இன்று மாலை ஆறரை விமானத்தில் கிளம்பி ஏழரைக்கு கோவை வந்து சேர்கிறேன். அங்கிருந்து நேராக ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா நடக்கும் இடத்துக்குச் செல்கிறேன். பத்து மணிக்கு அராத்து சிறுகதைகள் பற்றி உரையாற்றுகிறேன். எனக்குப் பேசத் தெரியாது என்று நண்பர்கள் பலர் கருதுகிறார்கள். ஆனால் அராத்து கவிதைகளை அறிமுகப்படுத்தி நான் பேசியது என் உரைகளில் ஒரு உச்சம். இன்றும் அதேபோல் இருக்க வாய்ப்பு உண்டு.
பிறகு நண்பர்களுடன் அங்கேயே காலை ஐந்து மணி வரை சீலே வைன் அருந்தியபடி பேசிக் கொண்டிருக்கலாம்; பிறகு வந்து ஓட்டலில் தூங்கி மதியத்துக்கு மேல் எழுந்து ஐந்து மணி அளவில் விஷ்ணுபுரம் விழாவுக்குச் செல்ல்லாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஜெயமோகனின் ஃபோன் இப்போது வந்த்து. ”விழாவின் தொடக்க நிகழ்ச்சி காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது; நீங்கள் பத்து மணிக்கே வந்து விட வேண்டும். பத்து மணிக்கே வர வேண்டுமானால் சீக்கிரமே தூங்க வேண்டும்” என்றார். ஏற்கனவே அவருடைய நிகழ்ச்சி ஒன்றில் நான் தாமதமாகச் சென்றிருக்கிறேன். என் வாழ்வில் நான் தாமதமாகச் சென்ற ஒரே நிகழ்வும் அதுதான்.
அதனால் நண்பர்களே, இரவு பன்னிரண்டுக்கெல்லாம் நான் ஓட்டல் திரும்பி விடுவேன். அல்லது அதிக பட்சம் ஒன்று. எனக்கு ஆறு மணி நேரம் உறங்கினால் போதும். பிறகு ஒரு மணி நேரம் பிராணாயாம்ம், தியானம் இரண்டும். (இவ்விஷயத்தில் நான் சௌந்தருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.) எப்படியும் காலை ஒன்பதுக்கே தயாராகி விடுவேன்.
இப்போது தலைப்பு விஷயம். சில தினங்களுக்கு முன் ஸ்ரீ என்னிடம் பிறந்த நாளுக்கு (டிசம்பர் 18) என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது நான் பர்பெரி (Burberry) சட்டை வாங்க வேண்டும் என்ற தீவிர யோசனையில் இருந்தேன். விலை நாற்பதாயிரம். காசு அவ்வளவு இல்லை. எல்லாம் ஆவணப்படத்துக்கு அடித்துக் கொண்டு போய் விட்டது. ஸ்ரீ கேட்டதும் பர்பெரி சட்டை என்றேன். ஐயோ, அத்தனை காசு இல்லை, கொஞ்சம் சல்லிசாகச் சொல்லுங்கள் என்றார். அப்படியானால் ஒரே ஒரு சீலே வைன் என்றேன். ஒன்று ரெண்டாயிரம் ரூபாய். பரவாயில்லை, ரெண்டே வாங்கித் தருகிறேன் என்று சொல்லி விட்டார்.
நான் மற்ற எழுத்தாளர்கள் மாதிரி இல்லை. எனக்கு வேண்டிய தண்ணியை நானே ஏற்பாடு செய்து கொள்வேன். ஸ்ரீ இல்லாவிட்டால் ஸ்ரீனி. ஸ்ரீனியும் இல்லாவிட்டால் ராஜா. ராஜா இல்லாவிட்டால் மனோ. இப்படி. ஆனால் நண்பர்களே, இன்னொரு தண்ணிதான் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. குடிதண்ணீர்.
சென்ற மாதம் ஏற்காடு சென்ற போது சீனி 24 பாட்டில்கள் தண்ணீர் வாங்கினார். எல்லாம் ரெண்டு லிட்டர். நான் கிளம்பும் நாள் அன்று என் அறையில் தண்ணீர் இல்லை. எல்லா தண்ணியும் தீர்ந்து விட்டது.
அதனால் ஐயன்மீர், என் அறைக்கு வாருங்கள். தாராளமாக வயிறு முட்டத் தண்ணீர் குடியுங்கள். தண்ணி தர மாட்டேன் என்று சொல்ல நான் இளையராஜா இல்லை. இளகிய ராஜா. ஆனால் தண்ணீர் குடித்து விட்டு வேறு பாட்டில் வாங்கி வைத்து விட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால் நள்ளிரவு தாகத்தில் எழுந்து கொள்ளும்போது தண்ணி இல்லாமல் பெரும் சிக்கலாகி விடுகிறது. ஓட்டலில் கேட்டு ஏற்பாடு செய்து கொள்ளலாம். பிரச்சினையே இல்லை. ஆனால் அதெல்லாம் செய்தால் தூக்கம் போய் விடும்.
இன்று இரவு ஆட்டோநேரட்டிவ் இடத்தில் சந்திப்போம். அங்கே உங்களால் வர முடியாவிட்டால் நாளை காலை விஷ்ணுபுரம் விழாவில் பத்து மணிக்கு சந்திப்போம்.
நாளை மதியம் கோவையில் எங்காவது நல்ல மீன் குழம்பும் சோறும் சாப்பிட வேண்டும் என்பதுதான் இப்போதைய என் திட்டம். மனதில் வேறு எதுவுமே ஓடவில்லை. மீனாம்பிகையிடம் பேசலாமா என்று யோசித்து பிறகு விட்டு விட்டேன். ஏற்கனவே டார்ச்சர் கோவிந்தன் எனக்கு ஃபோன் செய்து, “எதிரிகளின் பாசறைக்குச் செல்கிறீர்கள்; கெட்ட பேர் எடுத்து விடாதீர்கள்” என்று எச்சரித்திருந்தார். என்னது, எதிரியா? எல்லோரும் நமது ஆத்ம நண்பர்களாயிற்றே என்று மனதில் யோசனை ஓடியது. சொல்லவில்லை. அதனால் எதற்கு வம்பு என்று மீனாம்பிகையிடம் அது பற்றிப் பேசவில்லை. ஆனால் செந்தில் (க்விஸ் செந்தில்) பேசியதும் வாயை விட்டு விட்டேன். ஆஹா, இங்கே செரியான நாயர் மெஸ் உண்டு சார் என்றார். அது போதும், எனக்கு மலையாள ஸ்டைல் மீன் குழம்பு ரொம்ப இஷ்டம். தண்ணி மாதிரி இருக்கும். உனக்கலரியில் போட்டு சாப்பிட்டால் ஒரு பிடி பிடிக்கலாம். ஆனால் கோவையில் போய் மீனைத் தேடுவது கொஞ்சம் அசட்டுத்தனம்தான். என்ன செய்வது, நான் ஒரு மீன் அடிமை!
இன்னொரு விஷயம், மீன் குழம்பு சாப்பிட்டு மூன்று மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஆறு மாதமும் இருக்கலாம். வீட்டில் குட்டிப் பையன் காரணமாக அவந்திகா பிஸி. இதில் பயனும் உண்டு, பிரச்சினையும் உண்டு. பயன், அவள் கவனம் என்னிடமிருந்து அகன்று விட்டது. பிரச்சினை, மீன் குழம்பு போன்ற அற்புதங்கள் நிகழ்வதில்லை. வெளியே வாங்கி சாப்பிடுவதெல்லாம் அவந்திகாவின் அருகில் கூட வர முடியாது. சமையலில் அவளை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.