சௌந்தரும் நானும்…

என் வாழ்வில் அராத்து அளவுக்கு என்னைப் பாதித்த மனிதர்கள் யாரும் இல்லை. ஒரே காரணம்தான், நான் எப்படி வாழ நினைக்கிறேனோ அப்படி வாழ்கிறார் அவர். இந்த உலகில் சுதந்திரம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பவர்கள் நான் பார்த்த வரை அவந்திகாவும் அராத்துவும்தான். ஆனால் தான் சுதந்திரமாக இருப்பது அவந்திகாவுக்குத் தெரியாது. அராத்துவுக்குத் தெரியும்.

அராத்துவுக்கு அடுத்தபடியாக என்னைப் பாதித்த மனிதர் சௌந்தர் ராஜன் என்ற பெயரைக் கொண்ட யோகா குரு சௌந்தர். சௌந்தரை விட மூத்தவரான ஜெயமோகனே சௌந்தரை மிகவும் பவ்யமாக குருஜி என்றுதான் என்னிடம் குறிப்பிட்டார். அநேகமாக குருஜியின் வாழ்வில் அவரை சௌந்தர் என்று என் கல்லூரித் தோழனைப் போல் அழைப்பவன் அடியேன் ஒருவனாகத்தான் இருப்பேன். என்னவோ தெரியவில்லை, அவரிடம் எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. எனக்கு இந்தக் குடும்பச் சிறையிலிருந்து பரோல் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அந்தியூர் யோகா முகாமுக்குச் சென்றிருப்பேன்.

இப்படி ஒரு யோகா குருவை நான் ஐம்பது ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் கிடைத்தது அந்த பாக்கியம். இன்னும் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. அதற்கான கருவியைச் சுத்தம் செய்ய வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நினைப்பது எல்லாவற்றையும் கிடைக்கச் செய்கிறான் தகப்பன்.

சௌந்தர்

அந்தத் தகப்பனுக்கும் சௌந்தருக்கும் நன்றி.

கோவையில் சௌந்தரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. நான் புகைப்படம் என்று சொல்வது புகைப்படக்காரருக்காக ‘போஸ்’ கொடுத்து சீஸ் சொல்வது அல்ல. இயல்பாக எடுக்கப்படும் புகைப்படத்தைச் சொல்கிறேன். அதையும் மீறி சக்திவேலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அருமையாக வந்திருக்கிறது. பலரிடமிருந்து கடிதம் வந்தது. இதைத்தான் சொல்கிறேன், ஏன் மனிதர்கள் மாற்றுத் திறனாளிகளின் மீது கருணையோடு பார்க்கிறார்கள்? அந்தக் கருணைமிகு பார்வையைக் கண்டால் எனக்குப் பற்றிக் கொண்டு வருகிறது. என்னுடைய இப்போதைய நாவலில் இதுதான் என் பாடுபொருள்.

சௌந்தரோடு சீஸ் இல்லாமல் இயல்பாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆமாம் நண்பர்களே, அராத்துவோடு என்னுடைய புகைப்படம் இருக்கிறதா? இரண்டு பேர் மட்டும் இருக்க வேண்டும். சீஸ் இல்லாமல் இருக்க வேண்டும்…

கொடுமை என்னவென்றால், ஸ்ரீராமும் நானும் சேர்ந்த ஒரு புகைப்படம் இல்லை. சரி, வெறும் ஸ்ரீராம் புகைப்படத்தையாவது இங்கே வெளியிடலாம் என்று அவரிடம் கேட்டேன். ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தார். பார்த்ததும் என் ரத்த அழுத்தம் 180 – 120 போய் விட்டது. (அவர் அனுப்பியிருந்தது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் ஒட்டும் புகைப்படம்!) அதற்குப் பிறகு அவரிடம் நான் புகைப்படம் என்ற வார்த்தையையே எடுக்கவில்லை.

***

மனுஷின் கவிதைத் தலைப்புகள் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனந்தி இன்று அனுப்பிய தலைப்பு: எப்படி இருக்கீங்க?

(நான் ஆனந்தியைத் தொடர்பு கொண்டு ஒரு வருடம் ஆகிறதாம். அதற்கான நக்கல். ஆனந்தி, புத்தக விழாவில் வர இருக்கும் வரம் என்ற புத்தகத்தை உனக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். போதுமா? இன்னொரு செய்தி, வரம் புத்தகத்தை நான் யாருக்கு சமர்ப்பணம் செய்யலாம் என்று வினித்தைக் கேட்டேன். ஆனந்திக்குச் செய்யுங்கள் என்றார். அந்த அளவுக்கு உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்.)

***