அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் எட்டாம் தேதி ஞாயிறு காலை பத்திலிருந்து பதினோரு மணி வரை வாசகர்களுடன் உரையாடுகிறேன். எல்லோரும் திரளாக வரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர்.
இங்கே பாரதீய வித்யா பவனில் ஆராவமுதாச்சாரியாரின் திருப்பாவை உபந்நியாசம் நிகழ்ந்த போது இரண்டு வார காலம் தினமும் காலை ஏழு மணிக்கு நூறு பேர் வந்தார்கள். இலக்கியத்தில் அல்ல, ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். ஆண்டாளிடம் பக்தி கொண்டவர்கள். அப்படி ஒரு நூறு பேராவது வந்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் ஏழிலிருந்து எட்டரை வரை நடந்த அந்த உபந்நியாசத்தின் ஆரம்பத்தில் ஐந்து பேர்தான் அமர்ந்திருப்பார்கள். நேரம் போகப் போகத்தான் அந்த ஐந்து நூறாக மாறும். ஆனால் ஐந்து பேருக்குக் கூட ஆச்சாரியார் பரம உத்சாகத்துடன் உபந்நியாசம் பண்ணுவார். அந்த மனநிலை எனக்கும் வேண்டும்.
கவிக்கோ அரங்கில் உயிர்மை கூட்டத்துக்கே நூறு பேர்தான் வந்ததாக மனுஷ் எழுதியிருந்தார். உயிர்மை கூட்டம் என்றால் குறைந்தது முந்நூறு. ஹால் நிரம்பி வழியும். அமர்ந்திருக்கும் அளவுக்கு நின்று கொண்டும் இருப்பார்கள். இப்போது ஏன் நூறு என்று தெரியவில்லை. கொஞ்சம் பொடி வைத்தும் எழுதியிருக்கிறார் மனுஷ். கல்ட் எழுத்தாளர்கள் என்றால் கூட்டம் கூடுகிறதாம். மனுஷ் வார்த்தையை உண்மையாக்குவதற்காகவாவது நூறு பேர் வாருங்கள். அஞ்சு பத்து என்றால் நொந்து விடுவேன்.