த அவ்ட்ஸைடர் – 31

பப்பு லாப்ரடார் இனம்.  ஸோரோ க்ரேட் டேன்.  இரண்டு நாய்களும் அவைகளின் வாழ்க்கையில் அதிகமாக நேசித்தது என்னைத்தான்.  அப்புறம்தான் மற்றவர்கள்.   குணாதிசயங்களில் இரண்டும் இரண்டு வகை.  ஸோரோவுக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது, என்னைப் போலவே.  பப்புவுக்கு அது ஜாஸ்தி.  பப்புவை நான் ஏதாவது கடுமையாகத் திட்டி விட்டால் ஒரு நாள் முழுதும் சாப்பிடாது.  நான் நூறு முறை மன்னிப்புக் கேட்டாலும் சாப்பிடாது.  ஆண் நாயாக இருந்தாலும் பெண்கள் மாதிரி அடம்.  நாம் உயிரையே வைத்திருக்கும் இவனா நம்மைத் திட்டி விட்டான் என்ற ஆங்காரம்.

அப்படித்தான் எனக்கும் ஏற்பட்டது.  என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க முடியவில்லை.  அந்த நண்பர் வேலை மெனக்கட்டு சென்னையிலிருந்து கோயம்பத்தூர் வந்திருக்கிறார்.  ஒரே நோக்கம், பதினெட்டாம் தேதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுதான்.  மதியம் இரண்டு மணிக்கு கேள்வி பதில் அமர்வு.  அது முடிந்ததும் ஐந்து மணிக்கு ஆவணப்படம்.  நண்பர் ஐந்தரைக்கு வருகிறார்.  கிட்டத்தட்ட படம் முடியும் தறுவாயில்.  கேட்டால் ட்ராஃபிக் ஜாம்.  கேள்வி பதில் அமர்வுக்கு வந்திருந்தால் – வந்தாரா என்று தெரியாது – மீண்டும் அறைக்குப் போவதில் அர்த்தமில்லை.  ஏனென்றால், அவர் தங்கியிருந்த ஓட்டல் ராஜஸ்தானி பவனிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம்.  அவினாசி சாலையில் விமான நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது.  முதலில் ராஜஸ்தானி சங்கத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விமான நிலையத்துக்கு அருகில் அறை போட்டதே தவறு.  சரி, போட்டது போட்டாயிற்று, ஒரு அமர்வுக்கும் இன்னொரு அமர்வுக்கும் இடையில் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் ஓய்வு எடுக்கவா பத்து கிலோ மீட்டர் தூரம் காரில் செல்வீர்கள்?  சென்றால், பத்தும் பத்தும் இருபது கிலோ மீட்டர் தூரம் போக வர எத்தனை நேரம் ஆகும்?  அப்படியே கழிப்பறை செல்ல வேண்டியிருந்தால் ராஜஸ்தானி சங்கத்துக்கு அடுத்த தெருவிலேயே இருந்த என்னுடைய ஓட்டலுக்கு வந்திருக்கலாமே?

எனக்கு இங்கே 2000 ஆண்டில் நான் சென்ற ஸோர்போன் பல்கலைக்கழக சம்பவம் ஞாபகம் வருகிறது.  ஒரு பெரிய ஹாலைக் காண்பித்து இதுதான் ஃபூக்கோ பாடம் நடத்திய இடம் என்றார்கள்.  பத்து மணிக்கு ஃபூக்கோவின் லெக்சர் தொடங்கும்.  மாணவர்கள் என்று இல்லை, பொதுமக்களும் கேட்கலாம் என்பதால் இடம் பிடிப்பதற்காகக் கடும் குளிர்காலத்தில் காலை ஆறு மணிக்கே வந்து வரிசையில் நின்று கொண்டிருப்பார்களாம்.  அதுதான் ஒரு சிந்தனையாளனுக்குக் கொடுக்கும் மரியாதை.  என் ஆவணப்படம் அராத்து எடுத்ததுதான்.  ஆனால் அது அராத்துவின் வாழ்க்கை அல்ல.  அராத்துவை நீங்கள் வெறுக்கலாம்.  ஆனால் அது என் படம்.  என்னைப் பற்றிய படம்.  நான் பேசிய படம்.  நான் வாழ்ந்த வாழ்க்கை.  நான் வாழ்ந்த மண்.  நான் வாழ்ந்த கடல் கரை.  நான் புழங்கிய வீடு.  நான் படித்த தர்ஹா.  அதன் நாயகன் நான்.  அந்தப் படத்தைப் பார்க்க நீங்கள் என் நண்பராக இருந்தால் மதியம் இரண்டு மணியிலிருந்தே காத்திருந்திருக்க வேண்டும்.  அப்போதுதான் நான் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று பொருள். 

இன்னும் தெளிவாகச் சொல்கிறேன்.  ஒருநாள் எனக்கு வோட்கா என்ற மது வெங்கட் சாமிநாதனால் அறிமுகப்படுத்தப்பட்டது.  அஜ்மல் கான் ரோடு.  கரோல் பாக்.  செ. ரவீந்திரன் வீடு.  நல்ல குளிர்.  டிசம்பர் குளிர் தில்லியில் எப்படி இருக்கும்?  நான் திரும்பி வந்து கொண்டிருந்த போது அந்த அஜ்மல் கான் ரோட்டை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்று நினைத்துக் கொண்டு மண்டியிட்டு அமர்ந்து தரையை முத்தமிடுகிறேன்.

ஓ ரஷ்ய தேசமே, தஸ்தயேவ்ஸ்கியையும் வோட்காவையும் மானுட குலத்துக்கு அளித்த உன்னை வணங்குகிறேன்.

எவ்வளவு எழுப்பியும் எழுந்து கொள்ளவில்லையாம்.  நாலு பேர் குண்டுகட்டாகத் தூக்கினார்களாம். 

ஒரு கலைஞனுக்கும் அவன் மண்ணுக்குமான உணர்வு அப்படி இருக்க வேண்டும்.  கலைஞன் மீதான உங்கள் மரியாதை அப்படி இருக்க வேண்டும்.

டோக்யோ சென்ற மிஷ்கின் அங்கே இருந்த குரஸவா சமாதியின் மீது சரிந்து படுத்து நூறு முத்தம் இட்டிருக்கிறான்.

அப்படி இருக்க வேண்டும், கலைஞன் மீதான உங்கள் அன்பு. 

நான் அப்படித்தான் இருந்தேன்.  அப்படித்தான் இருக்கிறேன். 

சீலேவை ஏன் என் தாய் தேசம் என்கிறேன் என்றால் எழுத்தாளனை அங்கே அப்படிக் கொண்டாடுகிறார்கள். 

நீங்களோ ட்ராஃபிக் ஜாம் என்கிறீர்கள்.  இதே மாதிரி ஒரு கட்டம் ஃபாஸ்பைண்டரின் வாழ்வில் நடந்தது.  ஜெர்மன் இயக்குனர் ஃபாஸ்பைண்டரின் gay நண்பன் அலி.  ஒருநாள் அலியிடம் சொல்லாமல் பாரிஸ் போய் விட்டார் ஃபாஸ்பைண்டர்.  அன்றைய தினம் ஃபாஸ்பைண்டரின் பிறந்த நாள்.  அலி அறையிலிருந்து கீழே இறங்கிப் போய் இரண்டு பேரை குத்திக் கொன்று விட்டான்.  ஃபாஸ்பைண்டரின் உதாசீனத்தை அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

அலியை சிறையில் போட்டார்கள்.  சிறையிலேயே தூக்கில் தொங்கினான் அலி.  அலியின் மரணச் செய்தியை பல மாதங்கள் ஃபாஸ்பைண்டரிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார்கள். சொன்னபோது ஃபாஸ்பைண்டருக்குப் பைத்தியம் பிடித்தது.

நானும் அலி மாதிரிதான்.  உங்களிடம் நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறேன என்று புரிந்து கொள்ளுங்கள்.   

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சுமார் பத்து பேர் ஆறு மாத காலம் தங்கள் உழைப்பு முழுவதையும் இந்த ஆவணப்படத்துக்காக செலவழித்திருக்கிறார்கள்.  அராத்து தன் அலுவலகத்திலிருந்து ஒரு மாத காலம் விடுப்பு எடுத்திருந்தார்.  ஒரு நாள் கூட தன் அலுவலக வேலையை அவர் செய்யவில்லை.  இத்தனைக்கும் அவர் புதிதாக ஆரம்பித்திருந்த அலுவலகம்.  இத்தனைக்கும் மோதியின் பொருளாதாரத் திட்டங்களால் தன் அலுவலகங்களையெல்லாம் மூடி விட்டு, நாலைந்து ஆண்டுகளாக எந்த வருமானமும் இல்லாமல் இருந்து, இப்போதுதான் ஒரு அலுவலகத்தை ஆரம்பித்திருந்தார். 

ப்ராதா ஃபவுண்டேஷனில் என் சிறுகதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு – மிலன் நகருக்கு (இத்தாலி) நான் என் செலவில் அழைத்தும் அவரால் வர இயலவில்லை.  அலுவலகம் தொடங்கி ஓரிரு தினங்களே ஆகியிருந்தன.  அப்படியும் நான் வற்புறுத்தி அழைத்தால் வந்திருப்பார்.  நான் அழைக்கவில்லை.  நானும் போகவில்லை.  என் சிறுகதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு சல்மான் ருஷ்டி வந்திருந்தார் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.  நான் ஐந்து ஆண்டுகளாக பத்தி எழுதிக் கொண்டிருக்கும் ஆர்ட்ரெவ்யூ ஏஷியா ஆசிரியர் மார்க் ரேப்போல்ட் அந்த மிலன் நிகழ்ச்சிக்குப் போயிருந்திருக்கிறார்.  அது இலக்கிய நிகழ்ச்சி அல்ல.  சிற்பங்களை முன் வைத்துக் கதை எழுத வேண்டும்.  எனக்குக் கொடுக்கப்பட்டது நடராஜர் சிலை.  நான் நடராஜர் சிலையின் தத்துவத்தையும் ஃப்ரான்சிஸ் கிருபாவின் வாழ்வையும் இணைத்து எழுதினேன்.  இந்தத் திட்டத்தில் கதை கொடுத்தவர்கள்:

Ayọ̀bámi Adébáyọ̀ (நைஜீரியா)

Tash Aw (மலேஷியா)

Hanan al-Shaykh (லெபனான்)

Chloe Aridjis (மெக்ஸிகோ – அமெரிக்கா)

Mauro Javier Cardenas (எக்வாதோர்)

Akwaeke Emezi  (நைஜீரியா)

Esther Freud (யு.கே.)

Rivka Galchen (கனடா – அமெரிக்கா)

Daniel Galera (ப்ரஸீல்)

Paolo Giordano (இத்தாலி)

Uzodinma Iweala (நைஜீரியா – அமெரிக்கா)

Mieko Kawakami (ஜப்பான்)

John Keene (அமெரிக்கா)

Daniel Kehlmann (ஜெர்மனி)

Sheng Keyi (சீனா)

Katie Kitamura (அமெரிக்கா)

Alexander Kluge (ஜெர்மனி)

Hari Kunzru (யு.கே.)

Hervé Le Tellier (ஃப்ரான்ஸ்)

Michele Mari (இத்தாலி)

Ch’aska Anka Ninawaman (பெரூ)

Charu Nivedita

Helen Olajumoke Oyeyemi (நைஜீரியா, பிரிட்டன்)

Tilsa Otta (பெரூ)

Sidarta Ribeiro (ப்ரஸீல்)

Cord Riechelmann (ஜெர்மனி)

Salman Rushdie

Ekaterina Sedia (ரஷ்யாவைச் சேர்ந்தவர், இப்போது அமெரிக்காவில் வாசம்)

Leanne Shapton (கனடா, இப்போது அமெரிக்காவில் வாசம்)

Ahdaf Soueif (எகிப்து)

Maria Stepanova (ரஷ்யா)

McKenzie Wark (ஆஸ்திரேலியா)

மிலன் கலை நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்குக் கிடைத்த படைப்புகளைக் கொடுத்த இவர்களில் பாதிப் பேர் நிகழ்ச்சிக்கும் வந்திருந்தனர்.  உலகின் மிகச் சிறந்த கதை வாசிப்பாளர்கள் இவர்களின் கதைகளை வாசித்தார்கள்.  இந்தப் பட்டியலில் எனக்கு நிகரான எழுத்தாளர் என்றால் அவர் அலக்ஸாந்தர் க்ளூஜ் மட்டுமே. மற்றவர்களை எனக்குக் கீழேதான் வைப்பேன். 

இப்படி ஒரு பட்டியலில் என்னுடைய பெயர் இடம் பெற்ற பின்னணி என்ன?  மற்ற எழுத்தாளர்களுக்கெல்லாம் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.   அறிமுகப்படுத்த நண்பர்கள் இருக்கிறார்கள்.  இந்த உலகத்திலேயே ஏஜெண்ட் இல்லாத, பிரதிநிதி இல்லாத ஒரே எழுத்தாளன் நான்தான்.  நேற்று என் வலது கரமாக விளங்கும் ஒரு நண்பரிடம் பேசினேன். 

எங்கே இருக்கிறீர்கள்?

ராயப்பேட்டைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

ஏன்?

ஒரு டீக்கடை வைப்பதாக இருக்கிறேன்.  அதற்காக ஒரு நவீனமான பாய்லர் வாங்கப் போகிறேன். 

இவர்தான் என் வலது கரம்.  இவர் என்னைப் பற்றி ஆங்கிலேயர்களிடமும் வட இந்தியர்களிடமும் என்ன அறிமுகம் செய்ய முடியும்?  இவருக்குத் தெரிந்த ஒரே வட இந்தியர் இவருடைய டீக்கடையில் வேலை செய்யும் நேபாளியாகத்தான் இருக்கப் போகிறார்.    

நான் பேரைச் சொல்லவில்லை.  சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

நீங்கள் கேட்கலாம், இப்போது தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு உங்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக நண்பர் என்கிறீர்களே என்று.  உண்மையில் அவருக்கும் மேலே சொன்ன எதிர்கால டீக்கடைக்காரருக்கும் அதிக வித்தியாசம் இல்லை.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் இறையன்புவும் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த போது இறையன்பு சொன்னார், “வீட்டில் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும்” என்று.  இப்படி இருப்பவர்கள்தான் என் நண்பர்களாக இருக்கிறார்கள்.  இன்னொரு நண்பர் இருந்தார்.  பேர் அழகர்சாமி.  தென்னிந்தியா முழுமைக்குமான தொலைபேசி நிர்வாகத்தின் தலைவர்.  ஒருநாள் அவர் வீட்டுக்கு அழைத்தார்.  வீட்டில் ஒரு நாற்காலியோ சோஃபாவோ இல்லை.  பாய் போட்டு தரையில் அமர்ந்தோம்.  இவர்கள்தான் என் நண்பர்கள்.

அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் நீண்ட காலத் தொடர்பில் உள்ளவர் காயத்ரி.  ஒருநாள் அவரிடம் சொன்னேன், என்னைப் பற்றி உங்கள் இயக்குனரிடம் சொல்லுங்கள் என்று.  “சேச்சே, நாமளே நம்மைப் பற்றி அப்டிச் சொல்லக் கூடாதுப்பா, அவங்களேதான் நம்மிடம் வர வேண்டும்” என்றார் காயத்ரி.  என் நண்பர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.   

ஒருகாலத்தில் காயத்ரி சாஹித்ய அகாதமியின் பொறுப்பில் இருந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள், நம்முடைய ஆளுக்கு நாமே கொடுக்கக் கூடாது என்று எனக்குக் கிடைக்காமலும் இருக்கக் காரணமாக இருப்பார். ஆனால் அங்கே இருக்கும் ஒரு பொறுப்பான ஆசாமி, தனக்கே விருதைக் கொடுத்துக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.  உலகம் அப்படி இருக்கிறது.  என் நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட நிலையில் நான் ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பத்தி எழுதுவது எப்படி நிகழ்ந்தது?  சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்குமான அந்தப் பத்திரிகை ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான ஒன்று.  அமெரிக்கப் பத்திரிகைகள் கூட அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.  நூறு பக்கங்கள் கண்ணாடித் தாளில் அச்சடிக்கப்படுகின்றன.  எப்படி என்னைத் தெரியும் என்று அந்தப் பத்திரிகை ஆசிரியரைக் கேட்டேன்.  அவர் சீனாவுக்குப் போனபோது ஒரு சீன எழுத்தாளர் ஸீரோ டிகிரி புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னாராம்.  ஒருமுறை ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவுக்கு எழுதிய கையோடு ஆர்ட்ரெவ்யூவுக்கும் எழுதச் சொன்னார்கள். ஒரே சமயத்தில் இரண்டு கட்டுரை.  அந்தக் கட்டுரை கீழே:

https://artreview.com/charu-nivedita-goes-home/

ஒருமுறை அமெரிக்காவிலிருந்து Danel Olson என்ற பதிப்பாளர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  ஒரு பேய்க் கதை வேண்டும் என்று கேட்டு.  என்னை எப்படித் தெரியும்?  அமெரிக்க நூலகங்களிலிருந்து ஸீரோ டிகிரியை எடுத்துப் படித்தாராம்.  அதைப் படிக்க வேண்டும் என்று யார் சொன்னது?  யாரும் சொல்லவில்லை.  அந்தப் பெயரின் கவர்ச்சியால் உந்தப்பட்டேன்.  அமெரிக்க நூலகங்களில் என் புத்தகத்தை வைத்தது யார்?  பெயரே தெரியாத என் அமெரிக்கத் தமிழ் வாசகர்கள்.  என் இணைய தளத்தைப் படிப்பவர்கள்.

என் பெயர் பெருமாள் முருகனைப் போல் சர்வதேசம் செல்லவில்லை.  கோவில் திருவிழாவில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்று எழுதிப் பெற்றதல்ல என் பெயர்.  யாருமே சொல்லாமல் யாருமே அறிமுகப்படுத்தாமல் தானாக, தன் தகுதியினால் சென்று கொண்டிருக்கிறது என் பெயர்.   

ஆக, எனக்காக வேலை செய்ய யாருமில்லை.  என் பெயரைச் சொல்ல யாருமில்லை.  என்னை அறிமுகம் செய்ய யாருமில்லை.  ஆனாலும் எனக்காகப் பேச கடவுள் இருக்கிறார் என்று இந்தச் சம்பவங்களிலிருந்து தெரிந்து கொண்டேன். எனக்காக சீலே வைன் வாங்கித் தந்து என் ஆரோக்கியம் கெட்டு விடாமல் பார்த்துக் கொள்ள என் நண்பர்கள் இருக்கிறார்கள். 

என் வாசகர் வட்ட நண்பர்களைப் பற்றி “குடிகாரர்கள்” என்ற வசையை நான் நீண்ட காலமாக்க் கேட்டு வருகிறேன்.  எதற்கும் லாயக்கு அற்றவர்கள், குடிகாரர்கள், சாருவுக்குத் தண்ணி வாங்கிக் கொடுத்து அவரைச் சீரழிப்பவர்கள், உருப்படாதவர்கள் என்று கடந்த பத்து ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.  என்னிடமே சொன்னவர்கள் ஏராளம். மூடர்களே, நீங்கள் குடிகாரர்கள் என்று சொன்னவர்கள்தானே இன்று இப்படி ஒரு உலகத் தரமான ஆவணப் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்? 

உலகத் தரம் என்று சொன்னதும் உங்களுக்குப் பொத்துக் கொண்டு வரும்.  என் நண்பர்கள் என்பதால் நான் ஜால்ரா அடிக்கிறேன் என்பீர்கள்.  அப்படிச் சொன்னால் என்னை அவமதிக்கிறீர்கள் என்றே பொருள்.  நான் நண்பர்களுக்காக மதிப்பீடு செய்பவன் அல்ல என்பதை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். நான் பார்த்த அளவுக்கு உலக சினிமா பார்த்த ஆள் தமிழில் யாருமில்லை.  அதுவே என் தகுதி.  உலகில் உள்ள எல்லா முக்கியமான ஆவணப்படங்களையும் பார்த்திருக்கிறேன். தமிழில் எடுக்கப்பட்டுள்ள முக்கியமானது, முக்கியம் அல்லாதது என்று எல்லா ஆவணப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.  த அவ்ட்ஸைடர் ஆவணப்படம் (இப்போதைய 47 நிமிட வடிவ அளவிலேயே) தமிழில் எடுக்கப்பட்டுள்ள எல்லா ஆவணப்படங்களின் திரை மொழியையும் மாற்றி அமைத்து விட்டது.  இது இன்னும் செழுமைப்படுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் வந்தால் இது உலகின் cult classic ஆக மாறும்.  இப்படி ஒரு சாதனையைப் படைத்த என் வாசகர் வட்ட நண்பர்களையும் அராத்துவையும் குடிகாரன் என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிலும் ஃப்ராடு லெனின் எந்த வேலையும் செய்யாமல் கடைசித் தேதியில் கழுத்தை அறுத்துக் கொடுத்த ஃபுட்டேஜில்   தங்கள் உயிரை விட்டுப் படத்தை முழுமையாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.   அதை வந்து பார்க்கக் கூட யோக்கியதை அற்ற நீங்கள் எப்படி என் நண்பர்களைக் குடிகாரர்கள் என்று சொல்லலாம்?  

ப்ராதா நிகழ்ச்சியில் நான் கொடுத்த கதையின் பெயர் தாடக தாண்டவம்.  ருஷ்டி கொடுத்த கதை Ù OR, THE INTERPRETATION OF DREAMS.  சுமேரியாவில் கி.மு. 2200இல் உருவாக்கப்பட்ட இரண்டு உருளைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை.

என் நாவலையும் ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் வரும் என் கட்டுரைகளையும் படித்ததாகவும் அவை தன்னை மிகவும் ஈர்த்ததாகவும் ப்ராதா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான Miuccia Prada Bianchi எனக்கு ஒரு இரண்டு பக்கக் கடிதம் எழுதினார்.  மியூச்சியா ப்ராதா உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். 

ஆனால் என் நெருங்கிய நண்பருக்கு என்னைப் பற்றிய ஆவணப்படத்தைப் பார்க்க நேரம் இல்லை.  ட்ராஃபிக் ஜாம்.  என்ன பிரச்சினை என்றால், அந்தப் படத்தை இனிமேல் யாருமே பார்க்க முடியாது.  ஏனென்றால், அதை இயக்கிய அராத்துவுக்கு அது இப்போது வந்திருக்கும் வடிவத்தில் உடன்பாடு இல்லை.  “இது இல்லை, நான் நினைத்தது” என்கிறார்.  பத்து நாட்களாக ஒரு நிமிடம் கூட உறங்காத நண்பர்களை வைத்துக் கொண்டு நாலே நாளில் இவ்வளவுதான் செய்ய முடியும் என்பது அவர் சொன்னது.  பதினான்காம் தேதியோ என்னவோ (பதினெட்டு காலையில் விஷ்ணுபுரம் நண்பர்களிடம் படத்தைக் கொடுத்தாக வேண்டும்) எடிட்டர் அத்தியப்பன் சிவாவிடமும் கணேஷ் அன்புவிடமும் இன்னும் கொஞ்சம் கட்ஸ் இப்படி இப்படி வேண்டும் என்று விளக்குகிறார் அராத்து.  இதற்குப் பிறகுதான் இசையமைப்பாளரிடம் போக வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  (எல்லாம் ஃப்ராடு லெனினால் வந்தது).  அப்போது சிவாவின் உடம்பு பாம்பு போல் நெளிந்து வளைந்து கீழே விழுந்து விட்டதாம்.  பத்து தினங்களாகத் தூங்காதது.  ஏனென்றால், அவருக்குக் கிடைத்த ஃபுட்டேஜை கன்வர்ட் பண்ணுவதற்கே மூன்று நாள் ஆகியிருக்கிறது.  லெனின் அதைக் கூட செய்யாமல் கொடுத்ததையெல்லாம் வாங்கி தன் அண்ட்ராயரில் சொருகிக் கொண்டார் போல. 

ஆக, எடுத்திருக்கும் பத்து மணி நேர ஃபுட்டேஜில் அராத்து இனிமேல்தான் படத்தொகுப்பாளரை வைத்துக் கொண்டு நிதானமாகத் தொகுக்க வேண்டும்.  இரண்டு இரண்டரை மணி நேரம் வரலாம்.  அது டிசம்பர் பதினெட்டில் திரையிட்ட படமாக இருக்காது. 

யாரோவாக இருந்தால் தட்டி விட்டுப் போய் விடலாம்.  நட்பு வட்டமாக இருப்பதால் வலிக்கிறது. 

நான் தபால் துறையில் ஸ்டெனோவாக இருந்தபோது நண்பர்களிடம் சொல்வேன், நான் இங்கே ஸ்டெனோ என்ற மாறுவேடத்தில் இருக்கிறேன், மற்றபடி நான் ஒரு உலகப் புகழ் பெற்ற எழுத்தாளன் என்று.  இப்போது ட்ராஃபிக் ஜாம் என்று சொல்லும் நண்பர்களிடம் சொல்கிறேன், நான் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை.  என் தோள் மீது கை போடுகிறீர்கள்.  எனக்கு அறிவுரை சொல்கிறீர்கள்.  அதையெல்லாம் அனுமதிப்பதால் என்னை உங்களின் அண்டை வீட்டுக்காரன் என்று நினைத்து விட்டீர்கள். 

இனிமேல் என்னிடம் வந்து என் வாசகர் வட்ட நண்பர்கள் குடிகாரர்கள் என்று யார் சொன்னாலும் அவர்களை என் காலில் கிடப்பதை எடுத்து அடிப்பேன்.  ஏன் இத்தனை வன்மமாக எழுதுகிறேன் என்றால், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அப்படித்தான் இந்த வன்மம் எனக்குள் கூடிக் கிடக்கிறது.  அடக்கப்பட்ட சீற்றம்.  ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது சிரித்தபடி “அட போங்க சாரு, ஒங்க வட்டமே ஒரு குடிகாரக் கும்பல், அவங்களைப் பத்திப் பேசாதீங்க” என்பார்கள்.  சிரித்தபடியே.  நானும் பதிலுக்கு சிரித்து வைப்பேன்.  அப்போதே அவரை செருப்பால்தான் அடிக்கத் தோன்றும்.  தோன்றுவதையெல்லாம் செய்ய முடியுமா?  இப்போது முடியும்.  மீண்டும் அப்படிச் சொன்னால் செய்வேன்.  எதற்குமே லாயக்கு இல்லாத, எந்த சாதனையையும் செய்யாத நாதாரிகள்தான் அப்படிச் சொன்னார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், என் வாசகர் வட்டத்தில் குடிக்காதவர்கள்தான் அநேகம். குமரேசன், வினித், அருணாசலம், செல்வகுமார், ஸ்ரீராம் என்று பட்டியல் நீளும்.

அதை விடுங்கள்.  யாரைப் பற்றியுமே புறம் பேசாத ஒரு நண்பர்.  மிகவும் நெருங்கியவர்.  போன மாதம் சொன்னார்.  என் நாவல் ஒன்று ஒரு சர்வதேசப் போட்டிக்கு அனுப்பப்பட்டு குறும்பட்டியலில் இடம் பெற்றது.  ஆனால் கடைசியில் யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் தோற்று விட்டது.  என் நண்பர் சொன்னார், இதற்குக் காரணம் அராத்துதான் என்று.  (சீனி, இதைப் படிக்கிறீர்களா?  இதைத் தட்டச்சு செய்யும் போது உங்களோடு சேர்ந்து கொஞ்சம் வைன் அருந்த வேண்டும் போல் உள்ளது!!!)

எப்டீங்க என்று கேட்டேன். 

சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும். உங்களுக்குக் கோபம் வரும் எதையும் உங்களிடம் பேசக் கூடாது என்று சத்தியம் செய்திருக்கிறேன். மேலும், நீங்கள் இதைப் பற்றித் திட்டி வேறு எழுதுவீர்கள்.  என்றாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  நெஞ்சு பதறுகிறது.  வயிறு எரிகிறது.  உங்களுக்குப் பரிசு கிடைக்காததற்குக் காரணமே அராத்துதான். 

அதுதான் ஏன் என்று கேட்கிறேன்.

அதை விவரித்துச் சொல்வது கஷ்டம்.  அவரிடம் உள்ள bad vib உங்களை பாதிக்கிறது.  அவ்வளவுதான் சொல்வேன்.  அவர் மேல் எனக்கு எந்தப் பிரச்சினையோ புகாரோ கிடையாது.  ஆனால் அவரிடம் உள்ள bad vib உங்களை பாதிக்கிறது.  அதில் சந்தேகமே இல்லை எனக்கு. 

நிச்சயமா.  எனக்கும் அப்படித்தான் தோணுது.  அவந்திகாவும் தினமும் அப்படித்தான் சொல்றா. 

இப்போ அப்டித்தான் சொல்வீங்க.  நாளைக்கு என்னைத் திட்டி எழுதுவீங்க. 

சேச்சே.  எழுத மாட்டேன்.  எனக்கே அப்டித்தான் தோணுது.

சரி, இந்த உரையாடலில் நான் வேறு எப்படி பதில் சொல்ல முடியும்?  அவந்திகாவும் தினந்தோறும் இதையே சொல்கிறாள்.  கோவைக்கு நான் வந்தால் அவனை உதைப்பேன் என்றாள்.  நான் அவள் வரக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.  அந்த ஆவணப்படத்தை அவள் பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும், சொல்லுங்கள்?  படத்துக்காக ஒரு நேர்காணல் கேட்டேன்.  என்னோடு வாழ்பவள்.  என் புத்தகங்களை முதன் முதலில் பதிப்பிக்கப் போராடியவள்.  உணவு எனக்கு மதம்.  உலகத் தரமான உணவை எனக்கு வழங்குபவள்.  ”முதலில் நான் அந்தப் படத்தை முழுசாகப் பார்க்க வேண்டும்.  அதில் அராத்துவும் காயத்ரியும் இல்லை என்றால்தான் பேட்டி தருவேன்.” 

ஆஹா, என் தெய்வமே!  இப்போது அவள் கோவை வந்து படத்தையும் பார்த்திருந்தால் என்ன ரகளை நடந்திருக்கும்? படத்தில் வருவதா?  படத்தை இயக்கியதே அராத்துதானே?

மதுரையில் நடந்த ரெண்டாம் ஆட்டம் மாதிரி ஆகியிருக்கும்.  ஆனால் அராத்து எதையும் சமாளிக்கும் திறமை கொண்டவர்.  அவர் பாட்டுக்குக் கண்டு கொள்ளாமல் கிளம்பிப் போயிருப்பார்.

சரி, எதிர்மறையான அலைகள் பற்றிப் பார்ப்போம்.  ஒரு பேச்சுக்கு அராத்துவிடம் எதிர் அலைகள் இருக்கின்றன, அதனால்தான் எனக்கு எந்த நன்மையும் நடக்க மாட்டேன் என்கிறது.  நூற்றுக்கு நூறு சரி.  ஆனால் எனக்கு நடக்கும் அல்லது நடக்கப் போகும் நன்மைகள் எல்லாவற்றையும் விட நான் உயிரோடு இருப்பது முக்கியம் அல்லவா?  நான் இன்று உயிரோடும் பூரண ஆரோக்கியத்தோடும் – இன்றும் இருபத்தைந்து வயது பெண்களிடமிருந்து காதல் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்வதற்கும் அராத்து முக்கியமான காரணம். அல்லது ஒரே காரணம்.  அவர் இல்லாவிட்டால் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே செத்திருப்பேன்.

தண்ணி விஷயத்தை எழுதினேன்.  அதற்கு உடனே அராத்து “அது சும்மாங்க, ரூம் பாய் செய்யக் கூடிய விஷயம்” என்றார்.  அது சரியில்லை.  எனக்கு வெளியூர் போனால் குடிக்க வேண்டும்.  ஆனால் இந்தியக் குடி குடித்தால் செத்து விடுவேன்.  அதை ஒருங்கிணைக்க அராத்துவால் மட்டும்தான் முடியும்.  பெரிய மேட்டர் இல்லை.  ராஜபாளையம் செல்வதற்கு முன்னால் அராத்துவிடமிருந்து ஃபோன்.  இங்கிருந்தே வைன் வாங்கிக் கொண்டு போய் விடுங்கள், அங்கே கிடைக்காது.  இதைச் சொல்ல எனக்கு ஒரு நாதி இல்லை.  என் மூளை இதிலெல்லாம் வேலை செய்யாது.  

சரி, பெரிய விஷயத்தைப் பார்ப்போம்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஹார்ட் அட்டாக்.  என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் (காவேரி அல்ல) சேர்க்கப்பட்டேன்.  அங்கே எனக்குத் தப்பான ஊசிகளைப் போட்டு உடம்பு பூராவும் யானை போல் ஊதி விட்டது.  உடம்பு பூராவும் அரிப்பு வேறு.  அதை எதற்குப் போட்டார்கள் என்றால், பைபாஸ் ஆபரேஷன் செய்வதற்கு.  அதாவது, நாலரை லட்சம் காசு பிடுங்குவதற்கு.  அராத்து குறுக்கிட்டார்.  இரண்டாம் அபிப்பிராயம் வாங்க வேண்டும் என்றார்.  காயத்ரியிடமிருந்து ஒரு மருத்துவரின் எண்ணை வாங்கி ஃபோன் செய்தால் அவர் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  மட்டுமல்லாமல் உடனே பாரதிராஜா மருத்துவமனைக்குக் கொண்டு வாருங்கள் என்றார்.  அறுவை சிகிச்சை இல்லாமலேயே காரியம் முடிந்தது. 

அது மட்டும் அல்ல, பத்து நாட்கள் பாரதிராஜா மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை கொடுக்கவும், இருபத்து நான்கு மணி நேரமும் என் பக்கத்திலேயே ஒருவர் இருந்து கவனித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தது எல்லாம் அராத்துதான். முதலில் மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு அறையைப் போட்டார். ஒரு பெரும் நண்பர் குழாம் அங்கே தங்கியது. ஒவ்வொருத்தராக வட்ட சுழற்சியில் இயக்கினார் அராத்து. அதையெல்லாம் அராத்துவைத் தவிர வேறு எவராலும் செய்திருக்க முடியாது.

சீனி மட்டும் இல்லாவிட்டால் இரண்டாவது முறையும் எனக்கு அறுவை சிகிச்சை செய்து என்னை சக்கர நாற்காலியில் தள்ளியிருப்பார்கள்.  ஆனால் இப்போது நான் முப்பது வயது இளைஞனைப் போல் நடமாடிக் கொண்டிருக்கிறேன். 

ஆகவே, அராத்துவின் எதிர் அலைகளால் எனக்கு சர்வதேசப் பரிசு கிடைக்காவிட்டாலும் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள உதவுவது அராத்துதானே? 

மேலும், இந்த எதிர் அலை என்பதும் ஒரு புல்ஷிட்.  இத்தனை எதிர் அலைகள் இருப்பவரால் தொடர்ந்து இப்படி புத்தகங்களாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்க முடியாது.  இப்படி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது.  இப்படி பத்தே நாளில் ஆறு புத்தகங்களை (மொத்தம் இரண்டாயிரம் பக்கங்கள்) கொண்டு வந்திருக்க முடியாது.   நிச்சயமாகச் சொல்கிறேன், அராத்துவைத் தவிர வேறு எந்த ஒரு மனிதனாலும் ஆறு புத்தகங்களை பத்தே நாட்களில் மிகத் தரமாகக் கொண்டு வந்திருக்க முடியாது.  எழுத்துப் பிழைகள் இல்லை.  அதிலும் அவருக்குப் பதிப்பகம் பற்றி எதுவும் தெரியாது.  அவருக்கும் ஆட்டோநேரட்டிவில் பங்கு இல்லை.  அவருக்கும் அந்தப் பதிப்பகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஆனால் வினித்திடம் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்.  வினித்தும் மற்ற நண்பர்களும் செய்தார்கள்.  அவ்வளவுதான்.  Bad vib மனிதர்களுக்கு இது சாத்தியம் இல்லை. 

இவ்வளவு ஏன், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனே அராத்துவிடம் தோற்று விட்டார்.  ராகவன் என்னிடம் ஒருமுறை கூட அராத்து பற்றி எதிர்மறையாகப் பேசியதில்லை.  நல்ல வார்த்தையும் பேசியதில்லை.  ஆனால் நான் அராத்து பற்றி தினமும் பேசுவேன்.  அதையெல்லாம் செவ்வனே கேட்டுக் கொள்வார் ராகவன்.  நானும் ராகவனும் ராஜபாளையம் போயிருந்தோம்.  ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் பக்கம் என்பதால் அவரும் என்னோடு வந்தார்.  வினித்தும் வந்தார்.  நாங்கள் மூன்று பேர்.  அப்போது ராகவன் பற்றி எனக்குப் புதிதாக ஒரு விஷயம் என் புலன்களில் பட்டது.  அதாவது, இந்த ராகவன் நான் நடைப் பயிற்சியின் போது – அந்த ஒரு மணி நேரத்தில் பார்க்கும் ராகவன் அல்ல.  இவர் வேறு விதமாக இருந்தார்.  ஒரு சராசரி பிராமணனைப் போல் இருந்தார்.  நான் ராகவனிடம் கடந்த முப்பது ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன், எனக்கு உங்களைப் பார்த்தால் ஒரு க்ஷணம் கூட சராசரி என்று தோன்றவில்லை, பிராமணன் என்று தோன்றவில்லை என்று.  ஆனால் ராஜபாளையத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் அவர் எனக்கு முழுக்க முழுக்க ஒரு சராசரியாகவும் ஒரு மயிலாப்பூர் பிராமணனாகவுமே தோற்றம் தந்தார்.  அது எப்படி?  சகலரையும் வா போ என ஒருமையில் பேசுவது.  அடாவடியாகப் பேசுவது.  அகங்காரமாகப் பேசுவது. டேய் யார்ரா நீ என்ற தோரணையில் பேசுவது.  இதெல்லாம் எனக்குப் புதிது.  ஆனாலும் நான் ஒன்றும் சொல்லவில்லை.  ஊருக்கும் வந்து விட்டோம். அப்போது வினித் அராத்துவிடம் சொல்லி, அராத்து என்னிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா? 

வினித்திடம் ராகவன் சொல்லியிருக்கிறார்: வினித், இந்த அராத்து இருக்கானே, அவன் என்னையும் சாருவையும் பிரிக்கப் பாக்கறான்.

இந்தத் தகவலை அராத்து சொல்லக் கேட்ட்தும் எனக்கு ஒரு நண்பன் என்னுடைய பத்து வயது மகளை வன்கலவி செய்த்து போலவே தோன்றியது.  அல்லது, என் வீட்டுப் பெண்களை தேவடியாள் என்று சொன்னது போல் இருந்தது.  ஆச்சரியம் என்னவென்றால், அராத்துவும் இதே இரண்டு உதாரணங்களையும் சொன்னார்.  ஆனால் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், ராகவனிடம் இதைக் கேட்ட போது அவர் சிரித்தபடியே “பாருங்க சார், நான் எவ்ளோ பெரிய முட்டாளா இருக்கேன்னு” என்றார்.  இதையும் அராத்துவிடம் சொன்னேன்.  “ஆஹா, ஏண்டா என் பத்து வயதுப் பெண்ணை கற்பழித்தாய் என்று கேட்டால், பாருங்க சார் நான் எவ்ளோ முட்டாளா இருக்கேன்னு என்றா சொல்வார் இந்த ஆள்?” என்றார் அராத்து.  எனக்கும் அதுவே தோன்றியது. 

விஷயம் என்னவென்றால், இப்போது நான் பார்க்கும் மனிதர் இல்லை முப்பது ஆண்டுகளாக நான் பழகிய ராகவன்.  இந்த மாற்றத்துக்குக் காரணம், இவருடைய அண்ணன் சுந்தர்ராஜன்தான்.  தினமும் ஒரு மணி நேரம் காலையில் ஊர் வம்பும் வெட்டிப் பேச்சும் பேசினால் ஒரு மனித மனம் இப்படித்தான் சிந்திக்கும்.  சுந்தர்ராஜனை அடிக்க வேண்டும் செருப்பால், ராகவனிடம் தப்பேயில்லை. 

டோன் ஸாயில் நாங்கள் தங்கியிருந்த குடிசை

ஆனாலும் ராகவனிடம் தொடர்ந்து அதே அன்புடன் எதுவுமே நடக்காதது போல் பழகுவேன்.  காரணம், ஸ்ரீவில்லிபுத்தூர் நாவலை முடிக்க வேண்டும். எனக்குக் காரியம் முக்கியம்.  வீரியம் அல்ல. 

எதற்குச் சொன்னேன் என்றால், என் நண்பர்களில் பெரும் கூட்டமே அராத்துவின் மீது கொலைவெறியுடன் அலைகிறது.  அவர்களுக்கு என் உயிர் மீது அக்கறையில்லை என்றே எடுத்துக் கொள்கிறேன்.  காரணம், அவர்களுக்கு என் நிலையோ என் வாழ்க்கையோ தெரியவில்லை.

வாஸ்தவத்தில் அராத்துவின் வாழ்வில் அல்லது சிந்தனையில் ராகவன் என்ற நபரே இல்லை.  மட்டுமல்லாமல், அராத்து இதுவரை யாரைப் பற்றியும் புறம் சொல்லி நான் கேட்டதே இல்லை.  அவருக்குப் பலரையும் பிடிக்காது. ஆனால் யார் பற்றியும் அவர் புறம் சொல்லிக் கேட்டதில்லை. 

ஒளி முருகவேள்

நான் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கிறது?  நான் எப்படிப்பட்ட கொடூரமான மனநோய் விடுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?

நான் இருப்பது முதல் மாடி.  நான், அவந்திகா, நேநி நிர்மலா, குழந்தை வேதாவ்யான்.  இரண்டாவது மாடியில் கார்த்திக், மருமகள் அனு.  வேதா ரெண்டாம் மாடிக்குப் போனால் அழுகிறான்.  உடனே கீழே கொண்டு வரப்படுகிறான்.  ஒருநாள் மாலை ஐந்து பேரும் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.  கனவுக் குடும்பம் போல.  உண்டு விட்டு உறங்கப் போனோம்.

காலை ஆறு மணிக்கு எழுந்து அவந்திகா தன்னுடைய ஆன்மீக வகுப்புக்குச் சென்றாள்.  லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் ஒரே லவ் மயம்.  ஐ லவ் யூ.  யூ லவ் மீ.  லவ் லவ் லவ் லவ் ஆன்மீகம் என்றால் என்ன?  லவ்.  ஒரே லவ் மயம்.  ஏழு மணிக்கு முடிந்தது லவ்.  ஏழேகால் மணி அளவில் அவளிடம் சென்று “நேற்று நீ செய்த அப்பம் மாதிரி என் வாழ்க்கையிலேயே சாப்பிட்டதில்லை” என்று கூறினேன்.  அப்படி இருந்தது அந்த அப்பம்.  உண்டபோதே சொல்வதற்கு அவந்திகா பக்கத்தில் இல்லை. 

தங்கியிருந்த அறையின் எதிரே டோன் ஸாய்

நான் சொன்னதைக் கேட்டு பதில் எதுவும் சொல்லாமல் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டாள் அவந்திகா.  எனக்குப் பளார் என்று கன்னத்தில் அறை வாங்கியது போலவோ செருப்பால் அடி பட்டது போலவோ இருந்த்து.  சரி, இனிமேல் எது எப்படி இருந்தாலும் சொல்லக் கூடாது என்று வன்மத்துடன் நினைத்துக் கொண்டேன்.  ஆனால் அது சாத்தியம் இல்லை.  எது சமைத்தாலும் அது எப்படி இருந்தது என்று கேட்பவள் அவந்திகா.  நானும் அவளைக் கேட்க வைக்காமல் நன்றாக இருந்தது என்று சொல்லி விடுவேன்.  உண்மைதான்.  நன்றாக இல்லாமல் அவள் சுமாராக சமைத்ததே இல்லை.  அது ஒரு அதிசயம். 

பிறகு ஏழரை மணிக்கு அதே உறுமலுடன் “இனிமேல் நான் காலையில் யாரோடும் பேசக் கூடாது என்று இருக்கிறேன்” என்றாள்.

நான் அகன்று விட்டேன்.  குடும்பங்களில் ஏன் வன்முறை நிகழ்கிறது என்பதை மட்டும் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது.

ஏழே முக்காலுக்கு என்னிடம் வந்த அவந்திகா அவளுடைய மொழிபெயர்ப்பு விஷயங்களைப் பற்றி பதினைந்து நிமிடம் சந்தேகம் கேட்டாள்.  புன்சிரிப்புடன் சொன்னேன். 

இந்தச் சம்பவத்தை நான் அனுபவித்த அதே அழுத்தத்துடன் எழுத முடிந்ததா என்று தெரியவில்லை.  உங்களிடம் கற்பனா சக்தி இருந்தால் அந்தக் காட்சியை யூகம் செய்து கொள்ளுங்கள். 

என் வீட்டில் ஒரு நாளின் பதினெட்டு மணி நேரமும் இப்படித்தான் இருக்கும்.  இந்த மனநிலைக்குப் பெயர் பைப்போலார்.  பைப்போலார் ஆட்களோடு வாழ்பவர்களுக்கு விரைவில் பைத்தியம் பிடித்து விடும், அல்லது, தற்கொலை செய்து கொள்வார்கள்.  நான் எப்படி இருக்கிறேன்?  ஹேப்பியஸ்ட் மேன் இன் த வேர்ல்ட்.  காரணம்?  வெளியூர் போனால் நான் குடிக்கும் சீலே வைன், என் வாசகர் வட்ட நண்பர்கள் மற்றும் சீனியிடமிருந்து வந்து விடும்.      

த அவ்ட்ஸைடர் படத்தின் இறுதிக் காட்சியின் தத்துவம் பற்றி அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.

சென்ற கட்டுரையில் ஒரு திருத்தம்.  நாங்கள் சென்றது க்ராபி அல்ல.  டோன் ஸாய் என்ற தீவு.  ஆனால் இரண்டு டோன் ஸாய்கள் உள்ளன.  நாங்கள் செல்ல வேண்டியது க்ராபி அருகே உள்ள டோன் ஸாய்.  நாங்கள் சென்றது பீப்பீ (phi phi) தீவுக்கு அருகில் உள்ள டோன் ஸாய்.  அங்கிருந்து நாங்கள் செல்ல வேண்டிய டோன் ஸாய்க்கு படகுக் கட்டணம் 10000 பாட்.  அன்றைய இரவு தங்கி விட்டு மறுநாள் பொதுப் படகில் சென்றால் 2000 பாட்டில் போகலாம்.  தங்கி விட்டோம். 

மறுநாள் பொதுப்படகில் கிளம்பி டோன் ஸாய் சென்றடைந்தோம்.  கொடும் மழை.  தொப்பல் தொப்பலாக ஆனோம்.  ஆனால் நாங்கள் இறங்கிய இடம் ரெய்லே.  அங்கிருந்து டோன் ஸாய் இன்னொரு தீவு.  நடுவில் உள்ள தீவைச் சுற்றிப் போக வேண்டும்.  படகில் 500 பாட் கேட்டார்கள்.  நம் ஊராக இருந்திருந்தால் 5000 பாட்டும் லெபனானாக இருந்தால் 20000 பாட்டும் கேட்டிருப்பார்கள்.  நம்மூர் பிக்பாக்கெட் லெபனான் வங்கிக் கொள்ளை. 

இந்த டோன் ஸாய், க்ராபி, phi phi நுணுக்கம் எல்லாம் தெரியாவிட்டால் நாறிப் போயிருப்போம்.  அத்தனை மழை.  அராத்து அராத்து என்று கரித்துக் கொட்டுகிறார்களே, இன்னொரு கதை சொல்கிறேன்.  எல்லா வேலையும் அராத்துவே செய்து கொண்டிருந்தாரா, அதனால் அலுத்துப் போய் பாங்காக்கில் ஒரு அறை போடச் சொன்னார் கூட வந்த நண்பரிடம்.  நண்பரும் போட்டார்.  பாங்காக் வந்தோம்.  எனக்கோ பயங்கர அலுப்பு.  உடனடியாக்க் கழிப்பறை செல்ல வேண்டும்.  வரவேற்பில் போய் சாவி வாங்கப் போன மனோ அரை மணி நேரமாக வரவில்லை.  நான் அப்படியே ரோட்டில் உட்கார்ந்து விட்டேன்.  அராத்து போனார்.  ரூம் போட்ட நண்பர் வங்கி அட்டை மூலம் அப்போதே பணம் செலுத்தவில்லை.  நேரில் போய் கொடுத்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டார்.  இங்கே நேரில் அவர் கார்டு வேலை செய்யவில்லை.  நாலு கார்ட் இருந்த்து.  நாலும் வேலை செய்யவில்லை.  அராத்துதான் போய் பணம் கட்டினார்.  இந்த வேலையை ஆரம்பத்திலேயே அராத்து செய்திருந்தால் எனக்கு அத்தனை கஷ்டம் இருந்திராது.