பொறாமை

வாழ்வில் இதுவரை நான் அனுபவிக்காத ஒரு உணர்வு பொறாமை. ஆனால் என்னைப் பார்த்து பொறாமை கொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன். போயும் போயும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்கிறார்களே என்று ஆச்சரியமும் அடைந்திருக்கிறேன். சமீபத்தில் கூட புத்தக விழாவில் ஒரு சக எழுத்தாளர் என்னைப் பார்த்து பொறாமையில் வெந்து மாய்ந்ததை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் நான்தான் வித்தியாசமான ஆள் இல்லையா? என்னை ஜெயிலில் தூக்கிப் போட்டால் கூட ஒரு அற்புதமான நாவலோடு வருகிறவன். அதனால் இந்தப் பொறாமை கூட எனக்கும் உங்களுக்கும் நல்லதே பண்ணி விட்டது.

அராத்துவின் நோ டைம் டு ஃபக் நெடுங்கதை என் எஃப் டி மூலமாக முதல் பிரதி இருபத்தைந்தாயிரமும் அடுத்தடுத்த நான்கு பிரதிகளும் தலா பத்தாயிரமுமாக விற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு நூறு போகும் என்பது என் கணக்கு. அதற்கு ஆறு மாதம் ஆகும்.

இதன் மூலம் உத்வேகம் அடைந்த நான் (பொறாமை உத்வேகமாக மாறி விட்டது பாருங்கள்!) அசெக்‌ஷுவல் என்ற தலைப்பில் ஒரு சிறு நாவல் எழுத ஆரம்பித்து விட்டேன். முழுக்கவும் ஆட்டோஃபிக்‌ஷன். ஔரங்ஸேப் எழுதும்போது இனி என் வாழ்வில் ஆட்டோஃபிக்‌ஷனே கிடையாது என்று நினைத்தேன். ஆனால் பகவான் வேறு மாதிரி நினைத்து மனிதர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார். தலைப்பு மாறினாலும் மாறலாம். ஆனால் அசெக்‌ஷுவலுக்கு இணையான தலைப்பு கண்டு பிடிக்க வேண்டும். இந்த சிறுநாவல் கிட்டத்தட்ட காமரூப கதைகள் போல் இருக்கும்…

தொழில்நுட்ப உதவி அராத்து. புத்தகத்துக்குள்ளே இசை, ஓவியம் எல்லாம் இருக்கும். தொழில்நுட்ப உதவிக்காக பத்து சதம் கமிஷன் கேட்டிருக்கிறார் அராத்து. இனிமேல்தான் பேசி கீசி அதை ஐந்தாகக் குறைக்க வேண்டும். எனக்கு வாக்கு வன்மை கம்மிதான். சீனிக்கும் செண்ட்டிமெண்ட்ஸ் கிடையாது. எதை வைத்துப் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

முதலில் கதையை எழுதுவோம். இதற்கிடையில் தியாகராஜாவை நவம்பர் முதல் தேதி கொடுக்கிறேன் என்று பதிப்பகத்திடம் சத்தியம் செய்து விட்டேன். முடித்து விடலாம். அசெக்‌ஷுவல் நமக்கு சும்மா கைப்பந்து மாதிரி.