மாதத்தில் திருப்பிக் கொடுத்து விடுவேன்.