சொகுசுகளின் அடுக்குகளில் ஒளிந்து கொள்ளாதவர் – கஸல்

சாருவைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உட்கார்ந்தபோதே முதலில் Despacito பாடலை கேட்டுக்கொண்டே தான் தொடங்கினேன். கலகம் காதல் இசையில் DADDY YANKEE பற்றி சாரு எழுதியிருப்பார். GASOLINA பாடல் பற்றிய அவரின் சிலாகிப்பு அற்புதமானது. இந்த இசை ரசனைகள் மூலமாகவும் கொண்டாட்டங்கள் மூலமாகவும் தான் சாருவை நான் அறியத்தொடங்கினேன்.

பலரைப் போலவே நானும் சாருவை வாசிக்கத் தொடங்கிய என் பதின்ம வயதில் சாரு நிவேதிதா ஒரு பெண் என்றே நினைத்திருந்தேன். காரணம் அவரின் எழுத்துகளில் தீவிரமான பெண்ணியம், சுதந்திரம், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
சாரு அறிமுகப்படுத்தித்தான் பல மேற்கு எழுத்தாளர்களை கண்டுகொண்டேன். அல்லது சாரு இவர்களைக் கொண்டாடுகிறார் என்ற விமர்சனங்கள் வழி அறிந்துகொண்டேன் என்று சொல்லலாம்.

காலச்சுவட்டில் வெளிவந்த பழைய கட்டுரை ஒன்றில் சாரு பூக்கோவின் சடலத்தோடு திரிகிறார் என்ற விமர்சனத்தைப் பார்த்தேன். அப்போதுதான் பூக்கோ பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைக்கிறது. சாரு அறிமுகப்படுத்திய பிரெஞ்சு எழுத்தாளர்கள் ஆகட்டும் மேற்கு எழுத்தாளர்கள் ஆகட்டும் சாருவின் எழுத்தில் அவை வெறும் Name Dropping ஆக மட்டும் இருக்காது.
அதற்கும் மேல் அவர்களது சிந்தனையை, சித்தாந்தங்களை, அவர்கள் பேசும் அரசியலை அக அளவில் நெருங்கி, உள்வாங்கி, அதை எழுதியிருப்பார்.

ஒரு Socalled அந்நிய மொழி எழுத்தாளரைப் பற்றி எழுதுவது அப்போது மேட்டிமை தனமாகப் பார்க்கப்பட்டது. அவர்களின் எழுத்தை ஆகா ஓஹோவென புகழ்ந்து யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் அவர்களின் எண்ண வார்ப்பை, அவர்களின் மனநிலையை, அவர்கள் அதை எழுத நேர்ந்த சமூக நிர்ப்பந்தங்களைப் பேசுவது சாருவாக மட்டுமே இருக்கும். அதைதான் சாரு எழுதி வந்தார். தொடர்ந்து எழுதி வருகிறார்.

சாருவின் எழுத்து என்பது நல்லதுகளில் நல்லது மட்டுமே பார்க்கும் ஒரு சொகுசான எழுத்து அல்ல. மாறாக அவர் கேள்வி கேட்பார், விமர்சிப்பார், அதை தரநிர்ணயம் செய்வார். இதைத்தானே ஒரு நல்ல எழுத்தாளன் செய்ய முடியும்.
அதைதான் சாரு செய்தார்.

சாருவின் பலம் என்பது அவர் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருப்பது. அவர் படைப்பில் எந்த பாரபட்சமும் பார்க்காமல் வாசித்துக்கொண்டே இருப்பார். அது அவரை ஒருபோதும் Outdated ஆக அனுமதிப்பதில்லை. இதில் சாருவிற்கு நன்மைகளைக் காட்டிலும் அவதிகளை அதிகம் பெற்றுத் தந்தது.

ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வரும் சாரு எளிதாக அனைவரின் Goodbooksகளில் இடம் பெற முடியும்.
சாருவால் எளிமையாக, சிரித்தபடியே ஒரு Sophisticated எழுத்தாளராக இருந்திருக்க முடியும். ஆனால் சாரு அந்த சொகுசைப் புறந்தள்ளினார்.

சாருவின் எழுத்து வீரியமானது. அவர் மற்றவர்கள் எழுதத் தயங்கியதை எழுதினார். அவர் மற்றவர்கள் பேசத் தயங்கியதை மறைக்காமல் பேசினார், அவர் மற்றவர்கள் பார்க்க அஞ்சிய உலகங்களைப் பார்த்தார்.
அதுதான் சாருவின் எழுத்தின் அழகும் அலகும்.

சாருவின் எழுத்துகள் ஒரு காலத்தில் Forbidden எழுத்தாகக் கருதப்பட்டது. முகஞ்சுளிக்க வைத்தது. உண்மை என்றுமே Forbidden தான். அது என்றுமே முகஞ்சுளிக்கத்தான் செய்யும்.

சாருவின் எழுத்தில் Pleasure இல்லையா என்ன ? இருக்கிறது. நிறைய இருக்கிறது. ஆனால் அதனுடன் உண்மையும் நிதர்சனமும் இருக்கிறது. யாரும் ஒத்துக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ அஞ்சும் அருவருப்பான நிஜம். அது முகத்தில் அறையத்தான் செய்யும். வதைக்கும், நம் சொகுசுகளை, நம் கவனிக்காத உள்ளீடுகளை அல்லது கவனிக்க விரும்பாமல் மழுப்பிச்செல்லும் உலகங்களை அது வெளிச்சம் போட்டுக் காட்டும்.
இதற்காகத் தான் சாருவைத் திட்டுகிறோம்.

நம் மனசாட்சியை உலுக்குவதால், நம் ஒழுங்கீனங்களை, நம் பொறுப்பின்மையைச் சுட்டிக்காட்டுவதால்தான் சாரு நாற்பதாண்டுகளாகத் திட்டு வாங்கி வருகிறார். இனியும் வாங்குவார்.

சாருவால் மிக நேர்த்தியாகப் புனைவு எழுதிவிட்டுப் போக முடியும். சர்வதேச விருதுகள் வாங்க வைக்கும் அளவுக்கு மிக நேர்த்தியாக எழுத முடியும். ஆனால் அவர் கையிலெடுப்பதோ நிஜங்களை !
சமூக அடுக்குகளில் புதைந்து கோரப்பற்களோடு சிரித்துக்கொண்டிருக்கும் அரசியலை !
சாரு அளவிற்கு இலக்கியத்தைப் பேசிய அளவிற்கு அரசியலையும் பேசிய எழுத்தாளர்கள் உலகளவில் மிகச் சொற்பம். இந்தியாவில் இல்லையென்றே சொல்லலாம்.
காரணம் சாரு சொகுசான அடுக்குகளில் அமர்ந்துகொள்ளவில்லை. அவர் தெருவில் அமர்ந்துதான் தன் குரலை அழுத்தமாக ஒலித்துக்கொண்டு இருக்கிறார்.

சாரு பெண்ணுடலை எழுதுகிறார். ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் எழுதுகிறார் என்றார்கள், இன்றும் பேசுகிறார்கள். ஆனால் அவர் ஆணுடலை எழுதும்போது இவர்கள் கமுக்கமாக இருப்பதுதான் முரண். பெண்ணுடல் காலங்காலமாக ஒரு புனித பிம்பமாக அல்லது அடிமைத்தளையாக இருந்து வந்திருக்கிறது. அது ஆண்களுக்கு என்றுமே அந்நியமான ஒரு மொழியாக இருக்கிறது. இதில் பல பெண்களும் உள்ளடக்கம் என்பதுதான் வேதனை. மாறாக சாரு அதை எல்லாம் போட்டு உடைத்தார்.
காலங்காலமாக அழகு அழகான வார்த்தைகளால் நேர்த்தியாகக் கட்டப்பட்ட சீட்டுக்கட்டு மாளிகையைச் சாரு எத்தி உடைத்து நார்மலைஸ் பண்ணியது பெரும் பதற்றத்தை உருவாக்கியது. சாரு அந்த பதற்றத்தைப் பயன்படுத்தி வலிகளை, உண்மையின் சீழ்ப்பிடித்த நாற்றத்தை வெளிக்கொண்டு வந்தார்.
இதனால் கொலைமிரட்டல்கள், தாக்குதல்கள் வரை அவர் சந்தித்தார்.

சாருவின் இடத்தில் யார் இருந்தாலும் அவர்களை இது பாதித்திருக்கும், அசைத்துப் பார்த்திருக்கும், அவரின் கற்பனையை எழுத்தை அது பாதித்திருக்கும். மாறாக இவை அவரை மேலும் மேலும் எழுத வைத்துக்கொண்டிருக்கிறது.

நான் அவ்வப்போது நினைப்பதுண்டு சாருவின் நண்பர்கள் அவரின் குளிருக்கு இதமான போர்வையாகவும் வெப்பமாகவும் இருக்கலாம். ஆனால் சாருவின் கீரிடத்தின் உலோகமாக இருப்பது அவரின் எதிரிகளே ! அவர்களே அறிவழகனை சாருவாக மாற்றியவர்கள், அவர்களே சாருவிற்கு எதிர்வினையாற்றி அவரின் ஒவ்வொரு வினையின் வினையூக்கிகளாக இருப்பவர்கள்.
அவர்களே சாரு நிவேதிதா எனும் மாபெரும் படைப்பாளியை, அவரின் வளர்ச்சியைப் பதைக்கப் பதைக்க பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.
அவர்கள் இல்லையென்றால் பூனைகளை வளர்க்கும் எங்கள் மெல்லிய மனங்கொண்ட சாரு ஒரு யுகத்திற்கான அரசியலை, ஒடுக்குமுறைகளை அதன் வேர்களிலிருந்து உடைத்தெறியும் பணியை இப்படி தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்க மாட்டார்.

பெருங்கனவும் பெருங்கோபமும் கொண்ட நம் சமூகத்தின் மீது அளவற்ற பற்றும் சாடலும் ஒருங்கே கொண்ட எழுத்தாளர் தான் சாருநிவேதிதா. அதை அவர் அவருக்குப் பின்வந்த, பின்வரும் ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் அதை அவர் வலியுறுத்திக்கொண்டே தான் இருக்கிறார்.

சாரு அன்றும் இன்றும் என்றும் மரியாதைக்கும் கொண்டாடத்திற்கும் உரியவர். இலக்கியத்திலும் சமூகத்திலும் தனக்கென ஒரு இடத்தை சாரு அடைந்திருப்பது என்பது மலர் பாதைகளில் நடந்து வந்து அல்ல. தன்மீது எறியப்பட்ட அத்தனை வசைகளையும் தாங்கியவாறே உங்களுக்காகவும் எனக்காகவும் நமக்காகவும் எழுதி வரும் ஒரு மனிதனைக் கொண்டாடுவது என்பது நம் தார்மீக கடமையாகும். அதுதான் நம் உண்மைக்கும் அறத்திற்கும் சரியான நிரூபணமாகவும் இருக்கும்.

சியர்ஸ் சாரு ♥️