ஓர் முன் மன்னிப்பு…

”அவர் பெயரை என் வாழ்நாள் முழுதும் உச்சரிக்க மாட்டேன்” என்று சொன்னவர் ஜெயமோகன்.  “அவர்” என்று அந்த வாக்கியத்தில் குறிக்கப்படுபவர், அடியேன்.  ஜெயமோகனுக்கும் எனக்குமான ‘நட்பு’ தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்ததே. எனக்கு ஜெயமோகன் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.  எங்களுக்குள் மட்டும் அல்ல, எல்லா இலக்கியவாதிகளுக்குள்ளும் இடையிலான முரண்பாடுகள், சண்டைகள், கோபதாபங்கள் அனைத்துமே இலக்கியம், தத்துவம், அழகியல் பற்றிய ஒவ்வொருவருக்கும் இருக்கும் மதிப்பீடுகளின் மோதல் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் ஜெயமோகனுக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் சண்டையா இருக்க முடியும்?

இந்த முன்னுரைக்கு மேல் இப்போதைய பெண் எழுத்தாளர்கள் X ஜெயமோகன் பிரச்சினைக்கு வருவோம். நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர்கள் என நாஞ்சில் நாடன் போட்ட பட்டியல் ஒன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல. முப்பது ஆண்டுகளாக எழுதி வருபவரைக் கூட அவர் இளம் எழுத்தாளர் என்றே அந்தப் பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறார்.  எனவே, ஒரு மூத்த எழுத்தாளர் அவரை விட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த எழுத்தாளர்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் என்றே அந்தப் பட்டியலை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அந்தப் பட்டியலில் ஏராளமான பெண் எழுத்தாளர்களும் இருந்தார்கள்.  உண்மையில் அவர்கள் யாருமே குறிப்பிடத்தக்க படைப்புகள் எதையும் தந்தவர்கள் அல்ல.

இதைத்தான் ஜெயமோகனும் சொன்னார்.  மீண்டும் சொல்கிறேன்.  ஜெயமோகனின் விமர்சன அளவுகோல்களில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஆனால் பெண் எழுத்தாளர்களைப் பற்றி அவர் சொன்னது முழுக்க முழுக்க உண்மை.  பெண் என்பதாலேயே அவர்கள் ஊடக முக்கியத்துவமும் விளம்பரமும் பெறுகிறார்களே தவிர அவர்களின் எழுத்தினால் அல்ல.  அவர்கள் எதுவுமே எழுதுவதில்லை.  படிப்பதும் இல்லை.  ஒரே ஒரு பெண் எழுத்தாளர் ஒரே ஒரு நாவலை எழுதி விட்டுப் பத்தாண்டுகளாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  இப்படி ஏன் ஒரு ஆண் எழுத்தாளருக்குக் கூட நடக்கவில்லை?  Allan Sealy என்ற ஒரு (இந்திய) ஆங்கில எழுத்தாளர் இருக்கிறார்.  என் நண்பர்.  Trotter Nama என்ற பிரம்மாண்டமான நாவலையும், எம்ஜியாரை நாயகனாக வைத்து ஹீரோ என்ற நாவலையும் எழுதியவர்.  அவர் ஒரு பேட்டியில், “அழகான இளம் பெண்களே இந்தியாவில் எழுத்தாளராகப் பேசப்படுகிறார்கள்.  ஆண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை” என்று குறிப்பிட்டார்.  நான் ஆச்சரியத்துடன், “இது உண்மையா?” என்று கேட்டேன்.  இந்திய ஆங்கில இலக்கியச் சூழலை கவனியுங்கள் என்றார்.  எனக்குத் தெரிந்த ஒரு டான்ஸர்.  பேரழகி.  ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினார்.  ஒரே ஒரு நாவல்தான். மிகவும் சராசரியான நாவல்.  ஆனால் சல்மான் ருஷ்டி அந்த நாவலைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அருந்ததி ராய் எழுதியது ஒரே ஒரு நாவல்.  அதுவும் பால்ய காலம் பற்றிய சுய சரிதை.  உலகப் புகழ்.  அதற்கு மேல் புதினமே எழுதவில்லை.  ஏனென்றால், ஒருவருக்கு ஒரு பால்யம்தானே இருக்க முடியும்? இப்படி இருக்கிறது இந்திய ஆங்கில இலக்கியம்.  ஆனால் தமிழில் பெண் எழுத்தாளர்களின் நிலைமை இன்னும் மோசம்.

இன்று வெகு சுலபமாக எழுதி விடக் கூடிய இலக்கிய வடிவமாக இருப்பது கவிதை.  பத்து வரி எழுதி அதில் பெண், ஆண் ஜனன உறுப்புகளின் பெயர்களைத் தூவி விட்டால் ஆயிற்று கவிதை. அதிர்ச்சி மதிப்பீடு. இதை யாராவது சுட்டிக் காட்டினால் ஐம்பது நூறு பெண்களாக சேர்ந்து கொண்டு சொன்னவரை மிரட்டுவது.  பெண்களை அவதூறு செய்து விட்டார் என்று புரளியைக் கிளப்பி விட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளரை மன்னிப்புக் கேட்க வைப்பது. அதைத்தான் இப்போது ஜெயமோகன் செய்திருக்கிறார்.  ”பெண் எழுத்தாளர்கள் பேசப்படும் அளவுக்கு அவர்களின் எழுத்து பேசப்படவில்லையே, ஏன்?  பெண் எழுத்தாளர்கள் எதையாவது வாசித்திருக்கிறார்களா?” என்று ஒரு எழுத்தாளர் கேட்டால் பெண்களை அவமதித்து விட்டார் என்று சொல்லி நூறு பெண் எழுத்தாளர்கள் கண்ட வார்த்தைகளில் அவரைத் திட்டி, மிரட்டி, மன்னிப்புக் கேட்க வைப்பது இடுப்புக்குக் கீழே தாக்கும் செயல் இல்லையா?  இதை வெகுஜன மொழியில் ரவுடித் தனம் என்று அல்லவா சொல்வார்கள்?

உண்மையில் ஜெயமோகன் முன் வைத்தது ஒரு சவால்.  நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள்?  என்ன படித்திருக்கிறீர்கள்?  ஏன் அவையெல்லாம் பேசப்படவில்லை?  ஏன் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?  இதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு கேள்வி கேட்டவரை இடுப்புக்குக் கீழே அடித்தால் அதை என்னவென்று சொல்வது?

சில தினங்களுக்கு முன்பு சாங்கிய யோகம் பற்றிப் படிப்பதற்காக இணையதளங்களில் தேடிக் கொண்டிருந்த போது ஜெயமோகன் பகவத் கீதை பற்றி எழுதிய நீண்ட தொடர் கட்டுரைகளைக் காண நேர்ந்தது.  அதில் அவர் கொடுத்துள்ள கீதையின் பாடல்கள் யாவையும் யார் மொழிபெயர்த்தது என்று அறிய ஆர்வம் கொண்டேன்.  ஏனென்றால், அந்த மொழிபெயர்ப்பு அவ்வளவு அற்புதமாக இருந்தது.  பாரதியின் மொழிபெயர்ப்பை எடுத்தாண்டிருக்கிறாரோ என்று பார்த்தால் மொழி தற்காலத்துக்குரியதாக இருந்தது.  பிறகுதான் தெரிந்தது அது ஜெயமோகனே மொழிபெயர்த்தது என்று.

எனக்கு வெகு காலமாக கீதையின் கடைசிப் பாடலின் அர்த்தம் விளங்காமல் இருந்தது.  ”ஹே ராஜன்… எங்கே யோகேஸ்வரனான கிருஷ்ணனும் எங்கே காண்டீபம் ஏந்திய அர்ஜுனனும் இருக்கிறார்களோ அங்கே மகாலக்ஷ்மியும் வெற்றியும் ஐஸ்வர்யமும் நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என் தீர்மானமான கருத்து” என்பது அந்தப் பாடலின் பொருள்.  ஆனால் கிருஷ்ணனும் அர்ஜுனனும் எங்கே இருப்பார்கள்?  புரியவில்லை. நான் சம்ஸ்கிருத இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்தாலும் மூலத்தையும் அருகில் வைத்துக் கொண்டே படிப்பது வழக்கம்.  மூலத்தில் மேலே உள்ள “இருக்கிறார்களோ” என்ற வார்த்தை இல்லை.  அதை நாம் அப்படியே யூகித்துக் கொள்ள வேண்டியது.  பாரதியின் மொழிபெயர்ப்பைப் பார்த்தேன்.  அதிலும் அவர் ”கண்ணன் யோகக் கடவுள்.  எங்குமுளன்.  வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்.  அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்: இஃதென் மதம்” என்றே மொழிபெயர்த்திருக்கிறார்.   வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட இந்த மொழிபெயர்ப்பிலும் என் குழப்பம் தீரவில்லை.  பிறகுதான் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பைப் படித்து என் சந்தேகம் தீர்ந்தது.

‘எங்கு
யோகத்திலமர்ந்த கிருஷ்ணனும்
வில்லேந்திய பார்த்தனும்
இணைகிறார்களோ அங்கு
மங்கலங்களும்
வெற்றியும் வளமும்
நிலைபெறு நீதியும்
என்றுமிருக்கும்
என்று உறுதி கூறுகிறேன்.’

இதை எழுத மிகக் கடினமான வாசிப்பு அனுபவமோ அல்லது தர்சனமோ தேவை.

ஜெயமோகனை மிரட்டியிருக்கும் இத்தனை பெண் எழுத்தாளர்களும் அவருடைய ஒரு எழுத்தையாவது படித்திருப்பார்களா என்று சந்தேகமாக உள்ளது.  இவர்கள் யாவரும் மூன்று பிறப்பு எடுத்தாலும் முடிக்க முடியாத அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார் ஜெயமோகன்.  எனவே அது அனைத்தையும் படிக்கச் சொல்வது வன்கொடுமையில் சேரும் என்பதால், அவர் எழுதிய விஷ்ணுபுரம் என்ற ஒரே ஒரு நாவலையாவது படித்து அதை விமர்சனம் செய்வார்களா?  அது அவர்களால் முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.  காரணம், வாசிப்பு என்பது பல மணி நேரங்களை வேண்டி நிற்கும் செயல்.  நம் மனம், உடல் ஆகிய இரண்டின் பிரயாசையும் அதற்குத் தேவை.  ஆனால் வெட்டி அரசியல், ஊர் வம்பு, ஆர்ப்பாட்டம் போன்ற ”செயல்பாடுகளில்” தீவிரமாக இருக்கும் பெண் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.

பெண் எழுத்தாளர்களின் மிரட்டல் அறிக்கையில் குட்டி ரேவதியின் பெயரும் இருக்கிறது.  இவருக்கு சினிமாவில் பாட்டு எழுத ஒரு வாய்ப்பு கிடைத்ததும் கவிஞர் வாலி பற்றி எழுதியுள்ள பதிவை ஒருவர் படிக்க வேண்டும். முகஸ்துதி என்றால் அப்படி ஒரு முகஸ்துதி.  பெயரோடு சேர்த்து “அவர்கள்” என்ற அடைமொழி வேறு.  வாலி அவர்கள்.  ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள்.  ஒரு பாட்டுக்கே இந்த கதி என்றால் ஒருவரின் வாழ்நாள் பூராவும் படித்துத் தீர்க்க முடியாத அளவு எழுதியிருக்கும் ஜெயமோகனுக்குப் பாதபூஜை அல்லவா செய்ய வேண்டும்?   ஒரு பக்கம் அதிகாரத்துக்குக் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் சக எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதும் மிரட்டுவதும் எவ்வளவு கேவலமான செயல்!

இப்படி எழுதியதற்காக இங்கேயே நான் முன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுகிறேன்.  ஏனென்றால், என் வீட்டுக்கு முன்னே வந்து ஐம்பது நூறு பெண்கள் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் என் வீட்டின் உரிமையாளர் என்னை இங்கிருந்து துரத்தி அடித்து விடுவார்.  மூட்டையைக் கட்டிக் கொண்டு வேறு வீடு போக முடியாது.  காரணம், என்னிடம் க்ரேட் டேன் ஜாதியைச் சேர்ந்த ஸோரோ என்ற நாய் உள்ளது. இரண்டு காலில் நின்றால் ஒன்பது அடி.  நாலு காலில் நான்கு அடி. எனக்கு வாடகைக்கு வீடு கிடைக்கும்.  ஸோரோவுக்குக் கிடைக்காது.  எனவே வாயில்லா ஜீவனை வதைக்கும் வன்கொடுமைச் செயலைச் செய்து மிருகவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியவர்கள் ஆகாதீர்கள்.  அதற்குத்தான் முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டு விட்டேன்.

பின்குறிப்பு: பெண் எழுத்தாளர்களின் அறிக்கையின் முதல் வாக்கியத்தில் பேராசான் கார்ல் மார்க்ஸ் என்று வருகிறது.  உள்ளூர் ஆசான்களை இடுப்புக்குக் கீழே உதைத்து விட்டு, மனிதனுக்கு ரொட்டி மட்டும் போதும்; சுதந்திரத்தைத் தூக்கிக் குப்பையிலே போடு என்று சொன்ன கார்ல் மார்க்ஸை பேராசான் என்கிறார்கள்.  மார்க்ஸைப் பேராசான் என்று சொல்லி, காத்திரமான இலக்கியத்தைப் படைத்த ஒரே ஒருவரைச் சொல்ல முடியுமா?  ஆனால் ஆர். சூடாமணியை இலக்கிய முன்னோடி என்று சொல்லும் அறிவாளிகளிடம் நாம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.

பின்குறிப்பு 2 : என்னை பதிலுக்கு ஆணாதிக்கவாதி என்று சொன்னால் அதை நான் மோசமான வசையாகவே எடுத்துக் கொள்வேன்.  ஏனென்றால் 20 வயதுக்கு மேல் நான் என் உணவை நானே தான் சமைத்து உண்கிறேன்.  பெண்களை வேலை வாங்குவதில்லை.  ஆண் உடம்பாக இருந்தாலும் நான் ஒரு பெண்ணாகவே உணர்கிறேன்.  வாழ்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்:

http://kuttyrevathy.blogspot.in/2013/07/blog-post_19.html

http://www.jeyamohan.in/?p=56732

 

Comments are closed.