தமிழில் மாற்று சினிமா…

தமிழ் ஸ்டுடியோ அருண் தன் வாழ்க்கையை நல்ல சினிமாவுக்காக அர்ப்பணித்துக் கொண்டு ஒரு களச் செயலாளியாக எத்தனையோ காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்.   அவருடைய செயல்பாடுகள் இன்னும் பரவலாகக் கவனம் பெற வேண்டியவை.  இன்னும் அதிக நிதி வசதி இருந்தால் அவரால் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும்.  இதற்கிடையில் உன் சமையலறையில் என்ற படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்ததை இந்த அதிகாலை நேரத்தில் படித்தேன்.  நொந்து போனேன்.  மழைதான் காரணம்.  மழை இல்லாவிட்டால் நான் பாட்டுக்கு நடைப் பயிற்சிக்காக நாகேஸ்வர ராவ் பூங்கா போயிருப்பேன்.  உன் சமையலறையில் என்ற பெயரைப் பார்த்ததுமே இது ஒரு மொக்கைப் படம் என்று தெரிந்திருக்க வேண்டாமா?  டூயட் மூவீஸில் நல்ல படம் வந்து ரொம்ப நாள் ஆயிற்று என்ற விஷயம் அருணுக்குத் தெரியாதா?  எந்த நம்பிக்கையில் இந்தப் படத்துக்குப் போனார்?  அருணின் வாழ்க்கையில் இரண்டரை மணி நேரத்தை விரயம் செய்து விட்டார் என்ற கவலையில், ஆதங்கத்தில்தான் இதை எழுதுகிறேன்.  பொதுவாக நல்ல நடிகர்கள் நல்ல படம் எடுக்கிறேன் என்று சொல்லி தாங்கள் ஈட்டிய பணத்தையெல்லாம் இழந்து விடுவார்கள்.  படமும் மொக்கை படமாக இருக்கும்.  நாசரின் முகம் என்ற மொக்கை ஒரு உதாரணம்.  டூயட் மூவீஸில் மொழி போன்ற நல்ல படங்கள் வந்துள்ளன.  மறுக்கவில்லை.  ஆனால் அந்த நிறுவனத்தின் மூலம் மாற்று சினிமா என்ற பெயரில் மொக்கை படங்கள்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.  வெள்ளித் திரை, அபியும் நானும் என்ற இரண்டு படங்களையும் பத்து நிமிடத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை.  நல்ல சினிமா என்றால் என்ன என்ற அறிவு சிறிதும் இல்லாதவர்களாலேயே இப்படிப்பட்ட படங்களை இயக்க முடியும்.  இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் உன் சமையலறையில் படத்தைப் பார்த்தார் அருண்?  பாவம், அராத்து வேறு இந்தப் படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதியிருக்கிறார்.  அவருடைய சினிமா விமர்சனங்களுக்காக விரைவில் அவருக்கு கலைமாமணி விருது கிடைக்க வாழ்த்துகிறேன்.  கருந்தேள் வேறு யாமிருக்க பயமே என்ற shit-க்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்.  அவருக்கும் கலைமாமணி விருது கிடைக்க வாழ்த்துக்கள்.  யாமிருக்க பயமே நானும் பார்த்தேன்.   மலத்தை மிதித்து விட்டால் எந்த உணர்வுக்கு ஆளாவீர்கள்?  அதே தான் யாமிருக்க பயமே பார்த்த போது இருந்தது.  அதில் வரும் மகாநதி சங்கர் பண்ணும் லூட்டிகளை வேறு எப்படிச் சொல்வீர்கள் ராஜேஷ்?  sensibility -யையே கழற்றி உங்கள் வீட்டு ஹேங்கரில் மாட்டி விட்டுத்தான் இது போன்ற ஆபாசக் குப்பைகளுக்கு மதிப்பீடு எழுதுவீர்களா?  விரைவில் உங்களுக்கு கலைமாமணிதான்.  இது இந்தக் காலை நேரத்தில் உங்களுக்கு நான் தரும் ஆசீர்வாதம்.

மாற்று சினிமா என்ற பெயரில் வரும் குப்பைகளைப் பற்றி எழுதி எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறேனே, அதையெல்லாம் நீங்கள் யாருமே படிப்பதில்லையா?

சரி, அருண் டூயட் மூவீஸின் உலகத் தரமான படத்துக்கு எழுதியிருக்கும் விமர்சனத்தையும் படியுங்கள்.  கீழே வருவது தமிழ் ஸ்டூடியோ அருண் எழுதியது:

வெகுஜனப் படங்களுக்கு உரித்தான, திரைக்கதையில் கூட தேவையில்லாத கதாபாத்திரங்கள் அதன் சுவாரசியத் தன்மையை குறைத்துவிடும் என்பது திரைக்கதை அறிந்த எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. பிரகாஷ்ராஜ் தன்னளவில், நல்ல சினிமா அல்லது சினிமா என்பதற்கு ஏதாவது அளவீடுகள் வைத்துக்கொண்டு, அதை சுற்றியே படமெடுத்து வருகிறார். வெறுமனே மசாலாத் திரைப்படங்களை பார்த்து பார்த்து சலித்துப்போன மக்களுக்கு உடனே பிரகாஷ்ராஜின் திரைப்படங்கள் மேல் ஒரு மதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. தமிழ் சினிமாவே பல ஆண்டுகளாக இப்படிதான், அதீத கொடுமையை அனுபவித்துவிட்டு, பிறகு யாராவது கொஞ்சமாவது கொடுமைப்படுத்தினால், அவர்களை நல்ல கொடுமையாளர்கள் என்று அடையாளப்படுத்தி வருகிறது. ஒரு நாடகத்திற்கும் திரைப்படத்திற்குமான வேறுபாட்டை பாலச்சந்தரின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் பிரகாஷ்ராஜ் அறிந்திருப்பாரா என்பது சந்தேகமே.

மெலோடிராமாதான் கதை என்றாலும், அதனை சினிமாவாக மிக சிறப்பாக வடித்தேடுக்கலாம். வூடி ஆலனின் திரைப்படங்கள் இதற்கு சிறந்த சான்று. குறிப்பாக ப்ளூ ஜாஸ்மின். உன் சமையல் அறையில் திரைப்படத்திலும், பிரகாஷ் ராஜின் தியேட்டர் ஆர்டிஸ்ட் (அவர் பெயர் நினைவில் இல்லை) ஆனால் இவர் இல்லாமல் பிரகாஷ் ராஜின் திரைப்படங்கள் வெளிவருவதே இல்லை. அவர் இல்லாமல் படமெடுக்கமாட்டேன் என்று பிரகாஷ்ராஜ் அவரது தாயாருக்கோ, வேறு யாருக்கோ சத்யம் செய்துக் கொடுத்திருப்பார் போல. எந்த வேல்யூவும் இல்லாமல், தேமேவென திரையைக் கடந்துப்போகிறது அந்த கதாபாத்திரம். தவிர ஆதிவாசியாக வரும் ஜக்கையா, ஐஸ்வர்யா போன்றவர்களுக்கு படத்தில், கதையில் என்ன வேலை என்று அகழ்வாராய்ச்சிதான் செய்ய வேண்டும். சாக்லேட் கிருஷ்ணாவில் கிரேசி மோகன் இடையிடையே சில நகைச்சுவைத் துணுக்குகளை உதிர்த்துவிட்டு போவார். அதே போல் பிரகாஷ்ராஜின் எல்லாப் படங்களிலும் நகைச்சுவை துணுக்குகளுக்கு பஞ்சமே இருக்காது. கொஞ்சம் நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல், இது இருந்தால் போதும். ஆபாசம், வன்முறை, காமம் இதெல்லாம் இல்லாத படங்கள்தான் நல்ல படங்கள் என்று தமிழ்சினிமா காலம்காலமாக நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை கீற்றின் இன்னொரு வினைதான் பிரகாஷ்ராஜ்.

சண் தொலைகாட்சி போன்ற ஏதாவது தொலைக்காட்சிக்கு பிரகாஷ்ராஜ் நாடக இயக்குனராக பங்காற்றலாம். நிச்சயம் உலக அளவில் பிரசித்திபெரும் நாதமாக அது இருக்கும். படத்திற்கு இளையராஜா இசை. இப்போது வரும் படங்களுக்கு தன்னுடைய பெயரை பயன்படுத்திக்கொள்ள சொல்லி, வேறு யாரையாவது இசையமைக்க வைத்துவிடுவார் போல. ராஜாவிற்கே இதெல்லாம் சிறப்பான இசையா இல்லையா என்பது தெரியும்.

ஆனாலும் முதல் பாடல் காட்சிகளில் காட்டப்படும் உணவுகளை பார்த்து, இடைவேளையில் உணவின் மீது அதீத காதல் உருவானது இந்த படத்தின் பலம் என்று சொல்லலாம். நல்ல பசி எடுக்கும்போது அவசியம் இந்த படத்தை சென்று பாருங்கள்.