பொறாமை – 2

கமிஷன் சம்பந்தமான பேச்சு வார்த்தையின்போதுதான் தெரிந்தது, என்.எஃப்.டி. மூலம் புத்தகம் விற்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல என்று. ஒவ்வொரு பக்கத்தையும் வடிவமைத்து முடிக்க இரண்டு மாதம், ஒவ்வொரு பக்கத்திலும் இசையமைக்க ஒரு மாதம் – இப்படி புத்தகம் தயாராக மூன்று மாதம் ஆகுமாம். அதிலும் ஒரு பக்கத்தைப் படிக்க நாற்பது ஐம்பது நொடிகள் என்றால், நாற்பது ஐம்பது நொடிகளுக்கு இசையமைப்பது பெரிய சவால் என்கிறார் இசையமைப்பாளர் சத்யா. எல்லாம் சேர்த்து புத்தகத் தயாரிப்புக்கே ஐம்பது ஆயிரம் ஆகும். ஆனால் ஒரு புத்தகத்தைப் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஒருவர் அதை பின்னாளில் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கூட விற்கும் சாத்தியம் இருக்கிறது. உதாரணமாக, ஸீரோ டிகிரி நாவலை நான் கையால்தான் எழுதினேன். அதையே ஒரு பத்து பிரதி எழுதி வைத்திருந்தேன் என்றால், இன்று அந்த ஒவ்வொரு பிரதியின் மதிப்பு எவ்வளவு? அப்படித்தான் நாள் ஆக ஆக மதிப்பு கூடும். இந்தியாவிலேயே என்.எஃப்.டி.யில் வெளிவந்த முதல் புத்தகம் என்று பெயர் பெற்ற நோ டைம் டு ஃபக் நெடுங்கதையின் மதிப்பு பத்து வருடம் கழித்து எவ்வளவு ஆகும்? நிச்சயம் இன்றைய மதிப்பை விட நாலைந்து மடங்கு அதிகம்தான் இருக்கும்.

வரம் என்று என்னுடைய கட்டுரைத் தொகுப்பு ஜனவரி புத்தக விழாவில் வெளியானது. மொத்தமே நூறு பிரதிதான் விற்கும். அதன் மூலம் எனக்குக் கிடைக்கும் ராயல்டி இரண்டாயிரம் ரூபாயாக இருக்கும். சமூகம் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் நான் என்ன செய்ய முடியும்? என்.எஃப்.டி.யில்தான் விற்பேன்.

ஆனால் கவலை வேண்டாம், A-செக்‌ஷுவல் என்ற இந்த நாவல் மட்டுமே என்.எஃப்.டி. மூலம் வரும். தியாகராஜா எல்லாம் காகிதப் புத்தகம்தான். தியாகராஜா உங்கள் கையில் வரும் டிசம்பரில் கிடைக்கும். A-செக்‌ஷுவல் சொல்ல முடியாது.