எடிட்டர் லெனின் அவர்களுக்கு…
நான் தங்களிடம் என் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படமான த அவ்ட்ஸைடர் படத்துக்கு படத் தொகுப்பு பணியைச் செய்து தர முடியுமா என்று ஆறு மாதங்களுக்கு முன்பு ஃபோனில் கேட்ட போது என் வீட்டுக்கே நேரில் வந்த நீங்கள் படத்தொகுப்பை செய்து தருவதாகச் சொன்னீர்கள். எடுத்த எடுப்பிலேயே முப்பதாயிரம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு விட்டீர்கள். வங்கிக் கணக்கில் அதற்கான சாட்சி உள்ளது. அதற்குப் பிறகு நாம் தினந்தோறும் பேசினோம். நவம்பர் 15-ஆம் தேதி எடிட்டிங் வேலை முடிந்து படம் இயக்குனர் அராத்துவிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பது இரு தரப்பிலும் முடிவு. நீங்கள் மிக வலிமையாகச் சொன்னீர்கள், முடித்துத் தருகிறேன் என்று. தங்களிடம் அராத்து எடுத்த படம் அனைத்துக் கொடுக்கப்பட்டது.
இரண்டு மாதங்கள் முழுசாக உங்களுக்கு இருந்தது. கொஞ்சம் படத்தொகுப்பு செய்து காண்பித்தீர்கள். படம் உலகத் தரத்தில் வந்திருக்கிறது என்றீர்கள். அது சும்மா கப்ஸா என்பது உங்களுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரிந்து விட்டது. நவம்பர் மாதம் முதல் தேதியிலிருந்தே நீங்கள் எங்களுடைய ஃபோன் அழைப்பை எடுக்கவில்லை. நீங்கள் இப்படி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பது தெரியாததால் நானும் அராத்துவும் நவம்பர் முழுவதும் உங்களுக்கு ஃபோன் பண்ணிக் கொண்டே இருந்தோம். அராத்து உங்கள் உதவியாளரைத் தொடர்பு கொண்டபடியே இருந்தார். உதவியாளர் படத்தொகுப்பு வேலையைச் செய்து முடித்து விட முடியும். ஆனால் உங்களிடமிருந்து அதற்கான சம்மதம் அவருக்குக் கிடைக்கவில்லை. இதுவரையிலான இருபது ஆண்டுப் பழக்கத்தில் நான் ஃபோன் செய்தால் அன்று இரவுக்குள்ளாவது நீங்கள் பதில் ஃபோன் செய்து விடுவீர்கள். தொடர்பே கொள்ளாமல் இருந்ததில்லை. ஆனால் நவம்பர் முதலிலிருந்து கடைசி நாள் வரை நீங்கள் என்னுடைய நூற்றுக்கணக்கான அழைப்புக்கு பதிலே கொடுக்கவில்லை.
ஆனால் உங்கள் உதவியாளரோடு தினமுமே பேசிக் கொண்டிருந்தீர்கள். புனேவில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தீர்கள். டிசம்பர் பதினெட்டாம் தேதி விஷ்ணுபுரம் விருது விழாவில் அந்தப் படத்தைத் திரையிட்டே ஆக வேண்டும். இதுவரையிலான விஷ்ணுபுரம் விருது விழாக்களில் விருது பெறும் கலைஞர் பற்றிய ஆவணப்படத்தை விஷ்ணுபுரம் நண்பர்கள்தான் எடுப்பது வழக்கம்; நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்று ஜெயமோகன் ஏற்கனவே என்னிடம் வலியுறுத்தியிருந்தார். நான் தான் “இல்லை ஜெயமோகன், நாங்களே எடுத்து விடுவோம்” என்று சொல்லியிருந்தேன். டிசம்பர் முதல் வாரமும் உங்களை நம்பினார் அராத்து. அவருமே உங்களை ஒரு நூறு முறை அழைத்திருப்பார்.
டிசம்பர் முதல் வாரமும் முடிந்த பிறகுதான் நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரர் என்று தெரிந்து நாங்கள் கொடுத்த படத்தைத் திரும்பக் கேட்டோம். அதையும் கொடுக்காமல் அதோ இதோ என்று உங்கள் உதவியாளர் இழுக்கடித்தார். பிறகு அவரை மிரட்டித்தான் நாங்கள் கொடுத்த படத்தை வாங்கினோம். புதிய எடிட்டரிடம் கொடுத்த பிறகுதான் தெரிந்தது, நீங்கள் படத்தைக் கன்வர்ட் கூட பண்ணவில்லை என்று. கொடுத்ததையெல்லாம் வாங்கி வாங்கி உங்கள் அண்ட்ராயரில் வைத்துக் கொண்டீர்கள் போல.
பிறகு எடிட்டர் அதை கன்வர்ட் பண்ணவே மூன்று தினங்கள் ஆயிற்று. அதற்குப் பிறகுதான் எடிட்டிங் வேலையே ஆரம்பித்தது. ஒரு மாத வேலையை மூன்று நாளில் முடித்தார்கள். பதினைந்து நாளில் இசை அமைக்க வேண்டியதை இரண்டு நாளில் முடித்தார் இசையமைப்பாளர். கலரிஸ்ட் ஒரு நாள். யாருமே பத்து நாளாகத் தூங்கவில்லை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது மூத்தோர் வாக்கு. இப்படி பத்து பேர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கிறீர்களே, உங்களுக்கு இதற்கான பலன் கிட்டாமலா போகும் என்று நினைக்கிறீர்கள்? ஜெயமோகனின் அறம் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா? அதில் வரும் எழுத்தாளனைப் போல் இப்போது நான் உணர்கிறேன். இறைவன் இந்த வயதிலாவது உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
என்னை சினிமாக்காரர்கள் மாதிரி நினைத்து விட்டீர்கள் போல. சினிமாக்காரர்கள்தான் வாயை மூடிக் கொண்டு போய் விடுவார்கள். நாங்கள் நமனை அஞ்சோம் பரம்பரை. உம்முடைய அதிகாரத்துக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்.
இந்தக் கடிதத்தை நான் எழுதியிருக்க மாட்டேன். இன்று நான் பாரதீய வித்யா பவனில் ஆராவமுதாச்சாரியாரின் திருப்பாவை பிரசங்கத்தில் இருந்த போது என்னிடம் என்ன தைரியத்தில் வந்து பேசினீர்கள் நீங்கள்? என்னை ஏமாற்றினால் ஒன்றும் எழுதியிருக்க மாட்டேன். ஒரு ஒட்டு மொத்த ப்ராஜக்டை சீரழித்து பத்து பேரை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தினீர்கள். உங்களால் செய்ய முடியாதது பற்றிப் பிரச்சினையே இல்லை. ஆனால் நவம்பர் முதல் தேதியோ அல்லது நடுவிலோ என் ஃபோன் அழைப்புக்கு பதில் கொடுத்து என்னால் முடியாது ஐயா என்று சொல்லித் தொலைத்திருக்கலாம் இல்லையா? அதற்கு உம்மைத் தடுத்தது எது? நீர் என்ன தைரியத்தில் இன்று என்னிடம் வந்து பேசினீர்?
நீர் எங்களுக்குக் கொடுத்த மன உளைச்சலை எவ்வளவு பணத்தினாலும் ஈடு செய்ய முடியாது. இனிமேல் என்னோடு பேசாதீர். உமக்குப் பணம் தேவையானால் சினிமா சங்கத்தினரிடம் சொல்லும். பழைய சினிமா கலைஞர்களுக்கு அவர்கள் உதவித் தொகைத் திரட்டித் தருவார்கள். இந்த மாதிரி எழுத்தாளர்களிடம் திருடாதீர். எழுத்தாளர்களிடம் திருடுவது ஞானிகளிடம் திருடுவதற்கு ஒப்பானது. நானே உஞ்சவிருத்தி செய்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னிடம் திருட உமக்கு எப்படி மனம் வந்தது?
இனி என்னிடம் பேசாதீர். முடிந்தால் என் பணத்தை எனக்குத் திருப்பித் தர முயற்சி செய்யும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எத்தனையோ பேர் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். நீரும் ஒருவர் என்று எடுத்துக் கொள்கிறேன்.
சாரு நிவேதிதா