நேற்று பொங்கலும் அதுவுமாய்
கொஞ்சம்
மனம் உடைந்து விட்டது
விரிவாகச் சொல்ல வேண்டும்
ஆனால் விரிவு கவிதைக்காகாது
இரண்டுக்கும் இடையிலாகச் சொல்ல
முயற்சிக்கிறேன்
புத்தக விழாவில் நுழைகிறேன்
ஸ்தம்பிக்க வைக்கும் அழகி ஒருத்தி
என்னை நெருங்கி வந்து
நான் உங்கள் வெறித்தனமான ரசிகை
என்று சொல்லிக் கை குலுக்கினாள்
பெயர் சொன்னாள்
அழகாக இருப்பதை விட
அதற்கேற்ப ஆடை தேர்வது
ஒரு கலை
இவள் கலைஞி
அப்போது அந்தப் பக்கம்
போன ஒரு இளைஞனை
பம்பரத்தைச் சுண்டி விடுவது போல்
கைசாடையில் அழைத்து
ஒரு ஃபோட்டோ என்றாள்
சகஜமாக என் தோளில் கைபோட்டு
ஒரு ஃபோட்டோ
சட்டென்று மீண்டும் கைகுலுக்கி
நாம் முன்பே சந்தித்திருக்கிறோம்
எனச் சொல்லி
மின்னலைப்போல்
மறைந்தாள்
நாலு எழுத்துப் பெயர் என்பது
ஞாபகம் இருக்கிறது
பெயர் மறந்து போனேன்
யோசித்து யோசித்து
மண்டை கலங்கி விட்டது
அந்தப் புகைப்படத்தை
ஒருமுறை பார்க்க வேண்டும்
நான் நன்றாக வந்திருக்கிறேனா
என்று தெரிய வேண்டும்