ஊர் கூடித் தேர் இழுப்போம்!

 

Exile1&2_PreOrder_Poster (2)சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களில் மட்டுமே கையெழுத்திடுவார்கள்.  ஆனால் நான் அப்படி எந்த நிபந்தனையும் வைத்துக் கொண்டதில்லை.  பலருக்கும் டயரி, நோட்டுப் புத்தகம், துண்டுச் சீட்டு என்று எதையும் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறேன்.   இனிமேல் அப்படிச் செய்வதாக இல்லை.  ஒரு கையெழுத்துக்கு 5000 ரூ.  கொடுத்தால் மட்டுமே கையெழுத்து.  இதை நான் சேத்தன் பகத்திடமிருந்தே தெரிந்து கொண்டேன்.  அவருடைய புத்தகம் இரண்டே வாரத்தில் 20 லட்சம் விற்றிருக்கிறது.  ராயல்டி நாலு கோடி கிடைக்கும்.  இரண்டே வாரத்தில் நாலு கோடிக்கு அதிபதி.  அப்படிப்பட்ட சேத்தன் பகத் தன் கையெழுத்துக்கு 500 ரூ விலை வைத்திருக்கிறார்.  அதனால்தான் நான் 5000 ரூ விலை வைத்திருக்கிறேன்.

இது குறித்த விரிவான விளக்கம் குறித்தே இந்தப் பதிவு.  சமீபத்தில் ஒரு நண்பர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களிடம் இப்படிச் சொன்னார்.  மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள்.  அவர்கள் என்னைத் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைப்பவர்கள்.  அவர்களிடம் இவர் சொன்னார்.  ”நாம் ஐந்து பேரும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டு சாருவிடம் கையெழுத்து வாங்குவோம்.” இப்படிச் சொன்னவர் ஒரு தொழிலதிபர்.  ஆண்டுக்கான turn over இரண்டு கோடி.  அடுத்த ஆண்டிலிருந்து அதை நான்கு கோடிக்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் இருக்கிறேன் என்று என்னிடம் சொன்னார்.  எனக்கு ஒன்று புரியவில்லை.  ஆளுக்கு ஆயிரம் போட்டாலும் நான் ஒரு புத்தகத்தில் தானே கையெழுத்துப் போடுவேன்?  அந்தக் கையெழுத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துத் தருவாரா?  என் கையெழுத்து என்ன அப்பமா?

சரி, விடுங்கள்.  கையெழுத்துக்கான 5000-ஐ நீங்கள் கட்டணம் என்று நினைக்கக் கூடாது. நடக்கப் போகும் இலக்கிய விழாவுக்கான உங்கள் பங்களிப்பு.  நான் என்ன இந்தப் பணத்தை வைத்து வீடா கட்டப் போகிறேன்?  சமீபத்திய என் மருத்துவச் செலவுக்கு இரண்டு லட்சம் ஆயிற்று.  எல்லாமே என் நண்பர்கள் கொடுத்தது.  எல்லோருமே மத்தியதர வர்க்கம்.  மாத சம்பளக்காரர்கள்.  ஓரிருவருக்கு நான் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.  திருப்பித் தர வைத்திருந்த பணத்தைத்தான் அரங்கத்தின் முன்பதிவாக 72000 ரூ கட்டினேன்.  இன்னும் விழாச் செலவு ஒன்னேகால் லட்சம் ஆகும்.

காலையில் ஆறு மணிக்கு ஹார்ட் அட்டாக் வந்து நான் மருத்துவமனை சென்ற போது அவந்திகாவை அழைத்துச் செல்லவில்லை.  அவளுக்கு இது பற்றி சற்று மனவருத்தம்.  அதில் இரண்டு பிரச்சினைகள் இருந்தன.  ஒன்று, அவளுக்குப் புரியாது.  ஒரு நண்பருக்கு ஃபோன் போட்டேன்.  தாடை வலிக்கிறது; கன்னா பின்னா என்று வேர்க்கிறது.  வேர்ப்பது ஆச்சரியம் இல்லை.  நீங்கள் பாரிஸ் போன போது டிசம்பர் மாதத்திலேயே வேர்ப்பதாக எழுதியிருந்தீர்கள்.  தாடை வலி: தீபாவளிக்கு நிறைய முறுக்கு சாப்பிட்டதாகச் சொன்னீர்கள்.  அதுதான் அந்த வலி.

அடுத்த நொடியே ஃபோனை வைத்து விட்டு ராமசுப்ரமணியனுக்கு போன் செய்து தயாராக இருக்கச் சொன்னேன்.  நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை அழைப்பதாக பொருள்.  அவந்திகா என்ன சொல்வாள்?  இதெல்லாம் ஒரு விஷயமாப்பா.  நீ ரொம்ப பயப்படுறேன். பேசாமல் தியானத்தில் அமர்ந்து ஹ்யூ மந்த்ராவைச் சொல்.  எல்லாம் சரியாய்ப் போகும்.

சரியாய்ப் போகலாம்.  அல்லது, நான் எமலோகமும் போகலாம்.  என் உயிரோடு நான் விளையாட விரும்பவில்லை.  நம்ப மாட்டீர்கள், நான் இந்த வாக்கியத்தைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது வேகவேகமாக என்னிடம் வந்த அவந்திகா, ”தினமும் 21 முறை I am healthy என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுது.  21 தினங்கள் அப்படி எழுதி விட்டு சென்று பார்.  கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாமே நார்மலில் இருக்கும்” என்றாள்.

இது தவிர, அவளை அழைக்காததற்கு இன்னொரு முக்கிய காரணம், காலை ஆறு மணி அவளுக்கு மத்திய இரவு.  அவள் வந்து விட்டால் நாய்கள் இரண்டும் வீட்டுக்குள்ளேயே மலஜலம் போய் விடும்.  அதை விட பெரும் பிரச்சினை என்னவென்றால், பப்புவுக்கு நீர் என்றால் கொண்டாட்டம்.  (எல்லா லாப்ரடார்களுக்குமே நீரும் மணலும் கொண்டாட்டம்.) அதனால் மூத்திரத்தைப் பேய்ந்து அதிலேயே விழுந்து முக்கி விளையாடி அதகளம் பண்ணி விடும்.  அதற்கு மலம் அசிங்கம் என்றும் தெரியாது.  இதெல்லாம் எனக்கு ஒரு நொடியில் மனதில் வந்தது.  அவளை எழுப்பி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குப் போகிறேன் என்று மட்டுமே சொன்னேன்.

இன்னொரு மிக மிக மிக முக்கியப் பிரச்சினை.  என் வங்கிக் கணக்கில் ஒருசில ஆயிரங்களே இருந்தன.  அவந்திகா கணக்கில் அதுவும் இல்லை.  எனக்கு மிக நன்றாகப் புரிந்து விட்டது, இது massive attack என்று.  எடுத்த எடுப்பில் 50,000 ரூ தேவைப்படும் என்றும் எனக்குத் தெரியும்.  அதேபோல் தான் நடந்தது.  முதலுதவி செய்வதற்கு மருந்துகளே 31000.  அட்மிட் செய்வதற்கு 15000.  எல்லாம் ராமசுப்ரமணியம்தான்.  அப்புறம்தான் நண்பர்கள்.  இதெல்லாம் அவந்திகாவால் நினைத்தும் பார்க்க முடியாதது.  அதிகபட்சம் அவளுடைய சகோதரரைத்தான் அவளால் அழைத்திருக்க முடியும்.  அதற்குள் என் கதை முடிந்து விடும்.

என்னைப் பொறுத்தவரை இந்த உலக வாழ்க்கையிலேயே நான் சிறிதும் முக்கியத்துவம் கொடுக்காத ஒரு விஷயம் பணம்.  என் வாழ்வில் அதற்கு எந்த மதிப்பும் மரியாதையும் நான் தருவதில்லை.  ஆனால் பணம் எனக்குத் தேவைப்படுகிறது.  நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது என் கையிருப்பில் சில லட்சங்கள் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை இருந்திருக்காது.

என் கோடீஸ்வர நண்பர் சொல்வார், நான் லட்சுமியை மதிப்பதில்லை என்பதால்தான் லட்சுமி என் பக்கம் வர மாட்டேன் என்கிறாள் என்று.  மதிப்பதில்லையே தவிர நான் ஊதாரி அல்ல.  ஏன் என்னிடம் பணம் இல்லை?

என் 27-ஆவது வயதில் இலக்கிய வெளிவட்டம் என்ற பத்திரிகையில் ஃப்ரெஞ்ச் தத்துவம் பற்றி எழுதினேன்.  அதை நடத்திக் கொண்டிருந்த நடராஜன் ஒரு கல்லூரிப் பேராசிரியராக இருப்பார் என்று நினைத்தேன்.  அப்போது அதுதான் பழக்கம்.  இல்லாவிட்டால் வங்கி உத்தியோகம்.  மற்ற வேலைகளில் இருப்பவர்கள் வாங்கும் 500 ரூ. சம்பளத்தில் பத்திரிகை நடத்துவது சிரமம்.  300 பிரதி அச்சடித்து தபாலில் அனுப்புவார்கள்.  எல்லாம் பத்திரிகை ஆசிரியர் செலவு.  மீட்சி அப்படித்தான் நடந்தது.    படிகள், நிறப்பிரிகை எல்லாமே அப்படித்தான் நடந்தன.  ஒரு இலக்கியச் சந்திப்பில் நடராஜனைச் சந்திக்க நேர்ந்த போதுதான் அவர் என்ன வேலை பார்க்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.  ஒரு ஓட்டை தையல் மெஷினை வைத்துக் கொண்டு கிழிந்த ஜாக்கெட்டுகளுக்கு ஒட்டுப் போடும் வேலை செய்து கொண்டிருந்தார்.  புது ஜாக்கெட் தைக்க மாட்டீர்களா என்று கேட்டேன்.  அதற்கெல்லாம் அந்த மெஷினில் முடியாது என்றோ என்னவோ பதில் சொன்னதாக ஞாபகம்.  எல்லாவற்றையும் என் ஞாபகத்தில் இருந்தே எழுதுகிறேன்.  விபரப் பிழைகள் இருந்தால் அதற்காக இந்த விஷயமே பொய் என்று அர்த்தமல்ல.

அவரிடம் நான் என் கட்டுரைக்குக் காசு கேட்க முடியுமா?  படிகள், மீட்சி, நிறப்பிரிகை எல்லாமே சில தனி நபர்களின் தியாகத்தினால் நடந்த செயல்பாடுகள்தான்.  இலங்கைக்குப் பாலம் கட்டி விட்டு ராமரிடம் போய் யாரும் காசு கேட்டார்களா?  கேட்டதாக கதை இருக்கிறதா?   இது எல்லாமே தமிழுக்கும் இந்த சமூகத்துக்கும் நாங்கள் செய்த சேவை.

உயிர்மையில் பத்து ஆண்டுகள் மாதாமாதம் எழுதினேன்.  உயிர்மை லாபத்தில் நடக்கும் பத்திரிகை அல்ல.  எனவே எழுதுபவர்களுக்குக் காசு கொடுக்க முடியாது.  ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைக்கு ஏழு ரூபாய் கொடுக்கிறார்கள்.  ஆயிரம் வார்த்தைகள் ஒரு கட்டுரை.  7000 ரூ கிடைக்கும்.  இதுவே மிகக் குறைந்த பட்ச சன்மானம்.  ஃப்ரெஞ்சில் ஒரு வார்த்தைக்கு 15 ரூ வாங்குகிறார்கள்.  உயிர்மையில் ஒரு கட்டுரை என்றால் 3000 வார்த்தைகள் வரும்.  ஆக, ஒரு கட்டுரைக்கு 20,000 ரூ.  ஆண்டுக்கு 12 கட்டுரைகள், பத்து ஆண்டுகள்.  24 லட்சம்.  சரி, ஒரு கட்டுரைக்குப் பத்தாயிரம் என்று வைத்துக் கொண்டாலும் 12 லட்சம்.  ஆனால் இங்கே 5 லட்சம் பிரதிகள் விற்கும் ஜனரஞ்சகப் பத்திரிகையே 1000 ரூ தான் சன்மானம் கொடுக்கிறது என்கிற போது லாபமே இல்லாமல் நடத்தப்படும் உயிர்மையில் நான் எதிர்பார்க்க முடியாது.

இங்கே உயிர்மை என்ற பெயரையெல்லாம் மறந்து விடுங்கள்.  எழுத்தாளனுக்கு உரிய ஊதியம் கொடுக்கும் சமூகச் சூழல் இங்கே இல்லை.  புத்தகங்களும் ஒரு சில ஆயிரம் பிரதிகளே விற்பதால் ராயல்டியும் ஆட்டாம் புழுக்கை அளவுதான்.  அதனால்தான் நண்பர்களே, கையெழுத்துக்கு 5000 ரூ. வாங்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இன்னொரு காரணம், மருத்துவம்.  இதோடு நான்கு சோதிடர்கள் என் ஆயுளை ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குறித்திருக்கிறார்கள்.  அது வர கனகாலம் இருக்கிறது என்று நான் ரெமி மார்ட்டினோடு ஜாலி பண்ண முடியாது.  நானும் என் உடல்நலனைப் பேண வேண்டும்.  அதிலும் நாலாவது சோதிடர் நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே சொல்பவர்.  இதை என் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவன் நம்பவில்லை.  ஏனென்றால், அவனுடைய ஜாதகத்தை எந்த ஜோதிடரிடம் காண்பித்தாலும் இரண்டு குழந்தைகள் என்று சொல்கிறார்கள்; ஆனால் அவனுக்கோ குழந்தை இல்லை.  ஆனால் என் விஷயத்தில் அப்படி இல்லை.  என் கடந்த காலம், நிகழ்காலம் இரண்டையும் மிகச் சரியாக சொன்னார்கள் மேற்கண்ட சோதிடர்கள்.  அதிலும் நாலாமவர் பயங்கரம்.  பெண்களிடம் ஜாக்கிரதை என்றார்.  சார், என் வயது 61 என்றேன்.  கலைஞர்களுக்கு வயது கிடையாது என்று சொல்லி விட்டு, “உங்களுக்கு வாக்கு வசீகரம் இருக்கிறது.  ஒருவரை மத மாற்றம் செய்யும் அளவுக்கு அது தீவிரமானது.  எல்லாவற்றையும் போட்டு விட்டு உங்களோடு வந்து விடுவார்கள்.  எனவே தான் பெண்களிடம் ஜாக்கிரதையாகப் பழகுங்கள்” என்றார் மீண்டும் அழுத்தம் திருத்தமாக.  அதோடு விடவில்லை.  ஏற்கனவே நடந்த பிரச்சினையையும் சொன்னார்.

உடனே நான் சொன்னேன்.  எனக்கு ஜெயமோகன் என்று ஒரு தம்பி இருக்கிறான்.  உடன்பிறவாத தம்பி.  அவனும் எழுத்தாளன் தான்.  ஆனால் அவன் வட துருவம்; நான் தென் துருவம்.  இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் அவனைத்தான் நான் குருவாக வரித்திருக்கிறேன்” என்றேன்.

“எப்படி?”

“அவன் தன்னை விட வயதில் குறைந்த குட்டிப் பெண்களைக் கூட அம்மாள் என்றுதான் சொல்வான்.  சமீபத்தில் கூட குட்டி ரேவதி என்ற பிரபலமான பெண் கவிஞரைப் பற்றி எழுதும் போது அந்த அம்மாள் என்றுதான் எழுதினான்.”

“அதுதான் சரி.  நம் தர்ம பத்தினியைத் தவிர வேறு எல்லோரையும் அம்மாளாகத்தான் நினைக்க வேண்டும்.”

“ஐயா…  என் மனைவி துறவி.  எனவே அவளையும் நான் அம்மாளாகத்தான் நினைக்கிறேன்.  இன்னும் சொல்லப் போனால் என் தம்பியை விட ஒரு படி மேலே போய் நான் எல்லோரையும் அம்பாளாகவே நினைக்க ஆரம்பித்து விட்டேன்.  குட்டி ரேவதி அம்பாள், சல்மா அம்பாள், பெருந்தேவி அம்பாள், அம்பை அம்பாள்…”

“இவர்களெல்லாம் யார்?”

”பிரபலமான பெண் கவிஞர்கள்.”

”ம்ஹும்… நான் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவில்லை.  வாசகர்களைப் பற்றிச் சொல்கிறேன்.  குறிப்பாக பெண்கள்.  உங்கள் எழுத்தைப் படித்து உங்களிடம் நெருங்கும் பெண்களிடம் உங்களுக்கு கவனம் தேவை…”

இதை விட ஆதாரம் வேண்டுமா?  அதனால் அவர் என் ஆயுள் பற்றிச் சொன்ன ஆரூடம் சரியாகத்தான் இருக்கும்.  என்றாலும் உடலைப் பேண வேண்டுமே?  எக்ஸைலுக்கு விழா எடுக்க வேண்டுமே?  அதற்குப் பணம் வேண்டும்.  எனவே தான் 5000 ரூ.  மீண்டும் சொல்கிறேன்… என் புத்தகம் ஒரு லட்சம் பிரதி விற்றால் நீங்கள் காண்பிக்கும் துண்டுச் சீட்டில் கூட கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன்.

மேலும், இது என்ன கட்டாயமா?  முன் பதிவுத் திட்டத்தில் எக்ஸைல் 1000 ரூ. புத்தகம் 500-க்குக் கிடைக்கிறது.  அதை வாங்கிப் பயன் பெறுங்கள்.

நேற்று ஒரு மாணவர் என்னை சந்தித்தார்.  மாணவர்களிடம் நான் பணம் வாங்குவதில்லை.  ஆனால் அவர் 3500 ரூ கொடுத்த போது மறுக்காமல் வாங்கிக் கொண்டேன்.  ஜனவரி 5 விழாவுக்குப் பணம் வேண்டும்.

எனவே 5000 ரூ என்பதைக் கட்டணம் என்று கருதாமல் ஒரு பொதுக் காரியத்துக்கான உதவி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது, முன்பதிவுத் திட்டம்.  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Name: K. ARIVAZHAGAN
Account no. 911010057338057
AXIS  Bank Branch Radhakrishnan Salai
IFS Code number UTIB0000006
MICR Code 600211002
***
 K. Arivazhagan, ICICI account No. 602601 505045, with T, Nagar Branch, Chennai.

IFSC Code: ICIC0006026

MICR Code: 600229010