ஒரு philistine சமூகத்தில் எழுத்தாளனாக வாழ்வதே பெரிய பிரச்சினை என்கிற போது transgressive எழுத்தாளனாக வாழ்வதன் சங்கடங்களை எழுதித் தெரிய வைக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
ஒரு சக எழுத்தாளர் என்னைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அவருடைய ஆதர்சம் ஜெயமோகன் என்கிறார். ஜெயமோகன் எழுதுவதோ அறம். ஆனால் சக எழுத்தாளர் ஜெ.யிடமிருந்து கற்றுக் கொண்டதோ கொலை வெறி. என்னை ஒருவர் கொலை செய்ய நினைத்தால் அதை யார் தடுக்க முடியும்? “தமிழ்நாட்டில் உங்களை இவ்வளவு நாள் உயிரோடு விட்டு வைத்திருப்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று என் நண்பர்கள் மிகுந்த வேதனையோடு அடிக்கடி எழுதுவது வழக்கம். எனக்கு இரண்டு பெரிய அரசியல் கட்சிப் பிரமுகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது. மிரட்டல் மட்டும் அல்ல. தாக்குதலே நடந்தது. எனக்குப் பதிலாக அவந்திகா மாட்டிக் கொண்டாள். நான்கு குண்டர்கள் தாக்கி, மருத்துவமனையில் சேர்ந்தாள். பப்பு இல்லாதிருந்தால் அவள் அன்றே போய்ச் சேர்ந்திருப்பாள். பிறகு அந்தக் கட்சித் தலைவரை நேரில் சந்தித்து உயிர்ப் பிச்சை கேட்டு பிழைத்து வாழ்கிறேன். உயிர்ப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த போது, அவருடைய பிரதான தொண்டர் என்னை சுட்டிக் காட்டி அவர் தலைவரிடம் சொன்னார். தலைவரே, இவர செஞ்சிருப்போம்… கதை அல்ல. நிஜம். இப்போது என்றால் அப்படி நேரில் போய் உயிர்ப் பிச்சை கேட்டிருக்க மாட்டேன். அப்போது நான் நாஸ்திகனாக இருந்தேன் என்பது ஒரு முக்கிய விஷயம். கடவுளைப் பற்றிக் கொண்டதும் உயிர் பயம் போய் விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக்கில் எழுதிக் கொண்டிருந்த போது ஒரு பெரிய அரசியல் கட்சியிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது. நாகேஸ்வர ராவ் பார்க்கில் வந்து நேரிலேயே சொன்னார்கள். சாவு உன் மூலமாக வருவதாக இருந்தால் வரட்டும்; மயிரே போச்சு என்று சொன்னேன். பிறகு நான் சாப்பிடும் சோற்றில் கை வைத்தார்கள். மன்னிப்புக் கேள் என்றார்கள். திரும்பவும் மயிரே போச்சு என்றேன். எல்லாவற்றையும் கடவுளிடம் சமர்ப்பித்தேன். மிரட்டியவருக்கு மிகப் பெரும் கேடு வந்து சேர்ந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பு – 25 ஆண்டுகள் இருக்கலாம் – மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகம் போட்ட போது அடித்தார்கள். கொலை மிரட்டல் வந்தது. பெரும் பாதுகாப்போடு அறைக்கு அனுப்பப்பட்டேன். வெளியே வந்தாலே அடிப்போம் என்றார்கள். நான் செய்த தப்பு? நாடகம் என்ற கலை வடிவத்தை அவமதித்து விட்டேன். You are insulting the Theatre என்று சொல்லி சொல்லி அடித்தார்கள். மறுநாள் நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்தால் நாடக விழாவே நடக்காது. தயவு செய்து வராதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் நாடக விழா அமைப்பாளர் மு. ராமசாமி.
இப்போதும் ஒரு கொலை மிரட்டல். சக எழுத்தாளர். ஒரு எழுத்தாளரிடமிருந்து கொலை மிரட்டல் வருவது இதுவே முதல் முறை. அதுவும் அறம் சார்ந்த மதிப்பீடுகளையே முன்னிலைப்படுத்தும் ஜெயமோகனைத் தனது ஆதர்ஸமாகக் கொண்ட எழுத்தாளர். ஆச்சரியம். கேள்விப்பட்டதும் நான் என்ன வருத்தப்பட்டேன் என்றால், இப்படி முகநூலில் இவ்வளவு வெளிப்படையாகக் கொலை மிரட்டல் விட்டு விட்டு நம்மைக் கொல்லப் போகிறாரே, இதுவே இவருக்கு எதிராகப் போய் ஏழெட்டு ஆண்டுகள் சிறையில் கிடக்க வேண்டியிருக்குமே, புது மாப்பிள்ளை வேறு… கொல்லப் போகிறவர் அதை ரகசியமாக அல்லவா செய்ய வேண்டும்? இப்படித்தான் வருத்தப்பட்டேன். எனக்கும் உயிர் வெல்லம்தான். ஆனால் தீவிரமான இறை நம்பிக்கை இருப்பதால் எனக்கென்று ஒரு தேதி விதிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். எமன் தும்மல் மூலமும் வரலாம்; என் சக எழுத்தாளனின் கை வாளின் மூலமும் வரலாம். ஆனால் இப்படி ஊருக்கு முன்னால் அறிவித்து விட்டா கொலை செய்வது? கொஞ்சமாவது தந்திரம் வேண்டாமா?
என்னைக் கொலை செய்யத் துடிக்கும் இந்தத் தம்பி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கோபத்தினாலும் வெறுப்பினாலும் தானே கொலை செய்யத் தோன்றுகிறது? நீங்களும் நானும் ஒன்றும் மகாத்மா இல்லை. கொலை செய்தால் எந்தத் தண்டனையும் இல்லை என்று சொல்லி விட்டால் உலகில் ஒரு மனிதன் கூட இருக்க மாட்டான். எல்லோரும் எல்லோரையும் கொன்று விட்டு மனித இனம் அழிந்து விடும். எனவே என்னைக் கொலை செய்ய நினைக்கும் எழுத்தாளன் மீது எனக்குக் கோபம் இல்லை. துவேஷம் தான் சத்ரு. நான் அந்த எழுத்தாளரிடம் சொன்ன கடைசி வாக்கியம், உங்களை என்றைக்கும் நான் திட்ட மாட்டேன். ஆனால் நான் கொலை செய்யப்பட்ட பிறகு போலீஸ் அதிகாரிகள் வேறு எந்த எழுத்தாளரையும் விசாரணை அது இது என்று அழைத்துத் துன்புறுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு கொலைகாரன் என்னுடைய ஆதர்ஸ எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி என்று சொன்னால் அதற்காக தஸ்தயேவ்ஸ்கியின் கல்லறையைத் தோண்டுவீர்களா?
எனக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சக எழுத்தாளர் மீது துளியும் கோபம் இல்லை என்று சொன்னேன். ஆனால் திருநெல்வேலி திருவாசகம் என்ற ஆள் மீது உண்மையிலேயே கடும் கோபத்தில் இருக்கிறேன். நடந்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். இல்லை ஐந்து ஆண்டுகளா, நினைவில்லை. திருநெல்வேலி திருவாசகம் என்ற பெயரை பத்திரிகைகளில் கடிதமாகப் பார்த்திருக்கலாம். இப்போது அவர் எழுத்தாளராகி விட்டார். முன்பு வெறும் கடித எழுத்தாளர். என்னோடு ஃபோனில் பேசுவார். அரை மணி நேரம் கூடப் பேசுவார். நானாக அவரிடம் பேசியதே இல்லை. அவரேதான் என்னை அழைத்துப் பேசுவார். சுமார் இரண்டு ஆண்டுகள் இப்படி ஃபோன் தொடர்பில் இருந்தார். ஒருநாள் பேசும் போது பூஜையறை, கக்கூஸ் என்று சொன்னார். புரியாததால் என்ன சொல்கிறீர்கள் என்றேன். ரொம்ப சாதாரணமான தொனியில் அதான் சாரு, ஜெயமோகன் பூஜையறைன்னா சாரு கக்கூஸ்… ரெண்டும் தேவைதானே?
வைடா ஃபோனை… நாயே என்று ஆரம்பித்து ஒரு நிமிடம் கடும் கோபத்தில் கத்தினேன். இப்போதும் அதே கோபம் இருக்கிறது. உனக்கு ஜெயமோகன் பூஜையறை என்றால் வைத்துக் கொள். சாரு கக்கூஸ் என்றாலும் வைத்துக் கொள். அப்புறம் என்ன மயிருக்குடா ரெண்டு வருஷம் என்னோடு பேசினாய்? நான் கோபப்படுவது நியாயம் தானே? என்னிடம் எதற்கு நீ வருகிறாய்?
ஒருவேளை என் சக எழுத்தாளரால் நான் கொல்லப்பட்டால் இரண்டு பேரை சும்மா விட மாட்டேன். ஒன்று, திருநெல்வேலி திருவாசகம். இன்னொருவர் அராத்து. அராத்து ஏன் என்றால், நான் சமீப காலமாக ஜெயமோகனின் தீவிர ரசிகனாகி விட்டேன். நேற்று கூட வெண்முரசு நாவலில் முதல் அத்தியாயத்தை வாய் விட்டுப் படித்து மகிழ்ந்தேன். ஸ்ரீரங்கப்பட்டினத்துக் காவேரி பாறைகளினூடே செல்லும் போது கேட்கும் இசையை அந்த சொற்களில் கேட்டேன். திரும்பத் திரும்பப் படித்தேன். நீங்களும் படியுங்கள்…
”கருநீலக் கடலொன்று கண்ஒளிர்ந்து கைவிரிந்து காலெழுந்து இதழ்மலர்ந்து உங்கள் மடிகொண்டமைந்தது. பெண்களே, பேதையரே, பெருமையல் திரண்டமைந்த அன்னையரே, அக்கண்களுக்கு மையிட்டு கன்னங்களில் பொற்பொடியிட்டு கைகளுக்கு வளையிட்டு கால்களுக்கு தண்டையிட்டு அணியிட்டு அணிசெய்து நீங்கள் அறிந்ததுதான் என்ன? கன்னங்கருமைக்குள் எஞ்சும் வண்ணம்தான் ஏது? இல்லையென்ற சொல்லின்மேல் இருப்பதெல்லாம் சுமத்தும் ஞானியரா நீங்கள்? எல்லையற்ற இருள்வெளியில் நீங்கள் ஏற்றிவைத்த விண்மீன்களா அவை?
ஆயர்குடியில் அன்னையரின் நகைப்பொலிகளைக் கேட்கிறேன். மலர்தொடுப்பாள் ஒருத்தி. மாச்சுண்ணம் இடித்தெடுப்பாள் இன்னொருத்தி. மணிகோத்து மாலையாக்குவாள் பிறிதொருத்தி. நெஞ்சம் தொட்டு நினைவுதொட்டு கனவுதொட்டு கண்ணீர்தொட்டு தொடுத்தெடுக்கமுடிபவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களின் செஞ்சாந்து மெல்விரல்கள் நாவாகி நெளிந்து நெளிந்து சுழித்து நடமிட்டுக் களியாடி நிகழ்கிறது அவன் பெயர். சொல்தொடுத்து அவனுக்குச் சூட்டும் கவிஞன் பொருள்முதிர்கையில் அறியும் நிறைவின்மையை அவர்கள் ஒருபோதும் தொடுவதில்லை. அன்னையரே, பேதையரே, ஞானியருக்கு பாதம் கொடுப்பவன் உங்கள் கைகளுக்கு தலைகொடுத்திருக்கிறான்.” (ஜெயமோகன்: வெண்முரசு)
சமீப காலத்தில் இப்படி வனப்பான உரைநடையை நான் படித்ததில்லை. தமிழ் ஜெயமோகனிடம் கொஞ்சி விளையாடுகிறது. அப்படிப்பட்ட ஜெயமோகன் என் மரணத்துக்குப் பிறகு நினைவஞ்சலியாக என்ன எழுதியிருக்கிறார் என்று நான் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். அதனால் ஆவியாக அராத்துவிடம் வருவேன். அவர் அந்த நினைவஞ்சலியை எனக்குப் படித்துக் காட்ட வேண்டும். செத்தவர்கள் மேல் உலகம் அல்லவா செல்வார்கள்? ம்ஹும்… நிறைவேறாத ஆசை கொண்ட ஆவிகள் இங்ஙனயே தான் சுற்றுக் கொண்டிருக்கும்.
My dearest Veronika and Kirubhakar, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எக்ஸைல் மொழிபெயர்ப்பை முடிக்கப் பாருங்கள். ஏனென்றால், தமிழ்நாட்டில் ஒரு transgressive எழுத்தாளனாக வாழ்வது அவமானம். ஒரு தீண்டத் தகாதவனைப் போல் நடத்தப்படுகிறேன். எனக்கு இந்த சூழல் வேண்டாம். யோசித்துப் பாருங்கள். உங்கள் வீடு அல்லது அலுவலகம். அங்கே விஷ்ணுபுரம் என்ற ஒரு நூல். பக்கத்தில் காமரூப கதைகள் என்று ஒரு நூல். எந்தப் புத்தகத்துக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்? ஃப்ரான்ஸில் ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தாளனுக்குத்தான் மாலை, மரியாதை எல்லாம். அதில் ஏதோ இருக்கிறது என்று லட்சக் கணக்கில் புத்தகமும் விற்கும். அங்கே ட்ரான்ஸ்கிரெஸ்வ் எழுத்தாளன் அரண்மனையிலே வாழ்கிறான். இங்கே இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பட்டம். இங்கே காசு என்றால் சினிமாவுக்கு வசனம் எழுதினால்தான். நானோ ஆரம்பத்திலிருந்து சினிமா விமர்சனம் எழுதி ஒவ்வொரு இயக்குனரின் ஹிட் லிஸ்டில் இருப்பவன். எனக்குக் காசும் வராது. மரியாதையும் கிடைக்காது. என் வெளிநாட்டு வாசகர்கள் நினைப்பது போல் இவ்வளவு காலம் என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பதே பெரிய விஷயம்.
வெரோனிகா, கிருபாகர், நீங்கள் இருவரும் சீக்கிரம் மொழிபெயர்ப்பை முடித்தால் நான் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னேன். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நான் ஒரு சர்வதேச விருது பெறுவேன் என்று. கூட இருந்த தமிழச்சி, இவருக்குத்தான் என்ன ஒரு தைரியம் என்று மேடையிலேயே ஆச்சரியப்பட்டார். அடுத்த ஆண்டே ஸீரோ டிகிரி Jan Michalski விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதே போல் இந்தியாவின் மிகச் சிறந்த 50 புத்தகங்களில் ஒன்று என்று Harper Collins பதிப்பகத்தால் 50 Books 50 Writers என்று தொகுக்கப்பட்டது. எனவே இப்போதும் சொல்கிறேன். மொழிபெயர்ப்பை முடியுங்கள். ஒரே ஆண்டில் அதற்கு சர்வதேசப் பரிசு உண்டு. இதுவரை என் முன்னறிவிப்பு பொய்த்ததில்லை.
முடிக்கிறேன். சக எழுத்தாளா… நீ என்னை முடிக்கலாம்…
என்னை இறைவனின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்…
Comments are closed.