நம்ப முடியாத கதை


ஆம்
நீவிர் இந்தக் கதையை
நம்ப மாட்டீர்
எத்தனையோ பேரிடம்
இயம்பினேன்
கருவிகளின் காலம்
கவியின் கதை
ஏற்பார் எவருமில்லை

ஒரு ஊரிலே ஒரு
அகோரி இருந்தார்

அகோரிக்கொரு மனையாளும்
ஒரு புதல்வனும்
ஒன்பது சீடர்களுமுண்டு

அவர் அகோரியென
உலகமறியாது
அறிந்தோர் சீடர் மட்டுமே

உயர்படிப்பும்
ஆய்வும் முடித்து
டாக்டர் பட்டம் பெறுவது போலவே
அகோரியாவதும்!

அதுவொரு பாடத்திட்டம்

மலத்தை மகிழ்ச்சியுடன்
தின்ன வேண்டும்
கலவியிலே
களிகொள்ளக் கூடாது
ஆசை துக்கம்
கோபம் பொறாமை
காமமெதுவும் கூடாது
நெருப்பிலெரியும்
பிரேதத்தின் மீதமர்ந்து
கொஞ்சமாய் தவமிருக்க
வேண்டும் அவ்வளவுதான்

எல்லாம் செய்தார்
அகோரி

அப்போது அவர் முன்னே
வந்துதித்த
மசானக் காளி
என்ன வரம் வேண்டு
மென்றாள்

எது வரமும் வேண்டாம்
ஆயிரம்கோடி அழகெலாம் திரண்டொன்றாகி
நிற்கும் உன் அருட்செல்வம் எனக்குண்டு
பொருட்செல்வமும் குறைவில்லை
எனக்கென்ன வேண்டும் தாயே
என்றான் அகோரி

வந்து விட்டால்
வரமென்பது விதி
விதி மீறலாகாது
என்றாள்
நீள்விழியாள்

அப்படியானால்
என்றென்றும் நீயென்
நெஞ்சினிலே குடியிருக்க
வேண்டுமென்றான் அகோரி

இது வரமல்ல, சாபம்
வரம் கேள்
வரம் கேள்
வரம் கேள்
என்றாள் ஈஸ்வரி

வரமோ சாபமோ நீயென்
நெஞ்சினிலே குடியிருக்க
வேண்டுமென்றான் திரும்பவும்

தந்தேன் வரமெனச்
சொல்லி மறைந்தாள்
மசானக் காளி

வீடு திரும்பிய அகோரி
நித்திரையிலிருந்த புதல்வனுக்கொரு
முத்தம் ஈந்து விட்டுத் தன் இடமேக
எத்தனித்தான்

அப்போது
அகவை எட்டு முடிந்திருந்த
மகனின் ஆயுள்
அடுத்த ஆண்டு முடிவதை
திருஷ்டியிலே
கண்டு
தான் கேட்டுப் பெற்றது
வரமல்ல சாபமென
அறிந்தான்

என் மோகினிக்குட்டீ

நின் பாதமலர் மீதில்
போதமலர் தூவி
வணங்குமென் நெஞ்சினிலே
நீயும்
உன் நெஞ்சினிலே நானுமிருக்க
வேண்டும்
இவ்வையத்து வாழ்வினிலே வேறேதும்
வேண்டாமெனக்கு.