பெயர்

நேர்ப்பழக்கத்தில் நான் மிக இனிமையாகப் பழகக் கூடிய ஆள்.  ஆனால் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் பிம்பம் நான் மிகவும் எதிர்மறையான ஆள் என்பது.  Negative vibesஐப் பரவ விடுபவன்.  இன்றைக்கு சாரு யாரைத் திட்டி எழுதியிருப்பார் என்று தெரிந்து கொள்வதற்காகவே என் இணைய தளத்தைப் படிப்பவர்கள் உண்டு.   இப்போதெல்லாம் நான் எதிர்மறை விமர்சனங்களைக் குறைத்து விட்டேன்.  முக்கியமாக, சினிமா விமர்சனம் எழுதுவதில்லை.  அதுவே பெரும்பாலான எதிர்மறை விமர்சனத்தைக் குறைத்து விட்டது.  படித்தே ஆக வேண்டிய புத்தகம் என்று நன்றாகத் தெரிந்தால்தான் படிக்கிறேன்.  அதனால் புத்தகங்களை விமர்சிப்பதும் நின்று விட்ட்து.  இவ்வாறாக நானே எதிர்மறையான விஷயங்களிலிருந்து என்னைக் காபந்து பண்ணிக் கொள்கிறேன்.

ஆனாலும் முழுமையாக அப்படி இருக்க முடிவதில்லை.  முழுக்க முழுக்க சுரணையே இல்லாமால் எருமைமாட்டைப் போல் இருந்தால்தான் அப்படி இருக்க முடியும்.  அப்படி இருந்தால் எழுத்து என் கைவிட்டுப் போய் விடும்.  இல்லாவிட்டால் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.  என்னால் அது சாத்தியமே இல்லை. 

சமீப காலத்தில் நான் பூச்சி என்ற தலைப்பில் 2020இல் – கொரோனா காலகட்டத்தில் – எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து சீரமைத்துக் கொண்டிருந்தேன்.  இன்னமும் வேலை முடியவில்லை.  பைத்தியம் பிடிக்க வைக்கும் வேலை அது.  என்னைத் தவிர வேறு யாரும் அதைச் செய்ய முடியாது.  அத்தனை குழப்பமான வேலை.  பக்கத்தில் வைன் இருந்தாலாவது பரவாயில்லை.  வீட்டில் அந்தப் பேச்சையே எடுக்க முடியாது.  இப்படி அலுப்பாக இருந்த சமயத்தில்தான் ஒரு புத்தக பார்சல் வந்தது.  எந்தப் புத்தகம் வந்தாலும் ஆசையாகப் பிரித்துப் பார்ப்பது என் வழக்கம்.  அப்படிப் பிரித்தேன்.  அச்சையும் காகிதத்தையும் அமைப்பையும் பார்த்து வியந்தேன்.  புத்தகம் என்றால் இப்படி வர வேண்டும் என்ற நினைப்போடு கவரைப் பார்த்தேன்.  அந்த நூலாசிரியரே அவர் கைப்பட விலாசம் எழுதி எனக்கு அனுப்பியிருந்தார்.  அவர் முகவரிதான் அனுப்பிய இட்த்தில் இருந்தது.  அவரைப் பற்றி முதல் முதலாக அறிகிறேன்.  ஃபோன் செய்து நன்றி சொல்லலாம் என்று முகவரியில் இருந்த அவருடைய ஃபோன் நம்பரைக் குறித்துக் கொண்டேன்.

உள்ளே புரட்டிய போது நன்றி என்று சொல்லி நான்கு பேரின் பெயர்கள் இருந்தன.

மூத்தோன் கோணங்கி, கதை சொல்லி பா. வெங்கடேசன், ஆசான் ஜெயமோகன், வழிகாட்டி எஸ். ராமகிருஷ்ணன். 

நல்லது.  என் எழுத்தோடு உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்றால் புத்தகத்தை எனக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? 

வேலை மெனக்கெட்டு எனக்குப் புத்தகம் அனுப்பியிருக்கிறார்.  அது பெரிய விஷயம்.  எனக்கெல்லாம் ஒரு குரியர் அனுப்ப வேண்டுமென்றால், அது மிக மிக சிரமமான காரியம்.  பார்சல் செய்யத் தேவையான காகிகதத்திலிருந்து ஒவ்வொரு பொருளுக்காகவும் அலைய வேண்டும்.  ஆனால் இந்த இளம் எழுத்தாளருக்கு அவருடைய படைப்பை எனக்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.  தோன்றியது சரி.  ஆனால் திருமணப் பத்திரிகையில் சித்தப்பன் பெயரையெல்லாம் போட்டு விட்டு பெரியப்பன் பெயரைப் போடவில்லை என்றால் என்ன நடக்கும்?  கொலை.

கொலையைத் தவிர்க்க வேண்டுமானால் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?  பெரியப்பன் பெயரையும் போட்டுத் தொலைக்கலாம்.  பெரியப்பன் பெயரைப் போடவில்லை.  சரி.  கொலையைத் தவிர்க்க இன்னொரு வழியும் இருக்கிறது.  பெரியப்பனுக்குப் பத்திரிகை வைக்காதே.  முற்றாகத் தவிர்த்து விடு. 

இந்த எழுத்தாளர் அதையும் செய்யவில்லை.  பெரியப்பனை அவமதித்து விட்டு பெரியப்பனுக்கே பத்திரிகையும் அனுப்பியிருக்கிறார்.

என்னிடம் அவருடைய ஃபோன் நம்பர் இருந்தது அல்லவா?  அவருக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன். 

மேலே எழுதியிருந்ததைத்தான் அதில் சுருக்கமாகத் தெரிவித்தேன்.  வேறு எழுத்தாளர்கள் என்றால் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.  அல்லது, எல்லா இளம் எழுத்தாளர்களையும் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் இருந்தால் படித்து விட்டு நாலு நல்ல வார்த்தை எழுதுவார்கள்.  ஆனால் நான் அப்படி இல்லை.  தமிழ்நாட்டிலேயே சுரணையுணர்வு உள்ள ஒருசில நபர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.  அதனால்தான் திரும்பத் திரும்ப நான் எழுதுவது எதிர்மறையாக இருப்பதாக பலருக்கும் தோன்றுகிறது.  ஒட்டு மொத்த சமூகமே சுரணை இல்லாமல் ஒருவரை ஒருவர் அவமதித்துக் கொண்டு எருமைகளைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  அந்த நிலையில் ஒரே ஒரு ஆள் கொஞ்சம் சுரணையுணர்வோடு இருந்தால் அவர் எதிர்மறை அதிர்வு உள்ள ஆளா? 

கவனமாக வாசியுங்கள்.  என் பெயர் போடுவது போடாதது பிரச்சினையே இல்லை.  என்னுடைய இலக்கு புக்கர் பரிசு.  அதுவும் கூட பரிசுக்காகவோ பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல.  என்னை உலகம் கொண்டாடுகிறது என்று இங்கே உள்ள சில லோக்கல் ஆட்களுக்குத் தெரிய வேண்டும்.  உதாரணமாக, ஒருவனை ஊரே ஒதுக்கி வைக்கிறது.  அவன் சர்வதேசப் போட்டியில் மெடல் வாங்கிக் கொண்டு வருகிறான்.  அப்போதாவது அவனுடைய அருமை லோக்கல் ஆட்களுக்குத் தெரியும் அல்லவா?  அதற்காகத்தான் புக்கர் பரிசு. 

இன்னொரு காரணம், நான் எழுதுவது சர்வதேச வாசகர்களை நோக்கி.  என் எழுத்து தமிழ்நாட்டு வாசகர்களுக்கானது மட்டும் அல்ல.  அதனால்தான் நான் ArtReview Asia என்ற பத்திரிகையில் பத்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்.  Amit Chaudhuri என்று ஒரு ஆங்கில எழுத்தாளர் இருக்கிறார். இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதுபவர்களில் அவர்தான் அதிகம் அறியப்படாதவர்.  ஆனால் அவர்தான் இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று உலகம் நம்புகிறது.  பிரிட்டனில் தொகுக்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுதியில் என் கதையும் அமீத் சௌத்ரியின் கதையும் உள்ளது.  Diabolically yours என்பது என் கதையின் பெயர்.  அந்தக் கதை நேநோ சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இருநூறு பேர் மட்டுமே படிக்கப் போகும் ஒரு தமிழ்ச் சிறுகதைத் தொகுதியில் ஒரு இளம் எழுத்தாளர் என் பெயரைப் போட்டு நான் உலகப் புகழ் அடைவேன் என்று நம்பும் அளவுக்கு நான் மூடன் அல்ல.  நான் சொல்வது சுரணையுணர்வு பற்றியது.  இந்த விவகாரத்தை அறிந்த என் நண்பர் கேட்டார், எப்படி ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கக் கூடிய அளவுக்குக் கூட சுரணையுணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் எழுத்தாளர்கள்?  இவர் என்னத்தை எழுதிக் கிழிக்கப் போகிறார்? 

திரும்பவும் சொல்கிறேன், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நன்றி சொல்லுங்கள்.  யார் பெயரையும் போடுங்கள்.  எனக்கு ஏன் அனுப்புகிறீர்கள்?  திரும்பவும் அதே உதாரணம்தான்.  சித்தப்பன் பெயரைப் போட்டு பெரியப்பன் பெயரைப் போடாமல் பெரியப்பனுக்கே திருமண அழைப்பிதழ் அனுப்பும் சுரணைகெட்டதனத்தைப் பற்றி மட்டுமே நான் எழுதுகிறேன்.  ‘இவன் பெயரைப் போடவில்லை என்று பொறாமைப்படுகிறான்’ என்று இதை குறுக்கிப் புரிந்து கொள்ளாதீர்கள்.  புரிந்து கொண்டால் உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.  கோணங்கியைத் தவிர மற்ற மூவரும் என் மரியாதைக்குரிய நண்பர்கள்.  மரியாதைக்குரிய சக எழுத்தாளர்கள்.  அவர்கள் எழுத்தை நான் மதிக்கிறேன். 

மேலும், தமிழ் இலக்கியத்தில் மூவர் என்றால் யார் என்று இப்போது எல்லோருக்கும் தெரியும்.  அதில் சமத்காரமாக ஒரு பெயரை நீக்கி விட்டு இன்னொரு பெயரை நுழைப்பது சிறுபிள்ளைத்தனம்.  இது அவரவர் விருப்பம் சார்ந்தது அல்ல, அவரவர் விருப்பப்படி செய்வதற்கு.  இதற்கு சமகால இலக்கியத்தில் ஒரு வரலாறு இருக்கிறது.  நாற்பது ஆண்டுக் கால வரலாறு அது. 

நானும் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் தொடர்ச்சியாக, இடைவெளியே இல்லாமல் நாற்பது ஆண்டுகளாக (நான் நாற்பத்தைந்து ஆண்டுகள்) ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்.  லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான்.  பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.  சே குவேரா பற்றிய முதல் கட்டுரை தமிழில் என்னுடையது.  படிகள் பத்திரிகையில் வந்தது.  ஜான் பால் சார்த்தரின் தத்துவம் பற்றிய முதல் கட்டுரை என்னுடையது.  இலக்கிய வெளிவட்டம் பத்திரிகையில் வந்தது.  ஒரு கட்டுரை அல்ல.  தொடர் கட்டுரை அது.

ஃபூக்கோ, ரொலாந் பார்த், தெரிதா போன்ற ஃப்ரெஞ்ச் அமைப்பியல்வாதிகள் பற்றிய அறிமுகம் எல்லாம் நான்தான் முதலில் செய்தேன்.  அதற்குப் பிறகுதான் நாகார்ச்சுன்ன், எம்.டி.எம். போன்றோர் விவாதிக்க ஆரம்பித்தனர்.  நான் அந்த ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகளை அறிமுகம் செய்த போது எம்.டி.எம். திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் முதுகலை மாணவர்.

இங்கே ஃபூக்கோ, ரொலாந் பார்த், தெரிதா போன்ற பெயர்களெல்லாம் வெறும் பெயர்கள் அல்ல.  உதாரணமாக, அறுபதுகளில் ஒருவருக்கு காஃப்கா என்ற பெயர் அறிமுகம் ஆனதைப் போன்றது அல்ல ஃபூக்கோ என்ற பெயரின் அறிமுகம்.  ஃபூக்கோ என்பது ஒரு தத்துவ நிலைப்பாட்டின் குறியீடு.  அதிகாரத்துக்கு எதிரான பின்நவீனத்துவப் புரிதலின் குறியீடு.  அது ஒரு தத்துவப் பள்ளியின் அடையாளம்.  எப்படி கார்ல் மார்க்ஸ் என்பது வெறும் பெயர் இல்லையோ அதே போன்றதுதான் நான் அறிமுகப்படுத்திய அத்தனை பேரின் பெயர்களும். 

இதெல்லாம் வெறும் பெயர்கள் அல்ல என்பதால்தான் எப்போதும் நான் குறிப்பிட்டு வந்திருக்கிறேன், ஜெயமோகனின் பள்ளி இந்தியத் தத்துவ மரபிலிருந்து தன்னுடைய வழியைத் தகவமைத்துக் கொண்டது.  சாருவின் பள்ளி இந்தியத் தத்துவ மரபோடு மேலைச் சிந்தனையையும் ஒருங்கிணைத்தது.  இசையில் செய்யப்படும் fusion மாதிரி.     

இதையெல்லாம் சொல்வதற்கு லஜ்ஜையாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் ஏன் சொல்கிறேன்?  மூவர் என்ற இடம் எப்படி வந்தது?  கதை எழுதுவதாலா?  வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, என்னை விட இருபத்தைந்து வயது மூத்தவரான இந்திரா பார்த்தசாரதி, கலாப்ரியா, நாஞ்சில் நாடன் போன்றவர்கள் அத்தனை பேரும் எங்கள் மூவரை விடவும் மூத்தவர்கள்.  அப்படியிருந்தும் ஏன் இந்த மூவர் பெயர் மட்டும் தனியாகச் சொல்லப்படுகிறது?  ஏனென்றால், ஜெயமோகனும் சாருவும் கருத்தை உருவாக்குகிறார்கள்.  எஸ்.ரா. தமிழர்களின் alma materஆகத் திகழ்கிறார்.  இதுதான் காரணம். 

ஜெயமோகனும் சாருவும் எப்படி கருத்தை உருவாக்குகிறார்கள்?  கருத்தை உருவாக்குவது என்றால் என்ன?

கதை எழுதியபடி எழுத்தாளனாக வாழ்வது ஒரு விதம்.  அசோகமித்திரன் மாதிரி.  பாரதியும் புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் வெறுமனே கதை மட்டுமே எழுதவில்லை.  கருத்தை உருவாக்கினார்கள்.  ஒரு பள்ளி என்று சொல்லக் கூடிய அளவுக்கு இயங்கினார்கள்.  பாரதியோடு ஒப்பிட்டால் புதுமைப்பித்தனும் சு.ரா.வும் கம்மிதான்.   அவர்களுக்குப் பிறகு அசுரர்களைப் போல் செயல்பட்டவர்கள் மூவர்.  அதனால்தான் மூவரின் பெயர் சொல்லப்படுகிறது.  கதை கட்டுரை எழுதியதால் அல்ல.  இதில் ஒரு இளைஞன் வந்து என் பெயரை அழித்து விட்டு ஒரு கதாசிரியரின் பெயரை நுழைத்தால் அது எனக்கு அசிங்கம் அல்ல. 

நான் அந்த இளைஞருக்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன்.  ஆனால் எப்போதுமே எல்லோருமே ஒரு தப்பு நடந்தால் அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று முன்னதை விட படு பயங்கரமான தப்பைத்தான்  செய்கிறார்களே ஒழிய கொஞ்சம் கூட முதல் தப்போடு நிறுத்திக் கொள்வோம் என்று விடுவதில்லை.

சார், என் ஆரம்ப காலத்தில் என்னை பாதித்தவர்களின் பெயரைத்தான் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறேன் சார், நீங்களும் என்னை பாதித்தவர்தான், என் புத்தக அலமாரியில் உங்கள் தேகம் நாவல் இருக்கிறது என்று அடுத்த தப்பைச் செய்தார் இளைஞர்.

ஐயா எழுத்தாளரே, என் நாவல் உங்கள் அலமாரியில் இருக்கிறதா இல்லையா என்பது அல்ல என் பிரச்சினை.  சித்தப்பன்களின் பெயரைப் போட்டு பெரியப்பன் பெயரைப் போடாமல் பெரியப்பனுக்கு எப்படி நீர் பத்திரிகையை அனுப்பலாம் என்பதே கேள்வி.  நீர் போட்டது உம் விருப்பம்.  எனக்கு எப்படி அனுப்பலாம்?

தம்பி, நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்.  இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் தெரிய வேண்டிய கதைதான்.

ராபர்ட் ஸ்வபோதா (Robert Svaboda) என்று ஒரு அமெரிக்கர்.  அவர் புனேயில் வந்து ஒரு அகோரியிடம் சீடராகச் சேர்கிறார்.  அந்த அகோரியின் ஒரே நிபந்தனை, தான் ஒரு அகோரி என்பதை யாரிடமும் சொல்லக் கூடாது.  அகோரியின் பெயர் விமலானந்தா. இந்தப் பெயர் கூட புத்தகத்துக்காக ராபர்ட் புனைந்த பொய்ப் பெயர்.  நிஜப்பெயரை ராபர்ட் யாருக்கும் சொல்லவில்லை.  சொல்லக் கூடாது என்பது அகோரியின் கட்டளை.  அகோரி பற்றி அவருடைய பத்து சீடர்களுக்கு மட்டுமே தெரியும்.  மற்றபடி அகோரிக்குத் திருமணம் ஆகி ஒரு மகளும் மகனும் உண்டு.  அகோரி பணக்காரர்.  ரேஸ் குதிரைகள் வளர்க்கும் பண்ணையார்.  அவர் அகோரி என்று ஊருக்குத் தெரியாது.  மனைவி மகளுக்குக் கூடத் தெரியாது.  அடிக்கடி சுடுகாட்டுக்குப் போய் பிணத்தின் மீது அமர்ந்து தவம் பண்ணுவார்.

சுடுகாட்டில் அவர் ஒருமுறை ஸ்மாஷன் தாராவைப் பார்த்தார்.  ஸ்மாஷன் – மசானம்.  தாரா – தாரகை.  மயான நட்சத்திரம் என்று தமிழில் சொல்லலாம்.  காளிதாஸன் பார்த்த அதே காளி.  அகோரியிடம் என்ன வேண்டும் என்று கேட்டது காளி.  ”எல்லோருக்கும் தேவை பணம்.  என்னிடம் அது போதும் போதும் என்று இருக்கிறது.  மற்றபடி ஒன்றும் வேண்டாம்” என்றார் விமல்.  ”நீ தவம் செய்தாய்.  நான் தர்ஸனம் கொடுத்தேன்.  ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டு” என்றாள் காளி. 

சரி, எனக்கென்று எதுவும் வேண்டாம்.  இருந்தாலும் நீ கேட்க வேண்டும் என்று சொன்னதால் கேட்கிறேன்.  நீ எப்போதும் என் கூடவே இரு. 

அதனால் காளி விமலின் இருதயத்திலேயே குடி கொண்டாள்.  அதன் காரணமாக, விமலே காளி அம்சமாக மாறி விட்டார்.  அதாவது, எல்லோருடைய மரண நாளும் தெரியும்.  எது எது எப்படி எப்படி நடக்கும், எல்லாம் தெரிய ஆரம்பித்தன.   மகனுக்கு ஒன்பது வயதில் சாவு.  என்னதான் அகோரி என்றாலும் பிள்ளைப் பாசம் வருத்தியது.  ஒன்பது வயதில் மகனின் மரணத்தைத் தடுக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்.  முடியவில்லை.  புத்தகத்தில் அந்த இடமெல்லாம் ஏதோ த்ரில்லர் நாவல் படிப்பது போல் இருக்கும்.

இப்போது நம் கதைக்கு வருவோம்.   விமலும் ராபர்ட்டும் மும்பைக்குக் குடிபெயர்கிறார்கள்.  ஒருநாள் மும்பை தொலைக்காட்சியில் விமலின் பேட்டி வருகிறது.  குரு தன் சிஷ்யனின் பேட்டியைக் காண ஆர்வத்தோடு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே வருகிறார். பேட்டியின் தொடக்கத்தில் ராபர்ட் தன் குருநாதர்களின் பெயர்களையெல்லாம் சொல்லி நன்றி தெரிவிக்கிறார்.  உடனே விமல் “இது அநியாயம், நீ எப்படி என் பெயரைச் சொல்லாமல் விடலாம்?” என்று கோபாவேசமாகக் கேட்கிறார். 

அதற்கு ராபர்ட் “நீங்களோ கால் உடைந்து படுத்துக் கிடக்கிறீர்கள்.  இந்த நிலையில் நான் உங்கள் பெயரைக் குறிப்பிட்டால் பலரும் உங்களைத் தொந்தரவு செய்வார்கள்.  அதைத் தவிர்ப்பதற்காகவே உங்கள் பெயரைக் குறிப்பிடவில்லை” என்கிறார். 

உடனே அகோரி “நீ சொல்வது சரியல்ல.  தர்மம் அல்ல.  என்னுடைய அசௌகரியத்துக்காக நீ எப்படி என் பெயரைக் குறிப்பிடாமல் போகலாம்?  இந்தப் பேட்டியை இனி யாரும் பார்க்கக் கூடாது என்று கோபமாகச் சொல்லி, மின்சாரத்தை நிறுத்தி விட்டார்.  அன்றைய தினம் மும்பை முழுவதும் நள்ளிரவு வரை மின்சாரம் இல்லை.   

மின் தடை குறித்த செய்தி மறுநாள் மும்பை டைம்ஸ் ஆஃப் இண்டியா உட்பட எல்லா தினசரிகளிலும் வந்தது.  ஏனென்றால், இன்று வரையிலும் கூட மும்பையில் மின் தடை என்றால் அது ஒரு செய்தியாகும் அளவுக்கு அங்கே மின்சாரத் தடை நேர்வது இல்லை. 

பிறகு ராபர்ட் தொலைக்காட்சி நிலையத்துக்கு ஃபோன் செய்து அந்தப் பேட்டியை ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுத்து, வேறு ஒரு பேட்டியை எடுக்கச் செய்தார்.  அதில் விமலானந்தாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.  தொலைக்காட்சி நிலையத்திடம் ராபர்ட் சொன்னாராம், பேட்டியைப் போடாதீர்கள், மீறி ஒளிபரப்பினால் தொலைக்காட்சி நிலையத்தையே என் குருநாதர் எரித்தாலும் எரித்து விடுவார் என்று.

என் பெயரே வேண்டாம், யாருக்கும் என் பெயரோ அடையாளமோ தெரியக் கூடாது, நான் ஒரு நிறுவனமாக ஆக மாட்டேன்,  என் ஆசியைப் பெறும் அளவுக்கு மனிதர்களுக்குத் தகுதி இல்லை என்றெல்லாம் சொல்லி விட்டு, ரேஸ் குதிரை வளர்ப்பவராக வாழ்ந்த ஒரு அகோரி கூட தன் மாணவன் தன் பெயரைக் குறிப்பிடவில்லை என்று தெரிகிற போது கோபம் கொள்கிறார்.  பேட்டியில் ராபர்ட் குறிப்பிடும் குருநாதர் யார் என்று விமலானந்தாவுக்கும் அவருடைய மற்ற ஒன்பது சீடர்களுக்கும் மட்டுமே தெரியப் போகிறது.  அப்படியும் “உன் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாதது உனக்கு தர்மம் அல்ல” என்றார் விமலானந்தா. 

ஆனால் இங்கே ஒரு இளைஞர் “உங்கள் தேகம் என் அலமாரியில் இருக்கிறது” என்று சொல்லி விட்டு என் பெயரைத் தவிர்க்கிறார். 

இது பற்றி நான் இருவரிடம் பேசினேன்.  டார்ச்சர் கோவிந்தன், கொக்கரக்கோ.  என்ன சொல்லியிருப்பார்கள் என்று நீங்கள் யூகிக்க முடியும்.  “நீங்கள் இருக்கும் உயரம் எங்கே?  இந்தப் பையன்கள் உங்கள் பெயரைச் சொல்லவில்லை என்று சிறுபிள்ளை போல் கோவிக்கலாமா?”

இதையே அரை மணி நேரம் விளக்கினார் டார்ச்சர்.

கொக்கரக்கோ சொன்னது மேலே நான் விளக்கியிருப்பதை ஒட்டி இருந்தது.

திரும்பவும் சொல்கிறேன்.  இது பெயர் போடும் விஷயம் அல்ல.  சுரணையுணர்வு சம்பந்தப்பட்டது.  அது என்னை உரச உரச என் வாழ்நாள் பூராவும் நான் அது பற்றி எழுதிக் கொண்டேதான் இருப்பேன்.

இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள்.  ஒரு மிடில் மேகஸின் ஆசிரியர் என்னை அழைத்தார்.  அவர் அந்தப் பத்திரிகையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த போது என் வீட்டுக்கு வந்தார்.  வாழ்த்தினேன்.  அதற்குப் பிறகு இந்தப் பதினைந்து ஆண்டுகளில் ஒரு நாலைந்து தடவை பேசியிருப்பார்.  அப்படி அபூர்வமாகப் பேசுபவர் இரண்டு தினங்களுக்கு முன் அழைத்தார்.

”நீங்கள் இதுகாறும் பேசி வந்த விஷயத்தைத்தான் இந்த இதழில் கவர் ஸ்டோரியாக ஆக்கியிருக்கிறோம்.  நீங்கள் பேசி வரும் விஷயம் என்பதால் நீங்கள் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.

நான் பத்திரிகைகள் படிப்பதை நிறுத்தி ஐந்தாறு ஆண்டுகள் ஆகின்றன.  படித்தால் ஒன்பது மாதத்தில் ஆயிரம் பக்கத்துக்கு ஔரங்ஸேப் என்ற நாவலை எழுதியிருக்க முடியாது.   ஆனால் எடிட்டர் ஃபோன் செய்து சொல்கிறாரே என்று புரட்டினேன்.  முதல் பக்கத்திலேயே வேட்டு.  எழுத்து மூலம் வாழ முடியாததால் வேறு வேலை பார்க்க வேண்டியிருக்கிறது என்று சொல்லி சில எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார் எடிட்டர். 

இரண்டாயிரம் ஆண்டு எழுத்துப் பாரம்பரியத்தில் நான்தான் முதல் முதலாக எழுத்தாளன் ஓசியில் வேலை செய்ய மாட்டான் என்று போர்க்கொடி உயர்த்தியவன்.  இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நீயா நானாவில் வந்து கொண்டிருந்தேன்.  ஒரு இரவு முழுவதும் கண் விழித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.  பிச்சைக்காசு அஞ்சாயிரம் கொடுங்கள் என்று கேட்டேன்.  உங்களுக்குத்தான் இலவச விளம்பரம் தருகிறோமே என்றார்கள்.  காசுதான் வேண்டும், விளம்பரம் வேண்டாம் என்றேன்.  அப்படி காசு கேட்டதால் கடந்த பத்து ஆண்டுகளாக விஜய் டிவியில் என்னைத் தடை செய்து விட்டார்கள். 

எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை என்று விட்டு விட்டேன். 

இனிமேல் எழுத்தாளன் கூலிக்கு மாரடிக்க மாட்டான் என்று நான் ஒருத்தனாகப் போராடியதால்தான் இன்று கட்டண உரை என்ற அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. 

ஆனால் இது பற்றி எழுதும் போது என் பெயரை இருட்டடிப்பு செய்து விட்டு என் நண்பர் பெயரைப் போடுகிறார் எடிட்டர்.  போட்டதில் தப்பில்லை.  ஆனால் எதற்கு என்னை அழைத்து அதைப் படித்துப் பார்க்கச் சொல்கிறீர்?  அப்போது மட்டும் என் பெயர் ஞாபகம் வருகிறதாக்கும்?

சார்வாள், இதே விஷயம்தான் எனக்கு நாற்பது ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.  ஒரு பிரபலம்.  என்னைப்  பார்க்கும் போதெல்லாம் நான்தான் அவரது கலை வாழ்வின் ஆசான் என்பது போல் சொல்வார்.  கல்லூரியில் படிக்கும்போதே என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலைப் படித்து உத்வேகம் பெற்றதாகப் பலமுறை சொல்வார். 

ஒரு பிரபல பத்திரிகையில் அவரிடம் பேட்டி எடுத்தார்கள்.  அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் என்ற கேள்விக்கு ஜெயமோகன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் என்கிறார் பிரபலம்.  ஜெ. எழுதிய விஷ்ணுபுரம் மற்றும் எஸ்.ரா.வின் உபபாண்டவம் தன்னைக் கவர்ந்தவை என்கிறார்.  ஆனால் தினந்தோறும் என்னைச் சந்திப்பவர். என் எழுத்தின் பெருமை பற்றி என்னிடம் பேசுபவர். அதனால் ஃபோன் செய்து கேட்டேன்.  ஏதேதோ சால்ஜாப்புகள் சொல்லி விட்டு பிறகு சற்று கோபத்துடன், “சார், இவ்வளவு கேட்கிறீர்களே, என் பெயரை நீங்கள் ஒரு தடவையாவது சொன்னதுண்டா?” என்று கேட்டார்.

அதோடு பேச்சை நிறுத்தி விட்டேன்.  சல்லித்தனமாக இருந்தது எனக்கு.  ஏனென்றால், அவர் பெயரை நான் சுமாராக இருபத்தைந்து முறையாவது என் கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பேன்.  ஏனென்றால், அவர் துறையில் அவர் முக்கியமானவர்.  எனக்குப் பிடித்தமானவர்.  நண்பர் என்பதால் அல்ல, நான் குறிப்பிட்டது. 

அப்படியானால் அவர்கள் என்னை வாசிப்பது, அவ்வப்போது புக்கட் (தாய்லாந்து) தீவுக்குப் போய் வேசிகளோடு சல்லாபிப்பது போலத்தானோ என்று நினைத்துக் கொள்கிறேன்.  வேசியிடம் போனதை யாராவது வெளியே சொல்வார்களா?

இதோடு சம்பந்தப்பட்ட இன்னொரு சம்பவம்.  1980இல் தில்லியில் ஒரு பையனைப் பார்த்தேன்.  குமுதம் விகடன் படித்துக் கொண்டிருந்தான்.  புத்திசாலி.  இருபத்தைந்து வயது இருக்கும்.  ஜனக்புரி பொஸங்கிப்பூரில் பக்கத்துத் தெரு.  தினமும் சந்திப்போம்.  அவனுக்கு உலக சினிமா, உலக இலக்கியம், நடனம், இசை, நாடகம் என்று எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தினேன்.  ஒரு மாணவனை உருவாக்குவது போல் உருவாக்கினேன்.  2000இல் அவன் ஒரு சிறுகதைத் தொகுதியை என்னிடம் கொடுத்தான்.  இடம் திருவல்லிக்கேணி.  அவன் எழுதிய சிறுகதைகள்.  பிரித்தால் சமர்ப்பணம் என்று போட்டு ஒரு எழுத்தாளரின் பெயர் இருந்தது.  கொஞ்சம் போதையில் இருந்தேன்.  ஓங்கி பளார் என்று அறைந்து விட்டேன்.  அதற்குப் பிறகு பெரும் கலவரம் ஆகி விட்டது.  அறைந்ததன் காரணம், என் பெயர் இல்லை என்பதனால் அல்ல.  இருபது ஆண்டுகளாக நான் அந்த எழுத்தாளரின் எழுத்தைக் கிண்டல் செய்து திட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் அவனும் சேர்ந்து திட்டிக் கொண்டிருந்தான்.   சமர்ப்பணம் செய்யும் அளவுக்கு அந்த எழுத்தாளர் தன்னை பாதித்தவர் என்று ஒருநாள் கூட சொன்னதில்லை.    

இதே விஷயம் குறித்து கொரோனா சமயத்தில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  அதை இங்கே மீண்டும் வாசிக்கத் தருகிறேன். 

***

8.6.2020 அன்று எழுதியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் அமெரிக்கத் தமிழரிடையே பிரபலமான ஒரு அன்பர் – ஒரு பிரபலமான இணையப் பத்திரிகையின் ஆசிரியரோ அல்லது ஆசிரியர் குழுவிலோ இருப்பவர் – எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.  

அன்புள்ள சாரு அவர்களுக்கு,

—————-(பத்திரிகையின் பெயர்) – பொலானோ சிறப்பிதழ் கொண்டு வருகிறது.

தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கலாமா?

தங்கள் கட்டுரைகளை ஜூன் 10 தேதிக்குள் அனுப்ப இயலுமா?

அன்புடன்,

அன்பரின் பெயரும் ஊரும் கண்டுள்ளது.

அன்னார் எனக்கு எழுதிய முதல் கடிதம் என்று நினைக்கிறேன்.  ஃபேஸ்புக்கில் அவரைப் பார்த்திருக்கிறேன்.  மற்றபடி மேற்படி கடிதமே முதல்.

இப்படி ஒரு கடிதம் என் சக எழுத்தாளர்களுக்குப் போயிருந்தால் ஒன்று, கட்டுரையை எழுதி அனுப்பியிருப்பார்கள்.  அல்லது, பதில் எழுதாமல் விட்டிருப்பார்கள்.  அல்லது, கட்டுரை எழுத முடியவில்லை என்றாவது பதில் எழுதுவார்களே ஒழிய யாரும் உட்கார்ந்து இப்படி ஒரு முழுநீள கட்டுரையை எழுத மாட்டார்கள்.  நான் மட்டும் ஏன் எழுதுகிறேன் என்றால், நாலாயிரம் வருஷப் பாரம்பரியத்தை நான் முதல் ஆளாக உடைக்கிறேன்.  எழுத்தாளன் என்றால் யார் என்பதை இந்த சுரணை கெட்ட சமூகத்துக்கு முதல் முதலாகப் புரிய வைக்கிறேன்.  முன்பு ஜெயகாந்தன் செய்தாரே எனக் கேட்கலாம்.  செய்தார்.  ஆனால் அவருக்கு ஆனந்த விகடனின் ஆதரவு இருந்தது.  காங்கிரஸ் கட்சி இருந்தது.  கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.  மூப்பனாரின் நண்பர்.  ஆனானப்பட்ட எம்ஜியாருக்கே ஜெயகாந்தன் என்றால் கொஞ்சம் உதறல்தான்.  நெருங்க மாட்டார்.  ஜெயகாந்தன் யார் என்று எம்ஜியாருக்குத் தெரியும்.  ஆனால் எனக்கு அப்படிப்பட்ட பலமான பின்னணி இல்லை.  அதனால் ஒண்டியாளாகச் செய்ய வேண்டியிருக்கிறது.

மேல் கண்ட கடிதத்தில் என்ன பிரச்சினை? உங்களில் பலருக்கு அது ஒன்றும் பிரச்சினையாகத் தெரியாது. எனக்கு அது எப்படி இருக்கிறது என்றால், வீதியில் செல்லும் பெண்ணிடம் போய், தயவாக, மிஸ், தங்களிடம் நான் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறேன், வருகிறீர்களா, ஜூன் பத்துக்குள் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பம் என்று சொன்னால் அவள் என்னை செருப்பைக் கழற்றி அடிக்க மாட்டாளா?  அதே கோபம்தான் எனக்கும் வருகிறது.  யார் நீங்கள் என்னிடம் கட்டுரை கேட்க?  அமெரிக்காவின் மிகப் பிரபலமான நகரில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து கொண்டு, முப்பது ஆண்டுகளாக தமிழ்ச் சங்கம் மூலம் மிமிக்ரி ஆர்டிஸ்ட் தாமுவையும், பட்டிமன்றம் ராஜாவையும் முப்பது முறை வரவழைத்துக் கொண்டு தமிழ்த் தொண்டு செய்கிறீர்கள்.   சரி, அந்தத் தமிழ்ச் சங்கத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையென்று நீங்கள் சொல்லலாம்.  ஆனால் அந்த எதார்த்தம் உங்களுக்குத் தெரியும்தானே?  உங்களால் முடிந்தது ஒரு இணைய இதழ்.  ஒத்துக் கொள்கிறேன்.  அது நல்ல தமிழ்ப் பணிதான்.  ஆனால் தமிழ்நாட்டில் வாழும் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு அமெரிக்கா போன்ற ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து கொண்டு என்ன செய்தீர்கள்?  ஒரு துரும்பையாவது அசைத்தீர்களா?  2000 டிசம்பர் மாதம் ஷோபா சக்தி என்னை பாரிஸ் வரவழைத்தார்.  அதற்காக என்னென்னவோ தாஸ்தாவேஜுகளைத் தயார் செய்து அனுப்பினார்.  ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு செய்தார்.  அப்போதுதான் வீசா கிடைக்கும்.  விமானக் கட்டணத்தை ஏற்றுக் கொண்டார்.  இத்தனைக்கும் நீங்கள் அமெரிக்காவில் வாழ்வது போல் அவர் நடுத்தர வர்க்கம் அல்ல.  இலங்கை அகதி.  போர்க்காலத்தில் ஃப்ரான்ஸுக்கு அகதியாகச் சென்றவர்.  அகதிகளுக்கான உதவித் தொகையில் மிச்சம் பிடித்து என் விமானச் செலவை அனுப்பினார்.  அது தவிர தினமும் கொஞ்ச நேரம் உணவகங்களில் கோப்பை கழுவிக் கொண்டிருந்தார்.  இப்போது அவர் ஃப்ரெஞ்ச் சினிமாவில் பிரபல நடிகர்.  இலக்கியத்திலும் நட்சத்திர எழுத்தாளனாகி விட்டார்.  ஆனால் நான் இருபது ஆண்டுகள் முந்திய கதையை ஒரு உதாரணத்துக்காகச் சொல்கிறேன்.

நான் அமெரிக்காவுக்கு என்னுடைய காசில் வருவதற்காக மூன்று முறை முயன்றேன்.  அமெரிக்காவிலிருந்து சரியான அழைப்பிதழ் இல்லாததால் மூன்று முறையும் வீசா நிராகரிக்கப்பட்டது.  மூன்று முறை.  அதுவும் எந்த அழைப்பும் இல்லாமல் என் பணத்தில் வருவதற்கே இந்த நிலை.  அதுவும் பல ஆண்டுகள் இடைவெளியில்.  ஆனால் பட்டிமன்றம் ராஜாவும், புலி போலவும் சிங்கம் போலவும் கமல் போலவும் குரல் கொடுக்கும் மிமிக்ரி தாமுவும் இதோடு நாற்பது தடவை அமெரிக்கா போய் வந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு தீபாவளியும் ஒவ்வொரு அமெரிக்க நகரத்துக்குப் போகிறார்கள்.  எனக்கு என் காசில் போக வீசா மறுக்கப்படுகிறது.  முறையான அழைப்பும் இல்லை.

சரி, இந்த லௌகீக விஷயத்தை விடுங்கள்.  என் நாவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.  சும்மா இல்லை.  ஸீரோ டிகிரி நாவல் சர்வதேச அளவில் பிரபலமான பதிப்பகமான ஹார்ப்பர்காலின்ஸால் இந்தியாவின் ஆகச் சிறந்த ஐம்பது புத்தகங்கள் என்ற தேர்வில் ஐம்பது புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  சர்வதேசப் பரிசான Jan Michalski பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றது. அதேபோல் Marginal Man நாவலுக்கு லண்டன் பத்திரிகையான ArtReview Asia பத்திரிகையில் மதிப்புரை வந்தது.  உலகப் புகழ் பெற்ற Allan Sealy அதற்கு முன்னுரை கொடுத்தார்.   இந்த நாவல்களில் ஒவ்வொரு பிரதி வாங்கி உங்களுடைய நகர நூலகத்தில் வைப்பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்தீர்களா?  எத்தனை முறை என்னுடைய இணைய தளத்தில் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டே இருக்கிறேன்?  நீங்கள் பேசுகின்ற, நீங்கள் எழுதுகின்ற, நீங்கள் பத்திரிகை நடத்துகின்ற, நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்கின்ற ஒரு மொழியின் முன்னணி எழுத்தாளனான என்னுடைய எழுத்து ஆங்கில வாசகர்களைச் சென்றடைய ஒரு துரும்பையாவது அசைத்ததுண்டா நீங்கள்?  அப்படியிருக்க நான் என்ன டேஷுக்கு ரொபர்த்தோ பொலான்யோ (Roberto Bolaño) பற்றிக் கட்டுரை எழுத வேண்டும்?  எத்தனை காலத்துக்குத் தமிழ் எழுத்தாளர்கள் ஐரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றியும் அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருப்பது?  புதுமைப்பித்தனும் க.நா.சு.வும் தங்கள் வாழ்நாள் பூராவும் வெளிநாட்டு எழுத்தாளர்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் அவர்களின் பெயர் கூட அவர்கள் மொழிபெயர்த்த எழுத்தாளர்களின் தேசத்து புத்திஜீவிகளுக்குத் தெரியாது.  ஏன், தமிழர்களுக்கே அவர்களின் பெயர் தெரியவில்லை.  இந்த வெளிநாட்டு எழுத்தாளர் அறிமுக பஜனையையே தமிழ் எழுத்தாளன் எத்தனை நூற்றாண்டுகளுக்கு ஐயா செய்து கொண்டிருப்பது?  தமிழ் எழுத்தாளர்கள் என்ன ப்ளோஜாபர்களா?

எனக்கு அறுபத்தாறு வயது ஆகிறது.  என்னுடைய காசில் அமெரிக்கா செல்ல மூன்று முறை வீசா மறுக்கப்படுகிறேன்.  முறையான அழைப்பு இல்லை என்று தூதரகத்தில் மறுக்கிறார்கள்.  இங்கே காமெடியன்களெல்லாம் அமெரிக்காவுக்கு டவுன் பஸ்ஸில் போவது போல் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இத்தனைக்கும் சென்ற ஆண்டு சீலே வரை சென்றேன்.  வழக்கம் போல் அமெரிக்க வீசா கிடைக்கவில்லை.  அமெரிக்கா வழியாகப் போனால் டிக்கட்டில் பாதி காசு குறைந்திருக்கும்.  இதெல்லாம் வேண்டாம், குறைந்த பட்சம் என்னுடைய மார்ஜினல் மேன்  நாவல் இருபது டாலருக்கு அமேஸான் டாட் காமில் கிடைக்கிறது.  அனுப்பினால் ஹார்ட் காப்பி வீடு தேடி வரும்.  அதை வாங்கி உங்கள் ஊர் நூலகத்தில் கொடுத்திருந்தால் மனம் மிக மகிழ்ந்து ரொபர்த்தோ பொலான்யோ பற்றிய கட்டுரையை அனுப்பி வைத்திருப்பேன்.  ஒரு தமிழ் எழுத்தாளனின் மிகக் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு.  அதையே காணோம்.

இவர்கள் கட்டுரை வேண்டும் என்றால் – அதுவும் பதினைந்தே நாட்களில் – எழுதிக் கொடுத்து விட வேண்டும்.  அதுவும் என்ன?  ஓசியில்.  அந்தக் கடிதத்தில் பணம் பற்றி ஏதாவது ஒரு குறிப்பு இருக்கிறதா பாருங்கள்.  எல்லாமே ஓசி.  உங்களுக்கு அமெரிக்காவில் என்ன எல்லாம் ஓசியிலா கிடைக்கிறது?  லண்டனுக்கு ஒரு கதை அனுப்பினேன்.  ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்பினார்கள்.  இங்கே என்னவென்றால், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு ஓசியில் ஓல்பஜனை பண்ணக் கூப்பிடுகிறார்கள்.

இவர்களுக்கு என்ன நினைப்பு தெரியுமா?  எனக்கு இவர்களின் பத்திரிகையில் எழுத வாய்ப்பு தருகிறார்களாம். 

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.  மூணு ஜென்மம் எடுத்தாலும் மறக்காது.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.  சம்பவத்தில் ஈடுபட்டவர் வேறு ஒரு நபர். அமெரிக்கப் பிரபலம். அப்போது நான் குடிப்பேன்.  நண்பர்களுடன் சென்னையில் ஒரு சர்விஸ் அபார்ட்மெண்ட்டில் பேசிக் கொண்டிருந்தேன்.  குடி ரெண்டாம் பட்சம்தான்.  கூட்டத்தில் குடிக்காதவர்களே அதிகம்.  நாலைந்து பேர்.  என் பக்கத்தில் ரெமி மார்ட்டின்.  அப்போது அதன் விலை ஐந்தாயிரம் ரூபாய்.  அப்போது ஒரு அன்பரின் போன் வந்தது.  அமெரிக்காவிலிருந்து விடுப்பில் வந்திருக்கிறேன்.  உங்களைச் சந்திக்க முடியுமா?  நான் எங்கே இருக்கிறேன் என்று சொன்னேன்.  அன்பரும் வந்தார்.  பெரிய பழக்கமெல்லாம் கிடையாது.  ஒருவரை ஒருவர் கேள்விப்பட்டிருந்தோம்.  அவர் என் எழுத்தைப் படித்திருக்கலாம்.  அவ்வளவுதான்.

விருந்தாளியை கவனிக்க வேண்டாமா?  ரெமி மார்ட்டினும் இருந்தது.  இந்திய சரக்கும் இருந்தது.  சாப்பிடுகிறீர்களா என்று கேட்டேன்.  இந்திய சரக்கு ஒத்துக் கொள்ளாது, ரெமி மார்ட்டின் சாப்பிடுகிறேன் என்றார்.  நாலு பெக் சாப்பிட்டார்.  நானும் சாப்பிட ரெமி மார்ட்டின் தீர்ந்து விட்டது.  காலை வரை பேசுவதற்கு எனக்கு தீர்த்தம் இல்லை.  அன்பரும் ஒரு மணி நேரத்தில் கிளம்பி விட்டார்.  என் நண்பர்கள் என்னைத் திட்டினார்கள்.  அமெரிக்க அன்பர் கிளம்பும் போது சற்றே குற்ற உணர்ச்சியுடன் ”நீங்கள் வைத்திருந்ததைக் குடித்து விட்டேன், எப்படியாகிலும் நாளை உங்களுக்கு ஒரு ரெமி மார்ட்டின் பாட்டில் கிடைக்கச் செய்கிறேன்” என்று வாக்களித்தார்.  இதோ பத்து ஆண்டுகள் ஆகி விட்டன.  ஒரு கடிதம் இல்லை.  போன ரெமி மார்ட்டின் போனதுதான்.  அமெரிக்க வாழ் தமிழ் நண்பர்களே, ஒரு அமெரிக்கன் இதை எத்தனை offensiveவாக எடுத்துக் கொள்வான் என்று உங்களுக்குப் புரியும்தானே?  இதை அந்த ஆள் அமெரிக்காவில் செய்ய மாட்டார்.  இந்தியாவில் செய்வார்.  ஏனென்றால், இந்தியர்கள் என்றால் கேணக்கூதிகள் என்று நினைத்து விட்டார்.  அதுதான் பிரச்சினை.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அப்போது என் ரெமி மார்ட்டினைக் குடித்து விட்டு ஓடியவருக்கும் இப்போது வந்து ரொபர்த்தோ பொலான்யோ கட்டுரை கேட்பவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதுதான். அமெரிக்க வாழ் தமிழர்களில் பெரும்பாலானோர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

நான் எதற்கு ஐயா ரொபர்த்தோ பொலான்யோ பற்றி எழுத வேண்டும்?  ஒவ்வொரு தமிழ் எழுத்தாளனும் இங்கே சோத்துக்கு சிங்கி அடித்துக் கொண்டிருக்கிறான்.  பப்ளிஷரைக் கேட்டால் ஐம்பது காப்பி போட்டு விட்டேன், அமர்க்களமாக விற்கிறது என்கிறார்.  எட்டு கோடி தமிழர்களுக்கு இந்த ஐம்பது காப்பிதான் தமிழ் எழுத்தாளனின் அடையாளம்.   இங்கே தமிழ் எழுத்தாளன் சோத்துக்கு சிங்கியடிக்காமல் இருக்க ஒரே வழிதான் இருக்கிறது.  அது, சினிமாவுக்கு எழுதுவது.  அதில் உள்ள சிக்கல்களைத்தான் நான் விலாவாரியாக எழுதித் தீர்த்து விட்டேன்.

எவ்வளவு எழுதினாலும் என்னை என்னால் ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.  அது எப்படி இவ்வளவு எழுதியும் அதில் ஒன்றைக் கூட படிக்காமல் திரும்பவும் ஓசி பஜனைக்கே வருகிறார்கள்?  அதுவும் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு?  ”15 நாளில் ரொபர்த்தோ பொலான்யோ பற்றி ஒரு கட்டுரை தர முடியுமா?”  நான் எழுதிக் கேட்கவா, 15 நாளில் எனக்கு நீங்கள் ரெண்டாயிரம் டாலர் அனுப்ப முடியுமா? என்னய்யா விளையாட்டாக இருக்கிறது?  எழுத்தாளன் என்றால் ஓசியில் வரும் ஜிகலோவா?  என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  தமிழ் சினிமா ஹீரோக்களிடம் ஃபைனான்ஸ் பற்றிப் பேசாமல் ஒரு வார்த்தை உங்களால் பிஸினஸ் பேச முடியுமா?  முதலில் அவர்களையெல்லாம் உங்களால் தொடர்பு கொள்ளத்தான் முடியுமா?  அவர்களெல்லாம் வெறும் entertainers.   ஆனால் எழுத்தாளன் என்றால், என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள்?  உங்களுக்கெல்லாம் அந்த அமெரிக்க போலீஸ் தெரக் சாவின்தான் லாயக்கு.