த அவ்ட்ஸைடர் – 28

தினமுமே கிட்டத்தட்ட 2000இலிருந்து 3000 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்கிறேன்.  இதுவரை வாழ்நாளில் இந்த அளவுக்கு எழுதியதில்லை.  அதோடு, தினந்தோறும் இந்த அளவு தட்டச்சு செய்கிறேன்.  வலது கை தோள்பட்டை தேள் கொட்டினாற்போல் கடுக்கிறது.  இருந்தாலும் பேய் வேகத்தில் தட்டச்சு செய்து கொண்டேயிருக்கிறேன்.  ஒரு நிமிடத்தில் எத்தனை வார்த்தைகள் என்று தெரியவில்லை.  அதி தீவிர வேகமாகத்தான் இருக்க வேண்டும்.  இந்த 3000 வார்த்தைகளில் 2000 வார்த்தைகள் மட்டுமே ப்ளாகில் ஏறுகின்றன.  மீதி ஆயிரம் புத்தகமாக வரும்.

ஒரு நாளில் 100 வார்த்தைகளைக் கூட எழுதாதவர்கள் ஃபேஸ்புக்கில் ஏதேதோ பிளுக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  போகட்டும். 

சில நண்பர்கள் தொடர்ந்து எனக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடிதங்கள்:

நாங்கள் அடையாளமற்று இருக்கவே விரும்பினோம்.  இந்தப் புரட்சிகர செயலின் மூலம் நாங்கள் புகழடைய விரும்பவில்லை.  ஐரோப்பியர்களும் வட அமெரிக்கர்களும் ஓடும் விமானத்திலிருந்து பாராச்சூட்டுடன் குதிக்கிறார்கள்.  அவர்களுக்கு வாழ்க்கையில் சாகசம் தேவைப்படுகிறது.  சில சமயம் பாராச்சூட் விரியாமல் அவர்கள் இறந்தும் விடுகிறார்கள்.

இப்படித் தொடங்கும் இந்தப் பத்தியிலிருந்து இறுதி வரை நான் ஏன் ஆயுதம் எடுத்தேன் என்பதற்கான ஒவ்வொரு சொல்லும் மயிர்க்கூச்செரிய வைத்துவிட்டது சாரு.

இது வினித்தின் வாட்ஸப் செய்தி.

***

சாரு,

நீங்கள் புவெர்த்தோ ரீகோ என்று சொன்னதும், ஆஸ்கர் லிவிஸின் “லா விதா” புத்தகம்தான் ஞாபகம் வந்தது.

வறுமை, வன்முறை, கலவி என்று போய்கொண்டிருக்கிறது கதை.

மெதுவாகத்தான் படிக்கிறேன்.

நீங்கள் அந்தப் புத்தகத்தை வாங்க எத்தனை சிரமப்பட்டீர்கள் என்று எழுதியிருந்தீர்கள்.

நான் அந்தப் புத்தகத்தை internet archiveஇல்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்துல் ரஹ்மான்

புதுச்சேரி.

***

அன்பு சாரு.

அவுட்ஸைடர் வரலாறு படிப்பதைப் போல வறட்சியாக இல்லை. எந்தெவொரு கிரைம் திரில்லருக்கும் குறைவில்லாத சுவாரசியம், பரபரப்பினைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் அடியோட்டமாக வரும்  உரிமைக்கான போராட்டம், அதற்கான சமரசமற்ற லட்சிய நோக்கு என்பதாக இருக்கிறது. இதனை இவ்வளவு விரிவாக எங்களுக்குத் தர நீங்கள் எத்தனை புத்தகங்களை வாசிக்க வேண்டியிருக்கும் என்பது ஒரு கேள்வி. இதனால் நீங்கள் பதிலுக்கு என்ன பெறுகிறீர்கள் என்பது மற்றொரு கேள்வி.

குறிப்பிடப்பட வேண்டியது என்னவெனில் வரலாறு, சுவாரசியம், தரவுகள் அனைத்தையும் கலந்து கட்டி ஒரு காக்டெயிலினை எங்களுக்குத் தருவதுதான். அவுரங்ஸேபிற்கு இணையான நூலாகக் கூட இது உருப்பெறும் சாத்தியங்கள் உண்டு.

நீங்கள் எழுத்தாளர் எனக் கூறுவது தவறு. பன்முகம் கொண்ட கலைஞர் என்றுதான் கூற வேண்டும், சொல்ல முடியும்.

Hats off சாரு.

அன்புடன்,

ஸ்ரீதர் மணியன். தருமபுரி.

***

வினித், அப்துல் ரஹ்மான், ஸ்ரீதர் மணியன் மூவருக்கும் என் நன்றி.  எங்கோ ஓர் மூலையில் ஒருத்தர் படித்தாலும் போதும்.  என் உழைப்புக்கு அது அங்கீகாரம்.  அது மட்டும் அல்லாமல், இப்படிப்பட்ட விஷயங்கள்தான் என்னை மீண்டும் மீண்டும் லத்தீன் அமெரிக்கா நோக்கியே ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.  முக்கியமாக நேற்று எழுதியிருந்த ஆனாவின் வாக்குமூலத்தைப் படித்திருப்பீர்கள். அதில் ஒரு சிறிய பிழை.  அது ஆனா அல்ல.  ஆர்மாந்தோ.   

அது ஒரு மேனிஃபெஸ்டோ.  அந்த வாக்குமூலத்தைத்தான் நான் நாற்பத்தைந்து ஆண்டுகளாக சுமந்து கொண்டிருக்கிறேன்.  அதுதான் என்னைத் திரும்பத் திரும்ப லத்தீன் அமெரிக்க மண்ணை நோக்கியும் எழுத்தை நோக்கியும் அரசியலை நோக்கியும் கலாச்சாரத்தை நோக்கியும் இழுத்துக் கொண்டேயிருக்கிறது. 

என்னுடைய வாழ்க்கை குறித்த வாக்குமூலமும் ஆர்மாந்தோவின் வாக்குமூலம்தான்.  ஆர்மாந்தோவின் வாக்குமூலத்தில் புரட்சி என்று வருவதை இலக்கியம் அல்லது எழுத்து என்று மாற்றினால் அது என் வாக்குமூலமாக மாறி விடும். 

இங்கே தமிழ் மண்ணில் யாருக்கும் என்னைத் தெரியாது.  பாங்காக் விமான நிலையத்தில் நிற்கிறேன்.  சென்னைக்கு விமானம் ஏற வேண்டும்.  ஐநூறு பேர் இருப்பார்களா?  அதில் பத்து இருபது பேர் கன்னடம்.  மீதி அத்தனையும் தமிழ்.  சுற்றுலா சென்ற தமிழர்கள்.  யாருக்கும் என்னைத் தெரியாது.  குடிக்கவும் கும்மாளத்துக்கும் தாய்லாந்து சென்ற கும்பல்.  சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் விமானத்திலிருந்த ஒரு பெண்மணி வந்து அறிமுகம் செய்து கொண்டார்.  பிராமணப் பெண் என்று பார்த்ததுமே தெரிந்தது.  மற்றபடி டாஸ்மாக் கும்பலுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்?  இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூரில் அழகர் கோவில் உச்சியில் ஒரு பெண்மணி என் எழுத்தின் வாசகி என்றார்.  ஆனால் அப்துல் ரஹ்மானும் வினித்தும் ஸ்ரீராமும் பிராமணர்கள் அல்ல.  இளைஞர்கள்.  இப்படி ஒரு சிறுபான்மையினர்தான் என் எழுத்தின் வாசகர்கள்.  இவர்களுக்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

இப்போது ஆர்மாந்தோவின் வாக்குமூலத்துக்குச் செல்வோம்.

திரும்பவும் சொல்கிறேன்.  லத்தீன் அமெரிக்காவின் பட்டினியையும் இங்கே நடக்கும் சித்ரவதைகளையும் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.  அதனால்தான் நாங்கள் இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.  இது எங்கள் விருப்பம் அல்ல. மீண்டும் சொல்கிறேன்.  இது எங்கள் விருப்பம் அல்ல.  நாங்கள் ஒன்றும் வரலாற்று நாவலின் சாகச வீரர்கள் அல்ல.  ஆபத்துகளை எதிர்கொள்ளும் சூப்பர்மேன்களும் அல்ல. 

அப்படிச் சொல்வது எல்லாமே பொய்.  நாங்கள் பயந்தவர்கள்.  ஆனால் நாங்கள் எடுத்துக் கொண்ட சபதம் எங்கள் பயத்தை அகற்றி விடுகிறது. ஒரே ஒரு விஷயம்தான்.  நீங்கள் செயல்பட ஆரம்பித்தீர்களானால் மற்ற எல்லாமே மறந்து விடும்.  செயலைச் செய்து முடித்ததும் எங்கள் தொடைகள் பயத்தால் நடுங்க ஆரம்பிக்கின்றன.  அது ஒரு உளவியல் பிரச்சினை.

அர்ஜெண்டினாவில் என்னைச் சித்ரவதை செய்து கொண்டிருக்கும்போது (சித்ரவதை என்றால் என்ன?  என் பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சுவது) ஒரு சிப்பாய் இன்னொருவனிடம் சொன்னான், அந்த வேசிமகன் நீ என்ன செய்தாலும் வாயைத் திறக்க மாட்டான்.  இவர்களெல்லாம் யோகிகளைப் போன்றவர்கள்.  மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள்.  பயங்கரமாகப் பயிற்சி பெற்றவர்கள். (மூலத்திலும் யோகி என்ற வார்த்தையே உள்ளது).

அவர்களால் எங்களைப் புரிந்து கொள்ள இயலாது.  எங்களை அவர்கள் சூப்பர்மேன் என்று நினைக்கிறார்கள்.  அறம் என்பது பற்றி அவர்கள் அறிய மாட்டார்கள்.  சொமோஸாவுக்கு தண்டனை வழங்கிய நாங்கள் சூப்பர்மேன்கள் அல்ல.  ஆடம்பர ஓட்டல்களில் பத்துப் பெண்களோடு படுப்பதும் உலகம் சுற்றுவதும் எங்கள் விருப்பம் அல்ல.

We are compañeros. விமானத்திலிருந்து பாராச்சூட் மூலம் குதிப்பது எங்கள் சாகசம் அல்ல.  வாழ்வின் அர்த்தம் அது அல்ல.  நாங்கள் பயத்தில் வாழ்பவர்கள்.  எங்களுடைய சாகசமும் வாழ்வின் அர்த்தமும் எது தெரியுமா?

மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுரண்டி வாழக் கூடாது.  அடுத்தவர் உழைப்பில் ஒருவர் வாழக் கூடாது.  மக்கள் பசியால் சாகக் கூடாது.  ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சித்ரவதை செய்யக் கூடாது.  எந்த ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனின் உயிரை எடுக்க உரிமை இல்லை. ’

நாங்கள் புரட்சியாளர்கள்.  எங்களுக்கும் சந்தேகங்கள் உண்டு.  தோல்விகள் உண்டு.  பிரச்சினைகள் உண்டு.  நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்.  செயலை முடிக்கும் போது அச்சத்தில் எங்கள் தொடைகள் நடுங்குகின்றன.  ஓ, செயலைச் செய்யும்போது அல்ல, பத்து நிமிடங்கள் கழித்து…

***

சொமோஸாவின் மரணம் என்ற இந்த நூலைப் பற்றி எழுதியதை என் வாழ்வின் புனிதப் பணியாக நினைக்கிறேன்.  இப்போது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதுதானே?  ஏன் நாம் சொமோஸாவின் மரணத்துக்கு வந்தோம்?  செபஸ்தியான் சதுக்கம்.  சீலேயில் உள்ள கான்ஸெப்ஸியோன் நகரம்.

9 நவம்பர் 1983 அன்று செபஸ்தியான் என்ற நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் வீட்டுக்கு வந்த பினோசெத்தின் போலீஸார் செபஸ்தியானின் இருபத்திரண்டு வயது மகனையும் (காலோ), இருபது வயது மகளையும் (மரியா) கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.   

அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் வதைமுகாமில் வைத்துச் சித்ரவதை செய்யப்பட்டார்கள்.  சித்ரவதையை நிறுத்துங்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார் செபஸ்தியான்.  ஒரு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் பேச்சையா அரசாங்கம் கேட்கும்?  அதிலும் பினோசெத்தின் சர்வாதிகார அரசு?  செபஸ்தியான் எல்லோரையும் அணுகினார்.  அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள்… பிஷப் வெளியூர் போயிருந்தார்.  ஆனால் செபஸ்தியான் யாரையும் கெஞ்சவில்லை. எச்சரிக்கை செய்தார்.

”சித்ரவதையை நிறுத்துங்கள்; நிறுத்தாவிட்டால் நான் கதீட்ரலுக்கு எதிரே உள்ள சதுக்கத்தில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பேன்.”

யாராலும் செபஸ்தியானுக்கு உதவ முடியவில்லை.  யாருக்கும் அதிகாரம் இல்லை.  அதிகாரம் இருந்தவர்களை நெருங்கவும் முடியவில்லை. 

செபஸ்தியான் குறிப்பிட்ட நாள் வந்தது. 11 நவம்பர் 1983.

சதுக்கத்துக்குச் சென்ற செபஸ்தியான் ஒரு பெரிய வட்டத்தைப் போட்டு அதன் உள்ளே சென்று தன் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டார்.  வட்டத்துக்கு உள்ளே யார் வந்தாலும் உடனடியாகத் தீ வைத்துக் கொள்வேன் என்று எச்சரித்தார். 

செபஸ்தியானைத் தடுப்பதற்காக ஒரு காவலாளி வட்டத்தின் உள்ளே காலை வைத்ததும் செபஸ்தியான் பெட்ரோலில் நனைந்திருந்த தன் உடலில் தீயை வைத்துக் கொண்டார்.  பெரும் தீ எழுந்தது. காவலாளியால் அடுத்த அடி கூட வைக்க முடியவில்லை.  ஏழு மணி நேரம் உயிர் பிழைத்திருந்தார் செபஸ்தியான்.  நாடு முழுவதும் போராட்டம் தொடங்கியது.  வேறு வழியில்லாமல் போலீஸார் செபஸ்தியானின் மகள் தன் தந்தையைப் பார்க்க அனுமதித்தார்கள்.  ஆனால் மருத்துவர்கள் அந்தப் பெண் தந்தையை அந்தக் கோலத்தில் பார்க்க அனுமதிக்கவில்லை.  அதை அவளால் தாங்க முடியாது என்று கருதினார்கள்.  அதனால் ஃபோனில் மட்டுமே பேச அனுமதித்தார்கள்.  செபஸ்தியான் கேட்டார், நீ என் மகள் என்று எப்படி நம்புவது?  அதற்கு அந்தப் பெண், தான் சிறுமியாக இருந்த போது தந்தை எந்த செல்லப் பெயரில் அழைத்தாரோ அந்தப் பெயரைச் சொன்னாள்.  செபஸ்தியானின் மரணத்துக்குப் பிறகு அவரது மகனும் மகளும் விடுதலை செய்யப்பட்டார்கள்.  அதிலிருந்து கான்ஸெப்ஸியோன் நகரின் கதீட்ரலின் எதிரே உள்ள சதுக்கம் செபஸ்தியான் சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது. 

உயிர் பிரிவதற்கு முன்பு “கர்த்தரே அவர்களை மன்னியுங்கள்; என் செயலுக்காக என்னையும் மன்னியுங்கள்” என்று சொன்னார் செபஸ்தியான்.  அது ஒலிப்பதிவு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  2021இல் நடந்த பொதுத் தேர்தலில் செபஸ்தியானின் மகள் மரியா பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

39 ஆண்டுகளுக்கு முன்பு ந்டந்த அந்தச் சம்பவம் இன்றும் கான்ஸெப்ஸியோன் மக்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று எனக்குப் பார்க்க வேண்டும். ஆனால் ஞாபகம் இருப்பதால்தானே ஒரு ஏழை நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் மகளை இப்போது கான்ஸெப்ஸியோன் மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்?

சீலேவையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

சீலேயில் ஃபாஸிஸத்துக்கு எதிராகத் தீக்குளித்தார்கள்.  இங்கே மெரீனா பீச்சில் ஒரு முதியவர் ஃபாஸிஸத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து செத்தார்.  தமிழ்நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று இறந்தார் அவர்.  “உங்கள் கருத்தை நான் முற்றாக மறுதலிக்கிறேன்.  ஆனாலும் அந்தக் கருத்தைச் சொல்லும் உங்கள் உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன்” என்கிறது மேற்கத்திய சிந்தனை.  ஆனால் இந்தியாவோ “என் கருத்தை நீ ஏற்க வேண்டும்.  ஏற்காவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்கிறது.  அதிலும் இதுதான் அறம் என்று இந்த நாட்டில் நம்பப்படுகிறது.  ஏனென்றால், இங்கே குடிப்பவன் கெட்டவன்.  குடிக்காதவன் நல்லவன்.