லத்தீன் அமெரிக்க சினிமா தொடர் குறித்து…

வணக்கம்.

நான் சாருவின் நீண்ட கால வாசகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. அவருடய திரை விமர்சனகள், முக்கியமாக அலைந்து திரிபவனின் அழகியல் என்னுடைய, பலருடைய சினிமா குறித்த பார்வையை மாற்றியிருக்கும். அதற்குக் காரணம் அவை எழுதப்பட்ட விதம்.  அந்தப் படங்கள் ஏன் எவ்வகையில் மாறுபட்டவை என்பதை அதன் காட்சிகள் மூல்ம் விளக்கியிருப்பார்.

இத்தகைய சூழலில், லத்தீன் சினிமா பற்றி சாரு என்ன எழுதப் போகிறார் என்பதை படிக்க அனைவரைப் போலவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன், இருக்கிறேன்.  ஆனால் முதல் தொடர் மிகுந்த ஏமாற்றத்தையே அளித்து. இது படங்கள் மற்றும் இயகுனர் குறித்து வெறும் தகவல்களையே தருகிறது. இதுவல்ல நாங்கள் சாருவிடம் இருந்து எதிர்பார்ப்பது. இந்தத் தகவல்களையெல்லாம் இணையத்திலேயே திரட்டிக் கொள்ள்லாம்.

ஏதோ அவசரத்தில் எழுதப்பட்டது போல் உள்ளது.  இதன் மூலம் இந்த வகை சினிமாவை , இந்த வகை திரை மொழியைப் புரிந்து கொள்ள முடியும் என்று தோணவில்லை.  முக்கியமாக slow cinema, long static shots வைக்கப்படுவதின் நோக்கம் என்ன , அது எவ்வகையில் பயன் படுகிறது என்றெல்லாம் சாருவின் பார்வையைத் தெரிந்து கொள்ள விரும்புகிரேன்.

நன்றி.

செந்தில்குமார்.

 

அன்புள்ள செந்தில் குமார்,

உங்கள் கடிதத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்களோ அதையே தான் நானும் நினைக்கிறேன்.  அதனால்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பாக நான் எழுதிய லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலை விரிவு படுத்தி எழுத முயற்சி எடுக்கவில்லை.  இனிமேல் எந்த உலக சினிமா குறித்தும் யாரும் பெரிய அளவில் எழுத முடியாது என்பதே என் எண்ணம்.  நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி, எல்லா தகவல்களுமே இணையத்தில் கிடைத்து விடுகின்றன.  அப்புறம் எதற்குத் தொடர்?  அப்புறம் எதற்கு அறிமுகம்?  சொல்லப்போனால் லத்தீன் அமெரிக்க சினிமா தொடரின் முதல் அத்தியாயம் குப்பை என்றே நான் சொல்வேன்.  கோபத்திலோ எரிச்சலிலோ சொல்லவில்லை.  இணையத்திலேயே கிடைக்கும் தகவல்களை வைத்து என்ன கட்டுரை வேண்டிக் கிடக்கிறது என்பதுதான் என் கருத்தும்.

இருந்தாலும் இப்படி ஒரு தொடரை எழுத ஒப்புக் கொண்டதன் காரணம் என்ன தெரியுமா?  க்ளாபர் ரோச்சா என்ற ப்ரஸீலிய இயக்குனர் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த என் லத்தீன் அமெரிக்க சினிமா நூலில் குறிப்பிட்டிருந்தேன்.  அது பற்றி சினிமா ஆர்வலர்கள் மேலே எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.  க்ளாபர் ரோச்சாவின் திரைப்படங்கள் திரையிடப்பட்டிருக்க வேண்டும்.  விவாதித்திருக்க வேண்டும்.  எதுவுமே நடக்கவில்லை.  திரைக்கல்லூரிப் பேராசிரியர்கள் கூட க்ளாபரின் படங்களைப் பார்த்ததில்லை.  பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோம் என்கிறார்கள்.  ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது.  பெயரைப் போட்டால் யுட்யூபிலேயே படம் வருகிறது.  அதனால் நான் Glauber Rocha என்ற பெயரை மட்டுமே தருகிறேன்.  நீங்கள் படம் பார்த்துக் கொள்ளலாம்.

அதாவது, ஒரு வழிகாட்டி நூலின் பணியைத்தான் என் கட்டுரைத் தொடர் செய்யும்.  அதை மீறி அதில் வேறு எதுவுமே இருக்காது.  அந்த வகையில் அது ஒரு user’s manual.  பயன்படுத்தாதவர்களுக்கு அது குப்பை.  நாரத கான சபாவுக்கு எதிரே சாயி மெஸ் உள்ளது.  இந்த விஷயத்தை மட்டுமே நான் சொல்கிறேன்.  நான் சொல்லாவிட்டால் அந்த இடம் இல்லை.  நான் சொல்லாவிட்டால் க்ளாபர் ரோச்சா பற்றி இங்கே பேச்சு வராது.  அந்தக் கட்டுரையால் ஆயிரம் பேர் க்ளாபர் ரோச்சாவைப் பார்த்து விட்டார்கள்.  கிம் கி டுக் பற்றியும், அதற்கும் முன்னாலிருந்து இன்று வரை  அகிரா குரஸவா பற்றியும் ஆயிரம் கட்டுரைகள் வருகின்றன.  ஆனால் க்ளாபர் ரோச்சாவின் பெயரையே யாருக்கும் தெரியவில்லை.  குரஸவாவை விட க்ளாபர் நூறு மடங்கு முக்கியமானவர்.  குரஸவா நல்ல படங்களை எடுத்தவர்.  ஆனால் க்ளாபர் சினிமாவில் புதிய மொழியை உருவாக்கியவர்.

க்ளாபரின் படங்களைப் பார்த்த போது இதெல்லாம் baroque mysticism என்று நினைத்தேன்.  அதற்கு முன்னால் அந்த வார்த்தைகளை ஒன்று சேர நான் கேள்விப்பட்டதே இல்லை.  பரோக் பாணி வேறு, மிஸ்டிஸிஸம் வேறு.  ஆனால் க்ளாபரின் படங்களைப் பார்த்த போது எனக்குத் தோன்றியது, இது baroque mysticism என்று.  பின்னர், க்ளாபரின் படங்களைப் பற்றிய ஆய்வு நூல்களைப் படித்த போது இதே வார்த்தையை ஒருவர் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்து பூமிக்கும் ஆகாயத்துக்குமாகக் குதித்தேன்.  ஏன் என்று விளக்கத் தேவையில்லை.  என்னைப் பற்றி எனக்கே ஒரு அனுமானத்தைக் கொடுத்த தருணம் அது.  ஆனால் நீங்கள் விக்கிபீடியாவில் தேடினால் க்ளாபரின் படங்கள் பரோக் மிஸ்டிஸிஸம் என்று போட்டிருந்தால் நான் அம்பேல்.  எனக்குத் தெரியும், அது என்னளவில் நான் கண்டு பிடித்தது என்று.  ஆனால் அது விக்கியிலும் இருந்தால் எனக்கு என்ன பெருமை?  அதனால்தான் சொல்கிறேன், சினிமா கட்டுரைகள் வீண் என்று.

க்ளாபர் பற்றி அப்படி நான் ஒரு முடிவுக்கு வர ஒரு வாழ்நாளின் வாசிப்பும் திரை அனுபவமும் தேவை.  நீங்களோ அவசரத்தில் எழுதியதாகச் சொல்கிறீர்கள்.  உங்களுக்கு அந்தத் தொடரில் எதுவுமே கிடைக்காது.  இந்தக் கால கட்டத்தில் சினிமா கட்டுரைகள் எழுதுவது வீண் வேலை.

சாரு

 

Comments are closed.