சாருவின் ‘அன்பு: ஒரு பின் நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு ‘ நாவலை இரு தினங்களுக்கு முன் படித்து முடித்தேன். அதுகுறித்து எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. கடும் வேலை நெருக்கடி.
சாருவின் மின்சார நடை நாவலை இடையறாது படிக்க வைத்தது. அவரது மொழி ஒரு சாகசம். சாருவின் எல்லா எழுத்துகளிலும் ஒரு சமூக சகவாழ்வில் மனிதர்களிடையே நிலவும் ஒவ்வாமைகளையும் கலாச்சார வேற்றுமைகளையும் தொடர்ந்து விவாதிப்பதைக் காணலாம். ஒட்டு மொத்த தமிழ் வாழ்க்கையே இந்த ஒவ்வாமைகளுக்கு நடுவே நிகழும் சமரசம்தான். நாவலில் பெருமாளின் பிரச்சினை இதுதான். இந்த ஒவ்வாமைகளின் வழியே தொடர்ந்து நிகழும் சமரசத்தின் விளைவாக கடும் கலாச்சார தனிமைக்கு ஆட்படுகிறான்.
தனிமனிதர்கள் புகலிடம் தேட குடும்பம் என்ற அமைப்பத்தவிர வேறு இடங்கள் இல்லை. ஆனால் குடும்பமோ அன்பின் பெயரால் நடத்தப்படும் அதிகார யுத்தத்தின் படுகளமாக இருக்கிறது. இங்கே உரையாடலுக்கே இடமில்லை. எந்த ஜனநாயகத்திற்கும் இடமில்லை. வெளியேற வழியற்ற குடும்பத்தின் இந்த சுழல்வட்டப் பாதையில் பெருமாள் தப்பி ஓடிக்கொண்டேயிருக்கிறான். எனக்கு சார்த்தரின் ‘ நரகம் என்பது மற்றவர்களே’ எனும் புகழ்பெற்ற கூற்று நினைவுக்கு வருகிறது. அவரது no exit ( தமிழில்: மீளமுடியுமா?) நாடகம் நினைவுக்கு வருகிறது.
சென்சிட்டிவிட்டி என்பது ஒரு கலாச்சார குணம். ஆனால் எப்படி மனிதர்கள் தொடர்ந்து இன்சென்சிட்டிவாக செயல்படுவதன் மூலம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ஒரு தண்டனையாகவும் சுமையாகவும் மாறுவதை இந்த நாவல் நெடுக எழுதிச் செல்கிறது.
அன்பின் பெயரால் கட்டமைக்கப்படும் புனைவுகளுக்கு எதிரான பிரகடனம்போல இந்த நாவல் தோற்றம் கொண்டிருந்தாலும் இதற்குள் வெறுப்பு என்ற ஒன்று இல்லை. வசவுகள் இடம்பெறும் இடங்களில்கூட அது ஒரு வெறுப்பாக உருமாற்றம் அடைவதில்லை. வெறுப்பு மட்டுமே அன்புக்கு எதிரானது. எனவே இது அன்புக்கு எதிரான பிரதி அல்ல. சாரு இந்தப் பிரதியின் வழியே அன்பை சென்சிடைஸ் செய்ய விழைகிறார். புரிந்துணர்வும் ஜனநாயகத்தன்மையும் கொண்ட உறவுகள் ஏன் இல்லாமல் போகின்றன என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறார்.
தம்மளவில் மகிழ்ச்சியற்ற, சுதந்திரமற்ற மனிதர்கள் அதன் நஞ்சின் வழியே சக மனிதர்களை எப்படி உளவியல் ரீதியான சித்ரவதைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதுதான் இந்த நாவல் எதிர்கொள்ளும் பிரச்சினை. அன்பு எப்படி ஒரு மனநோய் வடிவமாகவும் இறுகிய அதிகாரமாகவும் மாறமுடியும் என்பதற்கு இந்த நாவல் சாட்சியம் சொல்கிறது.
சாருவின், தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று இது.
எழுத்து பிரசுரம் வெளியீடு.பிரதிகளுக்கு: 89250 61999