கர்னாடக முரசும்…

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற இந்தப் புத்தகம் உங்களிடம் இல்லையெனில் – என்னைக் கோபித்துக் கொள்ளாதீர்கள் – உங்களை என் நண்பராக நான் எண்ண மாட்டேன். இந்தப் புத்தகத்தைத் தட்டச்சு செய்து தருவதற்கு யாரும் கிடைக்காததால் என் நண்பர் அவருடைய நண்பரின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் தட்டச்சு செய்ததாகச் சொன்னார். இந்தப் புத்தகம் அளவுக்குத் தமிழில் அலைகளைக் கிளப்பிய புத்தகம் வெகு சில தான் இருக்க முடியும். ஜே.ஜே. சில குறிப்புகள், ஸீரோ டிகிரி, விஷ்ணுபுரம்… அவ்வளவுதான். இந்த மூன்றுக்குப் பிறகு கர்னாடக முரசுதான்.

இந்த நூலுக்கு நான் சமீபத்தில் எழுதிய முன்னுரை கீழே:

நான்–லீனியர் என்ற இந்த எழுத்துப் பாணி வாசிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதை இலக்கியப் பிரதியாக மாற்றுவது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்று. ஏனென்றால், இக்கதைகளுக்கான கச்சாப் பொருளை நான் குப்பையிலிருந்து எடுக்கிறேன். ரொலாந் பார்த் (Roland Barthes) இதை Literature of Trash என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே தமிழ்ச் சமூக வெளியில் ஏராளமான குப்பை மலிந்து கிடக்கிறது. இங்கே சினிமாவுக்கு எழுதுபவரும் ஜனரஞ்சகப் பொழுதுபோக்குக் குப்பைகளை உற்பத்தி செய்பவர்களும்தான் எழுத்தாளராகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குப்பைக் கிடங்கிலிருந்து குப்பையைப் பொறுக்கி அதை எப்படி கலையாக மாற்றுவது? அந்த மாயாஜாலத்தைத்தான் என்னுடைய நான்–லீனியர் கதைகள் செய்தன. கூடவே ஸில்வியாவும் இதே மாதிரியான கதைகளை எழுதினார். ஒரு கட்டத்தில் ஸில்வியாவும் நானும் கதைகளிலேயே விவாதித்துக் கொண்டோம். என் கதைக்கு அவர் பதில் கதை எழுதினார். அதற்கு நான் பதில் எழுதினேன். என் கதைகளை அப்போது முனியாண்டி என்ற புதிய புனைப்பெயரில் எழுதினேன். அப்போதெல்லாம் முனியாண்டி விலாஸ் பிரியாணி மிகவும் பிரபலம். அந்தப் பெயரையே என் புனைப்பெயராகக் கொண்டேன். (கதை மட்டும் அல்ல, புனைப்பெயரைக் கூட ஜனரஞ்சக் குப்பையிலிருந்து எடுத்துக் கொண்டேன்.) என்னையும் பிரம்மராஜனையும் ஸில்வியாவையும் தவிர யாருக்கும் முனியாண்டி யார் என்று தெரியாது. ஒரு இலக்கியக் கருத்தரங்கில் ஞானக்கூத்தன் முனியாண்டியின் எழுத்தைப் புகழ்ந்து பேசியதை நான் முதல் வரிசையில் அமர்ந்தபடி கேட்டேன். முனியாண்டி என்ற பெயரில் எழுதுபவர் என்றே அவர் குறிப்பிட்டார். முனியாண்டி யார் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

பிறகு நானும் ஸில்வியாவும் எழுதிய நான்–லீனியர் கதைகளைத் தொகுத்து வெளியிட விரும்பினார் நாகார்ச்சுனன். அப்போது நாகார்ச்சுனனும் இதே பாணியில் ஒரு கதை எழுதி தொகுப்பில் சேர்த்தார். கோணங்கியும் ஒரு கதை கொடுத்தார். ஏற்கனவே சொன்னேன், நான்–லீனியர் எழுத்து என்பது ஒரு இலக்கியப் பாணி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதனால் என்னுடைய கதைகளும் ஸில்வியாவின் கதைகளும் மட்டுமே கலையாக மாறின.

1990இல் இந்தப் புத்தகத்தை அச்சுக்குக் கொண்டு வந்தது ஒரு தனிக் கதை. அந்தக் காலத்தில் தட்டச்சு செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். என்னுடைய கதைகளை பெண்கள் தட்டச்சு செய்ய மறுத்து விட்டார்கள். 1990இன் பெண்கள். அதனால் நாகார்ச்சுனனே தன்னுடைய நண்பரின் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரமான இரவில் அமர்ந்து தட்டச்சு செய்தார்.

சாரு நிவேதிதா

https://rzp.io/l/karnatakamurasu