ஒரு எதிர்வினை

சாரு

தற்போது உங்களுடைய தொடர் கட்டுரைகளைப் படித்து வரும்போது ஒன்று தோன்றியது. சில நாட்களாக இணையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.  இணையத்தில் சுற்றும் புரட்சியாளர்களுக்கு தானாக ஏதும் செய்யத் தெரியாது.  யாரேனும் ஏதேனும் சொன்னாலோ, எழுதினாலோ தங்களின் மூளையை குறியிலிருந்து தலைக்கு இடம்  மாற்றி கராங் முராங் எனக் கத்த ஆரம்பிப்பார்கள்.

ஜெயமோகன் ஆடிக்கொரு முறை தைக்கு ஒருமுறை இவர்களுக்கு வாய்ப்புத் தருகிறார்.  அதிலும் அவர் எழுதும் சீனப் பெருஞ்சுவர் கட்டுரைகளைப் பார்த்து மிரண்டு, ஏதேனும் ஒரு பத்தியை ஹை லைட் செய்து போட்டு எழுதும் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்றுவது இவர்களுக்கு அவ்வளவு சுவாரசியமாக இல்லை.

உங்கள் பதிவுகளில் ஒரு வேடிக்கை உண்டு.

ஏழாம் வகுப்பு மாணவன் எழுதுவது போன்ற, மிக எளிய, புரிந்து கொள்ள கொஞ்சம் கூட மெனக்கெட வேண்டியில்லாத சில பதிவுகள் வரும். கடுமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய சில பதிவுகளும் இதே ஏழாம் வகுப்பு மாணவன் கட்டுரை தொனியிலேயே வரும். உங்கள் பதிவுகளைப் படிக்கையில் தூக்கம் வராது, போர் அடிக்காது, எங்கேனும் சொறிந்தாலும் தெரியாது . எந்த வார்த்தையும் , வாக்கியமும் புரியாமல் இருக்காது.  இதனால் இதுவரை வாராந்தரி ராணி மட்டுமே படித்தவனும், ஒன்றுமே படிக்காதவனும் உங்கள் பதிவுகளை முழுமையாகப் படித்து விட முடிவதால் ஏற்படும் நகைச்சுவை இருக்கிறதே! சொல்லி மாளாது.

அதிலும் எனக்கென்ன வேடிக்கையாக இருக்கும் என்றால், உங்கள் ஒருவர் விஷயத்தில் மட்டும் மெத்தப் படித்த, எழுதிக் குவித்த இலக்கியவாதியும், ஃபேஸ்புக் ஓசியில் கிடைக்கும் ஒரே காரணத்தால், தமிழில் எதையேனும் படித்துக் கொண்டிருக்க நேர்ந்த, முள்ளங்கிப் பத்தைகளும் எப்படி ஒரே புள்ளியில் இணைகிறார்கள்.

காரணம் என்ன என்றால் transgressive writing.   அந்தத் தன்மை சமீபமாக பிறந்து வந்தவர்களுக்குக் கடும் அன்னியமாகவும் , பதட்டமாகவும் உள்ளது.  சமீபமாக என்றால், 1930 ல் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

சுதந்திரம் பெற்ற பிறகு, அரசு வேலை பெற்றவர்கள் ஒரு புது கலாச்சாரத்தை உருவாக்கினார்கள். அந்த கலாச்சாரம்தான் இப்போது 90 சதவீத மக்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்து கொண்டும், தற்போதைய வெகுஜன கலாச்சாரமாகவும் உள்ளது. இந்தக் கலாச்சார கூறுகள் பல உள்ளன.  அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இந்தக் கலாச்சாரத்தின்படி , சொல்லிக் கொடுத்த ஆசிரியரையே கேள்வி கேட்பது என்பது கெத்து! அதாவது கேள்விக்கு பதிலெல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய படிப்பு ஏதும் தேவையில்லை, புரிதல் தேவையில்லை. ஆசிரியர் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே, ஏதேனும் கொஞ்சூண்டு கற்றுக் கொண்டு , அந்தக் கொஞ்சூண்டு அறிவு தந்த மமதையில், எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டியது. கேள்வி கேட்பவனுக்கு இருக்கும் அதே அறிவுதான் , உடன் கற்றுக் கொண்டு இருப்பவனுக்கும் இருக்கும் என்பதால், கேள்வி கேட்பவன் கேட்ட கேள்வி மற்றவர்களுக்கும் படு புத்திசாலித்தனமாகத் தெரிந்து, கேள்வி கேட்டவன் ஹீரோ ஆகி விடுவான்.  இந்தக் கலாச்சாரத்தின் லேட்டஸ்ட் டிரெண்டுதான்,  சொல்லிக் கொடுத்தவரை, சில கட்டுரைகள் மட்டும் படித்து விட்டு திட்டுவது! போகட்டும் .

இணையம் மசமச வென இருக்கிறது என்று சொன்னேனா ? நீங்கள் இப்போது தொடர் கட்டுரை எழுதி விட்டீர்களா ? அவ்வளவுதான்.

பிரபலமாகாத கோயில் குளத்தில் இருக்கும் மீன்கள் சோம்பலாக நீந்திக்கொண்டு இருக்கும். திருவிழா அல்லது குடும்ப மொட்டை என ஏதேனும் வருகையில் , யாரேனும் பொறி வாங்கி போடுவார்கள்.அடிக்குளத்தில் சேற்றில் உரசிக்கொண்டு நளினமாக ஆங்கில எஸ் போட்டுக்கொண்டு இருந்த மீன்களெல்லாம் , விஸ்க் விஸ்க் என மேற்குளத்தில் துள்ளி குதித்து பொறி பொறுக்கும்.உங்களின் தொடர் கட்டுரைகளையும் அப்படித்தான் இணைய மீன்கள் எடுத்துகொண்டு துள்ளிக்கொண்டு இருக்கப்போகின்றன. நல்ல எண்டர்ட்டெயின்மெண்ட்.

தேங்க்ஸ் சாரு!

அராத்து

Comments are closed.