உடலும் பயிற்சியும்

அன்புள்ள சாருவுக்கு,
நான் சிவசங்கரன். மதுரையில் இருந்து வந்து அண்மையில் உங்களை சென்னையில் சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
அன்று, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் நீங்கள் ‘கலையும் மீறலும்’ பற்றிப் பேசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றியது. நேரம் இன்னும் இருந்திருந்தால் நீங்கள் தொட்ட இடங்களைப் பற்றி இன்னும் நிறைய பேசியிருப்பீர்கள் என்றே தோன்றியது.

நான் அவ்வளவு சிறப்பான பேச்சாளன் இல்லை என்று நீங்கள் அவ்வப்போது சொல்வீர்கள். உண்மையில், நீங்கள்தான் மிக Genuineஆகப் பேசுவதாக எனக்குத் தோன்றும். உங்களுடைய ஒரு மூன்று மணி நேர பேச்சை கேட்கும் வாய்ப்பு அமைந்தால் கேட்டாக வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கின்றேன்.

‘எழுபது வயது எழுத்தாளன்’ என்று நீங்கள் உங்களை சொல்லிக் கொள்ளும் போது சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது. 25 வயதான எனக்கு எப்படி இன்னும் உடலை சீர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை இல்லை. அன்றைய தினம், உங்களுடைய உடையும் ஒரு Rockstarஇன் உடையைப் போலவே இருந்தது. முக்கியமான விஷயம் என்னவெனில், உங்களிடம் பழக கொஞ்சம் தயக்கப்பட்டுத்தான் பேசினேன், நீங்கள் பேசிய விதம் என்னைப் பேரன்பில் கட்டிப்போட்டது. நீங்கள் பழகுவதற்குக் குழந்தை போல என்று வாசகர் வட்டத்தில் பேசக் கேட்டீருக்கிறேன். அது, மறுக்க முடியாத உண்மையே.
நான் சந்தித்த தருணம், குறிப்பிட வேண்டிய தருணம், நீங்கள் அன்பிற்கு எதிரான ஒரு மறுசீராய்வு நாவலை எழுதி வருவதாகவே மேடையில் சொன்னீர்கள். தொடர்ந்து சக வாசகர்களும் அதனை PDfஇல் படித்து அவரவர்களின் விவாதங்களை முன்வைப்பதை பார்க்கும் போது இந்நாவலைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் பெருகி வருகிறது. விரைவில், இதனை புத்தக வடிவில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சிவசங்கரன்

க்ராபி தீவு, தாய்லாந்து

சிவசங்கரனைப் போன்ற பல நூறு இளைஞர்களை புத்தகத் திருவிழாவில் சந்தித்தேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். அவர்களின் புகைப்படங்களையெல்லாம் வெளியிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால் ஒரு புகைப்படம் கூட தரமாக இல்லை. நேற்று ஆனந்தியோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் கூட சரியாக இல்லை. ஆக, யாரும் கற்றுக் கொடுக்காமலேயே நான் நன்றாகப் புகைப்படம் எடுக்கிறேன் என்பதை சமீபமாகத் தெரிந்து கொண்டேன். வேண்டுமானால் என் புகைப்படத்தைக் கொடுத்து எடுக்கச் சொல்லி அதை அவர்களுக்கு ஃபார்வர்ட் செய்யலாம்.

இந்த இளைஞர்களுக்கெல்லாம் நானொரு ஆதர்சமாக இருப்பது உவகையை அளிக்கிறது. உடல் நலம் பேண வேண்டும், சிவசங்கரன். யோகா குரு சௌந்தரை அணுகுங்கள். அவருடைய தொடர்பு எண் 99529 65505. பல சமயங்களில் அவர் யோகா வகுப்பில் இருப்பார் என்பதால் வாட்ஸப்பில் செய்தி அனுப்புங்கள். இப்போதெல்லாம் ஸூம் மூலமாகவே கற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது.

ஒரு நண்பர் எப்படி உடலை இப்படி இளமையாக வைத்திருக்கிறீர்கள் என்று ஆர்வத்துடன் கேட்டார்.

பளிச்சென்று பயிற்சி என்றேன்.

நான் சௌந்தரை சமீபத்தில்தான் சந்தித்தேன் என்றாலும், இருபது வயதிலிருந்து யோகா செய்து வருகிறேன். சிரசாசனம், நௌலி, வஜ்ராசனம், மயூராசனம் போன்றவை ஞாபகத்தில் இருக்கின்றன. பல காலம் சூரிய நமஸ்காரம் செய்திருக்கிறேன். பிறகு யோகாவை விட்டு விட்டேன். எனக்கு நாள் முழுவதும் என் அறையிலேயேதான் வேலை. யோகாவையும் வீட்டிலேயே செய்து முடித்து விட்டால் வெளியில் போகும் வாய்ப்பே இருக்காது. அதனால் யோகாவை நிறுத்தி விட்டு நடைப்பயிற்சிக்குப் போக ஆரம்பித்தேன். இரண்டு, என்னால் வீட்டில் ஃபோன் பேச முடியாது. வேலை வந்து கொண்டே இருக்கும். மூன்று, எனக்குப் பிடித்த இசையை வீட்டில் கேட்க முடியாது. இப்படி பல காரணங்கள். இப்போது காலையில் நடைப் பயிற்சி, மாலையில் யோகா என்று வைத்துக் கொண்டிருக்கிறேன்.

உடம்பை சீராக வைத்துக் கொள்வது ஒரு வாஷ் பேஸினை நல்ல முறையில் பேணுவதைப் போன்றதுதான். வாஷ் பேஸினை சுத்தம் செய்யவில்லை எனில் அது மஞ்சளாக மாறி, பின்னர் கருப்பாக ஆகி விடும். அப்படித்தான் உடலும். நான் பயிற்சியில் இல்லாத நாளே என் வாழ்வில் இல்லை. இப்போது கூட ஒன்றரை மணி நேரம் யோகா செய்து விட்டுத்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சாரு