1
சாளரத்தின் வழியே
தெருவைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்
செய்து முடிப்பதற்கு
ஏராளம் வேலைகள்
ஆனாலும் ஒருவன்
எப்போதும் வேலையிலேயே
இருக்க முடியுமா என்ன?
உயிர்மையிலிருந்து விஜயகுமார்
ஒரு நேர்காணல் கேட்டார்
புனைவிலும் புனைவல்லாதவற்றிலும்
நாம் சொல்லாததை
நேர்காணலில் சொல்லிவிட
முடியுமென நம்புகிறார்கள்
உண்மையாகவும் இருக்கலாம்
பாரிஸ் ரெவ்யூவில்
செலினின் நேர்காணலை
வாசித்துவிட்டு வாருங்கள்,
சந்திக்கலாமென்றேன்
உலக யுத்தத்தில்
மண்டையில் அடிபட்டு
ஆயுள் முழுவதும்
மனப்பிறழ்வு சுமந்து
நரகத்தில் உழன்றவனையா
படித்துக்கொண்டிருந்தோம்?
சொர்க்கத்தில் ரசம் இல்லை
சொர்க்கத்தில் வாழ்க்கை இல்லை
சொர்க்கத்தில் வலி இல்லை
சொர்க்கத்தில் துரோகம் இல்லை
சொர்க்கத்தில் காமம் இல்லை
சொர்க்கத்தில் காதல் இல்லை
சொர்க்கத்தில் கோபம் இல்லை
சொர்க்கத்தில் தாபம் இல்லை
சொர்க்கத்தில் குரோதம் இல்லை
சொர்க்கத்தில் பழிக்குப் பழி இல்லை
சொர்க்கத்தில் தந்திரம் இல்லை
சொர்க்கத்தில் ஆசை இல்லை
சொர்க்கத்தில் பாசம் இல்லை
சொர்க்கத்தில் பொய் இல்லை
சொர்க்கத்தில் கற்பனை இல்லை
சொர்க்கத்தில் அழுக்கு இல்லை
சொர்க்கத்தில் அசிங்கம் இல்லை
சொர்க்கத்தில் பிறழ்வு இல்லை
ஆக
சொர்க்கத்தில் கதை இல்லை
அறம், தர்மம், நீதி, நேர்மை, ஒழுக்கம், கற்பு,
நன்றியுணர்வு, பணிவு, அடக்கம், தயை, அருள், கருணை
யெல்லாம் கதையெழுத
ஆகாது
2
நேற்று ஒரு வாசகன்
அழைத்தான்
வயது இருபத்து மூன்று
திருமணமாகி
இரண்டு வயதிலொரு
பெண் குழந்தை
நேற்று மனைவி இறந்து
விட்டாள் என்றே
ஆரம்பித்தான்
முழுக்கதையும் தெரிந்து
விட்டது
தற்கொலை
அநேகமாகத் தூக்கு
கணவன் மனைவி சண்ட
அதேதான் சொன்னான்
உடம்பால் உழைக்கும்
கடின வேலை
எட்டு மணிக்கு வீட்டுக்குத்
திரும்பி கொலைப்பசியில்
சாப்பாடு கேட்டால்
எதுவும் செய்யவில்லை
அடிக்கலாமா என
யோசித்தேன்
ஏற்கனவே ஒருமுறை
அடித்து
ஒரு மாதம் நான்
உறங்கவில்லை
ஒன்றுமே சொல்லாமல் போய்ப்
படுத்து விட்டேன்
கொஞ்ச நேரத்தில்
உப்புமா செய்து
என்னை எழுப்பிக்
கொடுத்தாள்
மறுத்துவிட்டேன்
‘இனி நீ சமைத்து நான்
உண்ண மாட்டேன்’
என அறிவித்தேன
பிறகு குழந்தைக்குப்
பால்சோறு ஊட்டினேன்
வீட்டில் சத்தமில்லாதது கண்டு
உள்ளே போனேன்
அறைக் கதவு தாளிட்டிருந்தது
வெறும் கார்ட்போர்ட் கதவென்பதால்
கையை வைத்ததும் திறந்துகொண்டது
சேலைத்தலைப்பில் முடிச்சிட்டுத்
தொங்கிக்கொண்டிருந்தாள் காதல்
மனைவி
சுவாசம் ஓடிக்கொண்டிருந்தது
அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குப்
போனேன்
செயற்கை சுவாச சிகிச்சைக்கு
ஒருநாள் கட்டணம் ஒன்றரை லட்சம்
எனக்கோ நாளை வேலைக்குப்
போனால்தான் பாப்பாவுக்குப்
பால் அன்னம் ஊட்ட முடியும்
அரசு மருத்துவமனை சென்றேன்
அன்றே நின்றது மூச்சு
நாளை அழைக்கிறேனென்று
அழைப்பைத் துண்டித்தேன்
3
காட்டேரிக்கு
ரத்த ருசி
எனக்கு
நரக ருசி