இன்னொருவர் பெயர் எங்கே?

எவ்வளவு வேலை இருந்தாலும் வாரம் இரண்டு முறை அப்யங்கம் செய்து விடுவேன்.    தலைக்கு மேல் வேலை என்றால் வாரம் ஒரு முறையாவது அப்யங்கம் செய்யாமல் இருந்ததில்லை.  ஆனால் இந்த எக்ஸைல் எடிட்டிங் வேலை இன்னும் முடியாததால், நான் நினைத்ததை விட இழுத்துக் கொண்டே போவதால், சில மாதங்களாக அப்யங்கம் செய்து கொள்ளவில்லை.  தியானம் கூட இரண்டு வேளையும் சரியாகச் செய்வதில்லை.    எந்த அன்றாட வேலையும் ஒழுங்காகப் போகவில்லை.  எக்ஸைலை முடிக்க வேண்டும் என்ற வெறியிலேயே இருக்கிறேன்.  இவ்வளவு அவசர கதியிலும் நாஞ்சில் நாடனின் பதில்களை விகடனில் படித்து விடுகிறேன்.  நாஞ்சில் நாடன் மும்பையில் இருந்த போதிருந்து என் நண்பர்.  நான் அப்போது தில்லியில் இருந்தேன்.  கிட்டத்தட்ட முப்பது ஆண்டுக் கால நண்பர்.  அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  அவருடைய என்பிலதனை வெயில் காயும் நாவலைப் படித்து விட்டுக் கடிதம் எழுதிய ஆரம்பக் கால ரசிகன் நான்.  எட்டுத் திக்கும் மதயானை படித்த போதும் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன்.  அவருடைய சமையல், எழுத்து,  தமிழ் இலக்கிய அறிவு போன்ற எல்லாவற்றுக்கும் நான் ரசிகன்.    அதனால்தான் விகடனில் அவருடைய பதில்களை ஆர்வத்துடன் வாசித்தேன்.  ஆனால் என்ன ஒரு அதிர்ச்சி!  நம்பிக்கை அளிக்கும் இளம் எழுத்தாளர் பட்டியலில் ஒரு முக்கியமான பெயரைக் காணோம்.  ஆனால் குமார செல்வாவின் பெயரும் புகைப்படமும்  இடம் பெற்றிருக்கிறது.    குமார செல்வா எழுத ஆரம்பித்த அதே காலத்திலிருந்துதான் எழுதுகிறார் அந்த இன்னொருவரும்.  30 ஆண்டுகளுக்கு முன்பு படிகள் என்ற பத்திரிகையை தமிழவன் மற்றும் நண்பர்கள் நடத்திக் கொண்டிருந்த போது தமிழவன் அடிக்கடி குறிப்பிடும் பெயர் குமார செல்வா.  நம்பிக்கையூட்டும் அந்த இளைஞரின் சிறுகதைகளைப் படித்துப் பாருங்கள் என்பார்.  அதேபோல் கோவை ஞானி அடிக்கடி என்னிடம்  ஒரு இளம் எழுத்தாளரைப் பற்றி நம்பிக்கையுடன் பேசுவார்.  பின்னாளில் எப்பேர்ப்பட்ட ஆளாக வரப் போகிறார் பாருங்கள் என்று  பெரும் ஆதூரத்துடன் சொல்லுவார் ஞானி.  அவரது வாக்கும் இன்று பலித்து விட்டது.  சந்தோஷம்.  ஆனால், இப்போது என்னுடைய வருத்தம் என்னவென்றால், நாஞ்சில் நாடன் அவருடைய பட்டியலில் அந்த இன்னொருவரின்  பெயரை ஏன் விட்டார் என்பதுதான்.    அந்த இன்னொருவர் யார் என்கிறீர்களா?  வேறு யாருமில்லை; ஜெயமோகன் தான்.

Comments are closed.