மாசி சம்பல் செய்வது எப்படி?

நிர்மலின் தந்தை ஏரலிலிருந்து மாசிக் கருவாடு அனுப்பியிருந்தார்.  மாசிக் கருவாடு மாலத் தீவுகளில்தான் கிடைக்கும்.  அது கத்தாருக்குப் போய் அங்கிருந்து ஏற்றுமதி ஆகிறது போலும்.  கவரில் அரபியில் எழுதியிருந்தது.  நிர்மல் ஏரல் வந்த போது அவர் தந்தையிடம் கொடுத்து அனுப்பச் சொல்லியிருக்கிறார்.

உடனே இதை கருவாடு கொடுத்து கதாசிரியர் ஆன வரலாறு என்று சில மூடர்கள் எழுதுவார்கள்.  அவர்களுக்கெல்லாம் அன்பு, நட்பு போன்ற அற்புதங்கள் தெரியாது என்று நினைக்கிறேன்.  தெரிந்த விஷயங்கள் சொம்பு தூக்குவது, ஜிஞ்ஜா அடிப்பது, காலை நக்குவது, லஞ்சம் கொடுப்பது  போன்ற அற்பத்தனங்கள்தான்.    என்னிடம் ஒரு இளம் எழுத்தாளர் வந்து 5000 ரூ விலையுள்ள வாசனைத் திரவியத்தைக் கொடுத்தார்.  அது கலவியின் போது மட்டும் போட்டுக் கொள்வது.  எழுத்தாளரின் புத்திசாலித்தனத்தை மெச்சினேன்.  ஆனால் அவருடைய  நாவலைப் படித்து விட்டு குப்பை என்று சொன்னதும் அவர் என்னைத் திட்டிய திட்டைப் படித்ததும் தான் அவர் எனக்குக் கொடுத்தது அன்புப் பரிசு அல்ல, லஞ்சம் என்று புரிந்து கொண்டேன்.  ஆனாலும் அந்தக் குப்பையைப் படித்ததற்குக் கூலியாக இருக்கட்டும் என்று வாசனைத் திரவியத்தை நானே உபயோகித்துக் கொண்டேன்.

மிகக் கீழ்மையான அளவிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு அற்புதங்களுக்கும் அற்பத் தனங்களுக்கும் வித்தியாசம் தெரியாது.  என் நண்பன் தருண் தேஜ்பாலைப் பார்க்க கோவா வரை சென்றதில் எனக்கு ஒரு 30000 ரூ செலவாயிற்று.  ஆனால் சிறைச்சாலையில் சென்று அவனைச் சந்தித்ததில் அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அந்தப் பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.  ஒரு உதாரணத்துக்கு இதைச் சொன்னேன்.

ஒரு குருவைச் சந்திக்கும் போது அவருக்காக மலரோ, பழமோ எடுத்துக் கொண்டு போவதில்லையா அது போலத்தான் கணேஷ் அன்பு எனக்காக போரூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த விரால் மீனும்.  அது பற்றி சில சொம்பு தூக்கிகள் அவதூறு செய்ததாக நான் கேள்விப் பட்ட போது நான் என்ன சொன்னேன் தெரியுமா?  கணேஷ் என் மகன்.  ஒரு மகன் அப்பனுக்குச் செய்வதில் இவன்களுக்கு என்னடா வந்தது நோளாப்பு?

அதே தான் நிர்மல் விஷயத்திலும்.  சரி…  இப்போது மாசிக் கருவாடு சம்பல் எப்படிச் செய்வது என்பது பற்றி.  நிர்மலிடம் கேட்டேன்.  அவர் கூறியது:

நறுக்கிய சின்ன வெங்காயம் வதக்கி, வற்றல் பொடி சிறிதளவு, மஞ்சள் பொடி சிறிதளவு. மாசி சிறிதளவு ( ஒரு கை அளவு) எடுத்து மிக்ஸீயில் மூன்று அல்லது இரண்டு சுற்று அரைக்கவும். அரைத்த மாசியை வதக்கவும், உப்பு சேர்க்கவும், துருவிய தேங்காய்ப் பூவை அதன் மீது தூவி இறக்கவும்.  

இன்னொரு வகை: வெங்காயம், மிள்காய் இரண்டையும் எண்ணையில் வதக்கி அரைத்த மாசி & தேங்காய்ப் பூ துருவியது போட்டு இறக்கி விடுவார்கள்.
இந்த இரண்டு வகையிலும் தக்காளி சேர்க்கலாமா என்று கேட்டேன்.  தக்காளி இதற்கு ஒத்து வராதாம்.  இப்போது என் சந்தேகம் என்னவென்றால், மாசி ஏற்கனவே தூள் மாதிரி தான் இருக்கிறது.  அதை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினாலே அரிசி மாவு மாதிரி பொடி ஆகி விடாதா?  யாராவது மாசிக் கருவாடு சம்பல் செய்திருக்கிறீர்களா?

Comments are closed.